குருஜியின் பைபிள் பயணம் - 1
( குருஜி பல்வேறு விஷயங்களில் தனக்கு ஏற்பட்ட சுவாரசியமான அனுபவங்களையும் தனது சொந்த கருத்துகளையும் நம்மோடு பகிர்ந்து கொள்ளும் ஒரு இனிமையான தொடர் இது )
பிரகதீஸ்வரன்:- இயேசு கிறிஸ்து விரைவில் வரப்போவதாக கிறிஸ்தவர்கள் வெகுகாலமாக பிரச்சாரம் செய்கிறார்களே அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
குருஜி;- நான் அறிந்தவரையில் யேசுநாதர் மிகவும் சாது எந்த உயிருக்கும் தீங்கு செய்யாத அற்புதமான மனிதர். அவரை தேவகுமாரன் என்று அழைப்பதிலும் வணங்குவதிலும் எந்த சங்கடமும் எனக்கு இல்லை. அற்புதமான மனிதரான அவர் மீண்டும் பூமிக்கு வருகிறார் என்றால் சந்தோசப்படாமல் வேறு என்ன செய்ய முடியும்? ஆனால் என் பிரச்சனை அதுவல்ல பேஷாக ஏசு வரட்டும் அதற்காக சில அறிகுறிகளை கிருஸ்தவ பிரச்சாரர்கள் சொல்லுவதில் தான் பல மன சங்கடங்கள் ஏற்படுகிறது.
பிரகதீஸ்வரன்:- அப்படி என்ன விபரீதமான அறிவுரைகளை அவர்கள் கூறுகிறார்கள் அதனால் நீங்கள் சங்கடமடைய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?
குருஜி:- சில திரைப்பட காட்சிகளை நிறையபேர் பார்த்திருப்பார்கள். பலசாலியான முரட்டு தனமிக்க சண்டியர்கள் யாராவது ஊருக்குள்ளோ சந்தைக்குள்ளோ வருகிறார்கள் என்றால் வரிசையாக மண்பாண்டங்கள் உடையும் கண்ணாடி ஜன்னல்கள் தெறித்துவிடும் வண்ண வண்ணமாக அரிசி பொரி பறக்கும் நிறைய அப்பாவி மனிதர்கள் விழுந்தடித்து ஓடுவார்கள். இறுதியாக கேமரா அந்த வில்லனின் கொடூரமான முகத்தையும் அட்டகாசமான சிரிப்பையும் காட்டும்.
இந்த காட்சிகளுக்கு கொஞ்சம் கூட குறைவு இல்லாத காட்சிகளை கிருஸ்தவ போதகர்கள் இயேசுவின் வருகையை முன்னிட்டு அறிகுறிகளாக கூறுகிறார்கள். கடல் பொங்கி விடும். மலைகள் பொடிப்பொடியாக சிதறிவிடும் வானமண்டலாமே இருண்டு நெருப்பை வாரி இறைக்கும். பூமி பிளக்கும் உயிர்கள் அனைத்தும் அஞ்சி நடுங்கும் அந்த நிலையில் இயேசு வருவார் நியாய தீர்ப்பு வழங்குவார் என்று கூறுகிறார்கள்.
இதை சற்று கற்பனை செய்து பாருங்கள்? இயேசு என்ற சாந்த சொரூபி வருவதற்கு இத்தனை அழிவுகள் வேண்டுமா? இவ்வளவு அச்சப்பட வைக்க வேண்டுமா? தேவை இல்லையே அழிவை காட்டி தான் ஆண்டவர் வருவார் என்றால் அந்த ஆண்டவர் சர்வாதிகாரியா? கொடுங்கோலனா? நானும் யோசித்து யோசித்து பார்க்கிறேன் இன்றுவரை விளங்கவே மாட்டேன் என்கிறது.
இறைவன் பூமிக்கு வரப்போகிறார் என்றால் அறிகுறிகள் நல்லதாக தானே இருக்க வேண்டும். சீன அதிபர் திருந்தி விட்டார் அமெரிக்க அதிபர் உளறுவதை நிறுத்தி கொண்டார் ரஷ்யா அதிபர் பதவியில் அதிகநாள் இருக்க மாட்டேன் என்கிறார். பாகிஸ்தான் கூட இந்தியர்கள் எங்கள் சகோதரர்கள் அவர்களோடு யுத்தம் செய்ய மாட்டோம் என்றெல்லாம் கூறுகிறார்கள் உலக அமைதிக்கு வழியேற்பட்டு இருக்கிறது அதனால் திருந்தி விட்ட நம்மை எல்லாம் பரலோக ராஜ்யத்திற்கு அழைத்து செல்ல ஏசு வருகிறார் என்றால் அது நன்றாக இருக்கும் அதை விட்டு விட்டு யோக்கியன் வருகிறான் சொம்பை மறைத்து கொள் என்று கூறுவது போல் கூறினால் யேசுநாதரை அவமானப்படுத்தியது போல எனக்கு தெரிகிறது .
