Store
  Store
  Store
  Store
  Store
  Store

காங்கிரசை அழிக்க காங்கிரஸ் சதி !


    நாளைய இந்தியாவிற்கு காங்கிரஸ் கட்சி தேவையா? இது மிக முக்கியமான கேள்வியாகும். அதற்கான பதிலை சிந்தித்து நாம் பெற்றுக்கொள்ள இதுவே சரியான தருணம் என்று தான் நினைக்கிறன். இதை என்னொரு விதமாகவும் கேட்கலாம் நாளைய இந்தியாவில் காங்கிரஸ் என்ற கட்சி இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பதே நமது கேள்வியாகும். இதற்கான பதிலை நாம் மட்டும் தேடி பெற்றுக்கொள்ள இயலாது காங்கிரஸ் கட்சியுமே இதற்கான பதிலை கூறவேண்டிய காலகட்டாயம் இப்போது இருக்கிறது. 


ஜனநாயகம் என்பது சரியான ஆளும் கட்சியால் மட்டும் தீர்மானிக்க படுவதாகாது நல்ல உறுதியான எதிர்கட்சியும் இருந்தால் தான் ஜனநாயக பயிர் என்பது செழித்து வளரும். நமது இந்திய ஜனநாயகம் மற்ற நாட்டு ஜனனநாயகத்தை போல வலிய உருவாக்கப்பட்டது அல்ல இந்திய மக்கள் ஒவ்வொருவருடைய குருதி நாளத்திலும் ஜனநாயக பண்பு ஆயிரகணக்கான ஆண்டுகளாக ஊறி இருக்கிறது. மன்னர்கள் இந்த நாட்டை ஆண்ட போதும் இது சர்வதிகார தேசமாக இருந்தது இல்லை. அன்றும் ஜனநாயகத்தின் மெல்லிய இழை வேரோடி இருந்ததை நமது சரித்திரம் சொல்லும். 


நேரு காலத்தில் காங்கிரஸ் கட்சி தங்க தேரில் பவனிவந்தது என்று தான் கூறவேண்டும். இந்திராகாந்தி காலத்தில் அந்த நிலைமை சற்று குறைந்து வெள்ளி தேராக மாறியது என்றாலும் அதனுடைய வீரியம் குறைந்தது கிடையாது. ஆனால் என்று ராஜீவ் காந்தி பதவியை விட்டு இறங்கினாரோ அன்றே காங்கிரஸ் என்ற மாளிகை கலகலத்து போக ஆரம்பித்து விட்டது. காங்கிரஸ் மாளிகையின் முதல் செங்கலை உருவியவர் என்ற சிறப்பை விஸ்வநாத பிரதாப் சிங்கிற்கு கொடுக்க வேண்டும். ஏனென்றால் அவர் துவக்கி வைத்த அழிவு பாதை இன்றும் காங்கிரசை விட்டுவிட வில்லை. 


வி.பி.சிங்கின் அரசு ராஜீவ் காந்தியின் ராஜ தந்திரத்தால் பதவியை விட்டு போகவில்லை அரியானாவில் இந்திய நாட்டின் துணைப்பிரதமராக இருந்த தேவிலால் ஓம் பிரகாஷ் செளதாலா என்ற தன்மகனுக்காக ஜாட்இன விவசாயிடம் ஜாதி அரசியலை தூண்டிவிட்டார். ஜாட் மக்களின் எழுச்சியால் தனது அரசியல் வாழ்க்கை அஸ்தமித்து விடகூடாது என்ற காரணத்தினால் மண்டல் கமிஷன் என்ற பயங்கரமான ஆயுதத்தை வி.பி.சிங் கையில் எடுத்தார் அது காங்கிரஸ் மற்றும் இடது சாரி கட்சிகளுக்கு அந்திம காலமாகவும் வலது சாரிகளுக்கு உதயகாலமாகவும் ஆகிவிட்டது. 


மண்டல கமிஷன் மட்டும் கொண்டுவரபடாமல் இருந்திருந்தால் சந்திரசேகர் போன்றோர்கள் தேசிய முன்னணியை உடைக்காமல் இருந்திருப்பார்கள். அத்வானியின் ரத யாத்திரை நடந்திருக்காது பாபர் மசூதி இடிந்திருக்காது. ராஜீவ்காந்தியின் படுகொலையும் நடந்திருக்காது. 


ஒருவேளை ராஜீவ்காந்தி உயிரோடு இருந்து அந்த தேர்தலை அவர் சந்தித்து இருந்தால் காங்கிரசுக்கு அப்போதே சமாதி கட்டபட்டிருக்கும். அதிஷ்டமா துரதிஷ்டமா என்று சொல்லுவதற்கு இல்லை. அனுதாப அலையில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது முதல் முறையாக அந்த கட்சியில் நேரு குடும்பம் அல்லாத ஒருவர் பதவிக்கு வந்தார் நாட்டையும் ஆண்டார். 


