Store
  Store
  Store
  Store
  Store
  Store

பழிவாங்க துடிக்கும் ஜெயலலிதா ஆத்மா !


சுற்றுலா தளங்கள், புண்ணியஸ்தலங்கள் போன்றவற்றிற்கு செல்வதை குருஜி அவ்வளவாக விரும்புவது இல்லை. கடற்கரை, ஆற்றங்கரை, ஓடக்கரை, கிராமத்திலுள்ள அரசமரத்து மேடுகள், பழையகாலத்து வீட்டுத் திண்ணை, கோவணம் கட்டிய முதியவர்கள், கிராமத்து வெள்ளேந்தி மனிதர்கள், இவர்களை தான் குருஜி அதிகம் காண்பதற்கு ஆசைபடுவார். இதற்காகவே அவர் தனது பிறந்த கிராமத்தை நோக்கி அடிக்கடி செல்வார். 

அவரது பூர்வீக கிராமத்தை சுற்றியுள்ள சொக்கலிங்கபுரம், புலிமான்குளம், இராமன்குடி, கல்விளை போன்ற மிகச்சிறிய கூக்கிராமங்களில் கூட தெரிந்த மனிதர்களை வலைபோட்டுத் தேடியாவது உட்கார்ந்து மணிகணக்காக பேசுவார். அப்படி பேசுகிற போது, இக்கட்டான ஏடாகூடமான கேள்விகளையும் அறிவை தூண்டுகிற கேள்விகளையும் அவர் எதிர்கொள்வார். எல்லா கேள்விகளுக்கும் பழைய சாதத்திற்கு பச்சைமிளகாய் கடித்து கொள்வது போல நறுக்கென்று பதில் சொல்லும் குருஜியின் இயல்பு ரசிக்கத் தக்கது.

அப்படித்தான் இந்த முறை அவர் தன் சொந்த ஊருக்கு சென்றிருந்த போது இளைஞர் ஒருவர் குருஜியை சந்தித்து சுவாரசியமாக கதைபேசி கொண்டிருந்தார். அப்படி அவர் பேசும் போது, குருஜி, உங்களை போன்ற பெரியவர்கள் முன்னோர்களையும் வாழ்ந்து வழிகாட்டியவர்களையும் போற்றி வணங்க வேண்டுமென்று கூறுகிறீர்கள். 

முன்னோர்களை வணங்குதல் என்று அலங்காரமாக நீங்கள் சொன்னாலும் அதன் உள்ளர்த்தம் செத்தவர்களை வணங்குதல் என்பது தான். எனக்கு ஆவிகள் மீது நம்பிக்கை உண்டு. இறந்த பிறகும் மனிதர்கள் வாழ்க்கை தொடர்கிறது என்பதை நான் நம்புகிறேன். அதனால் இறந்த சிலரை வணங்கும் போது இருப்பவர்களுக்கு பலவித துயரங்கள் நிறைய நேரம் வந்துவிடுகிறது. 

செத்தவன் மேலுலகில் நன்றாக இருக்கிறானா? கெட்டுப்போய் கிடக்கிறானா? என்பதெல்லாம் நமக்கு தெரியாது. பொதுவாக கும்பிட்டு வைக்கிறோம். இதனால் கஷ்டத்தை அனுபவிக்கும் போது இந்த வணங்குதல் முறை தேவையா என்று தோன்றுகிறது. இதை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டான்.

---------


     ருபத்தி ஐந்து வயதிலேயே பழுத்த கிழவன் போல நீ பேசுவது எனக்கு வியப்பாக இருக்கிறது. செத்தவனை வணங்கி அப்படி என்ன பெரிய துன்பத்தை உன் வாழ்க்கையில் அடைந்துவிட்டாய் என்று குருஜி அந்த இளைஞரிடம் கேட்டதற்கு, அவன் நான் அனுபவிக்க வில்லை, மற்றவர்கள் அனுபவிப்பதை பார்த்திருக்கிறேன் என்று பதில் சொல்லி மேலும் தொடர்ந்தான். 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் இயற்கையாக இறந்தார்களா? அல்லது கூட இருந்தவர்கள் சதி செய்ததனால் இறந்தார்களா என்று நமக்கு தெரியாது. ஆனால் அம்மையார் அவர்களின் கல்லறையை சென்று வணங்கிய அனைவரும் வரிசையான துன்பங்களை அனுபவிக்கிறார்கள் என்று சில செய்திகள் மூலம் நான் அறிகிறேன். 

