குருஜியின் பைபிள் பயணம் - 2
( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )
.
பிரகதீஸ்வரன்:- உவரி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு சென்றவுடனே உடலால் சில கஷ்டங்களை அனுபவித்தீர்கள் அதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது இந்த ஆலய வளாகத்திற்குள் உள்ள தீய ஆவிகள் என்னை உள்ளே வருவதற்கு அனுமதிக்க வில்லை அதற்க்கான எதிர்ப்பை காட்டுகிறது அதனால் உடல் நலத்தில் சிறு சிக்கல்கள் ஏற்பட்டது என்று கூறினீர்கள் அப்படி என்றால் கிறிஸ்தவர்கள் பேய்களை ஓட்டுவது நிஜம் என்பதுதானே அர்த்தமாக இருக்கிறது? இதற்கு நீங்கள் விளக்கம் கூறுங்கள்?
குருஜி :- நல்ல சந்தர்ப்பத்தில் அதை ஞாபகம் படுத்தினாய் உவரி என்பது எனது சொந்த கிராமத்திலிருந்து ஐந்து கிலோமீட்டரில் இருக்கும் ஒரு அழகிய கடற்கரை கிராமம் அது இரண்டாக பிரிக்க பட்டிருக்கிறது மீனவ மக்கள் வாழுகிற ஒரு பகுதியும் குடியானவ ஜனங்கள் வாழுகிற பகுதியும் அங்கே உண்டு. இதில் மீனவர்கள் வாழுகிற பகுதியில் ஒரு நூற்றாண்டிற்கும் அதிகமான வயதுடைய அந்தோனியார் ஆலயம் ஒன்று கடற்கரை ஓரத்தில் மிக கம்பீரமாக அமைந்துள்ளது
அந்த ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமை அன்று இரவு எட்டுமணிக்கு மேல் பேய் பிடித்தவர்களை உக்கார வைத்து சிறப்பு திருப்பலி பூஜை நடத்துவார்கள். அந்த பூஜையின் போது நூற்றுக்கணக்கான மனிதர்கள் பேய் வந்து தலைவிரி கோலமாக ஆடுவார்கள்.
ஆர்ப்பரிக்கும் கடலின் பேரோசை ஒருபுறம் இரவு நேர இருட்டு இன்னொருபுறம் உடலில் ஊசி இறங்குவது போல் குளிர்ச்சியை ஏற்படுத்தும் கடற்கரை காற்று மறுபுறம் அந்த நேரத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் தலைவிரி கோலமாக ஓலமிட்டு பேய் வந்து ஆடுகிற காட்சியை சிறிது கற்பனை செய்து பார் உன்னையும் அறியாமல் உடம்பு சில்லிட்டு போகும். அந்த காட்சியை நேரடியாக கண்டு அனுபவிப்பது அமானுஷ்யமான அழகாகும்.
அந்த ஆலயத்தில் பேய்களை மட்டுமே ஓட்டுவது இல்லை. மனநலம் பாதிப்பு அடைந்தவர்களை அழைத்து வந்து கட்டிப்போட்டு விடுவார்கள். அதை போல் மருத்துவர்களால் கைவிடபட்ட நோயாளிகளையும் ஆலய வளாகத்தில் வைத்திருப்பார்கள். அந்தோனியார் எல்லோருடைய குறைகளையும் தீர்ப்பார் என்பது அந்த பகுதி மக்களினுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
ஆவிகளின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது அது மட்டுமல்ல ஆவிகள் உலகத்தில் எனக்கு நல்ல அனுபவமும் இருக்கிறது. முன்னாள் மதுரை ஆதினம் அவர்கள் எழுதிய ஒரு பழமையான நூலும் சுவாமி வேதாச்சலம் என்ற மறைமலையடிகள் எழுதிய நூலும் எனது ஆவிகளை பற்றிய ஆராய்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தது. அதை படித்த பிறகு ஆவிகளோடு பேச வேண்டும் அவற்றை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலவிதமான பயிற்சிகளை நான் மேற்கொண்டேன்
பொதுவாக ஆவிகளோடு பேசுவதற்கு ஓஜா போர்டு ஆட்டோ ரைட்டிங் மயக்க நிலை பேச்சு போன்ற வழிமுறைகளே பலராலும் பின்பற்ற பட்டு வருகிறது. நான் இந்த வழிமுறைகள் மட்டுமல்லாது மந்திர சாஸ்திரத்தின் அடிப்படையிலும் ஆவிகளோடு பேசுகிற தகுதியை கடந்த முப்பது ஆண்டுகளாக பெற்றுக்கிறேன்.