ஒருவகையில் சொல்லவேண்டும் என்றால் இன்று நம் நாடு அடைந்திருக்கும் பலகட்ட வளர்ச்சிக்கு பி.வி.நரசிம்மராவே அச்சாரம் போட்டார். என்பதை ஒத்துகொள்ள வேண்டும். அவர் பதவி ஏற்ற அந்த நாளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பூஜ்யம் நிலையிலேயே இருந்தது. திறமைமிக்க மன்மோகன் சிங் போன்ற ஆளுமைகளை அரசியலுக்கு கொண்டுவந்து நாட்டிலிருந்த பல சிக்கல்களை அவர் உடைத்தெறிந்தார் இவர் மைனாரிட்டி பிரதமர் தான் இன்றோ நாளையோ பதவியை விட்டு விலக்கப்பட்டு விடுவார் என்ற நிலை இருந்தும் ஐந்து வருடங்கள் முழுமையாக தனது ஆட்சி காலத்தை நடத்தி முடித்தார். 


நரசிம்மராவ் கையில் ஆட்சியும் கட்சியும் இருந்த போது திருமதி சோனியாகாந்தி அரசியலுக்கே வரமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தார். அதன்பிறகு ராவை தொடர்ந்து ஆளவிட்டால் நேரு குடும்பத்திலுள்ள மாட்சிமை மங்கிவிடும் நிரந்தரமாகவே அதிகாரம் என்பது கையிலிருந்து போய்விடும் என்று கணக்கு போட்டு நரசிம்மராவுக்கு எதிராக சீத்தாராம் கேசரி என்பவரை களமிறக்கி தனது சித்து விளையாடல்களை ஆரம்பித்தார் சோனியா. 


நரசிம்மராவ் அவர்களுக்கு என்றில்லை தென்னிந்திய மக்கள் அனைவருக்குமே சோனியா தனது காழ்புணர்ச்சியால் வெட்கக்கேடான ஒரு செயலை செய்தார். இரண்டாயிரத்தி நான்காம் ஆண்டு நரசிம்மராவ் மறைந்த போது அவரது உடலை டெல்லியில் அடக்கம் செய்ய கூடாது அப்படி அடக்கம் செய்தால் நேரு குடும்பத்தில் பெருமைக்கு அது இடைஞ்சலாக இருக்கும் என்று நரசிம்மராவ் உடலை ஆந்திராவிற்கு எடுத்து செல்ல வைத்து ஒரு மிகப்பெரும் தலைவரின் ஆத்மாவை பங்கப்படுத்தும்படி நடந்து கொண்டார் என்பதை இங்கே நாம் நினைவு கூறவேண்டும். 


சீத்தாராம் கேசரி காலத்தில் காங்கிரஸ் கட்சி குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல ஆகிவிட்டது. நாளொரு திட்டம் பொழுதொரு முடிவு என்று துக்ளக் தர்பார் நடத்தினார் சீத்தாராம் கேசரி அவரின் இத்தகைய குளறுபடியான நடவடிக்கைகளுக்கு சோனியா மட்டும் காரணம் இல்லை மக்களிடத்தில் துளி கூட செல்வாக்கு இல்லாத அதே நேரம் நேரு குடும்பத்தோடு மிக நெருங்கிய தொடர்பில் இருந்த அர்ஜுன் சிங், அருன்நேரு, சரத்பவார், நாராயணதத் திவாரி போன்றோர்கள் சோனியாவை பொம்மை போல ஆட்டி வைத்ததே காரணமாகும். 


பாஜாக மற்றும் தேசிய முன்னணியின் அங்கம் வகித்த மாநில கட்சிகள் ஆடிய தப்பாட்டத்தால் இந்திய அரசாங்கத்தின் தலைவிதி மீண்டும் காங்கிரஸ் கையில் விழுந்தது. சோனியா தான் பதவிக்கு வராமல் பின்னணியில் இருந்து கொண்டு மன்மோகன் சிங்கை தலைமை அமைச்சராக்கி பொம்மலாட்டம் நடத்தினார். முதல் ஐந்து ஆண்டுகள் பெரிய அளவில் இடர்பாடுகள் எதுவும் இல்லை என்று துணிந்து சொல்லலாம். இரண்டாம் ஐந்தாம் ஆண்டில் மு.கருணாநிதி, ப.சிதம்பரம் போன்றவர்களின் ஆதிக்கம் காங்கிரஸ் அரசு மேலோங்கி விட்டதால் திறமை வாய்ந்த மன்மோகன் சிங் வாயிருந்தும் ஊமையாகி விட்டார். அனுபவமே இல்லாத சோனியாவும் ராகுல் காந்தியும் தலைகால் புரியாமல் ஆட்டம் போட ஆரம்பித்தனர் இந்த நிலையில் தான் பாஜாகாவில் நரேந்திரமோடி விஷ்வரூபம் எடுத்து நின்றார். 


