கண்களை மூடி கொண்டு நெற்றிபொட்டில் கவனம் செலுத்துங்கள் மனம் குவியும் என்கிறார் ஒருவர், அப்படி செய்வதை விட விளக்கு ஒன்றோ, வெளிச்சம் ஒன்றோ அந்த இடத்தில் பிரகாசிப்பதாக பாவனை செய்யுங்கள் மனம் வசமாகும் என்கிறார் வேறொருவர்.
மூக்கு நுனியை பார்க்க சொல்கிறார் ஒருவர், மூலாதாரத்தை கவனி என்கிறார் ஒருவர் இப்படி அவரவருக்கு பரிச்சயமான வழிவகைகளை கூறுகிறார்கள். இவைகள் எல்லாமே சரிதான், ஆனால் இவைகள் எல்லாவற்றையும் விட மந்திரம் ஜெபிப்பது ரொம்ப சரி
மனம் ஒருநிலைப்பட மந்திரம் வேண்டும், இறைவனை துதிப்பாட மந்திரம் வேண்டும், அவனை அர்ச்சனை செய்ய மந்திரம் வேண்டும், கல்யாணம் நடத்த, பெற்ற பிள்ளையை தொட்டிலில் போட, பாடம் துவங்க என்று துவங்கி மயானம் வரையில் மந்திரம் என்பது தேவைப்படுகிறது.
ஒவ்வொரு இந்தியனின் வாழ்விலும் இப்படி அத்தியாவசியமாகி போன மந்திரங்களை பற்றி சாதாரண மனிதர்களாகிய நாம் தெரிந்து வைத்திருப்பது என்ன? அதை பற்றி எந்தளவு நமக்கு தெரியும், முதலில் மந்திரம் என்றால் என்ன?
மந நாத் த்ராயதே இதி மந்த்ர என்று வட மொழி ஸ்லோகம் ஒன்று உண்டு, அதாவது மனனம் செய்தால் காப்பாற்றுவது மந்திரம் என்பது இதன் பொருளாகும். மனப்பாடம் செய்தால் காப்பாற்றுவதற்கு மந்திரம் என்ன பரிசு சீட்டா என்ன? லட்ச லட்சமாக பரிசுகள் விழுந்து காப்பதற்கு என்று சிலருக்கு தோன்றும், இது அப்படி அல்ல துன்பங்கள், துயரங்கள், அல்லல்கள் நம்மிடம் வராமல் மந்திரம் நம்மை காக்கும் என்பது தான் கருத்தாகும்.
மந்திரத்திற்கு காக்கும் சக்தி உண்டா? எப்படி உண்டு? என்ற சந்தேகம் வருவது இயற்கை அதை போக்க வேண்டுமானால் சற்று நாம் கடினமான விஷயத்தை பற்றி சிந்திக்கும் ஆர்வத்தை நமக்குள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் உண்மைகளை உண்மைகளாக உணர முடியும்.
நம்ம உடம்புக்குள்ளே உட்கார்ந்து இருக்கிறதே உயிர், அந்த உயிர் திடப்பொருளா? திரவபொருளா? வாயு பொருளா? எதனால் ஆனது உயிர் மேலே சொன்ன எதுவாளையும் உயிர் ஆகவில்லை, எதுவாகவும் உயிர் இல்லை, உயிர் என்பது நாதம் அதாவது சத்தம் என்று சித்தர்கள் ஆராய்ந்து அனுபவித்து கூறுகிறார்கள்.
சத்தத்திற்கு பொருட்களை அதிர வைக்க கூடிய சக்தி உண்டு, இயங்க வைக்கும் ஆற்றலும் உண்டு, நமது உடம்பிற்குள் உயிர் என்ற நாதம் அதாவது சத்தம் மூலாதாரத்தில் உடலில் நடுப்பகுதியில் அமர்ந்து கொண்டு உடல் முழுவதும் அதிர்வலைகளாக துடிப்புகளாக பரவி இருக்கிறது. இதனால் தான் நமது உடம்பு சூடாக இருக்கிறது.
