அசுர வனத்துக் காதல் - 7
அந்தி வானம் சிவந்து கிடந்தது கைதேர்ந்த ஓவியன் தூரிகையை வண்ணத்தில் தோய்த்தெடுத்து ஆங்காங்கே நுணுக்கமாக சிதறவிட்டது போல மேகக்கூட்டங்கள் கற்பனைக்கு எட்டாத உருவங்களை சிருஷ்டித்துக் கொண்டிருந்தது
மகிழ மரத்துக்கடியில் வட்ட வடிவான பாறையும் அதன் வெடிப்பில் இருந்து சொட்டு சொட்டாக கசிந்து கொண்டிருந்த நீர்த்தாரையும் கசன் அமர்ந்திருந்த கோலத்தை இன்னும் அழகாக்கியது என்று தான் கூற வேண்டும்
மேகக்கூட்டம் கலைந்து கிடப்பது போலவே கசனின் மனதும் கலைந்து கிடந்தது அதில் இனம் புரியாத இன்னெதென்று விளங்காத எண்ணக் கலவைகள் தோன்றுவதும் மறைவதுமாக இருந்தது
அந்த பாறையில் கசன் மட்டும் இருக்கவில்லை அவனது இனிய தோழன் சுகனும் இன்னொறு நண்பன் அம்ருதரூபனும் இருந்தான் மூவர் முகமும் இயற்கை எழிலை ரசித்ததாக தெரியவில்லை கால எல்லைகளை கடந்த சிந்தனையில் மூழ்கிக் கிடந்ததாகவே தெரிந்தது அவர்கள் மத்தியில் நீண்ட நெடிய நேரமாக கவிழ்ந்திருந்த மெளனத்தை அம்ருதரூபன் கலைத்தான்
"குரு என்பர் யார்? அவர் எப்படிப்பட்டவர்?" அமிர்த ரூபனின் இந்த கேள்வி நீண்ட மௌனத்தை கலைத்தது என்றாலும் கசனை பொருத்தவரை சிறுபிள்ளைத் தனமான கேள்வியாகப் பட்டது இருந்தாலும் சுகன் அக்கேள்விக்கு பதில் கூற துவங்கினான்
"நம்மைப் போன்ற சாதாரணமானவர்களால் கடைபிடிக்க முடியாத உயர்த்த ஒழுக்கங்களை கடைபிடிப்பவர் குரு அதைப் போல இருட்டில் நடப்பவர்களுக்கு விளக்கு பாதை காட்டுவது போல அறியாதவர்களுக்கு அறிவை புகட்டுபவர் குரு"
அதாவது இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு அழைத்து செல்பவர் குரு அப்படித்தானே என்று பூடகமாக கேட்ட அம்ரூதரூபன் தானே மேலே தொடர்ந்தான்" வெளிச்சத்தை காட்டுவது குருவின் வேலை என்றால் முதலில் அவர் வெளிச்சத்தை அறிந்தவராக இருக்க வேண்டும்" என்று முடித்தான்
அவனது பேச்சில் எதையும் புரிந்து கொள்ள முடியாத சுகன் அவனை கேள்விக்குறியோடு நோக்கினான் அந்த பார்வையில் நீ சொல்ல வருவதை புரிந்து கொள்ள முடியவில்லையே என்ற கருத்து இருப்பதை அவதானித்த அம்ருத ரூபனே மேலும் தொடர்ந்தான்
ஞானம் என்பது இறைவன் கொடுக்கும் சொத்தாக இருக்கலாம் ஆனால் அந்த ஞானத்தை சுலபமாக பெற்று விட முடியாது உழைக்க வேண்டும் தன் மெய்வருத்தி பொய் சுருக்கி சிந்தனைகளை புடம் போட்டு செயல்களை கூன் நிமிர்த்தி உழைக்க வேண்டும் அந்த உழைப்பு சத்திய வேள்வி போன்றது அந்த வேள்வியை செய்து ஞானத்தை பெற்றவன் ஒரு போதும் தர்மத்திலிருந்து வழுவமாட்டான் தர்மத்திற்கு விரோதமாக செயல்படவும் மாட்டான்
இதுவரை அமைதியாக இருந்த கசன் இப்போது பேச ஆரம்பித்தான் அமிர்தா நீ கூறுவது மிகச் சரியான கருத்து என்பதில் சந்தேகம் இல்லை ஒரு வகையில் ஞானம் என்பதே தர்மத்தை கட்டடைவதே ஆகும் அந்த வகையில் ஞானம் பெற்றவன் சகலத்தையும் அறிந்தவனாகிறான் இதுவெல்லாம் சரிதான் இந்த நேரத்தில் நீ ஏன் இதைப் பற்றி பேசுகிறாய் இதற்கு அவசியம் என்ன? என்று கேட்டான்