சிங்கத்தின் முன்னால் சுண்டெலி அகப்பட்டு கொண்டது போல் மோடி முன்னால் ராகுல் கதையும் ஆகிபோனது. ராகுல் மற்றும் சோனியாவுக்கு காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமும் வரலாற்று பூர்வமான அதன் தியாகங்களும் கொள்கைகளும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. இப்படி நான் கூறுவதற்கு காரணம் இருக்கிறது. 


2019 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கிறது. அதன் பிறகு புத்திசாலித்தனமாக ஒரு காரியம் செய்தது பொது தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்கான காரணம் என்ன என்பதை ஆராய கேரள முன்னாள் முதல்வர் திரு ஏ.கே.அந்தோணி அவர்கள் தலைமையில் ஒரு ஆய்வு குழுவை அமைத்தார்கள். உண்மையை சொல்லுவது என்றால் திரு அந்தோணியின் தலைமையிலான அந்த ஆய்வு குழு மிக சிரமப்பட்டு நியாயமான முறையில் உண்மையான காரணங்களை கண்டுபிடித்து மத்திய தலைமையிடம் ஒப்படைத்தது. காங்கிரஸ் கட்சி என்பது தனிநபர் சார்ந்தது அல்ல தனிநபரின் சித்தாந்தத்தை அடிப்படையாக கொண்டதும் அல்ல அதுவொரு ஜனநாயக சோசலிஷ கட்சி அதாவது அனைவருக்கும் பொதுவானது எல்லோரையும் சமமாக நடத்தும் தன்மை கொண்டது.


காங்கிரசின் ஆத்மாவே அதன் மத சார்பற்ற கொள்கை தான். காந்தி காலம் முதல் இந்திராகாந்தி காலம் வரையில் காங்கிரஸ் எந்த மதத்தினர் பக்கம் ஒருதலை பச்சமாக சாய்ந்தது கிடையாது. ராஜீவ்காந்தி காலம் முதல் அதாவது சபானு வழக்கு துவங்கிய காலத்திலிருந்து காங்கிரசின் நியாய தராசு ஒருபக்கமே அதிகமாக சாய துவங்கியது. முஸ்லிம்களுக்காகவும் கிருத்தவர்களுக்காகவும் கட்சி சிந்தனை செலுத்திய அளவிற்கு பெருவாரியான இந்துக்கள் பற்றியும் மற்ற சிறுபான்மை மதத்தினர் எவரை பற்றியும் அதிகமாக் அக்கறைகாட்ட வில்லை. சுதந்திரத்திற்கு முந்தைய ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் எப்படி இந்துக்களிடத்தில் நடந்து கொண்டதோ அதே போலவே தற்போது காங்கிரசும் நடக்க துவங்கி இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். பெருவாரியான வாக்காளர்கள். மாற்று சக்தியை விரும்ப துவங்கி விட்டார்கள். அதனால் தான் இந்த தோல்வியை கட்சி சந்திக்க வேண்டிய நிலை வந்தது எனவே கட்சியை மேம்படுத்த பழைய நடுநிலை கொள்கையை கடைபிடிக்க வேண்டுமென்று அந்தோணி தலைமையிலான குழு பரிந்துரை செய்தது. 


இதில் முக்கியமாக ஒன்றை நாம் கவனிக்க வேண்டும் எ.கே.அந்தோணி என்பவர் அடிப்படையில் ஒரு கிருஸ்தவர் ஆனாலும் கூட அவர் தனது மதத்தின் மேல் மையல் கொள்ளாமல் நியாயமான முறையில் உண்மையை எடுத்து சொன்னார். இவரை போன்ற எத்தனையோ தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் அன்றும் இருந்தார்கள் இன்றும் இருக்கிறார்கள். ஆனால் காங்கிரசின் தலையெழுத்து நல்லவர்கள் பேசும் உண்மையான சங்கதிகளை அதன் உயர்மட்ட தலைவர்கள் யாரும் கருத்தில் கொள்வதே கிடையாது. அறுபத்தி ஏழாவது வருடம் இதே தான் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு நடந்தது. மாநில தலைமையில் கருத்தை கேளாமல் சர்வதிகார ரீதியில் மத்திய தலைமை செயல்பட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியை மயானத்திற்கு அனுப்பி விட்டார்கள். இப்போது அதே கதை மத்தியிலும் தொடர்ந்து விடுமோ என்று உண்மையான காங்கிரஸ் அனுதாபிகள் அச்சம் அடைகிறார்கள். 


எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறமுடியாத அளவிற்கு காங்கிரஸ் இன்று தோற்றாலும் பத்துகோடிக்கு மேற்பட்ட ஜனங்கள் இன்னும் காங்கிரசை நேசிக்கிறார்கள். இந்த நாட்டை காங்கிரஸ் கட்சி பலமுடையதாக மாற்றும் என்றும் நம்புகிறார்கள். இன்னும் சொல்ல போனால் பரம்பரை பரம்பரையாக காங்கிரசுக்கு வாக்களிப்பதையே பெருமையாக கருதும் மக்களும் இன்னும் இந்த தேசத்தில் இருக்கிறார்கள். ஆனால் யானைக்கு யானையின் பலம் தெரியாது என்பது போல காங்கிரஸ் கண்ணை மூடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. 


காங்கிரஸ் கட்சியின் பல உயர்மட்ட தலைவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால் சோனியா காந்தி குடும்பம் இல்லை என்றால் தங்களது கட்சியை நடத்த முடியாது அரசியல் சதுரங்கத்தில் வெல்ல முடியாது எனவே காலில் விழுந்தாவது சோனியாவை தலைமை பொறுப்பில் வைக்க வேண்டுமென்று துதிபாடி கொண்டு அலைகிறார்கள். 


ஆனால் சோனியாவின் குடும்பத்தார் என்ன நினைக்கிறார்கள் என்றால் ஒருவேளை காங்கிரஸ் தலைவர்களுக்கு ஞானம் பிறந்து தங்களை கட்சியை விட்டு அனுப்பி விட்டால். என்ன செய்வது ? அதிகாரம் செய்தே பழகிவிட்ட நமக்கு அது இல்லை என்றால் ஒரு புல்லுக்கான மரியாதை கூட கிடைக்காதே என்று எண்ணி காங்கிரஸ் தலைவர்கள் சிந்திக்க முடியாத வண்ணம் குட்டி கலாட்டாக்களை உற்பத்தி செய்து விடுகிறாகள். உண்மையில் சோனியா குடும்பத்தாருக்கு கட்சியின் மேலுள்ள அக்கறை என்பது கட்சிக்கு சொந்தமாக பல லட்சம் கோடி சொத்துக்கள் நாடுமுழுவதும் இருக்கிறது அது நம் கையை விட்டு போய்விட கூடாது என்ற அக்கரையே மேலோங்கி நிற்கிறது. 


எது எப்படியோ இந்த நாட்டிற்கு காங்கிரசை போன்ற பழம்பெருமை வாய்ந்த கட்சி கண்டிப்பாக தேவை எதிர்க்கட்சி இல்லாத ஜனநாயகம் ஒற்றை கட்சி சர்வதிகாரத்தில் கொண்டு விட்டுவிடலாம் அது மிகப்பெரும் அபாயகரமாக அமைந்து விடும். ஆனால் காங்கிரசில் இன்றைய நிலை மிகவும் பரிதாபகரமானது ஒரு புதிய தேசிய தலைவரை கூட தேர்வு செய்ய முடியாத துர்பாக்கிய நிலையில் இருக்கிறது. சொந்த கட்சிக்கு ஒரு தலைமையை உருவாக்க முடியாத காங்கிரஸ் கையில் நாட்டினுடைய அதிகாராத்தை எப்படி ஒப்படைக்க முடியும்? இந்த நிலை தொடருமானால் இந்தியாவின் ஜனநாயகம் என்பது ஆட்டம் காண துவங்கிவிடும்.


ஒருகுடும்பத்தை விட ஒரு தலைவனை விட அமைப்பு என்பது மிகவும் முக்கியமானது காங்கிரஸ் இன்று தன்னை தன்னிடமிருந்தே காப்பாற்றி கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. காங்கிரஸ் என்பது கொள்கையை நம்பி இருக்கிறதே தவிர ஒரு குடும்பத்தை நம்பி இல்லை என்ற உறுதியான முடிவிற்கு அதன் தொண்டர்களும் தலைவர்களும் வரவேண்டும். அதாவது ராகுல் சோனியா போன்ற தேவையில்லாத சுமைகளை இறக்கிவைத்து விட்டு வருங்கால வெற்றியை நோக்கி நடக்க பழகவேண்டும். அவர்கள் அதற்கு தயங்கினால் மக்கள் காங்கிரஸ் தேவையா என்று கேட்டுக்கொண்டு இருக்க மாட்டார்கள். தேவையில்லை என்ற முடிவிற்கு வந்துவிடுவார்கள்.


குருஜி

Contact Form

Name

Email *

Message *