சொற்பொழிவு தொடர் 18
அன்பார்ந்தவர்களுக்கு வணக்கம்..
பகுத்தறிவு வாதிகள் என்று தன்னை அழைத்துக் கொள்பவர்கள் கடவுள் இல்லை என்று சொன்னால் அதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. நவீன வாதிகள், தனது அறிவே பிரதானம் என்று கருதுபவர்கள், கடவுளை இல்லை என்பது பெரிய அதிசயமில்லை. ஆனால் தவம் செய்த ஒரு ரிஷி இறை தன்மையோடு வாழ்ந்த ஒரு ரிஷி வேதகாலத்தில் வாழ்ந்த ஒப்பற்ற ஒரு மேதாவி கடவுள் இல்லை என்று கூறுவது நம்மைப் போன்றவர்களுக்கு வியப்பாக இருக்கும்.
ஏன் அவர் அப்படி சொன்னார்? நாட்டில் ஆன்மிகம் மறைந்து நாத்திகவாதம் தலைதூக்க வேண்டும் என்பதற்காக அப்படி சொன்னாரா? கடவுளின் பெயரால் கயமைத்தனங்கள் அதிகரித்து விட்டதனால் ஆத்திரம் அடைந்து அப்படிக்கூறினாரா? என்ற ஐயத்தோடு ஜைமினி மகரிஷியின் கருத்தை அணுகிப்பார்த்தால், அப்படி எந்த அறிகுறியும் தெரியவில்லை.
ஜைமினி வேதத்தை மதிக்கிறார். அதுவும் உயிரைவிட மேலானது வேதம் என்கிறார். வேதத்திற்கு இணையான வஸ்து எதுவும் உலகத்தில் இல்லை என்கிறார். அவர் போற்றுகின்ற, வழிபடுகின்ற அந்த வேதத்திலேயே இறைவன் இருப்பதாக சொல்லபட்டிருக்கிறது. இன்னும் அதிகமாகச் சொல்வது என்றால், வேதத்தை ஆக்கியதே இறைவன் என்றும் கூறபட்டிருக்கிறது. பிறகு ஜைமினி அந்தக் கருத்தை மறுக்க வேண்டிய காரணம் என்ன?
ஜைமினி சொல்கிறார், வேதம் யாராலும் ஆக்கப்பட்டது இல்லை. அது எப்போதும் இல்லாமல் இருந்தது இல்லை வேதம் ஆதி அந்தம் இல்லாதது. இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பே வேதம் இருந்தது. பிரபஞ்சம் அழிந்து போன பிறகும் வேதம் இருக்கும் என்று வியப்பான ஒரு கருத்தை முன் வைக்கிறார்.
ஜைமினி தவிர மற்றவர்கள் வேதம் பரிபூரணமானது, பரிபூரணமான வேதத்தை ஒரு பரிபூரணன்தான் உருவாக்கி இருக்க வேண்டும். அந்த பரிபூரணனே இறைவனாக இருக்க வேண்டும். அவனை நம்ப மறுப்பதும் வேதத்தை மறுதலிப்பதும் ஒன்றே என்கிறார்கள்.
இந்த இடத்தில்தான் ஜைமினி மாறுபடுகிறார். வேதம் பரிபூரணம் என்றால் அதை ஒருவன் உருவாக்கினான் என்பதை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் இல்லை. ஆனால் நான் அதை, ஒருவன் உருவாக்கினான் என்பதையே ஏற்க வில்லை. வேதத்தை யாரும் உருவாக்கவில்லை. அதனால் அதை உருவாக்க வேண்டிய ஒருவன் தேவை இல்லை. வேதம் மட்டுமே ஆதியும் அந்தமும் என்பதனால் இன்னொரு ஆதியும் அந்தமும் இல்லாத பொருளான கடவுள் தேவை இல்லை. அவன் இல்லை இல்லவே இல்லை என்கிறார்.
வேதத்தை பூரணமாக ஏற்றுகொள்ளும் ஜைமினியின் இந்த கருத்து நமக்கு விசித்திரமாக இருக்கும். ஆனால் அவரது கண்ணோட்டத்தின்படி பார்த்தால், இதில் விசித்திரம் அடைவதற்கு ஒன்றுமே இல்லை. இறைவனை நம்புகிறவர்கள் கடவுள் தான் உலகத்தை, உலகத்தில் உள்ள உயிர்களைப் படைத்தான் என்று கூறுகிறவர்கள், கடவுள் எப்படிபட்டவர் என்று கருதுகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.
