Store
  Store
  Store
  Store
  Store
  Store

அண்டங்களின் நாயகி !


சித்தர் ரகசியம் - 24


   ந்து சமயம் என்ற பொதுப் பெயரால் இன்று அழைக்கப்படுகிற நமது சனாதன தர்மத்தில் ஆறு பெரும் பிரிவுகள் உள்ளன. சூரியனை கடவுளாக வழிபடும் செளரம், சுப்ரமணியனை வழிபடும் கெளமாரம், கணபதியை போற்றி வணங்கும் காணாபத்தியம், சிவனை தொழும் சைவம், திருமாலை மங்களாசாசனம் செய்யும் வைஷ்ணவம், சக்தி தேவியை வணங்கி மகிழும் சாக்தம் என்ற ஆறு பிரிவுகள் மிகவும் பிரபலமானது. 

ஒருகாலத்தில் இந்த ஆறு பிரிவுகளும் தனித்தனி மதங்களாக இயங்கி மக்களை வேற்றுமையில் ஆழ்த்தி வந்தது. சனாதன தர்மம் பிரிந்து கிடந்தால் அதற்கு எதிராக அசுர வளர்ச்சி பெற்று வந்த ஜைனம், பெளத்தம் போன்ற மதங்கள் கபலீகரம் செய்துவிடும் என்று அறிவு பூர்வமாக யோசனை செய்து ஆதி சங்கரர் ஆறு பிரிவுகளையும் ஒரே பிரிவுகளாக்கி தனித்தனி வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தினார். 

இந்த ஆறு பிரிவுகளில் எது சிறந்தது எது உயர்ந்தது என்று யாராலும் கணித்துக் கூற முடியாது. காரணம் ஆறு மதங்களின் மிக முக்கியமான நோக்கமே இறைவனை உணர்ந்து அவனது திருவடிகளை சரணடைவது ஒன்றே ஆகும். 

சைவம் வைஷ்ணவம் இவை இரண்டும் பெருவாரியான மக்களால் பாரத தேசம் முழுவதும் பின்பற்றப்பட்டு வந்தாலும் வடக்கு தெற்கு கிழக்கு மேற்கு என்ற பேதங்கள் இல்லாமல் எல்லா சமயப் பிரிவு மக்களும் சக்தி வழிபாட்டை ஏற்றுக்கொண்டார்கள் என்று தான் கூறவேண்டும். சைவத்திற்கும் வைணவத்திற்கும் குடுமிபிடி சண்டை வரலாற்று காலத்தில் நடந்தது என்றாலும் கூட, சக்தியை திருமாலின் தங்கையாகவும் சிவனாரின் துணைவியாகவும் இருபிரிவினர்களுமே ஏற்று வழிபட்டார்கள். 

கணபதியை வணங்குபவர்கள் கந்தனை வணங்குபவர்கள் அன்னை சக்தியை புறக்கணித்து விடவே முடியாது. காரணம் கணபதி கந்தன் இரண்டு பேருக்குமே அன்னை அபிராமி தான் பெற்றெடுத்த தாய். எனவே தாயை புறக்கணித்து விட்டு தனயன்களை வழிபட யாரும் துணிய மாட்டார்கள். கண்ணுக்கு நேரே தெரிகின்ற கடவுளாகிய சூரிய பகவான் கூட, சக்தி தேவியின் நெற்றியில் ஜொலிக்கும் திலகமாகி விடுவதால் செளரம் என்ற சூரிய வழிபாடும் சக்தி வழிபாட்டிற்கு முன்னால் அடங்கி விடுகிறது. 

அண்டங்கள் அனைத்தையும் ஆக்கும் சக்தியாக அன்னை பார்வதி தேவியை வழிபடும் தர்மத்திற்கு சாக்தம் என்று பெயர். சாக்த நெறியில் தந்திரம் என்றால் ஆகமம் என்று பொருள்படும். பொதுவாக ஆகமம் என்பது இறைவழிபாட்டை பொறுத்தவரை வரைபடம் போன்றதாகும். இன்ன ஊருக்கு இப்படி செல்லலாம் என்று வரைபடம் காட்டுவது போல ஆகமம் அல்லது தந்திரம் இன்ன தெய்வத்தை இப்படி அடையலாம் என்று கூறுவதாகும். 

