முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகும் திமுக தலைவர் கலைஞர் அவர்கள் வயோதிகத்தின் காரணமாகவும் உடல் நோயின் காரணமாகவும் அரசியலிருந்து ஒதுங்கி இருக்கின்ற காலத்திற்கு பிறகும் தமிழ்நாட்டில் சில விரும்ப தகாத சக்திகள் உருவெடுத்து மக்கள் மத்தியில் மனபீதியையும் தேவையற்ற சஞ்சல போக்கையும் உருவாக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்
மாநில அரசு என்பது செயல்படாத இயந்திரம் போல் ஆகிவிட்டது போலவும் தடியெடுத்தவன் எல்லோரும் தண்டல்காரர்கள் என்ற நிலை இருப்பது போலவும் பலரும் பேசிவருகிறார்கள் மிக குறிப்பாக சொல்லுவது என்றால் மற்ற நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு எண்ணத்தோடு காலனி ஆதிக்கத்தை கொண்டுவந்து பாதிக்கப்பட்ட நாட்டை முற்றிலுமாக சுரண்டி தனது நாட்டிற்கு கொண்டுசென்ற அந்நிய ஆங்கிலேய அரசை விமர்சனம் செய்வது போல நமது சொந்த இந்திய அரசை தமிழ்மக்களுக்கு அந்நியமான அரசு போல ஆக்கிரமிக்கும் அரசு போல பேசுகிறார்கள் எழுதுகிறார்கள் மக்கள் மனதில் தேவையற்ற விஷமத்தை வளரச் செய்கிறார்கள்.
தமிழ்நாடு என்பது பாதுகாப்பற்ற பூமி போலவும் இங்கிருக்கின்ற மக்கள் அனாதைகளாக ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது போலவும் ஒரு மாயாவாதம் மிக வேகமாக பறப்பட்டு வருகிறது. தமிழ்நாடு ஒரு கலவர பூமி என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் மத்திய மாநில அரசுகளை கொடுங்கோன்மையின் சின்னங்களாக வர்ணனை செய்வது இன்று சகஜமாக இருக்கிறது
. இந்த போக்கு மிகவும் விபரீதமானது அபாயகரமானது தமிழ்நாட்டு மக்களின் அமைதியான இயல்புக்கு எதிரானது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. ஆனால் ஏனோ தெரியவில்லை இன்று தமிழ்நாட்டில் இருக்கும் தலைவர்களில் பலர் இந்த அபாயத்தில் உணர்ந்தவர்களாக தெரியவில்லை. மாறாக ஊர் பற்றி எரியும் போது பிடுங்கிய வரையிலும் லாபம் என்பது போல கலவரங்களை வளர்ப்பதற்கும் கலவரங்களால் தனது சொந்த லாபங்கள் அதிகரித்து கொள்வதற்கும் இவர்களும் பல நேரங்களில் விரும்பி செயல்படுவது போல் தோன்றுகிறது.
இன்று தமிழ்நாட்டின் தென்மூலையில் முத்துக்களுக்கு பெயர் போன தூத்துக்குடியில் பத்துக்கும் மேற்பட்ட மனித உயிர் முத்துக்கள் குண்டுகளால் சிதைக்கப்பட்டு சடலங்களாக சவ அறையில் அடுக்கப்பட்டு கிடக்கின்றன அவர்களின் கனவுகள் நோக்கங்கள் தத்துவங்கள் அறிவாற்றல் அனைத்தும் ஒரே நொடியில் பொசுங்கி புகையாய் போய்விட்டன.
செத்தவர்கள் உயிர் மீண்டும் வந்துவிடுமா? என்று யோசிப்பது ஒருபுறம் இருக்கட்டும் செத்தவர்களால் பரிதாபகரமாக கைவிடபட்டிருக்கும் அவர்களது குடும்ப நிலை என்னவாகும்? அதற்கு எந்த தலைவர்கள் பொறுபேற்பார்கள் என்பதை எல்லாம் எண்ணி பார்க்க துரதிஷ்டவசமாக இன்று தமிழ்நாட்டில் யாரும் இல்லை அதற்கு யாரும் தயாராகவும் இல்லை.
தூத்துக்குடி கலவரத்திற்கு மூலகாரணமான தாமிர தொழிற்சாலை அமைவதற்கு இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளுமே காரணம் என்றால் அதுதான் சரியான கருத்தாக இருக்கும். இந்த ஆலை ஆரம்பத்தில் 1991 -ஆம் வருடம் மராட்டிய மாநிலம் இரத்தினகிரியில் அமைக்க முயற்சி நடந்தபோது அதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் போராடினார்கள்
மக்கள் எதிர்ப்பின் முன்னால் தாக்குபிடிக்க முடியாத லண்டன் வேதாந்த நிறுவனமும் மராட்டிய அரசும் இரத்தினகிரி திட்டத்தை கைவிட்டது. ஆனால் அடுத்த ஒரு ஆண்டிலேயே இந்த ஆலையை தமிழ்நாட்டில் அமைக்க கதவை திறந்து வைத்து கம்பளம் விரித்து வரவேற்ப்பு நடத்தினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
அதன்பிறகு தொடர்ச்சியாக ஏற்பட்ட அதிமுக, திமுக மாநில அரசுகளும் காங்கிரஸ் பாஜக போன்ற மத்திய அரசுகளும் இந்த நிறுவனம் செழித்து வளர துணை செய்திருப்பதை யாரும் மறுக்க இயலாது.