கடவுள் எல்லாவற்றையும் வினாடி நேரத்தில் உருவாக்கவும் சம்ஹாரம் செய்யவும் வல்லவர். ஆனந்தம் என்பதே அவரது வடிவம். அவர் நிழலில் கூட துன்பம் என்பது கிடையாது. கருணையின் வடிவம் அவர். அன்பின் ஊற்று அவர். அழகின் பிறப்பிடம் அவர்தான். அவரே ஞானமயமனவர். அறிவு வடிவமானவர் என்றெல்லாம் இறைவனின் கல்யாண குணங்களைப் பற்றி வர்ணனை செய்கிறார்கள்.
அவர்களைப் பார்த்து ஜைமினி கேட்கிறார்.. இவ்வளவு சிறப்பம்சங்கள் நிரம்பியவரான கடவுள் தானே, இந்த உலகத்தைப் படைத்தார். இன்பமே வடிவாக இருக்கும் பொருளில் துன்பம் இருக்க முடியுமா? கருணையே வடிவானவன் உண்டாக்கியதில் கொடூரம் இருக்குமா? அழகின் பிறப்பிடம் தோற்றுவித்ததில் அவலட்சணம் இருக்குமா? அறிவு மயமானவன் படைப்பில் அறியாமை இருக்குமா? இறைவனுடைய தன்மைகள் எவை எவையென்று கருதுகிறீர்களோ அவற்றிற்கெல்லாம் எதிர்மறையான தன்மைகள் உலகத்தில் இருக்கிறது.
கொடூரம் நிறைந்தது இந்த உலகம். அறியாமை மயமானது இந்த உலகம். அவலட்சணமானது இந்த உலகம். விதித்த விதியை மீற முடியாத பலகீனமானது இந்த உலகம். கடவுளிடம் இருப்பதாக கூறப்படுகிற எந்தத் தன்மையும் உலகத்தில் முழுமையானதாக இல்லை. ஆகையால் இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டது அல்ல.
கடவுள் தான் உலகத்தைப் படைத்தார் என்று பிடிவாதமாக வாதாடினால் அந்தக் கடவுள் கருணையும் ஆனந்தமும் ஆற்றலும் அறிவும் துளிகூட இல்லாதவர் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடவுள் மட்டுமே பூரணம் என்றால் அவரிடம் இருந்து தோன்றும் அனைத்து பொருட்களும் குறைவு இல்லாமல் நிறைவு பெற்றதாக இருக்க வேண்டும். ஆனால் உலகம் முழுவதும் குறைகளையும் குற்றங்களையும் காண்கிறோம். புனிதமிக்க கடவுள், குறைகளை உருவாக்கினார் என்றால், அது கடவுளின் புனிதத் தன்மைக்கு இழுக்கு. எனவே கடவுள் இல்லை என்று ஜைமினி அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.
நாம் இப்படி நினைக்கலாம்.. உலகத்திலுள்ள நிறைவுகளை இறைவன் படைத்தான். குறையாக இருப்பதை, துன்பமாக இருப்பதை, அருளற்றதாக இருப்பதை, உயிர்கள் தங்களது சொந்த கர்மாக்களால் உருவாக்கிக் கொண்டன என்று நாம் நினைப்பதற்கு வழி இருக்கிறது. ஆனால் இந்த நினைப்பிற்கும் ஜைமினி பதிலை வைத்திருக்கிறார்.
கர்மாக்கள் தான் அவலட்சணங்களை உருவாக்குகின்றன என்றால், கடவுள் என்ற ஒருவர் தனியாகத் தேவையில்லையே.. கர்மம் என்பதே உலகத்தைப் படைத்து காவல் காத்து சிதைத்துக் கொள்ளுமே? கடவுளை விட கர்மா என்பது தானே உயர்ந்ததாக இருக்கும். அப்படி என்றால் கடவுளுக்காக கட்டபட்டிருக்கின்ற கோவில்களை இடித்து கர்மாக்களுக்கான ஆலயங்களை உருவாக்க வேண்டியது தானே? வழிபாடுகளும் அபிசேக ஆராதனைகளும் கடவுளுக்கு எதற்கு? கர்மாவிற்கே செய்யலாமே என்கிறார் அதன் வழியில் நின்று இதை சிந்தித்தால் ஒருவகையில் இது நியாயமாகவே படுகிறது.
