Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுள் தேவை இல்லை !


சொற்பொழிவு தொடர் -- 17


   ன்பானவர்களே உங்களை இந்த இனிய மாலை பொழுதில் சந்திக்க கிடைத்த சந்தர்ப்பத்தை இறைவன் கொடுத்த வரமாக பார்க்கிறோம். ஆதிகாலம் முதற்கொண்டு நமது மக்கள் அறிவை எந்தெந்த வகையில் பயன்படுத்தினார்கள்? எப்படியெல்லாம் கூர்மையாக்கினார்கள்? மக்களின் வளர்ச்சிக்கு அந்த சிந்தனைகளை எப்படி நடைமுறைப்படுத்தலாம்? அது எப்படி மக்கள் வாழ்க்கையை செம்மைப்படுத்தும் என்று யோசித்தார்கள் ?என்ற விபரங்களை எல்லாம் இதுவரை தொடர்ந்து சிந்தித்து வந்திருக்கிறோம். 

இப்போது நாம் சிந்திக்கப் போவது மிக முக்கியமான விஷயம். நாத விந்து கலாதி நமோ நம என்ற பாடலை நம்மில் கேட்காதவர் யாருமே இல்லை. அந்தப் பாடலில் இறைவன் என்பவன் கூட மந்திரங்களின் வடிவம் அதாவது சத்தங்களால் ஆனவன் என்ற கருத்து கூறப்பட்டிருப்பதை தெளிவாகவே உணர்வோம். இறைவன் சத்தம் என்றால் இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களும் சத்தம் தான். உயிர்கள் வாழுகின்ற உலகமும் சத்தம் தான் என்று நமது சனாதன தர்மமான ஹிந்து மதம் பிரணவ மந்திரத்திற்கு விளக்கம் கொடுக்கும் போது உறுதியாகச் சொல்லுகிறது. அப்படிப்பட்ட அந்த சத்த தத்துவத்தின் மூல சிந்தனையை உருவாக்கியது யார்? அவருடைய சிந்தனை என்ன? என்பதைப் பற்றியெல்லாம் இன்றும் நாம் சிந்திக்கப் போகிறோம். 

வேதங்களுக்கும் வேதத்திற்கு அடுத்ததாக வந்த உபநிசதங்களுக்கும் ஆதாரமாக இருப்பது மந்திரங்களாகும். இதுமட்டுமன்றி அந்த மந்திரங்களை விலாவாரியாக எடுத்துக் கொடுக்கும் உபநிசதங்களும் பிரம்மாணங்களும் மிக முக்கியமானவைகளாகும். உபநிசதங்களை, அதாவது உபநிசத மந்திரங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானது தத்துவங்கள் எனலாம். ஒருவகையில் சொல்லப் போனால், இந்திய தத்துவங்கள் என்று அழைக்கப்படுகின்ற எல்லா விஷயமுமே உபநிசதங்களுக்குள் அடங்கி இருக்கிறது என்று சொல்லலாம். 

வேதங்களை மறுத்து, வைதிகீக நெறிகளை வெறுத்து, கடவுளே இல்லை என்று நாத்திக வாதம் பேசிய புத்தர் கூட, தமது தத்துவங்களுக்கு அடிப்படையான கருத்துக்களை உபநிசதங்களிலிருந்தே பெற்றார் என்றால் அது மிகையில்லை. புத்தர் மட்டுமல்ல மகாவீரர் துவங்கி இன்றைய நவீன கால தத்துவவாதிகள் வரையில் தங்களது சிந்தனைக்களுக்கான மூலத்தை அங்கே இருந்தே பெறுகிறார்கள் என்பது தான் உண்மை .

