Store
  Store
  Store
  Store
  Store
  Store

இந்தியாவிடம் சீனா பெற்ற பிச்சை !




   தீயதை பேசாதே தீயதை கேட்காதே தீயதை பார்க்காதே என்ற தத்துவத்தை மூன்று குரங்குகளின் பொம்மையை காந்திய சித்தாந்தத்தோடு இணைத்து பேசுவது நமது மரபாகும். சீனாவை பற்றி நினைவுகள் வரும் போது இந்த பொம்மைகள் தான் மனக்கண் முன்னால் வந்து நிற்கிறது. எவ்வளவோ தவிர்க்க நினைத்தாலும் சீனாவின் செயல்பாடுகள் உண்மையாகவே நம்மை கொதிப்படைய செய்கின்றது. 


எண்பதாம் ஆண்டுகள் துவங்குகிற காலத்திலிருந்தே சர்வதேச அரசியலை ஆர்வத்தோடு பார்கின்ற எண்ணம் எனக்குள் துளிர்விட்டது என்று சொல்லலாம். வளைகுடா யுத்தங்கள் இஸ்ரேல் நாட்டின் அதிரடி செயல்பாடுகள் அமெரிக்க சோவியத் யூனியன் பனிப்போர்கள் எல்லாமே அந்த ஆர்வ தீயை கொழுந்துவிட்டு எரிய செய்தது எனலாம். இப்படி சர்வதேச அரசியலை இந்திய அரசியலையும் அரசியல்வாதிகளையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சில உண்மைகள் தெளிவாக தெரிந்தன. 


பொதுவுடைமை தத்துவம் என்பது மிக அழகானது இளமையான எழுச்சிமிக்க மனங்கள் அனைத்தையும் ஈர்க்க கூடிய ஆற்றல் அந்த தத்துவத்திற்கு உண்டு ஆனால் தத்துவதின்பால் ஆர்வம்கொண்டு அந்த இயக்கங்கங்களில் அவைகளின் செயல்பாடுகளில் நேரடியாக ஈடுபடுகிற போது அறிவுமிக்க மனித மனம் அதிர்ச்சியான பல முடிவுகளை காண நேரிடுகிறது. 


இந்தியாவிலும் சரி வெளிநாடுகளிலும் சரி பொதுவுடைமை இயக்க தலைவர்களில் பலர் அந்த தத்துவத்தில் வைத்திருக்கின்ற மதிப்பைவிட தத்துவத்தை தூக்கிபிடித்து களம்கண்ட தலைவர்களின் மீது வைத்திருக்கின்ற அபிமானம் மிக அதிகமாக இருக்கிறது. தலைவர்களை மதிப்பதையோ போற்றுவதையோ ஒரு குற்றமென்று கருதிவிட இயலாது. அதற்காக அந்த தலைவர்களின் தவறுகளையோ தனிப்பட்ட பேராசைகளையோ சரியானதாக கருதி அதற்காக வாதிடுவதை எந்த வகையிலும் ஒத்துகொள்ள இயலாது. 


நமது இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தில் பல நல்ல தலைவர்கள் அன்றும் உண்டு இன்றும் உண்டு ஆனால் அந்த தலைவர்களே கூட தங்களது மாண்புகளை ஒத்துகொள்ள மாட்டார்கள். காரல்மார்க்ஸ், லெனின், மாவோ போன்றவர்களையே உன்னத மாணவர்களாக விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக கருதுகிறார்கள். மிக முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் உன்னதமானவர்கள் தலைவர்களா? தத்துவமா? என்று கேட்டால் பொதுவுடைமைவாதிகள் தங்களது உள்ளத்தில் தலைவர்களையே உயர்வானவர்களாக கருதிவருவது மிக நன்றாக தெரியும். 


அந்த வகையில் இந்திய பொதுவுடைமை வாதிகள் மாசேதுங்கை தெய்வமாகவே கருதுகிறார்கள். அவர்களிடத்தில் உள்ள குற்றம் குறைகளை யாரவது சுட்டி காட்டினால் அவர்களை ஏகாதிபத்திய அடிவருடிகள் என்று வர்ணனை செய்வதில் சளைக்கவே மாட்டார்கள். ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களின் எண்ணிக்கையை விட ஸ்டாலின் மாவோ இவர்களால் கொலை செய்யப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை அதிகமென்று யாரவது ஒருவர் ஆதார பூர்வமாக வாதிட வந்தால் அவர் சொல்லடியை விட வாங்குகிற கல்லடி அதிகமாக இருக்கும். இது இந்தியாவில் மட்டுமல்ல உலக முழுவதும் இருக்கின்ற பொதுவான வியாதியாகும். 