அந்த வகையில் ஆவிகள் என்பது எங்கெல்லாம் அதிகமாக தங்கும் எவைகளை தங்களது நிரந்தர வசிப்பிடமாக கொள்ளும் என்பது நான் ஓரளவு அறிவேன். அந்த வகையில் உயர்ந்த மரங்கள் பீடங்கள் கடற்கரையோர மண்டபங்கள் சித்தர்கள் சமாதிகள் மற்றும் அவர்களின் அனுக்கிரகம் இருக்கும் பகுதிகளில் ஆவிகள் சகஜமாக வாழும்.
பொதுவாக ஆவிகளுக்கு மந்திர ஜெபம் செய்பவர்களை கண்டால் சுத்தமாக பிடிக்காது. ஏனென்றால் அவர்களிடமிருந்து வெளிப்படுகிற எதிர்மறையான ஆற்றல் ஆவிகளின் வாய்வு உடம்பை இம்சை செய்யும். இதனால் அந்த ஆவிகள் அப்படிப்பட்ட மனிதர்களை தனது அருகே வரவிடாமல் தடுக்கும் போராடும் இடைஞ்சல் செய்யும் இதனால் அந்த மனிதர்களுக்கு சில உடல் உபாதைகளும் தற்காலிகமாக ஏற்படும்.
ஒரு விஷயத்தை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் நாம் பொதுவாக அந்தோனியாரின் ஆலயத்தை கோவில் என்று வணங்குகிறோம் ஆனால் கத்தோலிக்க பரிபாஷயில் அவைகளை குருசடி என்று தான் அழைப்பார்கள். அதாவது குருஸ் என்றால் சிலுவை என்றும் குருசடி என்றால் சிலுவையின் நிழல் அடிவாரம் என்பதும் பொருளாகும். ஆனால் நமது தமிழகத்தை பொறுத்தவரை குருசடி என்பதற்கு வேறொரு பொருளும் இருக்கிறது. குருவின் பாதம் என்ற பொருளும் அதற்கு உண்டு.
அந்தோனியார் என்பவர் ஒரு மனிதன் தனது வாழ்நாள் முழுவதும் இறைவழிபாட்டிலே காலம் கழித்த ஒரு துறவி நம் ஊர் சித்தர்களின் வாழ்விற்கும் அந்தோனியாரின் வாழ்விற்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. அதனால் அவர்களுடைய பேரில் இருக்கும் ஆலயங்கள் எல்லாமே சித்தர்கள் பீடம் தான். சித்தர் பீடத்தில் ஆவிகள் தங்குவதும் ஆவிகளால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரம் பெறுவதும் சர்வ சாதாரணமான நிகழ்வாகும்.
நான் உன்னிடம் கூறுவது ஜெப கூட்டங்களில் ஆவிகள் விரட்ட படுவதை பற்றி மட்டுமே. நிறைய பேர் நினைப்பது போல ஆவிகள் ஒன்றும் நம் வீட்டு நாய்க்குட்டிகள் அல்ல வா என்றால் வருவதற்கும் போ என்றால் போவதற்கும். அவைகள் பேய்கள் உணர்ச்சிமயமான ஆன்மாக்கள் அந்த பேய்களை ஜெபத்தாலோ பிரார்த்தனையாலோ விரட்டி விட முடியாது. அதுவும் இந்த ஜெப வீரர்கள் செய்கின்ற முறையில் ஆவி என்பது அணு அளவு தூரம் கூட அகலாது.
