நீங்கள் விரும்புகின்ற அரசியல் முறை என்ன என்பது தான் எங்களின் இரண்டாவது கேள்வி?
"நான் விபரம் தெரிந்து உலகத்தை பார்த்த போது என்முன்னே நின்ற கட்சி காங்கிரஸ் மட்டுமே, காரணம் என் தந்தை மிகத் தீவிரமான காங்கிரஸ்காரர் சுதந்திர போராட்ட காலத்தில் துவங்கி காமராஜர் காலம் வரையிலும் காங்கிரஸ் கட்சியில் தொண்டாற்றி இருக்கிறார்.
தனது சுதந்திர போராட்ட பங்கு பணியை பயன்படுத்தி அரசாங்கத்தில் எந்த சலுகையும் பெறத் கூடாது என்பதில் இறுதிக் காலம் வரையில் உறுதியாக இருந்தார். முன்னாள் முதல்வர் காமராஜர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.கோசல்ராம் , கேரளா முன்னாள் கவர்னர் பா.இராமச்சந்திரன் போன்ற தலைவர்களோடு நல்ல பழக்கம் அவருக்கு உண்டு, ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்
ராஜீவ் காந்தி காலத்திலிருந்து காங்கிரஸின் நோக்கம் திசை மாறி போய்விட்டதாக கருதினார், இது மட்டுமல்ல காந்தீய கொள்கையில் மிகத் தீவிர நாட்டமுடைய அவர், இலங்கையில் ஆயுத போர் செய்த வேலுப்பிள்ளை பிரபாகரனை மிகவும் நேசித்தார், இலங்கை மக்களின் இனப் போராட்டம் அவரை ஈர்த்தது ஒரு வேளை அவர் தனது இளமைக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த காரணத்தால் அப்படி இருந்திருக்கலாம்.
அவர் மரணப் படுக்கையில் இருந்த போது உயிர் பிறிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு கூட, இலங்கை பற்றிய செய்தியை வானொலியில் கேட்டார் என்றால் அந்த விஷயத்தில் அவருக்கு எவ்வளவு ஆர்வம் இருந்திருக்கும் பாருங்களேன்.
அவருடைய நிழலில் வளர்ந்த எனக்கு அரசியல் ஈடுபாடு இப்படித்தான் வந்தது, ஆரம்பக் காலக்கட்டங்களில் நானும் காங்கிரஸ்காரன் தான், நேருஜியின் ஜனநாயக சோஷலிஸம் என்ற கொள்கை என்னை கவர்ந்தது, ஆனால் பெருந்தொழில் சார்ந்த பொருளாதார கொள்கை என்பதில் நெருடல் அடிக்கடி ஏற்படும், இருந்தாலும் இந்திரா காந்தி அம்மையாரின் அதிரடி அரசியலும், கருணாநிதி, எம்.ஜி.ஆர். இவர்களின் கேலிக்கூத்து கொள்கை சித்தாந்தங்களும் தொடர்ந்து என்னை காங்கிரஸ் கட்சியிலேயே இருக்க வைத்தது.
காலம் மாறிய போது தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவராக இருக்கும் தம்பி ஏ.வி, சரவணன் அவர்களின் தந்தையார் விஜயன் அவர்களின் நட்பும், மணம்பூண்டி மாயவன், விழுப்புரம் சுரேஷ் மோகன், கொல்லூர் செல்வராஜ் ஆகியோரின் தோழமையும் என்னை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பால் கொண்டு வந்தது.
இவர்களால் காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ போன்றோர்களின் கருத்துக்களை ஊன்றி படிக்க ஆரம்பித்தேன், மார்க்ஸின் மூலதனம், லெனினின் ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூல்கள் என்னை கவர்ந்தன, சமூதாயத்தில் வேரோடி போய்யிருக்கும் தீமைகள் அனைத்தும் மறைய வேண்டுமானால் பொருளாதார சமன்பாடு கண்டிப்பாக தேவை என்று எனக்கு தோன்றியது.