ஐம்பதாவது ஆண்டுகளில் திபத் நாட்டை சீனா ஆக்கிரமிப்பு செய்த போது மாவோ பகிரங்கமான ஒரு அறிவிப்பை வெளியிட்டார். சீனாவின் கனவு திபத்தை பிடிப்பது மட்டுமல்ல திபத்தை உள்ளங்கையாக வைத்துகொண்டால் அதிலிருக்கும் ஐந்து விரல்களாக நேபாளம், சிக்கிம், பூட்டான், அருணாச்சலபிரதேசம், லடாக் போன்ற பிரதேசங்களை கருதவேண்டும். இந்த ஐந்து குதிரைகளையும் மையமாக கொண்டே சீன சாம்ராஜ்யம் உலகத்தை ஆள எழுந்து நடைபோட வேண்டும். என்று கூறினார் அவரது கருத்தை மனதில் கொண்டுதான் எழுபது ஆண்டுகளுக்கு பிறகும் சீனாவின் செயல்பாடு இருந்து வருகிறது. நமது மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசத்தை தனது என்று சொந்தம் கொண்டாடுவதாக இருக்கட்டும் சிக்கிம், பூட்டான் போன்ற பகுதிகளை பிடிக்க நினைப்பதாக இருக்கட்டும் இவற்றை எல்லாம் கள்ளத்தனமாக பிடித்த பிறகு உத்தரகாண்ட், உத்தராஞ்சல் போன்ற வற்றையும் உரிமை கொண்டாடி உத்திர பிரதேசம் குஜராத் பகுதிகளையும் கபளீகரம் செய்து பாதி இந்தியாவை ஆக்கிரமிக்க வேண்டும் அதுவும் இரண்டாயிரத்தி ஐம்பதாம் ஆண்டுக்குள் செய்ய வேண்டும் என்பதே சீனாவின் மிகப்பெரிய சதி திட்டமாகும். 


நேபாளத்தில் மன்னர் பிரேந்திரா அவர்களின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு நேபாள காங்கிரஸ் கட்சி ஆட்சி வீழ்ச்சி அடைந்த பிறகு. கம்யுனிசயம் ஆட்சிக்கு வந்தபிறகு மிக தெளிவாகவே சீனாவின் வியூகம் எவ்வளவு துல்லியமானது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது ஆனால் நமது இந்திய ஆட்சியாளர்கள் தங்களது சொந்த பிரச்சனைகளில் மூழ்கி கிடந்ததனால் சீனாவின் நரிதந்திரத்தை உடனடியாக தடுத்து நிறுத்த முடியவில்லை இன்று நேபாளத்தை நாம் எதிரி நாடு என்ற வரிசையில் வைக்க வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டது 


நேபாளத்தை பொறுத்தவரை சீனாவின் திட்டம் அந்த நாட்டை துண்டு துண்டாக ஆக்கி தங்களது பேரரசோடு இணைத்து கொள்ள வேண்டும். அதன் மூலம் சீனாவின் பரப்பளவை அதிகரிக்க வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க வேண்டும். என்பது தான் இன்று எப்படி நேபாள அரசியல்வாதிகளை முழுமையான அடிமைகளாக ஆக்கி விட்டார்களோ அதே அடிமைகளை பயன்படுத்தி நேபாள மக்களை இரு கூறுகளாக பிரிக்க போகிறார்கள். அந்த நாட்டில் சுமார் நாற்பது சதவிகிதமாக இருக்கும் மாதேசி இன மக்கள் நேபாளி சொந்தமக்களல்ல அவர்களது குடியுரிமை செல்லதக்கது அல்ல என்ற சதி திட்டத்தை சட்ட பூர்வமாக கொண்டுவந்து உள்நாட்டு கலவரத்தை ஊக்குவிக்க பார்ப்பார்கள் அப்படி கலவரம் வெடிக்கின்ற போது ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல நேரடியாகவே நேபாள அரசை தங்களது கைகளுக்குள் கொண்டு சென்றுவிடுவார்கள். நேபாளத்தை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டால் மிக சுலபமாக லடாக் பகுதியை பிடித்து கொள்ளலாம். என்பதே சீனர்களின் தற்போதைய கனவாகும். 