பிரகதீஸ்வரன்:- நீங்கள் சொல்லுகிற இந்த லாஜிக்கை கிருஸ்தவர்கள் அறியமாட்டார்களா என்ன? அறிந்திருந்தும் அவர்கள் அப்படி பிரச்சாரம் செய்வதில் காரணம் என்னவாக இருக்கும்?
குருஜி;- மனிதன் இருக்கிறானே இவன் வெகு தைரியமாக பேசுவதில் வல்லவன் ஆனால் மரணபயம் வந்துவிட்டால் ஆடிபோய்விடுவான் காரணம் சாவுக்கு பின்னால் என்ன இருக்கிறது என்று நமக்கு தெரியாது. இந்த உறவுகள் தொடருமா? இத்தோடு முடியுமா? என்பதெல்லாம் நாம் அறியாத ரகசியங்கள்.
அதனால் இந்த மரண பயத்தை யாரவது நமக்கு ஏற்படுத்தினால் அந்த பயத்திற்கான நிவாரணம் தன்னிடம் இருக்கிறது என்று யாரவது சொன்னால் நம்மை அறியாமலே நாம் அவர்கள் பக்கம் சாய்ந்து விடுவோம். இது ஒருவித மனோதத்துவ வழியாகும். இதை கிருஸ்தவர்கள் மிக சரியாகவே பயன்படுத்தி சாதாரண மனிதர்களுக்கு மரணபயத்தை உண்டாக்கி நீ இயேசுவை நம்மைவில்லை என்றால் நரகத்திற்கு போவாய் நம்பினால் சொர்க்கம் உனக்கு கிடைக்கும் என்று ஆசை காட்டி மதம் மாற்றம் செய்யவே இயேசுவின் வருகையை பற்றி மிரட்டலான கதைகளை சொல்கிறார்கள்.
பிரகதீஸ்வரன்:- அப்படி என்றால் மதம் மாறுவது தவறா?
குருஜி:- மதம் மாறுவதை தவறு என்று நான் சொல்லவே மாட்டேன் ஒருவகையில் சொன்னால் நான் கூட மதம் மாறியவன் தான் இதை கேட்பதற்கு உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும் ஆனால் இது தான் முழு உண்மை நான் பிறந்தது கெளமார மதத்தில் திருச்செந்தூர் முருகன் தான் எனக்கு தெரிந்து ஆறு தலைமுறையாக எங்கள் குலதெய்வம்
ஆனால் எனக்கென்னவோ தெரியவில்லை ராமர் மீதும் கிருஷ்ணனின் மீதும் தீராத ஈடுபாடு. அதுவும் குறிப்பாக ஸ்ரீ ராமானுஜரின் விசிஷ்டாத்வைத தத்துவத்தை அறிந்த பிறகு முழுக்க முழுக்க வைஷ்ணவராகவே மாறிவிட்டேன் இப்படி என்னை போல ஏசுநாதரின் மீது பக்தி வந்து பைபிளின் மேலே ஈடுபாடு ஏற்பட்டு ஒருவன் கிருஸ்தவ மத்தத்தை தழுவினால் அதை தவறு என்று ஒரு போதும் கூற இயலாது.
நன்றாக மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள் இன்று மதம் மாறுகிற அனைவருமே இத்தகைய காரணங்களுக்காகவா மதம் மாறுகிறார்கள்? தீராத நோய் எனக்கு இருந்தது என் பையனுக்கு பேய் பிடித்திருந்தது வீட்டில் ஒருபோதும் சந்தோசமே இல்லை நோய் நொடியென்று ஒரே பீடை அதனால் நான் ஜெப கூட்டத்திற்கு வந்தேன் கிருஸ்தவனானேன் என்று தான் நூற்றுக்கு தொண்ணூறு பேர் கூறுவார்கள்.
நோய்க்காகவும் பேய்க்காகவும் மதம் மாறுவதாக இருந்தால் நம்ம ஊர் அம்மன் கோவில் பூசாரி கூட வேப்பிலை அடித்து இதை செய்வார்களே இதற்கு எதற்க்காக மதம் மாறவேண்டும்? கிருஸ்தவ பாதிரிகள் எளிய மக்களை கவர்ச்சியான வாக்குறுதிகளையும் மனசாட்சிக்கு விரோதமான சலுகைகளையும் காட்டியே மதம் மாத்துகிறார்கள்.
