சொற்பொழிவு தொடர் 20
அன்பார்ந்தவர்களே..
பதஞ்சலி கடவுளை ஒப்புக்கொள்கிறார். பிரபஞ்சத்தில் நிறைவான பொருள் கடவுள் மட்டும் தான் என்றும் உறுதிபட கூறுகிறார். ஆனால் அந்த கடவுள் நிறைவானவரே தவிர சர்வ வல்லமை படைத்தவராக இருக்கிறார் என்பதை ஒப்புக்கொள்வதில் சிறிது தயக்கம் காட்டுகிறார். இது பதஞ்சலியிடம் நாம் பார்க்கின்ற ஒரு சிறிய முரண்பாடு . என்றாலும் கூட கடவுளை அடைவதற்கு சாதாரண மனிதனாலும் இயலும், அதாவது கடவுள் தன்மையை மனிதனாலும் அடைய முடியும் என்று முதன்முதலில் உலகுக்கு அறிவித்து அதற்கான பாதையை வகுத்துக் கொடுத்தவர் பதஞ்சலி மகரிஷி என்றால் அது மிகையில்லை.
பதஞ்சலி, உலகத்தைப் படைத்தது கடவுள் அல்ல பிரகிருதியே என்கிறார். பிரகிருதி உலகைப் படைக்கும் போது கடவுள் அதற்கு உறுதுணையாக இருக்கிறார் என்பது அவரது சித்தாந்தம். சரி உலகத்தை படைத்தது கடவுள் இல்லை அதற்காக அவர் உதவி மட்டும் தான் செய்கிறார் என்றால், மனிதனுக்கு முக்தியை கடவுள் தானே கொடுக்கிறார் என்று கேட்டால், முக்தி கொடுப்பதும் கடவுள் வேலை அல்ல மனிதன் முக்தி அடைய கடவுள் உதவி செய்கிறார் என்ற பதிலைத் தருகிறார்.
உலகை கடவுள் படிக்கவும் இல்லை உயிர்களின் கர்மாக்களின் தக்கப்படி பலன்களை அவர் கொடுக்கவும் இல்லை. உயிர்களைக் காப்பதும் இல்லை, இறுதியில் உயிர்களுக்கு முக்தி கொடுக்கும் வேலை கூட கடவுளுக்கு இல்லை என்றால் கடவுள் என்ற ஒருவர் இருந்து என்ன பயன்? அவர் இல்லாமல் இருந்தால் என்ன நடக்குமோ அது தானே இருந்தாலும் நடக்கிறது. செயலற்று இருப்பது தான் கடவுளுடைய தன்மை என்றால் அவரால் என்ன பயன்தான் விளைகிறது என்று இயல்பாக நமக்கு கேட்கத் தோன்றுகிறது.
உலகைப் படைப்பதிலும் உயிர்களுக்கு கர்மாப்படி பயன்களை கொடுப்பதிலும் முக்தி வழங்குவதிலும் பிரகிருதிக்கு துணையாக இருப்பதே கடவுளின் வேலை, இறுதியாக தளைகளிலிருந்து ஜீவன்கள் விடுபட்டு போய்ச் சேருமிடம் இறைவனின் திருப்பாதங்கள் அல்ல. உயிர்கள் அனைத்தும் இறைவனின் காலடியில் சேர வேண்டும் என்றால் தான் கடவுள் அத்தனைக்கும் கர்த்தாவாக இருக்க வேண்டும். ஆனால் உயிர்கள் முடிவில் இறைவனை அடைவது இல்லை. பிறகு முக்தி என்பது தான் என்ன? உயிர்களின் இறுதிப் புகலிடம் என்பது தான் எது? என்று யோசித்தால் பதஞ்சலி அருமையான விளக்கத்தை தருகிறார்.
முக்தி என்றால் உடல்களை விட்டுவிட்டு உயிர்கள் வேறுவேறாகப் பிரிந்து இன்னொரு உலகத்தை அடைகிறது. அந்த உலகில் கடவுள் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். அங்கே சென்ற உயிர்கள் அவரது பாத நிழலில் இளைப்பாரி இன்பமாக இருக்கிறது என்று பலரும் கருதுகிறார்கள். இது முக்தியைப் பற்றிய மிகத் தவறுதலான கற்பிதமாகும். முக்தி என்பது ஆனந்தம் அல்ல. ஆனந்தம் தான் முக்தி என்றால் ஆனந்தம் என்பது அடிக்கடி மாறக்கூடியது . நிரந்தரம் இல்லாதது. ஆனால் முக்தி நிரந்தரமானது. அதனால் அது ஆனந்தம் அல்ல பிறகு முக்தி என்றால் என்னவென்று வினவினால், முக்தி என்பது பூரண அறிவு என்பதாகும். பிரகிருதியில் கட்டுண்டு கிடக்கும் உயிர்கள் தனது விலங்குகள் இதுவென்று உணர்ந்து அதை உடைத்தெறிந்து பூரண அறிவை அடைவது தான் முக்தியாகும். பதஞ்சலியின் தத்துவப்படி கடவுள் என்பதும் ஓர் உயிர் தான். அதாவது ஒவ்வொரு மனிதனும் அல்லது ஒவ்வொரு ஜீவனும் கடவுள் தன்மையுடனே இருக்கிறது என்பது தான் இதன் இறுதியான முடிவாகும்.