மற்ற மத பிரிவுகளை விட சாக்த மதத்தில் எண்ணிக்கையில் அடங்காத ஆகமங்கள் அதாவது தந்திரங்கள் உண்டு. அதனாலேயே காலப்போக்கில் சாக்தத்தை தாந்த்ரீகம் என்று கூறி மக்கள் அழைக்கலானார்கள். தாந்த்ரீகம் என்றால், மந்திரம் எந்திரம் தந்திரம் என்று நிறைய தனித்தனி பிரிவுகள் உண்டு. அது அதற்கான பூஜை விதிகளும் உண்டு. சாதாரணமான மக்களை எளிதில் கவர்ந்து இழுக்கக் கூடிய ஈர்ப்பு சக்தி தாந்த்ரீகத்திற்கு இயற்கையாலுமே உண்டு.

ஒரு மனிதன் நோயில் அவதிப்படுகிறான். அவனை குணப்படுத்த மருந்தும் மருத்துவனும் சக்தி அற்றவர்களாக ஆகிவிட்டார்கள். கடவுள் ஒருவனே தான் அவனைக் காப்பாற்ற வேண்டும் என்று நிர்கதியாக ஒரு ஜீவன் தவிக்கின்ற போது, அவனுக்குக் கைகொடுக்க தாந்த்ரீகம் ஓடிவருகிறது. அயன வெளியில் இருக்கும் சப்த அலைகளை மந்திரங்களாக மாற்றி, பாதிக்கப்பட்டவனின் மூலாதார சக்கரத்தில் உரு ஏற்றி, அவனை நோயிலிருந்து விடுபட வைக்கிறது தாந்த்ரீகம். 

பயிர் வளர்வதற்கும், பள்ளியில் பிள்ளைகள் படிப்பதற்கும், இறந்துபோன தீய சக்திகள் ஓடி ஒளிவதற்கும், தண்ணீர் நிலைகள் விஷமாகிப் போனால் அதைக் காப்பதற்கும் தாந்த்ரீக மந்திரமே துணை வருகிறது. இந்த தாந்த்ரீக மந்திரங்களின் கருவூலமாக அதர்வண வேதம் இருக்கிறது. இதனால் தான், அதாவது மக்களின் துயரங்களை உடனடியாக தீர்க்கும் மார்க்கத்தை தனக்குள் வைத்திருப்பதனால் தான் அதர்வண வேதத்திற்கு மக்கள் வேதம் என்ற பெயர் இருக்கிறது. 

தாந்த்ரீகம் வெறும் உடல் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்வது அல்ல. நீ வணங்கும் தெய்வம் எதுவாக இருந்தாலும் அந்த தெய்வத்தின் சுவையோடு உன்னை ஐக்கியமாக்குவதற்கு தாந்த்ரீகம் ஒன்றே முன்வருகிறது. உதாரணமாக, நீ சிவபெருமானை உணர வேண்டுமென்றால் கர்மயோகம், ஞானயோகம், தியானயோகம், ராஜயோகம் என்று எத்தனையோ படித்தரங்களை தாண்டித்தான் வரவேண்டும் என்று சைவம் கூறும். ஆனால் தாந்த்ரீகம், எந்த யோகமும் வேண்டாம்.. நான் உன்னை அழைத்துப் போகிறேன் என்று சிவத்தை சிவனாகவே அனுபவிக்க மனிதனை வைத்துவிடும். 

இதனால் தான் சனாதன தர்மத்தில் மட்டுமல்ல, சனாதன தர்மத்தையே அழித்து ஒழித்து மண்மேடாக்க துடித்துக் கொண்டிருந்த அன்றைய பெளத்தம், ஜைனம் போன்றவற்றில் கூட தாந்த்ரீகத்தின் செல்வாக்கு கொடிகட்டிப் பறந்தது. மஹாயான பெளத்தத்தில், தாந்த்ரீகம் மட்டுமே புத்தனின் போதனையை விட உயர்ந்ததாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. ஜைனத்திலும் தாந்த்ரீக தாக்கம் அளப்பரியது. 