பிரகதீஸ்வரன்:- குருஜி அவர்கள் தயவு செய்து என்னை மன்னிக்கவும் சாதாரண மத போதகர்களால் பேய்களை விரட்ட முடியாது என்று நீங்கள் சொல்லுவதை நான் நம்புகிறேன். ஆனால் ஒருமுறை நான் ஆசிரமத்திற்கு வந்திருந்த போது தீய ஆவிகளால் பாதிக்கப்பட்டவராக நம்ப பட்ட ஒரு மனிதனை பார்த்து வெளியே போ மறுத்தால் உன்னை சாம்பலாக்கி விடுவேன் என்று சொன்னீர்கள் அதை என் காதுகளாலே கேட்டேன் நீங்கள் செய்வது போல் தானே கிறிஸ்தவ பாதிரிகளும் செய்கிறார்கள்? அவர்களால் முடியாது உங்களால் முடியும் என்கிறீர்களா? இது சரியான விளக்கமாக எனக்கு தெரியவில்லை? எனவே தயவு செய்து புரியும்படி சொல்லுங்கள்?
குருஜி:- இந்த பேய் பிடிக்கிற சமாச்சாரம் இருக்கிறதே இது மிகவும் நுணுக்கமானது. நாம் பொதுவாக பேய் பிடித்திருக்கிறது என்று கருதுபவர்களில் நூற்றுக்கு தொன்னிற்று ஒன்பது பேருக்கு பேய் பிடிப்பதே கிடையாது. அவைகள் ஒருவித மனநோயே ஆகும். இன்னும் சொல்லுவது என்றால் பேய்களால் எல்லா மனிதர்களையும் பிடித்துவிட இயலாது.
மனிதர்கள் உடம்பில் ஆறு சக்கரங்கள் இருப்பதாக யோக சாஸ்திரம் கூறுகிறது. இந்த ஆறு சக்கரங்களை ஆறு சக்தி கேந்திரங்களாக கருதலாம். இவைகள் ஒவ்வொன்றும் வேலை செய்யும் போது வெவ்வேறு விதமான வேறுபாடுகளை மனிதனது உடம்பும் மனதும் எதிர்கொள்ளும். மனிதனின் நெஞ்சு குழியில் இருக்கும் சக்கரத்தை அனாகதம் என்று பெயர் இந்த அனாகத சக்கரம் சிலபேருக்கு மட்டும் அடிக்கடி எதிர்மறையான அதிர்வுகளால் பாதிப்படையும் அப்படி பாதிப்படையும் நேரத்தில் தீய ஆவிகளின் வசம் அந்த மனிதர்கள் சந்திக்க நேரிட்டால் ஆவிகள் அவர்கள் உடம்பிற்குள் புகுந்துவிடும்.
முக்கியமாக ஒன்றை நினைவில் வைத்து கொள்ள வேண்டும். இப்படி அனாகத சக்கரத்து வழியாக உள்ளே செல்லும் ஆவிகள் வெறும் பதினைந்து நிமிடங்கள் மட்டுமே மனித உடம்பிற்குள் தங்க முடியும். ஏனென்றால் அந்த உடம்பிற்குள் முன்னரே அதனுடைய சொந்த ஆவி இருக்கிறது ஒரே உடம்பில் இரண்டு ஆவிகள் அதிக நேரம் இருக்க இயலாது அதனால் மணிக்கணக்காக பேய்பிடித்து ஆடுகிறார்கள் என்பதெல்லாம் நரம்பு சம்மந்த பட்ட நோயாக இருக்கும்.
முக்கியமாக வேறொன்றை சொல்லுகிறேன் கவனி ஜெப கூட்டங்களில் ஆடுவது பேய்களே அல்ல மன நோய்களே அந்த போதகர்களால் ஆவியை விரட்ட இயலாது அவர்கள் செய்யும் சடங்கால் அது நடக்காது. இன்னொரு விஷயம் ஆவிகளை கிறிஸ்தவர்கள் விரட்டுகிறார்கள் என்றால் அப்படி விரட்டுகிற யாருமே நிஜமான கிறிஸ்வர்களாக இருக்க முடியாது. காரணம் கிறிஸ்தவ தத்துவப்படி ஆவிகள் என்பதே கிடையாது அப்படி ஏற்றால் அது கிறிஸ்தவமே ஆகாது.
பிரகதீஸ்வரன்:- கிறித்தவத்தில் ஆவிகள் இல்லை என்று நீங்கள் கூறுவது வியாப்பாக இருக்கிறது அப்படி என்றால் பைபிளில் சாத்தானை பற்றி நிறைய விஷயங்கள் கூறப்பட்டிருக்கிறதே அவைகள் பொய்யா? அல்லது நீங்கள் கூறுவது பொய்யா?