ஜைமினி மகரிஷியின் கருத்து போன்றது தான் ஆதிநாத் பகவான் என்ற மகாவீரரின் கருத்துமாகும். இதில் விந்தை என்னவென்றால், மகாவீரர் வேதத்தை மறுத்து கர்மாவை உயரத்தில் தூக்கிப்பிடித்தான். ஜைமினியோ வேதத்தை ஏற்று கடவுளை தூர எறிந்து விட்டான்.
ஜைமினி கடவுளை முற்றிலுமாக மறுத்துவிட்டாலும் கூட, வேதத்திலுள்ள சில கருத்துக்கள் நேரடியாகவே கடவுள் இருப்பை சுட்டிக்காட்டுகிறது. கடவுள்தான் இந்த உலகின் காரணகர்த்தா. அவனே எல்லாமுமாக இருக்கிறான். உலகமாகவும் இருக்கிறான் என்கிறது வேதம். பிறகு, வேதம் சொல்லுகின்ற கடவுள் என்ற கருத்தை ஜைமினி முற்றிலுமாக மறுத்தாலும் கூட வேதத்தின் இந்தக் கருத்துக்கு அவரிடம் எந்த பதில் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொண்டால் தான் ஜைமினியின் சிந்தனையை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும்.
வேதத்தில் எங்கெல்லாம் கடவுள் இருப்பதாக, கடவுள் தன்மையை பற்றி கருத்துக்கள் வருகிறதோ அந்த இடமெல்லாம் கடவுளை குறிப்பது அல்ல. யாகங்களை செய்பவனைக் குறிக்கிறது என்று ஜைமினி கூறுகிறார். வேதத்தை முழுமுதற் பொருளாக அவர் ஏற்றுகொண்டதனால் வேதம் குறிப்பிடும் முக்கியமான கடமையான யாகத்தையும் யாகத்தை நிகழ்த்துபவனையும் ஜைமினி தலையின் மீது வைத்துக் கொண்டாடுகிறார். அதனாலேயே யாகம் செய்பவனை கடவுள் தன்மை உடையவன் என்று பாராட்டுகிறார். அதாவது கடவுள், கேட்டால் தருவான்.. யாகமும் யாகம் செய்பவனும் அப்படித் தருவார்கள்.. என்பது அவரது கருத்து.
யாகத்தையும் யாகம் செய்பவனையும் வேதங்கள் கடவுளாகக் கூறுகிறது என்ற ஜைமினியின் கருத்தை ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொள்வோம். யாகத்தில் அவிர்பாகம் தேவதைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறதே? கண்ணுக்குத் தெரியாத கடவுளை மறுக்கும் ஜைமினி, இத்தகைய கண்ணுக்கு தெரியாத தேவதைகளை மட்டும் ஏற்றுக்கொள்கிறாரா? தேவதைகளைப் பற்றிய அவரின் கருத்து என்ன? என்ற கேள்வி நமக்குத் தோன்றும். ஜைமினி சொல்கிறார்.. தேவதைகள் கண்ணுக்கு தெரியாத அமானுஷ்யம். ஆனால் அது கடவுள் அல்ல. கடவுளுக்கு இருப்பதாக நம்பப்படுகிற சர்வ சக்தியும் எந்த தேவதைக்கும் கிடையாது. ஆனால் முறையாக மந்திரத்தை உச்சரித்தால் அந்த மந்திரத்திற்கு கட்டுப்பட்டு தேவதைகள் மனிதர்களுக்கு உதவிகள் செய்யும் என்று கூறுகிறார்.
ஜைமினி எந்த இடத்திலும் கடவுளையோ, கடவுள் சிந்தனையையோ ஒத்துகொள்ள வில்லை. அவர் எழுதிய மிகப் புகழ் பெற்ற மீமாம்ச சூத்திரம் என்ற நூலில் கடவுளைப் பற்றி எதுவும் சொல்லவில்லை என்றாலும், கடவுள் இல்லை என்று நேரடியாக பொருள்படும் படியாக எதையும் பேசவில்லை. எனவே ஜைமினி கடவுள் மறுப்பாளர் அல்ல. கடவுளை ஏற்றுகொள்ளும் முழுமையான ஆத்திகரே என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்து, அறிஞர்களின் சொந்தக் கருத்தே தவிர, ஜைமினியின் கருத்து அல்ல என்பது அந்த நூலைப் படிக்கும் போதே நமக்குத் தெரிந்துவிடுகிறது.