பொருளாதார தத்துவத்தில் என்னை கவர்ந்த கம்யூனிஸ்ட்டு ஜனநாய தத்துவத்தில் கவரவில்லை, தொழிலாளிகளின் சர்வாதிகார அரசு என்பது பொலீட்பீராவின் சர்வாதிகாரம் என்பது தான் என்று விளங்கியது, இந்தியாவில் தனிநபர் சர்வாதிகாரமோ தனிக் கட்சி சர்வாதிகாரமோ வந்தால் நாடு சின்னாபின்னமாகி விடும் என்று நான் நம்பினேன்.
இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடனமும் பாக்கிஸ்தானில் அவ்வப்போது நடைபெரும் ராணுவ புரட்சிக்களும் இதற்கு சரியான உதாரணங்களாக எனக்குப் பட்டது. அப்போது சோவித் யூனியன் சிதறவில்லை என்பதால் அதை என்னால் எடுத்துக் கொள்ள முடியவில்லை, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பால் ஈடுபாடு குறைந்ததும் என் மனது இயற்கையாக திராவிட கட்சிகளை நாடி சென்றிருக்க வேண்டும் ஆனால் அப்படி போக முடியாதற்கு காரணம் இருந்தது.
பெரியார், அண்ணாதுரை போன்றோர்களின் இந்தி திணிப்பு , ஆரிய மாயை, திராவிட மாண்பு, வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது போன்ற முழக்கங்கள் யாவும் வார்த்தை ஜாலங்களாகவும் குழந்தைகளுக்கு பூச்சாண்டி காண்பிப்பது போன்றதும் என்பதே என் கருத்து, இவர்கள் தமிழகத்தில் ஆட்சி அமைத்ததற்கு காரணம் சினிமா கவர்ச்சி, காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட பிளவு, போலியான இலவச வாக்குருதிகள் மட்டுமே என்று இன்று வரை உறுதியாக நம்புகிறேன், இந்த நிலையில் திராவிட அரசியலை நினைத்து பார்க்கவே எனக்கு துணிச்சல் கிடையாது.
திராவிடம், தமிழ் தேசியம் என்பவைகள் மக்களின் மனதையும், அறிவையும் சுருங்க தெய்வதாகும். வெள்ளைக்காரன் தனது ஆட்சி இந்தியாவில் நிலை பெற்றிருக்க சில போலியான வரலாற்று புனைவுகளை ஏற்படுத்தினான் அதை மையப்படுத்தியே இவர்களின் அரசியல் அமைந்துள்ளது, உதாரணமாக இந்தி மொழியை எதிர்க்கும் இவர்கள் ஆங்கிலத்திற்கு ஆலவட்டம் காட்டுவதை எடுத்துக் கொள்ளலாம்.
ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்பை சேர்ந்த பல நண்பர்கள் எனக்குண்டு, அவர்களது கொள்கை பற்றும் அதற்காக தங்களது சொந்த வாழ்வையே அற்பணிக்கும் மனப்போக்கு எனக்கு பிரம்மிப்பை உண்டாக்கும், ஆர்.எஸ்.எஸ், அமைப்பின் தமிழ்நாட்டு பிரிவில் மிக முக்கிய தலைவரான திருக்கோவிலூர் சுந்தரம், தற்போது மணிப்பூர் கவர்னராக இருந்து ராஜினாமா செய்த சண்முகநாதன், பா.ஜ.க.வின் முன்னாள் தமிழக தலைவர் இல.கணேசன், இன்னும் பல முக்கியத் தலைவர்களோடு இந்துத்துவா பற்றி நெடுநேரம் உரையாடி இருக்கிறேன், அவர்களின் கொள்கை விளக்க நூல்கள் பலவற்றையும் ஆழ்ந்து படித்திருக்கிறேன்.