கசனின் கேள்விக்காகவே காத்திருந்தவன் போல அம்ரூதரூபன் முகம் மலர்ந்து தர்மத்தின் வழியில் நிற்பது தான் ஞானவான்களின் லச்சணம் என்றால் அசுரர்களின் குரு சுக்கிராச்சார்யா செயல்கள் தர்மம் ஆகுமா? அவரை ஞானம் பெற்றவர் என்று கருத இயலுமா? என்று கேலியாக கேட்பது போல கேட்டான்
அம்ருத ரூபன் கேலியாக கேட்டானோ வேண்டும் என்றே கேட்டானோ அந்த கேள்வி கசனுக்கு விஷமத்தனமாக பட்டது சுக்ராச்சாரியார் எவ்வளவு பெரிய ஞானபுருஷர் அவரைப் போய் எந்த வகையிலும் தகுதி இல்லாத அமிர்தன் அவமரியாதையாக பேசுவது சரியல்ல மூத்தவர்களின் செயல் நல்லதோ கெட்டதோ அவர்களை மதிக்க வேண்டியது சிறியவர்களின் கடமை என்பது கசனின் எண்ணம் அவன் அப்படித்தான் வளர்க்கப்ப பட்டிருந்தான் அவனுக்கு அப்படித்தான் போதிக்கப்பட்டிருந்தது
அமிர்தா உன் பேச்சு எல்லை மீறுகிறது அவர் நமது எதிரிகளின் பக்கமாக இருக்கலாம் ஏன் நமது எதிரியாகக் கூட இருக்கலாம் ஆயினும் அவர் பெரியவர் சிறந்த கல்விமான் ஞானபுருஷர் வணங்கதக்கவர் தேவர்களின் குலத்திற்கு பிரகஸ்பதி எப்படி ராஜ குருவோ அப்படியே அவர் அசுர குலத்திற்கு குருவாக இருக்கிறார்.
குரு என்பவர் ஞானத்தை காட்டுபவர் மட்டுமல்ல தன்னை நம்பியவர்களை இறுதி மூச்சி வரை காப்பவராகவும் இருக்கிறார். எனவே முதலில் அவரை பற்றிய தவறான எண்ணத்தை உன் மனதிலிருந்து அகற்றிவிடு. என்று கண்டிப்பு நிறைந்த குரலில் அமிர்த ரூபனை பார்த்து கசன் ஆணையிடுவது போல் பேசினான்.
கசன் சொல்லுவது முற்றிலும் சரியே தேவர்களாகிய நாம் தர்மத்தின் வழிநிற்கவே படைக்கபட்டிருக்கிறோம் நாம் வாழுகிற வாழ்க்கை நமக்கானது மட்டுமல்ல மற்றவர்களும் நமது வாழ்க்கையை பாடமாக எடுத்து கொள்ளுவதற்கு. எனவே நாம் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். பெரியவர்களை மதிக்க வேண்டும் சிறியவர்களை காக்க வேண்டும். என்று சுகனும் கூறலானான்.
இவர்களது கண்டிப்பையோ அறிவுரைகளையோ அமிர்த ரூபன் செவிமடுக்கவில்லை. கசன் சுக்ராச்சரியாரை காபந்து பண்ண நினைப்பதில் வேறு அர்த்தம் இருக்கிறது. நான் அதைப்பற்றி இங்கு பேசவரவில்லை. சுக்ராச்சாரியாரின் குற்றத்தை மட்டுமே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். யுத்த தர்மம் என்பது தேவர்களுக்கானது மட்டுமல்ல மனிதர்களுக்கும் அசுரர்களுக்கும் அந்த தர்ம்மம் பொருந்தும். அதன் சட்டதிட்டங்களின் படிதான் யுத்தங்கள் நிகழவேண்டும் என்று தர்மசாஸ்திரம் வலியுறுத்துகிறது. சாதாரண ஜீவன்களே தர்மசாஸ்திரத்திற்கு அடிபணிய வேண்டுமென்றால் ஆச்சாரியர்களை பற்றி கேட்கவே வேண்டாம். முதலில் அவர்கள் அதன்படி நிற்கவேண்டும். அது தான் சிறந்தது. என்று நறுக்கு தெரித்தது போல சொன்னான்.
இப்போது சுக்ராச்சாரியார் எந்த தர்மத்தை மீறிவிட்டார்? என்று கத்தியால் வெட்டுவது போல் கசன் கேட்டான்.
யுத்த தர்மம் என்ன சொல்லுகிறது. நிராயுதபாணிகளோடு சண்டைபோட கூடாது மோதுபவர்கள் இருவரும் சமமான ஆயுதங்களோடு மோத வேண்டும். ஒருவன் கையில் வில் இருக்குமானால் இன்னொருவன் கையிலும் அது இருக்க வேண்டும் வாள் வைத்திருபவனோடு வில்லாளி மோத கூடாது என்று அறிவுறுத்துகிறது அல்லவா அதை அசுரகுரு கடைபிடிக்கிறாரா?