உண்மையிலேயே நமது நாட்டை பிடித்திருக்கின்ற மிகப்பெரிய அபாயம் சீனாவோ பாகிஸ்தானோ அல்ல மதம் மாற்றம் தான் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி இதை தடுத்து நிறுத்த எந்த அரசாங்கமும் முன் வராதது வருத்தமாக இருக்கிறது.
நான் கிறிஸ்தவ பிரச்சாரர்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன் நீங்கள் குருடர்களை பார்க்க வையுங்கள் செவிடர்களை கேட்க வையுங்கள் அதை உங்களது தனிப்பட்ட செயலாக வைத்து கொள்ளுங்கள். அதற்காக இயேசு என்ற நல்லவரை தெருவுக்கு இழுத்து வந்து அவமானம் படுத்தாதீர்கள். யேசுவால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும் அதை நான் நம்புகிறேன் ஆனால் அது யேசுவால் மட்டுமே முடியுமே தவிர உங்களால் ஒருபோதும் ஆகாது எங்காவது அப்படி நடந்துள்ளதா? அதை ஆதார பூர்வமாக காட்ட இயலுமா?
இயேசுவை நோக்கி ஜெபம் செய்தால் நோய்கள் விலகும் என்றால் மருத்துவமனைகள் எதற்க்காக? நாட்டிலுள்ள எல்லா மருத்துவ மனையும் ஜெப கூடாரங்களாக ஆக்கிவிடலாமே நம்பிக்கை என்பது நோயை குணப்படுத்தும் என்பது எனக்கும் தெரியும் ஆயிரம் வீரியமுள்ள மருந்தை கொடுத்தாலும் நம்பிக்கை இல்லாத நோயாளியை காப்பாற்ற இயலாது. நோயாளிக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கே தெய்வங்கள் இருக்கிறது அந்த தெய்வங்களை காட்டி தெய்வ நம்பிக்கையை மாசுபடுத்தாதீர்கள்.
பிரகதீஸ்வரன்:- நீங்கள் குழந்தையாக இருக்கும் போது தேவநேசம் என்ற உங்கள் ஆசிரியை நீங்கள் நடக்க வேண்டும் மற்ற குழந்தைகள் போல ஓடி ஆடி விளையாட வேண்டும் என்பதற்காக இடையன்குடி கிறிஸ்தவ தேவாலயத்தில் உங்களுக்காக ஜெபம் செய்தார்களே அந்த தாக்கத்தில் இப்படி பேசுகிறீர்களா?
குருஜி;- நிச்சயமாக இல்லை என்னுடைய தேவநேசம் டீச்சர் மாசுமருவற்ற அன்னை மரியாள் போன்றவர்கள் அவர் நூறு வயதிற்கு மேல் வாழ்ந்தார்கள் அவர் வாழ்ந்த ஒரு நாளில் கூட கிறிஸ்துவை தவிர வேறு தெய்வத்தின் பெயரை அவர் உச்சரித்து கிடையாது அவர் மூலமாகவே நான் முதல் முதலில் இயேசுவை அறிந்தேன் அவர் எனக்காக செய்தது கடவுளிடம் பிரார்த்தனை மட்டுமே ஒருபோதும் அவர் நீ கிறிஸ்தவனாக மாறு அப்போது தான் உன் நோய் விலகும் என்று சொன்னதே கிடையாது எனக்குள் உறுதியான பல நம்பிக்கைகள் இருக்கிறது என்றால் எனது மதக்கொள்கையில் நான் திடமாக இருக்கிறேன் என்றால் அதற்கு அந்த அம்மையார் எனக்குள் விதைத்த விதைகளே ஆகும். அவரையும் சாதாரண மத போதகர்களையும் ஒப்பிடுவது தேவநேசம் டீச்சரின் உயர்ந்த இதயத்தை அவமானபடுத்துவதாகும். எனவே அவரை இந்த வரிசையில் சேர்க்காதே.
பிரகதீஸ்வரன்:- உவரி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு சென்றவுடனே உடலால் சில கஷ்டங்களை அனுபவித்தீர்கள் அதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது இந்த ஆலய வளாகத்திற்குள் உள்ள தீய ஆவிகள் என்னை உள்ளே வருவதற்கு அனுமதிக்க வில்லை அதற்க்கான எதிர்ப்பை காட்டுகிறது அதனால் உடல் நலத்தில் சிறு சிக்கல்கள் ஏற்பட்டது என்று கூறினீர்கள் அப்படி என்றால் கிறிஸ்தவர்கள் பேய்களை ஓட்டுவது நிஜம் என்பதுதானே அர்த்தமாக இருக்கிறது? இதற்கு நீங்கள் விளக்கம் கூறுங்கள்?