உபநிசதங்களுக்கு அடுத்த நிலையில் இருப்பது பிரம்மாணங்கள் ஆகும். இந்த பிரம்மாணங்கள் உபநிசதங்களை விட காலத்தால் முந்தியது. அதாவது வேதங்கள் தோன்றிய பிறகு அதனுடைய இன்னொரு வளர்ச்சியாக முதன் முதலில் தோன்றியது பிரமாணங்கள் என்று சொல்ல வேண்டும். பிரமாணங்களுக்கு மிகவும் காலத்தால் பிற்பட்டதே உபநிசதங்கள் எனலாம். 

உபநிசதங்களை அடியொற்றி வந்தது வேதாந்தம், அத்வைதம், சித்தாந்தம் முதலிய தத்துவங்களாகும். பிரமாணங்களை பின்பற்றி எழுந்தது மீமாம்சம் என்ற கருத்து குவியலாகும். மீமாம்சம் என்ற தத்துவத்தில் பூர்வ மீமாம்சம் உத்திர மீமாம்சம் என்று இரண்டு பிரிவுகள் உண்டு. இதில் உத்திர மீமாம்சம் என்பது உபநிசதங்களை தேடிப்போவதாகும். பூர்வ மீமாம்சமோ பிரமாணங்களை மட்டுமே உறுதியாகப் பிடித்துக்கொண்டு விட்டது. அதனால் காலப்போக்கில் பூர்வ மீமாம்சம் மட்டுமே நின்று நிலைத்து ஜீவித்து வருகிறது. 

மீமாம்சம் என்ற சொல்லுக்கு முறையாக நேர்வழுவாமல் நின்று ஆராய்தல் என்று பொருளாகும். இந்த தத்துவம் பற்றி ஜைமினி என்ற மகரிஷி மீமாம்ச சூத்திரம் என்ற நூலை எழுதியிருக்கிறார். இந்த நூலுக்கு சபரர் என்பவர் தெளிவான விளக்கத்தையும் தந்திருக்கிறார். ஜைமினியின் மூல தத்துவத்தையும் சபரரின் விளக்கத்தையும் ஒருங்கிணைத்து குமாரில பட்டர் என்பவரும் பிரபாகரர் என்பவரும் சில விளக்க நூல்களை எழுதியிருக்கிறார்கள். குமரில பட்டரின் மாணவர் தான் பிரபாகரர். என்றாலும் பிரபாகரர் தனது குருநாதரின் சில தத்துவங்களை மறுத்தும் சிலவற்றிக்கு புதிய விளக்கங்கள் கொடுத்தும் நூல்களை எழுதியுள்ளார். இதனால் மீமாம்ச தத்துவமே பட்டமீமாம்சம் பிரபாகரமீமாம்சம் என மேலும் இரண்டு பிரிவாக உடைந்தது. 

இதற்கு முன்பு நிகழ்த்திய சொற்பொழிவுகளில், கெளதம மகரிஷியின் வைசேடிக தத்துவத்தை ஓரளவு பார்த்தோம். எப்படி அந்த வைசேடிக தத்துவத்திற்கும் மிமாம்ச தத்துவத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டோ அப்படி பல வேற்றுமைகளும் உண்டு. மீமாம்சம் வேதங்களை மிகவும் நம்புகிறது. அது கடவுளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட வேதங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதிகம் எனலாம். எனவே மீமாம்ச தத்துவம் உண்மையை அறிந்து கொள்வதற்கும் உலகத்தை புரிந்து கொள்வதற்கும் வேதங்களே ஆதாரமானது என்று கருதுகிறது. வேதத்தில் உள்ள ஒரு சொல் கூட தவறானது அல்ல. தவறுபோல் தோன்றினால் அது நமது அறிவின் குறைபாடாக இருக்குமே தவிர வேதத்தின் குறைபாடாக இருக்காது என்பது ஜைமினி மகரிஷியின் அசைக்க முடியாத வாதமாகும். அவர்களது பார்வையில் ஆராய்ச்சி விளக்கம் என்பது வேதங்கள் உண்மையா? பொய்யா? என்பதைப் பற்றி அல்ல. வேதங்களுக்கு கொடுக்கப்படுகிற விளக்கங்கள் சரியா? தப்பா? என்பதை பற்றியதே ஆகும். அத்தகைய ஆராய்ச்சியில் அவர்கள் வேதங்களை பற்றி கண்ட இறுதியான முடிவுகளை மிக சுவாரசியமான தத்துவங்களாக நமக்கு தருகிறார்கள். 