உதாரணத்திற்கு, பன்னீர்செல்வம் சென்று தியானம் செய்தார். அவர் முதல்வர் பதவி போயிற்று. சசிகலா சென்று வணங்கினார். பாவம் அவர் ஜெயிலுக்கே போய்விட்டார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்றார். அவரை விட்டு புருஷனே பிரிந்துவிட்டார். இறுதியாக தினகரன் சென்று அஞ்சலி செலுத்தினார். கட்சியின் சின்னமும் போயிற்று.  இடைத்தேர்தலும் நின்றாகிவிட்டது. இப்படி தெரிந்த துயரங்கள் ஒரு சில என்றாலும் தெரியாத துயரங்கள் நிறைய இருக்கிறது, என்று அந்த இளைஞர் பட்டியல் போட்டுச் சொல்வதை குருஜி கேட்டு வாய் விட்டு சிரித்துவிட்டார்.

முன்னோர்களை வணங்க வேண்டும், அவர்களுக்கான சாந்தி வகைகளை செய்ய வேண்டும், இது ஒவ்வொரு இல்லறத்தானின் கடமையாகுமென்று நான்கு வேதங்களும் உலக பொதுமறையான திருக்குறளும் மிகவும் வலியுறுத்தி சொல்லுகின்றன. மேலும் பிதுர் வழிப்பாட்டை பற்றி பேசாத இந்திய இலக்கியங்களே இல்லை என்று சொல்லலாம். நமது மதங்களில் சடங்குகள் மட்டுமல்ல, நம் மக்களின் நம்பிக்கைகள் மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருமே எதாவது ஒரு வகையில் முன்னோர்களை வழிபடக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

கிறிஸ்தவ மதம் கல்லறை தோட்ட திருவிழாக்களை நடத்துவதும் அந்த திருநாளன்று தங்களது முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மக்கள் வழிபடுவதும் நடைமுறையில் இருப்பதை நாம் அறிவோம். இஸ்லாம் மார்க்கத்தில் கூட விசேஷ நாட்களில் கபூர்சானிக் என்ற கல்லறை தோட்டத்திற்கு சென்று இறந்தவர்களுக்கு துவா’ செய்கின்ற பழக்கம் இருப்பதையும் அறிவோம். சீனா மற்றும் ஜப்பானில் ஆவிகளின் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் எப்படியெல்லாம் வழிபாடுகளை நடத்துகிறார்கள் என்பதை அதிசயத்தோடு படித்தறியாத மக்கள் நம்மில் இல்லை என்றே சொல்லலாம். எல்லோருக்குமே பொதுவாக இறந்தவர்களை வழிபடுகின்ற அல்லது அவர்களை நினைவு கூறுகின்ற பழக்கம் இருக்கிறது. கடவுளே இல்லை என்று சொல்லுகின்ற நாத்தீக  கூட்டங்கள் கூட தலைவர்களின் பிறந்தநாள் மற்றும்  நினைவு நாள்களில் மாலை மரியாதை செய்து வணங்குவதை பார்க்கிறோம். 

முன்னோர்களை வணங்குவது அல்லது இறந்தவர்களை வழிபடுவது தொல்லைகளை தான் தருகிறது என்றால் உலகிலுள்ள இத்தனை ஜனங்களும் மீண்டும் மீண்டும் ஏன் அந்த முட்டாள் தனத்தை செய்கிறார்கள். எனவே முன்னோர் வழிபாடு துயரம் தருவது அல்ல என்ற முடிவிற்கு நாம் வரவேண்டிய நிலையில் இருக்கிறோம். 