இந்தியாவில் சில மனிதர்கள் இப்போது நடந்து கொள்ளுகிற விதத்தை பார்த்தால் சீனாவின் ஆக்கிரமிப்பு கனவுக்கு இவர்களும் ஒத்துழைக்கிறார்களோ என்ற எண்ணம் நமக்கு வருகிறது. நமக்குள் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கலாம் அண்ணன் தம்பிகளுக்கு இடையில் சண்டை சச்சரவுகள் இருப்பது இயற்க்கை அதற்காக எதிரிகளுக்கு இடம் கொடுப்பது எந்த வகையில் நியாயமாகும்? பதினாறாம் நூற்றாண்டில் டெல்லி மன்னன் ஜெயசந்திரன் தனது மருமகன் பிருத்விராஜன் மீது கொண்ட பகையால் பாபருக்கு இடம் கொடுத்தது போல இப்போதும் ஆகிவிடும் என்பதை இந்திய தலைவர்கள் மறந்துவிட கூடாது. தேச பக்தி என்று வருகிற போது ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற பேதங்களை தூக்கி எரிந்து விட வேண்டும். இந்த நேரத்தில் வங்காள தேசத்திற்காக இந்தியா போரிட்ட போது இந்திராகாந்தி அம்மையாரை துர்க்கைக்கு நிகராக வர்ணனை செய்தாரே அடல்பிகாரி வாஜ்பாய் அதை எல்லோரும் நினைவில் கொள்ள வேண்டும். 


சீனாவின் சர்வதேச தந்திரம் எப்படிபட்டது என்பதை ஒரு சிறிய சம்பவத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். எத்தியோப்பியா என்ற நாட்டை நாம் மறந்திருக்க வாய்ப்பு இல்லை பசி பட்டினியால் ஆயிரகணக்கான மக்கள் துடி துடித்து இறந்ததையும் சித்தரவதை பட்டு உயிர் வாதை அடைந்ததையும் பல புகைப்படங்கள் வழியாக பலமுறை நாம் பார்த்து மனதிற்குள் திகிலடைந்திருக்கிறோம் வறுமை என்பது எவ்வளவு கொடுமை என்பதை அதன் மூலம் உலக சமூகம் அறிந்து இன்று கூட பதபதைப்போடு கிடக்கிறது 


அந்த கொடுமையை எத்தியோப்பிய மக்களுக்கு கொடுத்தது ஒரு ஆப்பரிக்க கொரிலா படை அந்த கொரிலா படையின் தளபதியாக இருந்து லட்சகணக்கான மக்களை கொன்று குவித்தது டெட்ராஸ் என்ற தளபதியாகும் அவர் இப்போது எங்கே இருக்கிறார் தெரியுமா? யாரும் ஆச்சரிய படாதீர்கள் ஐநா சபையின் ஒரு அங்கமான உலக சுகாதார மையத்தின் தற்போதைய தலைவராக இருக்கிறார் அவருக்கு அந்த பதவி கிடைக்க வழி செய்தது யார் தெரியுமா? சந்தேகமே வேண்டாம். சீன பிரகஸ்பதிகள் தான் அதற்கான காரணம் எத்யோப்பியாவில் மறைமுக ஆட்சி செய்ய சீனாவிற்கு அவர் உதவியதே ஆகும் சீனாவினுடைய ராஜதந்திரம் எப்படிபட்டது என்று இப்போது புரியும் சீனாவின் தயவால் பதவி பெற்றதனால் தான் டெட்ராஸ் கொராணா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவாது என்ற அபாயகரமான அறிவிப்பை தந்தார். இன்று உலக மக்கள் உலக நாடுகள் அனைத்தும் இக்கட்டில் இருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் சீனாவும் அவர்களது விசுவாசி டெட்ராசும் தான் முழு பொறுப்பாகும். 


உண்மையில் சீனாவின் பண்பாடு கலாச்சாரம் விஞ்ஞான வளர்ச்சி அனைத்துமே இந்தியாவிலிருந்து சென்ற அறிவாகும். சீனாவிலிருந்து இந்தியாவிற்கு விஜயம் செய்த யுவான்சுவாங் பாகியான் போன்ற பயணிகள் தங்களது குறிப்புகளாக விட்டு சென்று இருக்கிறார்கள். இன்று உண்மையாகவே சீனா நன்றி செலுத்த வேண்டுமென்றால் இந்தியாவிற்கு நன்றிகாட்ட வேண்டும். ஆனால் நன்றி என்பதும் விசுவாசம் என்பதும் சீனாவிடம் இல்லாத குணமாகும் அதை நம்மவர்கள் புரிந்து கொண்டால் எந்த சிக்கல்களும் இல்லை.

குருஜி







Contact Form

Name

Email *

Message *