இந்து மதத்தின் மேல் அதிக ஈடுபாடு இருந்தாலும் இந்து தர்மநெறியே எனது வாழ்கை பாதை நெறியாக இருந்தாலும் இந்துத்துவா கொள்கையில் நான் சில முரண்பாடுகளை கண்டேன், அவற்றை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, முக்கியமாக இந்தியாவை இந்து நாடாக ஆக்குவது என்பதை ஒத்துக் கொள்ள இயலவில்லை, இந்தியாவில் இந்துக்கள் மட்டும் தான் இருக்க வேண்டும் என்பது போன்ற கருத்தாக்கங்கள் நடைமுறைக்கு சாத்யமானதாக தோன்றவில்லை.
இந்தியாவின் வரலாறு என்பது விஞ்ஞானக் கருவிகளின் துணை கொண்டு ஆய்வு செய்தாலும் முடிவுக்கு வர முடியாத அளவு காலத் தொன்மையானது, வேத காலம் என்பதையும் அப்படித்தான் கொள்ள வேண்டும் அவ்வளவு தொன்மை காலத்திலேயே வேதத்தை மறுப்பவர்களும் எதிர்ப்பவர்களும் இருந்தார்கள், அதனால் இந்து மததிற்கு மாற்று சிந்தனை ஆரம்பக் காலம் முதற்கொண்டே இருந்து வருகிறது.
அன்றைய பௌத்தம், ஜையினம் என்ற மதங்கள் எப்படி இந்து மதத்திற்கு சவாலாக அமைந்ததோ! அதைப் போன்றுதான் இன்று இஸ்லாம் கிறிஸ்தவம் அமைந்திருக்கிறது, முன்பு உள்ள மதங்கள் நம் நாட்டில் தோன்றியவைகள், இவைகள் அந்நிய நாட்டில் தோன்றியதாகும் வித்தியாசம் இவ்வளவுதான், இந்த மதங்கள் எதுவும் இந்து மதத்தை ஒன்றும் செய்து விட முடியாது, நம் மதத்தின் அடித்தள கட்டுமானம் லேசானதல்ல.
ஆயினும் கூட இந்த மத வித்தியாசங்களை வைத்துக் கொண்டு பா.ஜ.க., காங்கிரஸ் இரண்டும் அரசியல் நடத்துவது நாட்டுக்கு நல்லதல்ல, காங்கிரஸ் சிறுபான்மையினர் ஓட்டுக்களை மொத்தமாக அறுவடை செய்ய நாடகம் ஆடுகிறது, பாரதீய ஜனதா கட்சி சிறுபான்மை - பெரும்பான்மை இருவரையும் எதிரிகளாக்கி அரசியல் நடத்துகிறது.
ஆக மொத்தத்தில் இந்தியாவில் இப்போது இருக்கின்ற அரசியல் கட்சிகள் எதுவுமே நாட்டின் மேல் அக்கறை கொண்டதாக எனக்கு தெரியவில்லை, இவர்கள் அனைவருமே பதவியை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறார்கள், இவர்களால் மக்களுக்கும் தேசத்திற்கும் நன்மை செய்ய முடியாது கேடுகளை தான் உருவாக்க முடியும்.
நாட்டுக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்றால் அனைத்து அரசியல் கட்சிகளும் உண்மையாகவே காந்தீய கொள்கைகளை ஏற்று நடக்க வேண்டும். உண்மை, சத்தியம், அஹிம்சை இவைகளின் நம்பிக்கை வைக்க வேண்டும். இயற்கை சார்ந்த சுயசார்புடைய கிராம பொருளாதார கொள்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இவைகள் சாத்தியமா ? என்று சுலபமாக கேட்டு விடலாம் ஆனால் இதை நடைமுறைபடுத்தாவிட்டால் நாளைய தலைமுறையினர் கையில் நாடு உருப்படியாக போய் சேராது. "நமது குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பான வாழ்வை நாமே குழி தோண்டி புதைத்தவர்களாவோம்"
அரசியல் கட்சிகளை பற்றி தனது சொந்த மதிப்பீட்டை இப்படி வெளிப்படுத்திய குருஜியிடம், இந்திய அரசியலிலும் சமூகத்திலும் முக்கிய காரணியாக திகழும் அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட ஆளுமையை பற்றிய பேச்சை அடுத்ததாக எடுத்தோம்
_ தொடரும் _