தாந்த்ரீகத்தில், மந்திரம் யந்திரம் சக்கரம் உபாசனை போன்ற பலவகை கூறுகள் உண்டு. இவைகள் மட்டுமல்லாது மருந்து மைதுனம் என்ற தனி கூறுகளும் உண்டு. மருந்து என்றால், பலவிதமான அபூர்வ மூலிகைகளை ஒருங்கிணைத்து ஆதார சக்கரங்களை விழிப்படையச் செய்து மூலாதாரம் சகஸ்ரத்தை நோக்கி செல்லுவதற்கு வழி ஏற்படுத்துவது ஆகும். 

மைதுனம் என்பது ஆணும் பெண்ணும், ஆடைகள் இல்லாமல் ஒருவரோடு ஒருவர் பாம்புகள் போல பிணைந்து, இருவரின் பிறப்புறுப்புகளும் இணைந்து, அதன் உணர்ச்சிப் பெருக்கால் சுக்கில சுரோணிதம் கீழ்நோக்கி வடிந்து ஓடிவரும். சிவ யோகத்தால் அதை தடுத்து நிறுத்தி குண்டலினிப் பாதையில் மேல்நோக்கி செலுத்துவதாகும். இந்த யோக நெறியில் பலரும் வழிதடுமாறி சருக்கி விழுந்துவிடும் அபாய நிலை உள்ளது. அதனால் தான் யோகிகளில் பலர் இந்தப் பாதையை தேர்ந்தெடுக்காமல் மற்ற பாதையை நோக்கிச் செல்வார்கள். சித்தர்களில் பெருவாரியான பேர்கள் மைதுன பாதையை தொடவே மாட்டார்கள். அதிகபட்சமாக அவர்கள் பயன்படுத்துவது மருந்து என்ற வழிவகையே ஆகும். 

தாய் தெய்வமான கொற்றவையை வழிபடுவது தமிழர்களுக்கு புதியதானது அல்ல. சரித்திர பூர்வமாக கூறவேண்டும் என்றால், சிந்து சமவெளி நாகரீக காலம் தொட்டே பெண் தெய்வ வழிபாடு தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாகும். தொல்காப்பியம் மற்றும் பல சங்க இலக்கியங்களில் சக்தி வழிபாடு மிக சிறப்பாக சுட்டிக் காட்டப்படுகிறது. இந்த சக்தி வழிபாட்டோடு தாந்த்ரீகம் என்பது சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற காப்பியங்கள் உருவான காலத்தில் இணைந்ததாக அறிய முடிகிறது. 

சித்தர்களின் தலைவர் என்று அழைக்கப்படும் திருமூலர் எழுதிய திருமந்திரத்தில், சைவ நெறியே பெருவாரியாக பேசப்பட்டாலும் திருமந்திரம் நான்காம் தந்திரத்தில் தாந்த்ரீக நெறி மிக விரிவாக அலசி ஆராயப்பட்டு எளிய மக்களும் புரிந்து கொள்ளுகிற வகையில் கூறப்படுகிறது. பரம்பொருளாகிய அம்மை அப்பனும் ஒருவரை விட்டு இன்னொருவர் அகலாது இருப்பதை சுட்டிக்காட்டி சிவம் என்பது படைப்பு காப்பு மறைப்பு அழிப்பு அருளல் என்ற ஐந்தொழிலை செய்வதாகவும் சக்தி என்பது இந்த ஐந்தொழில் செய்ய சிவனுக்கு சக்தியைக் கொடுப்பதாகவும் இருக்கிறது என்று காட்டப்படுகிறது. அதாவது, இயங்காமல் இருந்தால் அதன் பெயர் சிவம். இயக்கத்திற்கு வந்தால் அது தான் சக்தி என்பது திருமந்திர தத்துவமாகும். 

விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின் 
விளங்கிடு மெல்லிய லானது வாகும். 
விளங்கிடு மெய்ந்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே 


என்று திருமூலர் திருமந்திரத்தில் ஆயிரத்து முன்னூற்று அறுபதாவது பாடலில் கூறுகிறார். அதாவது, பராசக்தி என்ற அம்மையை உயர்ந்த மெய்ப்பொருள் என்பது இதன் மையப் பொருளாகும். ஒளிமயமாக விளங்குகின்ற மெல்லிய இயல்புள்ள சக்தியே பரமசக்தியாக ஞானப் பொருளாக திகழ்கிறார் என்று அழகான கவிதையில் திருமூலர் பாடுகிறார். அதுமட்டுமல்ல, 

தானே வெளியென எங்கும் நிறைந்தவள் 
தானே பரம வெளியது வானவள் 
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்துள அண்ட சகலமே 

 என்கிறார். பொதுவாக சிவனையோ திருமாலையோ குறிப்பிடும் போதுதான் நோக்கும் இடமெல்லாம் நிறைந்த நிர்மலப் பொருள் என்று ஞானிகள் கூறுவார்கள். அத்தகைய பரப்பிரம்ம நிர்மலப் பொருளே, தானே எங்கும் நிறைந்து தானே சகலத்தையும் படைத்து தானே சகலத்துக்கும் கொடுத்து தானே சகலத்தையும் சம்ஹாரம் செய்வதாகக் கூறுவார்கள். இங்கே திருமூலர் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலையும், அதாவது பிரம்மனாகவும் சிவனாகவும் விஷ்ணுவாகவும் இருப்பவள் அன்னை ஆதிபராசக்தியே என்ற புதிய கருத்தை முன்வைக்கிறார். அது மட்டுமல்ல அன்னை பராசக்தி, தானே முளைத்த சுயம்பு என்று கூறி அவளே உலகத்தின் மூல காரணம் என்கிறாள். 

தனக்கு மேலே தன்னை படைத்ததாக தன்னை ஆட்சி செய்வதாக யாரும் இல்லாதவள் ஆதி பராசக்தி. அதனால் அவள் தத்துவ நாயகி என்றும் அறியப்படுகிறாள். தேவருக்கும் மூவருக்கும் யாவருக்கும் எங்கும் என்றும் தலைவியாகத் திகழ்பவள் அன்னை. அத்தகைய அன்னைக்கு தற்பரை என்ற சிறப்புப் பெயர் சூட்டி அவளை அனாதியானவள் என்று நமக்கு திருமூலர் காட்டுகிறார். 

சொற்களை எடுத்து வர்ணனை செய்யும் மனதிற்கும் அப்பாற்பட்டவள். மனதைக் கடந்தும் மனதை அடக்கியும் நிற்பவள் அவள். அதனால் தான் அவள் மனோன்மணியாகிறாள். அவளின் கட்டளையை நிறைவேற்ற பேய்ப்படையும் ஊழிப்படையும் கூளிப்படையும் கொண்டிருக்கிறாள். இவை அனைத்திற்கும் மேலாக, சிவ கணங்கள் அனைத்தையும் தன்னகத்தே கொண்டவள் என்று சக்தியின் வலிமையை நமக்குக் காட்டுகிறார். 

சக்தி தேவி முக்திதரும் தேவியாகவும் இருக்கிறாள். அவள் நினைத்தால் கர்மவினையை காற்றினில் கரைத்து விடுவாள். அவள் அருள் இல்லாமல் யோக சமாதியை எந்த ஞானியும் அடைய முடியாது என்று கூறும் திருமூலர், அத்தகைய சக்தி ஸ்தூல வடிவமாக எந்திரத்தில் குடிகொண்டு இருப்பதாகக் கூறி ஒரு சக்கர விளக்கத்தை தத்துவ விளக்கமாக நமக்குத் தருகிறார். அதை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.


Contact Form

Name

Email *

Message *