உடம்பில் இருக்கின்ற இந்த நாதம் உடம்போடு மட்டும் நின்றுவிடுவது இல்லை. பிரபஞ்சம் முழுவதும் பரவி இருக்கிறது. உயிர் சக்தியானது அண்டம் முழுவதும் பரவி இருப்பதனால் தான் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்று சித்தர் வாக்கியம் கூறுகிறது.
பிரபஞ்சம் முழுவதும் நாத அலை பரவி உள்ளது ஐம்பூதங்களும் நாத அலைகளாலேயே இயங்குகிறது. இந்த நாத அலைகளை பீஜ மந்திரங்கள் என்கிறோம். ஒவ்வொரு பூதத்திற்கும் தனித்தனியான பீஜங்கள் உண்டு.
உதாரணமாக ஹம் என்ற பீஜம் ஆகாயத்திற்கு சொந்தமானது, யம் என்ற பீஜம் காற்றுக்கு உரியது, ரம் என்பது நெருப்புக்கு சொந்தமானது, வம் என்பது நீருக்கு சொந்தமானது, லம் என்பது நிலத்திற்கு உரிய பீஜமாகும்.
பரிசோதனை செய்வதற்காக இந்த பீஜ மந்திரங்களில் ஏதாவது ஒன்றை சிறிது காலத்திற்கு ஜபம் செய்து பாருங்கள். உங்களது உடம்பில் அந்த பூதத்தின் சக்தி அதிகரிப்பதை நீங்கள் கண்கூடாக காணலாம். அப்போது தெரியும் உங்களுக்கு அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்ற வாசகத்தின் உண்மை பொருள்.
இந்த பீஜ எழுத்துகளுக்கு தெய்வத்தை ஈர்க்க கூடிய ஆற்றல் உள்ளதா? என்று நினைப்பவர்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும், தெய்வ சக்தி இறைவனின் அருள் என்பவைகள் மனிதனை அடையவேண்டுமென்றால் இயற்கை பொருட்களையே ஊடகமாக பயன்படுத்த வேண்டும், அதற்கு இந்த மந்திர பீஜங்களே சரியான ஊடகங்களாகும்.
ஹ்ரீம் என்ற பீஜ மந்திரத்தில் உள்ள ஹ என்ற எழுத்தும், ர என்ற எழுத்தும், ஈ என்ற எழுத்தும், ம என்ற எழுத்தும் தனித்தனியாக உச்சரிக்கப்படும் போது ஆகாயத்திற்கான பீஜமும் நெருப்பிற்கான பீஜமும் வருகிறது. இந்த இரண்டு பீஜங்களையும் ஒருங்கிணைத்தால் அர்த்தநாதீஸ்வர தெய்வத்தின் நாத விந்து கிடைக்கிறது. அதாவது ஹ்ரீம் என்ற மூல மந்திரம் அர்த்தநாதீஸ்வரரை சூட்சகமாக அடையாளப் படுதுவதால் அந்த தெய்வத்தின் அருளை சுலபமாக மனிதன் பெற்றுவிட முடிகிறது.
எப்படி ஒவ்வொரு இயற்கை பூதத்திற்கும் தனித்தனியான பீஜ மந்திரங்கள் உண்டோ? அதே போன்றே தெய்வங்களுக்கான பீஜ மந்திரங்களும் இருக்கிறது, ''ஆச்சரியமான ஒரு விஷயம்'' ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுகென்றே பீஜ மந்திரங்கள் உண்டு, யாருக்கு என்ன மந்திரம் பொருந்தும் என்பதை வேதங்கள் குறிப்பிடும் மனசாஸ்திர அடிப்படையில் பிரித்து விடலாம்.
