அசுர வனத்துக் காதல் - 4
விஷ வர்மன் என்ற பெயரைக் கேட்டாலே படமெடுக்கும் நாகம் கூட பதுங்கி கொள்ளும் வீரம் சொட்டும் உம் விழிகள் பட்டாலே பச்சை மரம் பற்றி எரியும் உம் தோள் அசைந்தால் எதிரியின் வாள் நடுங்கும் மின்னலை ஒத்த உமது வாள் அசைந்தால் அகிலமே நடுங்கும்
அண்ட சராசரங்கள் அனைத்தும் உம் காலடியில் கிடக்கிறது அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகர்கள் எல்லாம் உம் கட்டளை ஏற்று பணி செய்ய காத்துக் கிடக்கிறார்கள்
சூரியன் உதிக்க உம் உத்தரவு தேவை
சமுத்திரம் அலை வீசி துடிக்க உம் விரலசைவு தேவை
காற்று வீசவும் கற்பூரம் மணக்கவும் உம் கண்ணசைவு தேவை
கூட்டுப் பறவை குஞ்சுக்கு இரை கொடுக்க வேண்டுமென்றாலும் உம் கட்டளைக்கு காத்திருக்க வேண்டும்
வெட்டுண்ட எதிரிகளின் தலை உம் வாசலில் மாவிலை தோரணம்
பொங்கி பிரவாகம் எடுக்கும் செங்குருதியே நீர் நீந்திக் களிக்கும் தடாகம்
எதிரி குலப் பெண்களின் மங்கல சூத்திரம் உமது கைகளை அலங்கரிக்கும் கங்கணம்
இத்தனை சிறப்புமிக்க உமது விழிகளில் கருமேகம் குடிகொண்டிருப்பது போலிருக்கிறது
எதற்கும் அஞ்சாத நெஞ்சம் உருகி கிடப்பது போல் தெரிகிறது
வெற்றிக்கு மேல் வெற்றிகளை குவித்த வண்ணம் நமது அசுரப்படை முன்னேறி வருகிறது
அரம்பையர்களை நிகர்த்த அழகுக் கன்னிகைகள் ஆடல்கள் ஆடியும் பாடல்களை பாடியும் மகிழ்வு என்ற வேள்வி நெருப்பில் ஆகுதிகளை சொறிந்த வண்ணம் உள்ளார்கள்
வெற்றி மாலை சூட வரும் வீரத் தளபதிகள்
தக்க நேரத்தில் வழிகாட்டும் மதி நிறைந்த மந்திரிகள்
அறிவில் சிறந்த ஒற்றர்கள்
அன்பும் அழகும் நிறைந்து ததும்பும் அருமை மனையாட்கள்
வீரம் செறிந்த உங்கள் அருந்தவப் புதல்வன்
அனைத்திற்கும் மேலே முக்காலத்தையும் கட்டுப்படுத்தும் மும்மூர்த்திகளையும் வசமாக்கும் முப்பெறும் தேவிகளை கூட ஏவல் செய்ய கட்டளையிடும் தகுதி பெற்ற அரக்கர் குல மஹா குரு சுக்ராச்சாரியார் இருக்கிறார்
பிறகு எதற்கு இந்த கலக்கம் ஏன் இந்த மயக்கம்
சொல்லுங்கள் தந்தையே சொல்லுங்கள் எதுவாக இருந்தாலும் உங்கள் மகனான என்னிடம் சொல்லுங்கள்
நீங்கள் சொல்லி முடிப்பதற்குள் உங்கள் வேண்டுதல் எதுவாக இருந்தாலும் முடித்து வைப்பேன் இது உங்கள் மீது ஆனை
அரக்கர் குல தலைவன் விஷவர்மனின் ஒரே மகன் விராட கேது தனது தகப்பனின் முகம் வாடிக் கிடப்பதை பார்த்து இப்படி பேசினான்
விராட கேதுவின் பேச்சு விஷவர்மனுக்கு அமுதை சுவைப்பது போல இருந்தது தானாட விட்டாலும் தன் சதையாடும் என்பது எத்தனை உண்மை என் சிறிய மன வாட்டத்தை நொடியில் கண்டறிந்து விட்டானே என் மகன்
மந்திரிகள் ஆயிரம் பேர் இருந்தாலும் நண்பர்கள் பல்லாயிரம் பேர் இருந்தாலும் உற்றார் உறவினர் எத்தனைப் பேர் இருந்தாலும் ஒற்றை மகனுக்கு ஈடாகுமா?
