அன்புள்ள குருஜி அவர்களுக்கு பணிவான வணக்கம்
தியானம் செய்ய வேண்டும் என்றும் தியானத்தின் சிறப்புக்கள் பற்றியும் நமது ஹிந்து மதம் மட்டும் தான் பேசுகிறது மற்ற மதங்கள் முத்தி என்பதை பற்றிக் கூட பேசவில்லை கடவுள் ஒரு நாள் பூமிக்கு வருவார் தங்கள் வழியை ஏற்றுக் கொண்டவர்களுக்கு சொர்க்கத்தை தருவார் மற்றவர்களை மீளாத நரகத்தில் தள்ளி விடுவார் என்று தான் கூறுகின்றன அதனால் தான் கேட்கிறேன் தியானம் என்பது ஹிந்துக்களுக்கு மட்டும்தானா? என்று
இப்படிக்கு
வீர ராகவன்
நான்குநேரி
வீசுகிற காற்றும் ஒடுகிற நதியும் ஒருவர்க்கானது அல்ல உலகத்துக்கானது உலக ஜீவன்கள் அனைத்திற்கும் சொந்தமானது தியானம் என்பதும் அப்படித்தான் மனம் என்ற ஒன்று இருப்பவர்கள் அனைவரும் தியானம் செய்யலாம்
நீங்கள் நினைக்கிறீர்கள் நீண்டு நிமிர்ந்து பத்மாசனத்தில் உட்கார்ந்து விரல்களை சின்முத்திரையில் வைத்துக் கொண்டு கண்களை மூடி அமர்வது தான் தியானம் என்று அது நீங்கள் தியானத்தை பற்றி தவறான கண்ணோட்டம் வைத்துள்ளதை காட்டுகிறது
ஒருவர் கடுமையான நோயில் படுக்கையில் இருக்கிறார் பிணியினால் வருகின்ற வலியிலும் வேதனையிலும் இருந்து விடுபட தியானம் செய்ய விரும்புகிறார் அந்த நிலையில் அவரால் பத்மாசனத்தில் உட்கார முடியுமா? படுத்த நிலையில்தான் தியானிக்க முடியும் தியானத்தின் விசேஷமே அதுதான் நீ எப்படி உட்காருகிறாய் என்பது முக்கியமல்ல எப்படி தியானம் செய்கிறாய் என்பது தான் முக்கியம்
இஸ்லாமியர்கள் செய்கின்ற தொழுகை கூட ஒரு வகையான தியானம் தான். உடலை சில கோணத்தில் வைத்து மனதை இறைவனை நோக்கி வைக்கிறார்கள் இறைவன் சிந்தனை என்கிற ஒன்று வந்து விட்டாலே மனம் செம்மை அடைந்து விடும் மனதின் ஒரு நிலைப்பாடு தானே தியானத்தின் இறுதி நோக்கம்
கிறிஸ்தவர்கள் வாய் விட்டு ஜெபம் செய்வார்கள் இது பதஞ்சலி முனிவர் சொல்லி இருக்கும் யோக சாஸ்த்திரத்தின் ஒரு விதி வாய் விட்டு மனச்சங்கடங்களை உரக்க சொல்லும் போது ஒரு கட்டத்தில் மனதில் வார்த்தைகள் இல்லாத நிலை ஒன்று வரும் அப்போது நாம் முயற்சி செய்யாமலே மனம் அடங்கி விடும் இது தியானத்தின் ஒரு வகை
-
எனவே தொழுகை ஜெபம் என்று வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டாலும் அவைகள் தியானத்தின் வடிவங்களே இதை அவர்கள் ஒத்துக் கொள்ளாவிட்டாலும் இதுதான் உண்மை காரணம் தியானம் என்பது மெய்ஞானத்தில் விளைந்த விஞ்ஞானம்
சொர்க்கம் நரகம் முத்தி என்பவைகள் பற்றி ஒவ்வொறு மதமும் பற்பல கருத்துக்களை கொண்டுள்ளன இந்தியாவில் தோன்றிய ஜைனம் பெளத்தம் சீக்கியம் ஆகிய மதங்கள் கூட முற்றிலும் எதிர் எதிரான கருத்தாக்கங்களை கொண்டுள்ளன எனும் போது இந்தியாவிற்கு வெளியே தோன்றிய மதங்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதில் வியப்பில்லை
இதில் எந்த மதத்தின் கருத்து சரியானது என்று தீர்ப்பு கூற நிஜமாகவே யாருக்கும் தகுதி கிடையாது காரணம் அவரவர் கருத்து அந்தந்த நிலையில் சரியானதாக கருதப்படுகிறது இதில் எனது கருத்துத் தான் சரியானது என்று யார் மற்றவரை கட்டாயப்படுத்துகிறாரோ அப்போதுதான் சிக்கல் உருவாகுகிறது வீண் வாதங்கள் இறைவனை காட்டுவது கிடையாது என்பதினால் அதை விட்டு விடுவது நல்லது.