ஒரு கட்டிடம் எப்படி கல்லாலும் மண்ணாலும் கட்டப்படுகிறதோ, ஒரு மனித சரீரம் எப்படி எலும்பாலும் சதையாலும் உருவாக்கப்பட்டிருக்கிறதோ அதே போல வேதங்கள் என்பது சொற்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனி அர்த்தங்கள் உண்டு. ஒரே சொல்லுக்கு பல அர்த்தங்களும் உண்டு அதனால் பொருள் இல்லாத சொற்கள் இல்லை என்று கூறமுடியாது. சொல்லையும் அதன் பொருளையும் உயிரையும் உடலையும் பிரிப்பதைப் போல தனித்தனியாக பிரித்துவிட இயலாது. ஒரு பொருளை உணருகிற போது அந்த பொருளுக்குரிய சொல் இயல்பாகவே நமது மனதில் தோன்றிவிடும். பொம்மையை காணுகிற போது பொம்மை என்ற சொல்லை நீக்கிவிட்டு அதை உணர முடியாது. பொம்மைக்கான சொல்லை மறந்துவிட்டால் சொல்லும் பொருளும் உபயோகமற்றதாக மாறிவிடும். எப்படி பொருளுக்கு ஆதாரமாக சொல் இருக்கிறதோ அதே போல சொல்லுக்கு ஆதாரமாக எழுத்து இருக்கிறது. எழுத்தும் சொல்லும் சேர்ந்தால் தான் முறையான ஒலி பிறக்கும்.

 எழுத்துக்கள் என்பது வெறுமனே கோடுகளைக் கொண்டு வரையும் சித்திரம் அல்ல. இந்த கோடுகளுக்குள் சூட்சமமான முறையில் ஒலி அடங்கிக் கிடக்கிறது. எனவே எழுத்துக்கள் நித்தியமானது. நிலையானது. எப்போதும் அழியாத தன்மை கொண்டது. ஒருவன் அதை உச்சரித்தாலும் உச்சரிக்காமல் விட்டுவிட்டாலும், வேறொருவன் அதைக் கேட்டாலும் கேட்காமல் விட்டுவிட்டாலும் எழுத்தில் உள்ள ஒலியின் தன்மை மறைந்து போகாது இருந்துகொண்டே தான் இருக்கும். காலச்சக்கரம் சுழலத் துவங்கிய காலத்திலிருந்தே ஒலி என்பது சாஸ்வதமாக இருந்து கொண்டே இருக்கிறது.

எது நிலையானதோ எது அழிவில்லாததோ அது யாராலும் படைக்கப்படாதது. உருவாக்கம் இல்லாதது. காரணம், படைக்கப்பட்ட அனைத்துமே ஒரு குறிப்பிட்ட காலத்தில் முற்றிலும் சூன்யமாகிவிடும். அழிந்து போய்விடும். படைக்கப் படாததுதான் நித்தியமாக இருக்கும்.

கடவுளும் சத்தமும் அழிவில்லாதது. காரணம் கடவுள் சப்த வடிவமாக இருக்கிறார் சப்தம் கடவுளாக இருக்கிறது. அதனால் இருவருமே அனாதியானவர்கள். துவக்கமும் முடிவும் அவர்களுக்கு இல்லை. வேதங்களும் இப்படித் தான். காரணம், வேதங்கள் சப்தங்களால் ஆனது. ஒலியின் சொரூபமாக வேதங்கள் இருப்பதனால் வேதங்களில் கூட இறைவனின் வடிவமாக இருக்கிறது யாராலும் படைக்கப்படாத அபெளர்சேஷம் என்று அழைக்கப்படுகிறது. 