குறிப்பாக ஸ்ரீம் என்ற மூல மந்திரம் எனக்கு சொந்தமானது என்று வைத்துகொள்வோம், இந்த மந்திரத்தை நான் மீண்டும் மீண்டும் சொல்ல சொல்ல எனக்குள் மறைந்து கிடக்கின்ற பிரபஞ்ச ஆற்றல், ஆகாசத்தில் பரவியுள்ள பிரபஞ்ச ஆற்றலோடு தொடர்பு கொண்டு இறை சக்திக்கு என்னை மிகவும் நெருங்கியவனாக மாற்றி விடுகிறது. இறை சக்தியானது என் அருகில் இருக்கும் போது எவையெல்லாம் என் வாழ்க்கைக்கு தேவையோ அவையெல்லாவற்றையும் நான் சுலபமாக பெற்றுவிட முடியும் அல்லவா?
இதன் அடிப்படையில் உருவானது தான் நம்மால் கொடுக்கப்பட்டு வரும் ''அமிர்ததாரா மஹா மந்திரம்'' என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கான மந்திர பீஜங்களை கொடுத்துவிட்டால் அவன் பரிகாரத்திற்க்காக வேறு பொருளை தேடிப்போக வேண்டிய அவசியமில்லை, அவனவன் பிரச்னைக்கு தீர்வுகள் என்பது அவனிடமே இருக்கிறது. இதை தான் கண்ணபெருமான் கீதையில் ''உனக்கு நீயே நண்பன் உனக்கு நீயே விரோதி'' என்று கூறினார்.
இறுதியாக ஒரே கேள்வி நிற்கிறது இந்த மந்திரங்களை சமஸ்கிருதத்தில் மட்டும் தான் சொல்ல முடியுமா? தமிழிலோ அல்லது வேறு மொழியிலே மந்திரங்கள் இல்லையா? அதை சொல்ல கூடாதா? என்பது தான் அந்த கேள்வியாகும்.
கேள்வி வாஸ்தவமானது தான் ஆனால் பதில் தான் சற்று கடினமானது. காரணம் தமிழில் மந்திரங்கள் இருக்கிறது, அவற்றை நான் குறைத்து மதிப்பிடவில்லை, ஆனால் பிரபந்தத்தில் உள்ள பீஜ மந்திரங்கள் அனைத்தையும் சரியான உச்சரிப்போடு சொல்லவேண்டுமென்றால் அதற்கான எழுத்துக்கள் நம்மிடம் குறைவு என்றே என் சிற்றறிவுக்கு தோன்றுகிறது.
உதாரணமாக வடமொழியில் ஒவ்வொரு எழுத்திற்கும் தனிதனி பொருளும் உண்டு, தத்துவமும் உண்டு, குரு என்ற ஒரு சொல்லில் கு என்றால் இருட்டு ரு என்றால் அழித்தல் என்பது பொருளாகும். அதாவது அறியாமையை அழிப்பவன் குருவாகிறான். அதே போல சமஸ்கிருதத்தில் நான் என்று கூறுவதை அஹம் என்று சொல்வார்கள் இதில் அ என்பது இறைவனையும் ஹ என்பது மாயையும் குறிப்பதாகும். மனிதனுக்குள் மறைந்திருக்கும் இறைத்தன்மையை மாயை மறைக்கிறது என்பதே நான் என்ற அல்லது அஹம் என்ற சொல்லின் பொருளாகும்.
இப்படி எத்தனையோ சூட்சமங்கள் வடமொழியில் இருக்கிறது. இதை அறிந்து தான், சித்தர்கள் மூல மந்திரங்களை சொல்லுகின்ற போது அதை வடமொழியிலேயே சொன்னார்கள். அந்த சொற்களை தமிழில் மொழி பெயர்த்து சொல்வதாக இருந்தால் பொருள் கிடைக்கும், சொல்லுக்கான அழுத்தம் கிடைக்காது.
எனவே மந்திரம் என்பது நமது உடம்பிற்குள் மறைந்து கிடக்கும் இறைவனின் சக்தி, அதை தட்டி எழுப்பி பிரபஞ்ச சக்தியோடு சேர்ப்பது தான் மந்திர ஜெபம், அதனால் தான் மந்திரம் ஜெபித்தால் மட்டுமே மனம் செம்மையாகும், மனம் செம்மையானால் மட்டுமே இறைத்தன்மையை உணர முடியுமென்று திருமூலர் அனுபவித்து கூறியிருக்கிறார்.