இந்த கருத்து மிகவும் விந்தையானது .மனிதன் என்பவன் ஆசாபாசங்களுக்கு ஆட்பட்டவன். துன்பம் வந்தால் அழவும் இன்பம் வந்தால் சிரிக்கவும் தெரிந்தவன். நானே வெற்றியாளன் நானே தோல்வி அடைந்தவன் என்ற, நான் என்ற அகங்காரத்தில் இருப்பவன். அப்படிப்பட்ட மனிதனும் கடவுளும் ஒன்றாக முடியுமா? கடவுளுக்கு இன்ப துன்பம் உண்டா? விருப்பு வெறுப்பு உண்டா? கடவுளையும் மனிதனையும் ஒன்றாக கருதுவது சரிதானா? என்று நமக்குத் தோன்றும். ஆனால் பதஞ்சலி அப்படி கருதவில்லை.
வானத்தில் அளப்பது போல உயர்ந்து நிற்கும் இமயமலையும் கல்தான். ஆற்றில் அடித்துவரப்படும் சிறிய கூழாங்கல்லும் கல் தான். நாற்பது ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து நிற்கும் ஆலமரமும் மரம் தான். சிறிய சிறிய துளசி செடியும் மரத்தின் இன்னொரு இனம் தான். அதே போன்று கடவுள் என்பதும் பிரம்மாண்டமான சக்தி. மனிதன் என்பது சாமான்ய சக்தி. பிரம்மாண்டம் சாமான்யம் என்று வார்த்தைகள் வேறுபட்டாலும் சக்தி என்னவோ ஒன்று தான்.
பிறகு எந்த இடத்தில் கடவுளும் மனிதனும் வேறு படுகிறார்கள்..? மனிதன் கட்டுப்பட்ட நிலையில் தனது கட்டுகள் இதுவென்று உணர்ந்து அதிலிருந்து விடுபட்டு முக்தி அடைகிறான். கடவுள் ஒருபோதும் எந்த கட்டிற்குள்ளும் அகப்படாமல் சர்வ சுதந்திரமாக இருக்கிறான். பிரகிருதியின் தொடர்பிலிருந்து நீங்கிய மனிதன் பிறகு எப்போதுமே பிரகிருதியை அடைவதில்லை . ஆனால் கடவுள் பிரகிருதியோடு தொடர்புடையவராக எப்போதும் இருக்கிறார். கடவுளுக்கு விலங்குகள் கிடையாது. கர்மாக்கள் அவரைத் தீண்டாது. சுதந்திரம் மட்டுமே அவரது இயல்பு. அவரது துணை இல்லை என்றால் பிரகிருதி படைப்பு தொழிலை தொடர்ச்சியாக செய்ய முடியாமல் நின்றுபோய்விடும்.
இது தான் கடவுளுக்கும் மனிதனுக்கும் உடைய வித்தியாசம் என்று பதஞ்சலி மகரிஷி கூறுகிறார். ஆதி சங்கரருடைய அத்வைத தத்துவமும் ஏறக்குறைய இதே போன்று பேசுகிறது என்றாலும், சங்கரர் பிரகிருதியை தனி சக்தியாக கருதவில்லை. பிரகிருதியும் கூட பிரம்ம சொரூபமே என்கிறார். இரு பெரும் ஞானிகளின் கூற்று நமக்கு சற்று குழப்பத்தைத் தரும். ஆனால் நிஜமாக குழம்ப வேண்டிய அவசியமில்லை.
நமது சிற்றறிவின் துணை கொண்டு இதை புரிந்துகொள்ளப் பார்ப்போம்.. கங்கை நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த நதியில் பொங்கி நுங்கும் நுரையுமாகப் போவதும் தண்ணீர் தான்.. நமது வீட்டிற்குள்ளே சிறிய குடத்திற்குள் இருப்பதும் தண்ணீர் தான்.. இரண்டும் தாகத்தையே தணிக்கும். சூரிய வெளிச்சம் அளவிட முடியாத பிரகாசம் கொண்டது.. சூரியனில் எது வெளிச்சமாக வெளிப்படுகிறதோ அந்த சக்தியே அகல் விளக்கிலும் வெளிச்சமாக வெளிப்படுகிறது.. சூரியன், அகல்விளக்கு இரண்டிற்கும் முக்கியமான வேலை இருட்டைப் போக்குவது தான்.
கங்கை நீர் எப்படி குடத்திற்குள் நீராக இருக்குமோ சூரிய வெளிச்சம் எப்படி அகல் விளக்கிற்குள் பிரகாசிக்கிறதோ அதே போன்றே கடவுள் என்ற மகா சக்தி மனிதன் என்ற உடம்பிற்குள் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. சுருக்கமாக கூறுவது என்றால் கடவுள் என்பது திருவண்ணாமலையில் ஏற்றப்படும் மகா தீபம். மனிதன் என்பது கருவறையில் ஏற்றப்படும் சிறிய தீபம். வெப்பத்தில் மட்டுமே, அதாவது சக்தியில் மட்டுமே இரண்டுக்கும் வேறுபாடு குறை நிறை இருக்கிறதே தவிர மற்றப்படி இரண்டும் ஒன்று தான் என்பது பதஞ்சலி மகரிஷியின் திடமான நம்பிக்கை.