என் மகன் என் ரத்தம் என் உணர்வு என் உயிர் அவனுக்கு பின் தான் அத்தனை சொந்தங்களும் அத்தனை செல்வங்களும்
தேடிய செல்வங்கள் பெட்டியோடு நின்று விடும்
அடைந்த வெற்றிகள் அடுத்த தோல்வியோடு முடிந்து போகும்
பேரும் புகழும் எல்லை வகுத்துத் தான் கூட வரும்
உறவுகளின் கண்ணீரும் நண்பர்களின் ஏக்கமும் மயான வாசலோடு நின்று விடும்
கட்டிய மனைவியும் பிணத்தோடு வர மாட்டாள்
என் பிள்ளை வருவான் எட்டுக் கால் தாங்கி நான் இடுகாடு செல்லும் போது அக்கினி சட்டியோடு என் பிள்ளை வருவான்
கட்டையில் என் பிணத்தை கால் கட்டி கிடத்திய பின் சுட்டு சாம்பலாக்க ஒரு துளி நெருப்பை தானமாகத் தர என் பிள்ளை வருவான்
அவன் என் ஊத்தை சரீரத்தை எரித்து என் சரித்திரத்தை முன்னெடுத்து செல்பவன்
அவன் என் உயிரின் தொடர்ச்சி
என் ஆத்மாவின் மலர்க்சி
என் உணர்வுகளின் புரட்ச்சி
என் மரபுகளின் வருங்காலம்
என் கனவுகளின் நிதழ்காலம்
என் துடிப்புகளின் இறந்த காலம்
மகன் இல்லையென்றால் வாழ்க்கை ஏது? மகன் இல்லையென்றால் வம்சம் ஏது? மகன் இல்லையென்றால் புத் என்ற சொர்க்கம்தான் ஏது?
வம்சம் வளர்பது மகன் வாழ்க்கையின் மலர்ச்சி மகன் என் ஆத்மாவின் தொடர்ச்சி மகன்
ஆகா ஏப்பேர்பட்டவன் என் மகன் ? எனக்காக தன்னுயிரையும் தருவான் எவன் உயிரையும் வாங்குவான் என் சிரிய வாட்டம் கண்டாலே மண்டலத்தை நடுநடுங்க செய்திடுவான்
என்று தன் மகனின் அருமையையும் பெருமையையும் சிந்தித்து உள்ளுக்குள் மகிழ்வுற்ற விஷவர்மன் வாய் திறந்து பேச துவங்கினான்
என்னை நினைத்து எந்த வருத்தமும் எனக்கில்லை மகனே நமது அரக்கர் உலகை பற்றி சிறிது சிந்தித்தேன் அதனால் சற்று முகம் வாடிவிட்டேன் என்றான்
நம் உலகுக்கு என்ன ? சாவே இல்லா சாஸ்வதர்களாக நமது வீரமல்லர்கள் இருக்கிறார்கள் வழிநடத்தி செல்ல நீங்களும் தக்க மந்திரிகளும் அசுர குருவும் இருக்கிறீர்கள்
பிறகு எப்படி அல்லலும் அழுகையும் அரக்கர் பூமிக்கு வரும்? பலவீனர்கள் தான் அழிந்து போவார்கள் பலவான்களுக்கு அழிவே கிடையாது என்று தந்தையை தேற்றும் வண்ணம் விராட கேது உரைத்தான்
நான் அதை நினைக்கவில்லை என் நினைப்பே வேறு
வேறு என்ன தந்தையே?