அமிர்த ரூபனின் இந்த கேள்வி அங்கே மீண்டும் கனமான அமைதியை கொண்டுவந்தது. கசனும் சுகனும் அமிர்தனின் கேள்வியிலிருந்த உண்மை பொருளை நன்கு உணர்ந்தார்கள். தேவர்கள் அசுரர்களோடு மோதுகின்ற இந்த நேரம் வரையிலும் சமமான பலத்தோடே மோதுகிறார்கள்
எந்தவகையிலும் அசுரர்களை மிஞ்சுகிற நவீன யுத்திகள் எதையும் கடைபிடிக்கவில்லை அதைப்பற்றி சிந்திக்கவும் இல்லை. ஆனால் அசுரர்கள் அப்படி நடக்கவில்லை அவர்கள் யுத்தத்தில் வீழ்த்தப்படுகிறார்கள் சிறிது நேரத்திலேயே உயிர் பெற்றுவிடுகிறார்கள். இது அசுரர்களின் சூழ்ச்சி அல்ல அவர்களது குருவின் சக்தி. பிரகஸ்பதியிடமும் இதே போன்று எத்தனையோ அபூர்வ சக்திகள் மறைந்து கிடக்கின்றன.
ஆனால் அதை இதுவரை அவர் யுத்தத்திற்காக பயன்படுத்தவும் இல்லை தேவர்கள் அவரிடம் அதை வேண்டவும் இல்லை. ஆனால் அசுரர்கள் வேண்டாமலே சுக்ராச்சாரியார் அந்த வித்தையை செய்கிறார். அது நேர் பார்வையில் தர்மப்படி குற்றம் அதைத்தான் அமிர்த ரூபன் சுட்டி காட்டுகிறான் என்பதை இருவரும் உணர்ந்தார்கள்.
ஆனால் அறிவாளிகளின் கணக்குகள் சாதாரண ஜீவன்களுக்கு புரிவதில்லை புரிகின்ற காலத்தில் தனது முந்தைய நிலைபாட்டிற்காக வருத்தப்படுவது இயற்க்கை அசுரகுருவும் இப்படி எதாவது ஒரு சூட்சம காரணத்திற்காகவே அரக்கர்களை உயிர்பிக்கும் காரியத்தை செய்யலாம். அதை அப்படி கருதாமல் பொத்தாம் பொதுவாக அமிர்தன் குற்றம் சாட்டுவது போல கருதுவதில் ஆபத்தும் உள்ளது.
கொலை செய்வது தர்மப்படி தவறு என்பதனால் அநியாயத்தை காப்பதற்கு கொலை செய்யாமல் இருக்க முடியாது. அந்த நேரம் தர்ம்மத்தை காட்டி கொலையை தவிர்ப்பதும் தர்மமாகாது. இப்படிதான் கசனும் கசனை போன்ற மற்ற தேவகுமாரர்களும் இதுவரை கருதிவந்தார்கள்
ஆனால் இப்போது தான் முதல்முறையாக அமிர்தனை போன்ற இளைஞர்கள் அசுரகுரு அதர்மத்தின் வழிநிற்கிறார் என்ற ரீதியில் பேச துவங்கி இருக்கிறார்கள். இது இன்னும் வன்மத்தையும் பகைமையையும் வளர்க்குமே தவிர அமைதியை தராது. என்று ஆழமாக யோசித்த சுகன் பேச்சை வேறு கோணத்தில் திருப்ப எத்தனித்தான்.
கசன் சுக்ராச்சாரியரை ஆதரிப்பதற்கு வேறு காரணம் எதுவோ இருப்பதாக சொன்னாயே அமிர்தா அது என்ன காரணம்? என்று கேட்டான். சுகனின் கேள்வி வந்த மறுகணமே கண்களை சிமிட்டிய அமிர்தரூபன் கசன் தேவர்கள் குலத்தில் பிறந்தாலும் பிரகஸ்பதியின் மகன் பிரகஸ்பதி பிறப்பால் பிராமணன். அசுர குருவும் அரக்கரின் குலத்தில் பிறந்தாலும் அவரும் பிராமணர். எனவே பிராமணனுக்கு பிராமணன் ஒற்றுமை என்றவகையில் சொல்ல வந்தேன் என்று கூறி விஷமத்தனமாக சிரித்தான்.
அமிர்தரூபனின் இந்த வார்த்தை கசனின் கோபத்தை அதிகரித்தது. அவன் முகம் சிவந்துவிட்டது கண்களில் ஒருவித ரெளத்திரம் நிழலாடியது. என்னை பிராமணன் என்றா கேலி பேசுகிறாய் நானா பிராமணன் இல்லை நான் ஒருபோதும் பிராமணன் ஆகமாட்டேன் பிராமணன் என்றால் யார் என்று உனக்கு தெரியுமா? எதையும் அறியாமல் மூடத்தனமாக யாரை பற்றியும் விமர்சனம் செய்யாதே என்று ஆவேசமாக பெருங்குரலில் கத்தினான் கசன்
சகஜமான நிலைமை விபரீதமாக மாறுவதை அறிந்த சுகன் நிலைமையை சமாளிக்க என்ன செய்வது என்று அறியாமல் திகைத்து நின்றான்...
தொடரும்