யாராலும் படைக்கப்படாதது வேதம் என்றால் இறைவன் கூட வேதத்தை படைக்கவில்லையா? என்று கேட்கத் தோன்றும். இதற்கு ஆமாம் என்ற பதிலையே ஜெய்மினி மகரிஷி அழுத்தம் திருத்தமாக தருகிறார். உயிர்களும் உலகத்தின் மூல பொருட்களும் எப்படி ஆதியும் அந்தமும் இல்லாதவையோ, அதே போல வேதங்களும் ஆதியும் அந்தமும் இல்லாததே ஆகும். ஆனால் பொருட்களும் உயிர்களும் படைக்கப்பட்டது. இறைவனால் உருவாக்கப்பட்டது. வேதம் அப்படி அல்ல. அது இறைவனாகவே இருக்கிறது. இறைவனும் வேதமும் வேறு வேறு அல்ல. காரணம், வேதம் நாதமயமானது. நாதம் இறைமயமானது என்பது ஜைமினியின் ஆழமான கருத்து. 

இதுவரையில் இந்தியாவில் தோன்றிய ஞானிகளில் எவரும் வேதங்களுக்கு இவ்வளவு முக்கியத்துவமும் உயர்ந்த இடமும் கொடுத்தது இல்லை. முதன் முதலில் ஜைமினி மகரிஷி தான் வேதத்தை இறைவன் அளவிற்கு உயர்த்திக் கொண்டு செல்கிறார். அப்படி அவ்வளவு உயரத்திற்கு வேதத்தை தூக்கிப் பிடிக்கும் ஜைமினி, உலக பொருட்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள வேதம் ஒன்றே போதுமா? வேதம் ஒன்றே சரியான பிரமாணமா? என்று கூறுகிறாரா என நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். 

கண்களால் நேருக்கு நேராக பார்க்கப்படுகின்ற பிரத்தியட்சம் என்ற சாட்சியையும் அறிவைக் கொண்டு ஆராய்கிற யூகம் என்ற நுண்ணறிவையும் முன்னோர்கள் அனுபவப்பட்டுக் கூறிய வாக்குகளையும் உலகத்தை அறிய உதவும் கருவிகள் என்று ஏற்கும் ஜைமினி, இவையெல்லா வற்றையும் விட நம்பக்கூடிய உண்மையான ஆதாரம் வேதம் ஒன்றே என்று கருதுகிறார். ஜைமினி மகரிஷிக்கு முன்பு தோன்றிய கெளதமர், கணாதரர் போன்றோரின் கருத்துக்களின் படி ஜைமினியும் பன்மை வாதத்தையே உலக பொருட்களைப்பற்றி கைகொண்டவராக இருக்கிறார். அதாவது உலகத்தின் மூல பொருளும் உயிர்களும் ஒன்று அல்ல, பல என்பதே இவரின் கருத்தும் ஆகும்.

ஆனால் பொருள் விஷயத்தில் சிறிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு பொருளையும் அதன் குணத்தையும் தனித்தனி பதார்த்தங்களாகக் கொண்டதோடு அவைகளை தொடர்புபடுத்தும் சம்பந்தத்தை கூட கெளதமரும் கணாதரரும் இன்னொரு புதிய பொருளாக கருதுகிறார்கள். இதில் ஜைமினி சிறிது மாறுபடுகிறார் 

இது எப்படி என்றால் சம்பந்தம் என்று பேச வேண்டுமானால் இரண்டு பொருட்கள் இருந்தால் தான் அவற்றிற்கிடையே உள்ள சம்பந்தத்தைப் பற்றி பேச முடியும். பொருள் ஒன்று என்றால் அதற்குள் சம்பந்தம் எப்படி வரும்? பொருளும் அதன் குணமும் ஒன்றா? அல்லது இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத வேறொன்றா? என்பது தான் முக்கிய பிரச்சனை. 

