அசுர வனத்துக் காதல் - 5
விஷ வர்மன் ஆழ்ந்த யோசனையில் வீழ்ந்தான் அவனது முகத்தில் கரிய மேகம் சூல் கொண்டது போலிருந்தது தனது அன்பு மகனின் முகத்தை இயலாமையோடு பார்ப்பதைப் போல் நோக்கினான் உலர்ந்து காய்ந்து போன நாவை ஈரப்படுத்திக் கொண்டு உடைந்து போன குரலில் பேசத் துவங்கினான்
அன்பு மகனே இன்று சாவு பூமியில் நேருக்கு நேராக மல்லுக்கட்டிக் கொண்டு நிற்கிறார்களே அசுரர்களும் தேவர்களும் அவர்கள் வேறு யாருமில்லை ஒரே தகப்பனுக்கு பிறந்த குழந்தைகள் அதாவது அண்ணன் தம்பிகள்
அப்பா என்ன சொல்கிறீர்கள்? என்னால் நம்ப முடியவில்லை
நிஜம் தான் என் தந்தையின் மூலமாக இந்த செய்தியை முதல்முதலில் அறிந்த போது என்னாலும் நம்ப முடியவில்லை இன்று நீ திகைத்து நிற்பது போலவே அன்று நானும் நின்றேன்
விராடகேது விரித்தக் கண்ணை இமைக்காமல் தந்தையை வெறித்துப் பார்த்தான் தகப்பன் வாய் வழியாக வந்து விழப் போகிற அடுத்த அதிர்ச்சித் தகவலை தாங்கிக் கொள்ள தயாரானான்
விஷவர்மன் தொடர்ந்தான் ரத்தம் ரத்தத்தோடு மோதுகிறது சொந்தம் சொந்தத்தை தின்னப் பார்க்கிறது. ஆனால் இந்த மோதல் அழிந்து போகும் பெருளுக்காகவோ அற்ப சுகம் தரும் பெண்களுக்காகவோ பதவிக்காகவோ அல்ல மிக உயர்ந்த நோக்கமுடைய கொள்கைக்காக இந்த சண்டை நடக்கிறது என்றால் இன்னும் நீ அதிசயம் அடைவாய்
உங்கள் சொற்கள் என் ஆர்வத்தை தூண்டுகிறது விபரமாக சொல்லுங்கள்
பிரம்மா விராட் புருஷன் என்ற பிரம்மத்தால் படைக்கப்பட்டார் அந்த பிரம்மதேவன் மனுக்களை படைத்தார் பிறகு ஸப்த ரிஷிகளை படைத்தார்
அந்த ரிஷிகளின் வம்சத்தில் மரிஷி மஹரிஷி முக்கியமானவர் அவரின் குமாரர் காசியபர் தான் நமது அரக்கர் குலத்தின் ஆதி பிதா
நமது அரக்கர் குலம் மட்டுமல்ல இன்று பிரபஞ்சத்தில் வாழுகின்ற உயர்வான அனைத்து இனங்களுமே தங்கள் குலம் செல்வந்த மரபில் வந்ததாக பெருமைபட்டுக் கொள்ளாது அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாத துறவியின் வம்சத்தார் என்று சொல்லிக் கொள்ளவே விரும்புவார்கள் காரணம் ரிஷிகள் ஒழுக்கம் நிறம்பியவர்கள் புலன்களை அடக்கியவர்கள் அறிவில் சிறந்தவர்கள்
அந்த வகையில் நமது ஆதி பிதா காசியபர் தலை சிறந்த தவசி மிகப் பலம் பொருந்திய தேஜஸ் மிகுந்தவர் அவர் உலக நன்மையின் பொருட்டு இல்லற வாழ்வை மேற்கொண்டார்
நமது ஆதி பிதா அப்போது மாட்சிமை மிக்கவனாக வாழ்ந்த தட்சப் பிரஜாபதி என்பவருக்கு பிறந்திருந்த பதிமூன்று குமாரிகளையும் உயரிய நோக்கத்திற்காக முறைப்படி மணம் முடித்தார். அவர்கள் வழியாய் வம்ச விருத்தி செய்தார்.
அந்த தெய்வீக பெண்மணிகளின் பெயர்களையும் அவர்கள் வழியாக உலகம் பெற்ற உயிர் குலங்களையும் வரிசையாக சொல்கிறேன் கவனமாக கேள் அதிதி வழியாக ஆதித்யர்கள் திதி வழியாகத் தைத்தியர்கள் தநு வழியாகத் தானவர்கள் அநாயு வழியாகச் சித்தர்கள் பிரதை வழியாகக் கந்தருவர்கள் முனிவழியாக அப்சரசுக்கள் சுரசை வழியாக ய்க்ஷர்கள், இராக்கதர்கள் இளை வழியாக மரம், செடி, கொடி மிருகங்கள் குரோத வரை வழியாகக் கொடிய மிருகங்கள் தாம்ரை வழியாக குதிரை பட்சிகள் சுரபி வழியாகப் பசுக் கூட்டங்கள் விநதை வழியாக அருணன், கருடன் கத்ரு வழியாக நாகங்கள்
.