ஆனால் நடைமுறையில் சில துயர சம்பவங்களை நாம் பார்க்கிறோம். அந்த சம்பவங்கள் இப்படிப்பட்ட காரியங்களால் தான் நடந்தது என்பதை அனுபவ பூர்வமாக உணருகிறோம். அதனால் அப்படி ஏன் நடக்கிறது என்று நாம் கேள்வி கேட்பது தவறு அல்ல. இதற்கான பதிலை பெறவேண்டுமென்றால் இறந்த பிறகு மனித ஆத்மா எந்த நிலையில் இருக்கிறது? என்பதை பற்றி ஓரளவு நாம் தெரிந்துகொள்ள வேண்டும். 

மரணத்தை பற்றி இரண்டுவிதமான கருத்துக்கள் நம்மிடையே உண்டு. ஒன்று நல்மரணம் மற்றொன்று துர்மரணம். மரணமே துன்பமயமானது என்றாலும் வயதாகி நோய்வாய்பட்டு மரத்திலிருந்து சருகு உதிர்வதை போல இயல்பாக ஒரு ஜீவன் பிரிந்தது என்றால் அதை நல்மரணம் என்று அழைக்கிறோம். மாறாக அகால வயதில் வாழவேண்டும் என்ற ஆசையை சுமந்துகொண்டு வாழ முடியாமல். மிகக்குறுகிய காலத்தில் எதிர்பாராத விதமாக மரணம் சம்பவித்தால் அதை துர்மரணம் என்கிறோம். 

துர்மரணம் அடைந்த ஆவிகள், தான் பூமியில் வாழ்ந்த போது தனக்கு துன்பம் செய்தவர்களை பழிவாங்கவும், தான் முன்பு அனுபவித்த வாழ்க்கையை மீண்டும் அனுபவிக்கவும் துடியாக துடித்துக்கொண்டிருக்கும். அந்த நேரத்தில் அந்த ஆத்மா யாரையும் நல்லவன் கெட்டவன் என்று பிரித்து பார்ப்பது கிடையாது. என்னால் வாழமுடியாத வாழக்கையை நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய், அதனால் நீ விரோதி. உன்னை அழிப்பதே என் முதல் வேலை என்று ஆக்ரோஷம் கொள்ளும். இது இயற்கையானது. ஒரு ஆவியின் ஆக்ரோஷமோ கோபமோ வாழுகிற மனிதனின் நரம்பு மண்டலத்தை, அதாவது மூளையை பாதிக்கும். புத்தி தடுமாற்றம் என்பது சர்வ நாசத்தை ஏற்படுத்தும் என்பதை சொல்லித்தெரியவேண்டிய அவசியமில்லை. 

நீ மறைந்த முதலமைச்சரின் சமாதியை வணங்கியவர்களின் துயரத்தை விளையாட்டாக தான் சொன்னாய், ஆனால் அது விளையாட்டு அல்ல அதில் விபரீதம் இருப்பதாக நான் நினைக்கிறேன். அதற்கு காரணம் இருக்கிறது. ஜெயலலிதா அம்மையார் காலமாகி ஒரு வாரத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை இங்கே கூறுவது சரியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் 

அந்த அனுபவம் கனவு என்றும் என்னால் கூறமுடியாது. அதே நினைவுகளின் நிகழ்வு என்றும் கருத இயலாது. இரண்டுங்கெட்டானான ஒரு நிலை அது. கனவு என்று எண்ணிக்கொண்டே நாம் இதை பேசலாம். அந்த கனவில் எனது அறையில் நான் தனியாக இருக்கிறேன். அப்போது உள்ளே வந்த சந்தோஷ் குமார் என்ற என் உதவியாளர், ஜெயலலிதா அம்மா உங்களை காண வந்திருக்கிறார், என்று சொல்கிறார். நான் அவனிடம் தனியாக வந்திருக்கிறாரா அதிகாரிகளோடு வந்திருக்கிறாரா என்று கேட்கிறேன். ஒரு புதிய காரில் அவர் மட்டுமே தனியாக வந்திருக்கிறார் என்று பதிலை தருகிறான். உடனே நான், இதுதான் மனிதர்களின் நிலை. அவர் உயிரோடு இருக்கும் போது எத்தனை ஆள், அம்பு, ஆடம்பரம். இப்போது செத்தப்பிறகு பார், யாருமே கூட இல்லை. சரி வரசொல், என்கிறேன் 