பொருளும் குணமும் ஒன்றே என்று கூற முடியாது. ஒரு கலசம் நிறைய மது இருக்கிறது. மது வேறு அது தரும் போதை வேறா? ஒரு கிண்ணத்தில் தேன் இருக்கிறது. தேன் வேறு அதன் இனிமை வேறா? ஆனால் நடைமுறை வித்தியாசமாக இருக்கிறது. மதுவில் மட்டும் தான் போதை இருக்கிறது என்றால் போதை என்பது மதுவோடு நின்றுவிட வேண்டும். அது கஞ்சாவிலோ புகையிலையிலோ இருக்கக் கூடாது. தேனில்தான் இனிமை என்றால், இனிப்பது எல்லாமே தேனாக இருக்க வேண்டும். ஆனால் இவைகள் தனித்தனியாக இருக்கிறது.

நியாய தத்துவமும் வைசேடிக தத்துவமும் பொருளும் குணமும் ஒன்றே என்கிறது. அப்படி என்றால் இனிப்பது எல்லாம் தேனாக இருக்க வேண்டும். போதை தருவதெல்லாம் மதுவாக இருக்க வேண்டும். அதனால் அவர்கள் கூறுவதை தவறு என்று கூறி விடலாமா என்ற யோசனையுடன் ஜைமினி மகரிஷியின் சிந்தனையை பார்க்க வேண்டும். அவர் என்ன சொல்கிறார் என்றால் குணமும் பொருளும் ஒன்று என்பதும் தவறு. பல இருக்கிறது என்று கூறுவதும் தவறு என்று சொல்கிறார். அதாவது பேதம் அபேதம் என்று இருக்கின்ற முன்னோர்களின் சிந்தனையை இவர் பேதாபேதம் என்று புதிய பெயர் கொடுத்து அழைக்கிறார்.  

அப்படியானால் நியாயம் கூறுகின்ற தத்துவத்தையும் வைசேடிக சிந்தனையையும் ஜைமினி ஏற்றுக்கொள்ள வில்லை என்பதை தெளிவாக உணர முடிகிறது. காரணம் அவர்கள் இருவரின் கருத்துப்படி, பகுதி அழியுமானால் முழுப் பொருளும் அழிந்து விடுகிறது. பொருட்களை பகுதிகளாக கொண்ட இவ்வுலகத்திலுள்ள அனைத்து பொருட்களும் தோன்றித் தோன்றி அழிந்து கொண்டே இருக்கிறதே தவிர, உலகம் முழுவதும் இல்லாமல் ஒருபோதும் முற்றிலுமாக அழிந்து போவது என்பதே கிடையாது. 

அதாவது தானியமாக இருப்பது உணவாக மாறும். உணவாக வந்தது எருவாக அவதரிக்கும். எருவான நிலையில் மீண்டும் கருவாகி தானியமாகவே வந்து நிற்கும். அல்லது வேறொரு பொருளாக வெளிப்படுமே அல்லாது எப்போதுமே எதுவுமே இல்லாமல் போய்விடுவது இல்லை. அதே நேரம் இல்லாத எதுவும் புதியதாக தோன்றிவிடுவதும் இல்லை. இருப்பது இன்னொன்றாக மாறுகிறது. மாறுவது வேறொன்றாக ஆகுகிறது. இது உலக சக்கரத்தின் நித்திய சூழற்சி.

பிரபஞ்சத்தின் மூலப் பொருள் பற்றியும் ஜைமினி மகரிஷி சிறிது மாறுபடுகிறார். உலக உற்பத்திக்கு மூல காரணமாக இருப்பது அணுக்கள் என்ற இவரின் முன்னோர்களின் கொள்கையே இவர் ஏற்றுகொண்டாலும் அவர்களைப் போல, அணுக்கள் என்பது கண்களுக்கு அகப்படாத பொருள் அல்ல. உருவம் இல்லாதது எதிலிருந்தும் பிரிக்க முடியாதது என்பதை இவர் ஒப்புக்கொள்ளவில்லை. அதாவது ஜைமினியின் தத்துவப்படி அணு என்பது சூட்சம பொருள் அல்ல. கண்ணுக்குத் தெரியக்கூடிய பொருளே ஆகும். 