ஜைமினி வேதங்களை ஏற்கிறார். வேதம் செய்பவனை போற்றுகிறார். கடவுளை மறுக்கிறார். எல்லாம் சரி முக்தியை பற்றி அவர் என்ன கருதுகிறார்? மனிதன் மனிதனாகப் பிறந்து, மனிதனாக வாழ்ந்து, மனிதனாக வெறும் உடம்பாக மடிந்து போகவேண்டியது தானா? அவனது மனிதத் தன்மையிலிருந்து விடுபட்டு முக்தி என்ற தெய்வத் தன்மைக்கு செல்ல முடியுமா? என்ற கேள்விக்கு அவர் என்ன பதில் கூறுகிறார் என்பதையும் காணவேண்டும்.
உலகத்தோடு ஏற்பட்ட தொடர்பு தான் உயிர்களுக்கு விலங்காக இருக்கிறது. மற்றவர்களைப் போல் ஜைமினி, உலகம் பொய் மாயை என்றோ உலகிற்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு கற்பனை என்றோ கூறவில்லை. இந்த உலகம் எப்படி உண்மையாக கண்ணுக்கு தெரிகிற திட வஸ்துவாக சாஸ்வதமாக தெரிகிறதோ அதே போன்று உயிர்கள் என்பதும் மாயை ஆனது அல்ல. உண்மையானதே..
உண்மையான உலகிற்கும் உண்மையான உயிருக்கும் ஏற்படுகின்ற தொடர்பே தளை. அதாவது விலங்கு என்பதாகும். எப்போது உயிரானது இந்த உலகத்தோடு தனக்குத் தொடர்பு வேண்டாம் என்று நினைக்கிறதோ அப்போதே அது முக்தி நிலையை அடைந்து விடுகிறது.
உயிர் முக்தி தான் தனது இறுதி லட்சியம் என்று கருதுவதற்கு அல்லது பக்குவப்படுவதற்கு வேதங்கள் சொல்லுகின்ற கர்ம காண்டம் மிகவும் அவசியமானது. சந்தியா வந்தனம், யாகங்கள், தியானங்கள் தவங்கள் என்கின்ற வேத கர்மாக்கள் மனிதனை விடுதலையை நோக்கி அழைத்துச் செல்லுமென்று ஜைமினி கருதுகிறார்.
ஜைமினி கடவுளுடைய வேலையை வேதமே பார்த்துகொள்ளும் என்ற எண்ணத்தில் கடவுள் தேவை இல்லை என்று சொன்னார். ஆனால் ஜைமினியின் காலத்திற்கு பிறகு வந்த மிகப்பெரிய மீமாம்ச அறிஞர்களான சபரர், பவதாசர், ஹரி, உபவர்ஷர், குமரிலபட்டர், பிரபாகரர் போன்றோர்கள் இந்த தத்துவத்தில் சில மாறுதல்களை செய்தார்கள் அவர்களில் மிக முக்கியமாக குமரிலபட்டரும் பிரபாகரரும் மிமாம்ச சிந்தனை மரபில் இருந்த கடவுள் தேவையில் என்ற கருத்தை மாற்றி கடவுள் வழிபாட்டோடு அதை இணைத்தார்கள் இன்றும் இவர்களின் இணைப்பையே பிரதானமாக கருதி வேத வழிநிற்கும் பல வைதீகர்கள் வேதங்களையும் இறைவனையும் இரண்டு கண்களாக கருதி பின்பற்றி வருகிறார்கள். இன்று இந்தியாவில் வேதங்கள் அழிந்து போகாமல் இருப்பதற்கும் வருங்கால தலைமுறையினர் கூட வேதங்களை ஆர்வத்தோடு அணுகி ஆராய முற்படுவதற்கும் ஜைமினியின் மீமாம்ச தத்துவமும் அவரது சீடர்களின் கருத்துக்களுமே காரணமாக இருக்கிறது. இவர்கள் மட்டும் இல்லை என்றால் இன்றைய வேத மரபு என்பது என்றோ மறைந்து போயிருக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்.