பின் இக்காசியபருக்கு பர்வதன் என்னும் தேவரிஷியும் விபாண்டகன் என்னும் பிரம்மரிஷியும் பிறந்தனர்.
பரசுராமர் தம்முடைய அசுவமேத யாகத்தில் பூமியைக் காசியபருக்குத் தானமாகக் கொடுத்தார். காசியபரால் தானமாகப் பெறப்பட்ட பூமி காசினி என அழைக்கப்பட்டது
தந்தையே நீங்கள் கூறுகின்ற வரலாறு பிரமிப்பாக இருக்கிறது ஒரு ஜீவனிலிருந்து இத்தனை இனங்கள் தோன்றியதை எண்ணும் போது ருத்ர பகவானின் சிருஷ்டியின் தன்மையை நினைத்து மலைப்பு வருகிறது ஆனால் அசுரர் மற்றும் தேவர்களின் பிறப்பை பற்றி சொல்வதாக கூறி வேறு எதையோ பேசுகிறீர்களே
அல்ல மகனே நான் சொல்ல வந்ததைத்தான் சொல்கிறேன் காசியரின் முதல் மனைவியின் பெயர் அதிதி என்றும் அவர்களுக்கு பிறந்தவர்கள் ஆதித்தியர்கள் என்றேன் அல்லவா ஆதித்தியர்கள் என்றால் வேறு யாருமில்லை அவர்கள் தான் தேவர்கள்
அதைப் போல இரண்டாவது மனைவி திதி என்றும் அவர்களுக்கு பிறந்தவர்கள் தைத்தியர்கள் என்றேனே அவர்கள் தான் அசுரர்கள் என்ற நாம் இப்போது புரிகிறதா தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரே தந்தை தாய்மார்தான் வேறுவேறு என்று
ஒரு கொடியில் இரண்டு மலர்கள் என்றால் இரண்டும் ஒரே குணமும் மணமும் கொண்டதாக தானே இருக்கும் இயற்கை விதிக்கு முறனாக அசுரர்களும் தேவர்களும் முற்றிலும் மாறுபட்ட வர்களாக இருக்கிறார்களே அதற்கு என்ன காரணம் எனக்கு ஒன்றும் புரியவில்லை குழப்பமான கேள்வியோடும் மனதோடும் தந்தையின் காலடியில் உட்கார்ந்தான் விராட கேது
நீ சொல்லும் இயற்கையின் விதி என்பது சரியான கருத்துத் தான் ஆனால் அந்த விதி ஐந்தறிவு பெற்ற உயிரினங்கள் வரையுலும் தான் பொருந்துமே தவிர சுதந்திர சிந்தனை பெற்ற ஜீவன்களுக்கு பொருந்தி வராது நீயும் நானும் தேவர்களும் மனிதர்களும் பகுத்தறியும் தன்மை நிறம்பியவர்கள் இறைவனுக்கு நிகரான ஆளுமை பெற்றவர்கள் மஹா ருத்ரன் படைக்கும் ஆற்றலை மட்டும் தான் நமக்கு தரவில்லையே தவிற மீதி எல்லாம் தந்திருக்கிறான் என்றான் விஷவர்மன்
அப்படி என்றால் சுதந்திர சிந்தனையால் தான் பகைமை மூண்டது சண்டை தொடர்கிறது என்கிறீர்களா? கட்டுப்பாடற்ற சுதந்திரமான சிந்தனா ஆற்றல் குழப்பத்திலும் அழிவிலும்தான் கொண்டு போய் விடுமா?விராட கேதுவின் குரலில் இருந்தது ஆர்வமா எரிச்சலா என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை
விஷவர்மன் தொடர்ந்தான் சுதந்திரம் என்பது நல்ல பொருள் தான் ஜீவனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அது அவசியம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை இன்னும் சொல்லப்போனால் உயிர் வாழ காற்று எப்படி அவசியமோ அப்படி சுதந்திரமும் அவசியம் ஆனால்...
ஆனால் என்ன அப்பா ?
அதே சுதந்திரம் கட்டுப்பாடு இல்லாமல் அதிகமாகப் போனால் அதுவே அடிமைகளை உருவாக்க துவங்கி விடும் அடுத்தவர்களின் மேல் ஆதிக்கம் செலுத்துவது தனது உரிமை என்ற விபரித நிலையிலும் கொண்டு போய் நிறுத்தி விடும்
நீங்கள் கூறுவதை ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் அளவுக்கு அதிகமானால் வெளிச்சம் கூட இருட்டாக மாறிவிடுகிறதே
ஆம் அது தான் காசிப்பர் புத்திரர்கள் விஷயத்தில் நடந்தது அசுரர்கள் என்றும் தேவர்கள் என்றும் ஒரே ரத்தம் இரண்டு இனமாக மாறிப் போனது
நீங்கள் கூறுவது விளங்குவது போலவும் இருக்கிறது விளங்காதது போலவும் இருக்கிறது சற்று எளிமையாக புரிய வையுங்கள் தந்தையே என்றான் விராட கேது
தகப்பன் அடுத்த கேள்விக்கு தாவினான் அந்த கேள்வி தான் அரக்கர்களுக்கும் தேவர்களுக்கும் நடக்கும் யுத்தத்தின் ரகசியத்தை வெளிக்கொண்டு வருவதாக அமைந்தது