அதுமட்டுமல்ல மத்தியில் ஐக்கிய முன்னணி அரசு அமைந்த போது தான் இந்த ஆலைக்கு சுற்று சூழலால் பாதிப்பு இல்லை என்ற நற்சான்றிதழும் வழங்க பட்டது. அப்படி வழங்கிய ஐக்கிய முன்னணி அரசில் இன்று ஆலையை எதிர்த்து போராடுகிற திமுகவும் அங்கம் வகித்தது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். மேலும் ஐக்கிய முன்னணி அரசு ஆலைக்கு பக்கபலமாக இருந்த போது அரசுக்கு பக்கபலமாக இருந்தவர்கள் இடது சாரிகள் என்பதையும் மறக்க கூடாது.
இன்று ஆலைக்கு எதிராக போராடுபவர்கள் அனைவருமே அன்று ஆலையின் திறப்பிற்கும் வளர்ப்பிற்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர்கள் இன்று தன்னுடைய நிலையை தானே மறந்து அரசியல் செய்கிறார்கள். இதை அறியாத பொதுமக்கள் இவர்களை நம்பி ஏமாந்து தனது வாழ்க்கையை பலிகொடுத்து கொண்டிருக்கிறார்கள்
. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு சர்வதிகாரம் படைத்த தலைவர்கள் யாரும் இல்லை என்ற எண்ணத்தில் அந்த இடத்தை பிடிப்பதற்கு சின்னச்சிரிய அரசியல் கும்பல்கள் ஏற்பட்டு தங்களுக்கு தாங்களே மக்கள் தலைவர்கள் என்று பட்டத்தை சூட்டி கொண்டு கீழ்த்தரமான உணர்சிகளை பரப்பி தேசத்திற்கு விரோதமான காரியங்களை செய்து கொண்டுவருகிறார்கள்.
தூத்துக்குடியில் நடந்த போராட்டம் ஜனநாகரீதியிலானது என்று சம்மந்தப்பட்டவர்கள் சொன்னாலும் உண்மையில் அந்த போராட்டத்தில் ஜனநாயகத்தின் மீதும் அரசியல் தார்மீக தர்மத்தின் மீதும் நம்பிக்க கொண்டவர்கள் மட்டுமே இருந்தார்கள் என்று கூற இயலாது. காரணம் ஜனாக வழியில் போராடுபவர்கள் ஆலையின் ஊழியர்கள் பயணம் செய்யும் வாகனங்களின் மீது கல்வீச வேண்டிய தேவையில்லை கையில் பெட்ரோல் குண்டுகள் எடுத்து வரவேண்டிய அவசியம் இல்லை.
எப்படி காவல்துறை திட்டமிட்டு துப்பாக்கி சூட்டை நடத்தியது என்று அவர்கள் கருதுகிறார்களோ அதே போலவே திட்டமிட்டே வன்முறையை போராட்டகாரர்கள் ஏற்படுத்தினார்கள் என்பதில் ஐயம் இருப்பதாக தெரியவில்லை
பொதுவாக போரட்டக் காரர்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனிக்கும் போது அவர்களுடைய முழுமுதலான நோக்கம் ஆலைக்கு எதிரானதாக மட்டும் தெரியவில்லை. மத்திய அரசுக்கும் இப்போதைய மாநில அரசுக்கும் எதிரான அரசியல் போராட்டமாகவே இது தெரிகிறது.
மக்களுக்கான போராட்டம் எதற்காக வழிபாட்டு ஸ்தலத்தில் இருந்து புறப்படுகிறது? மத சம்மந்தப்பட்டவர்களுக்கு இதில் என்ன வேலை என்பதும் நமக்கு புரியவில்லை. உண்மையில் இந்த போராட்டம் இப்போது நடந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. காரணம் சம்மந்தப்பட்ட ஆலை செயல்படவில்லை பல்வேறு காரணங்களால் அடைக்கப்பட்டு இயங்காமல் முடங்கி கிடக்கிறது. மேலும் ஆலைக்கு எதிரான போராட்டம் என்பது ஆலையில் வேலை செய்யும் தொழிளார்களுக்கு எதிரான. போராட்டமாக உருபெற்றதற்கும் யாரும் காரணம் கூற இயலாது.
இருபதாயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒரு இடத்தில் கூடுகிறார்கள் என்றால் அது ஒரே நாளில் திட்டமிட்டு ஒருங்கிணைக்க கூடிய காரியமில்லை. பலநாள் உழைத்தால் தான் இத்தனை மக்களை ஒரே இடத்தில் கூட்ட இயலும். கூட்டுவதற்க்கான முயற்சியை நிச்சயம் ரகசியமாக செய்திருக்க வாய்ப்பில்லை. அது உளவு துறையினருக்கு தெரியாமல் இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை.
எங்களுக்கு தெரியாது நாங்கள் எதிர்பார்க்க வில்லை என்று காவல் துறை சொன்னால் அது அவர்கள் இயலாமையை வெளிச்சம் போட்டு காட்டுவதாகும். நிஜமாகவே காவல்துறை நினைத்திருந்தால் இவ்வளவு பெரிய கூட்டம் போடுவதை தடுத்திருக்க முடியும். உயிரழப்பு ஏற்படாமலே பாதுகாத்திருக்கவும் முடியும்.
இன்று மரணத்தாலும் படுகாயத்தாலும் பாதிக்கபட்டிருப்பது பொதுமக்கள் மட்டுமல்ல காவலர்களும் தான். காவலர்களும் மனிதர்களே அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. இன்று பலர் காவல்துறை மனிதர்கள் தங்களது எதிர்கால வாழ்க்கையை அச்சத்தோடு நினைத்தப்படி மருத்துவமனை படுக்கைகளில் கிடக்கிறார்கள்
. அவர்களுக்கு யார் பதில் கூற முடியும்? இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சலுகைகளும் வழங்கினால் சம்பவங்களால் ஏற்பட்ட காயங்கள் ஆறப்போவதில்லை. அது விணான வன்மங்களையும் குரோதங்களையும் வளர்க்கும்
உண்மையை சொல்வது என்றால் தற்போதைய முதல்வர் திரு. பழனிச்சாமியின் அரசு இந்த ஆலை அமைவு விஷயத்திற்கு சம்மந்தப்படவில்லை என்றாலும் கூட யாரோ செய்த பாவத்திற்கு இவர்கள் பழிசுமக்க வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறார்கள்
. இருந்தாலும் அரசு என்பது மக்களை காப்பதற்க்காக இருக்கும் நிறுவனமாகும். எதையும் நிதானமாக சிந்தித்தே செயல்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. மக்களை தனது உடல் உறுப்பாக கருதாத எந்த அரசும் நிலைக்காது என்று சாணக்கியர் சொல்லுவார். அதற்காக நான் திரு. பழனிச்சாமி அரசை பலிவாங்கும் அரசு என்று குறைகூற விரும்பவில்லை. சற்று நிதானித்து சிந்தித்திருந்தால் பல உயிர்கள் வீணாக போயிருக்காது என்று சொல்ல வருகிறேன்.
போரட்டங்களில் ஈடுபடுபவர்கள் மக்களுக்காக போராடுவதாக தான் கூறுகிறார்கள் ஆனால் மக்கள் என்பது தனிமனிதனை மட்டும் குறிக்கும் சொல் அல்ல. அதில் அரசாங்கமும் அடங்கி இருக்கிறது அரசாங்கத்தை எதிர்ப்பதாக கருதி அரசு ஊழியர்களையும் அரசு சொத்துக்களையும் சிதைக்க நினைப்பது எந்த போராட்ட தர்மமும் கிடையாது. மேலும் வன்முறையை கையாள நினைக்கும் போது அதற்கு பதிலாக வன்முறை தான் வரும் என்பதை மக்கள் மறக்க கூடாது.
அறம் அஹிம்சை அன்பு என்பவைகள் இப்போது அரிதான பொருளாகி விட்டது. தமிழ்நாட்டிற்கு இப்போது அவசிய தேவை சர்வதிகார மிக்க தனிமனித தலைவர் இல்லை. அன்பும் அரவணைப்பும் அஹிம்சையும் தேவை என்பதை மக்கள் உணர வேண்டும்.
பிரிவினை பேசுபவர்களும் பேதங்களை விதைப்பவர்களும் கூரையை கொளுத்திவிட்டு கோபுரத்தின் மேல் ஏறி நின்றுவிடுவார்கள் வீட்டிற்கு சொந்தக்காரன் தான் கூரை இல்லாமல் வாழவேண்டிய நிலைவரும். எனவே பிரிவனை பேசும் குட்டி தலைவர்களை ஒதிக்கி வைத்துவிட்டு தேச நலனில் அக்கறை கொண்டவர்களை தேர்ந்தெடுப்பது தான் அவர்களை பின்பற்றுவது தான் இப்போதைய ஜனநாயகத்திற்கு ஏற்ற வழியாகும். அதுவே ஆரோக்கியமான வழியாகும்.