உலகத்தின் மூல பொருள் பற்றி இப்படி சற்று வித்தியாசமாக சிந்திப்பது போலவே உயிர்களைப் பற்றியும் சிறிது மாறுபாடு கொண்ட சிந்தனை ஜைமினியிடம் இருக்கிறது. கெளதமர், கணாதரர் ஆகிய இருவரும் ஆத்மாக்கள் நித்தியமானது, அதே நேரம் அது ஒன்றல்ல பல என்றார்கள். மனதால் உணரக்கூடிய பொருளாகவும் ஆத்மா இருக்கிறது என்றும் சொன்னார்கள். இதில் உணர்வு என்ற கருத்தில் ஜைமினி மாறுபடுகிறார்.

தூரத்தில் அரசமரம் ஒன்று தெரிகிறது அது அரச மரம் தான் என்று தெரிவது போல அதை தெரிந்து கொள்கிறவன் நான் என்ற உணர்ச்சியும் இருக்கிறது. இதனால் அரச மரம் என்ற உணர்வு முன்னால் வந்ததாகவும் அதை உணருகிற, நான் என்ற உணர்வு பின்னால் வந்ததாகவும் மற்றவர்கள் கருதினார்கள். ஆனால் ஜைமினி, நான் என்ற அறிவும் அரச மரம் என்ற அறிவும் தனித்தனியாக வரவில்லை. இரண்டும் ஒன்றாக வருகிறது என்கிறார். இதே போன்றுதான் ஆத்மாவானது மனதை உணர்ந்து வைத்திருக்கிறது. இரண்டும் வெவ்வேறு என்றாலும் இரண்டும் ஒரே நேரத்தில் செயல்படுகிறது என்பதே ஜைமினியின் வாதம்.

அடுத்ததாக ஜெய்மினி மகரிஷியின் அதிர்ச்சியான சிந்தனை ஒன்றை நாம் பார்க்க வேண்டும். அணு இருக்கிறது. உயிர் இருக்கிறது. பிரபஞ்சம் இருக்கிறது. உலகம் இருக்கிறது என்பதை எல்லாம் ஏற்றுக்கொண்டு வருகின்ற ஜெய்மினி, இறுதியில் இவையெல்லாம் உருவாகுவதற்கு காரணமான இறைவன் இருக்கிறானா என்ற கேள்வியை கேட்கும் போது, யாருமே எதிர்பாராத பதிலைத் தருகிறார். இறைவன் இல்லை என்று அவர் கூறவில்லை. இவைகளை எல்லாம் படைக்க, கட்டிகாக்க, நடைமுறை பிசகாமல் இருக்க, இறைவன் என்பவன் தேவையில்லை என்கிறார். 

வேதத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவர், கடவுளுக்கு இணையானதாக வேதத்தை கருதுபவர்,  வேதம் முழுமுதற் பொருளாக போற்றி வணங்குகிற இறைவனை ஏற்றுக்கொள்ள வில்லையா என்பது நம்மைப் போன்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இறைவனை ஜைமினி ஏன் ஏற்கவில்லை? எதற்காக இறைவன் என்பவன் தேவையில்லை என்று கூறினார்? என்பதை சிந்திக்க வேண்டும். அவர் நம்மைப் போன்ற சாதாரண மனிதர் இல்லை. மகரிஷி, உள்ளுணர்வை கடும் தவத்தால் முழுமையாக விழிப்படையச் செய்தவர். அவரே அப்படி கூறுகிறார் என்றால், அதற்குத் தக்க காரணம் இருக்கும். அது என்னவென்று அடுத்த அமர்வில் சிந்திப்போம்.
.



Contact Form

Name

Email *

Message *