என் அறைக்குள் வந்த ஜெயலலிதா நாற்காலி ஒன்றில் அமருகிறார். அவர் முகம் இரத்தம் இல்லாமல் வெளிறி போய் இருக்கிறது. சிரிப்பு இல்லை. சோகமான குரலில்   என்னோடு பேசுகிறார். எனக்கு எதிரான நீதி மன்ற தீர்ப்பு வந்தநாள் முதற்கொண்டே நான் மனதளவில் மிகவும் சோர்ந்துவிட்டேன். மீண்டும் மேல்முரையிட்டு தீர்ப்பு எப்படி வருமோ என்று ஒவ்வொரு நாளும் பதட்டத்தோடே இருந்தேன். இதனால் மருந்து மாத்திரைகள் எதையும் நான் சரிவர எடுத்துக் கொள்ளவில்லை. என் உடல்நிலையை பற்றிய அக்கறை என்பது என்னிடம் சுத்தமாக இல்லை. இதனாலும் என் ஆரோக்கியம் கெட்டது. அதே நேரம் என் கூட இருப்பவர்கள் பல காரணங்களுக்காக என்னை நிர்பந்தம் செய்தார்கள். தங்களது தேவைகளை நான் உடனடியாக தீர்க்க வேண்டும் என்றும் என்னை வற்புறுத்தினார்கள். இதற்கு நான் உடன்படவில்லை. இதனால் என் மனதும் உடலும் மிகவும் கெட்டது. மயக்க நிலைக்கு அடிக்கடி சென்றேன். அப்படிப்பட்ட நிலையில் தான் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டேன்.

சேர்ந்து கடினமான சிகிச்சைக்கு பிறகு ஓரளவு என் உடல்நிலை முன்னேற்றம் கண்டது. இந்த நிலையில் சில டாக்குமென்ட் விவகாரமாக என்னிடம் சிலர் பேசும் போது நான் ஆத்திரப்பட்டு படபடப்பானேன். இருதயம் நின்றுவிட்டது. செத்தும் விட்டேன். நான் இறந்த அன்றே அதை மக்களுக்கு யாரும் தெரியப்படுத்தவில்லை. இரண்டு நாள் கழித்து தான் சொன்னார்கள். அதற்குள் சில அரசியல் நாடகங்களை அரங்கேற்றினார்கள். 

அதை பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. எனது உடலை சாஸ்திரப்படி எரியூட்டாமல்  சரியான ஈமக்கிரிகைகள் செய்யாமல் புதைத்து விட்டார்கள். இதனால் நான் இங்கு மிகவும் துன்பப்டுகிறேன். என் ஆத்ம சாந்திக்கு எதையாவது செய்யுங்கள் என்று அந்த அம்மையார் கெஞ்சலாக என்னிடம் கேட்டார் அத்தோடு எனது கனவும் களைந்து விட்டது. இதன் அடிப்படையில் பார்க்கும் போது அந்த அம்மையாரின் ஆத்மா நல்ல நிலையில் இல்லை, திருப்தி இல்லாமல் இருக்கிறது என்று என்னால் தெளிவாக கூறமுடியும். இதனால் வருங்காலத்தில் அவர் சம்மந்தப்பட்ட மனிதர்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள் என்று கூற முடியும். அந்த அம்மையாரின் ஆத்மா சாந்தி அடைய நாராயணனை வேண்டினேன், என்று பதில் சொன்ன குருஜி, அந்த இளைஞரையும் வியப்பில் ஆழ்த்தினார். கேட்டுக் கொண்டிருந்தவர்களையும் அதிர்ச்சி அடைய செய்தார்.


Contact Form

Name

Email *

Message *