யுத்தத்தில் மட்டுமே கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் மக்களின் புத்தி மழுங்கி விடும் கலையும் திறமையும் பரிணமிக்க வேண்டிய தேசத்தில் கொலைத் தொழில் செய்வதே பெருமையாகி விடும் சண்டை என்பது தோற்றவனை மட்டும் அழிப்பது கிடையாது வென்றவனையும் ஆணவம் என்ற விஷத்தால் அழித்து விடும்
விராட கேது இளைஞன் அரக்கன் வீரன் ஆனால் முரடனல்ல விஷவர்மனின் வார்த்தையில் புதைந்து கிடக்கும் உண்மை அவனுக்கு புரிந்தது யுத்தம் இல்லாத காலத்தில் அரக்கர் உலகம் அடைந்திருந்த முன்னேற்றமும் இப்போது இருக்கும் தேக்க நிலையும் தெளிவாக தெரிந்தது அவனுக்கு
படை வீரர்கள் அணிவகுத்ததைப் போன்ற வீடுகள் அமைந்த வீதிகள் நான்கு யானை ஒரே வரிசையில் நடந்தாலும் இன்னும் இடமிருப்பதை போன்ற விசாலமான சாலைகள் சாலைகளில் அலங்காரமாகவும் அவசியமாகவும் ஒளி தரும் தூண்டா மணி விளக்குகள்
ஒவ்வொறு வீதி சந்திப்பிலும் யோக நிலையில் இருக்கும் மஹாதேவரின் அழகிய விக்ரகங்கள் அதில் மக்கள் கூடி விவாதங்களில் ஈடுபடும் விசால மேடைகள்
ஈசான்யத்தில் காற்று வரும் வரவேற்பு அறையும் அக்னி பாகத்தில் உணவுகூடமும் நைருதியின் இல்லத்தில் அதிபதி அறையும் பொக்கிஷ காப்பகமும் வாவியத்தில் கழிவறையும் வைத்து முறைப்படி கட்டிய வீடுகளும்
தனித்தனியாக வீடுகளில் சிறு சிறு கேணிகளும் நீர் இறைப்பதற்கு உருளிகளும் கழிவு நீர் வீட்டில் உள்ளே தேங்காமல் வீதியில் வழிந்து ஓடாமல் சுரங்கம் வெட்டி கால்வாய்கள் அமைத்திருப்பதும்
ஐந்து மாடிகள் வரை உயர்ந்து நிற்கும் மாளிகைகளும் கண்ணாடி போல மின்னுகின்ற தரை தளங்களும் கொத்துக் கொத்தாய் தொங்கும் சர விளக்குகளும் மெல்லிய திரைச்சீலைகளும் நுணுக்கமான சிற்பங்களால் அழகை கொப்பளிக்கும் கதவுகளும் சாரளங்களும் சுவர்களும்
அட டா அடடா அரக்கர் உலகின் அழகை காண கண்கள் இரண்டு போதாது என்று கந்தர்வர்களும் யட்சர்களும் மனிதர்களும் வியந்து போனார்களே அந்த முன்னேற்றம் வளரவே இல்லையே இந்த தேவாசுர யுத்தம் ஆரம்பித்த பிறகு அப்படியே நின்று விட்டதே
தந்தையின் வருத்தத்தின் அர்த்தம் இப்போது தனையனுக்கு புரிந்தது சிறிது நேரம் ஆழமாக யோசித்தான் அதன் விளைவாக தகப்பனிடம் சில கேள்விகள் கேட்கத் துவங்கினான்
ஆமாம் தந்தையே யுத்தத்தால் இரண்டு தரப்புக்கும் ஏற்படும் பின்விளைவுகள் எண்ணிப் பார்க்க வேண்டியது அவசியம் இருப்பினும் எனக்கு சில சந்தேகங்களும் கேள்விகளும் இருக்கிறது உங்களிடம் கேட்கலாமா?
கேள் மகனே கேள் நன்றாக கேள்
தேவர்களுக்கும் நமக்கும் முடிவே இல்லாத இந்தப் போர் ஏன் ஏற்பட்டது? எப்போது துவங்கியது? இதை ஆரம்பித்தது யார்?
இவைகளை விட முக்கியமான கேள்வி தேவர்கள் என்பது யார்? அரக்கர்களாகிய நாம் யார்? இருவருக்கும் என்ன சம்மந்தம்?
மகனின் கேள்வி தகப்பனின் சிந்தனை குளத்தில் கல்லெறிந்ததைப் போல் விஷவர்மனின் எண்ணம் என்ற தேர் கடந்த காலத்தை பார்க்க பின்னோக்கி ஓட துவங்கியது