Store
  Store
  Store
  Store
  Store
  Store

மருந்தும் மருத்துவனும் அவனே


நோய் என்பது என்ன? வந்து போவது, நிலையாக நம்மிடம் இருக்காதது. ஒரு விருந்தாளி விருந்துக்கு வந்து போவது போல போய்விடும் நிலையில்லாதது

ஆனால் பிணி என்பது அப்படி அல்ல ஆசையும் பந்தமும் பிணித்துக் கொண்டு விடாமல் பற்றிக் கொள்வது போல ஒருவனை பிணைத்து விடும்

மலைப்பாம்பு இரையை விடாமல் சுற்றி வளைத்துக் கொள்வது போல வந்தால் போகாது ஒரேடியாக பிணித்துக் கொள்ளும்

இந்த நோயும் பிணியும் மனிதனை எதற்காக விடாமல் துரத்தி பற்றிக் கொள்கிறது? வேட்டை நாய் அப்பாவி முயலை தேடித் தேடி கடித்து குதறுவது போல மனிதனை ஏன் வேட்டையாடுகிறது? அதற்கு காரணம் என்ன? மூலம் எது ?

பருவ நிலை மாற்றம், உணவு குறைபாடு , வாதம், பித்தம், சிலேத்துமம் என்ற பூத தோஷம் என்று ஆயிரம் காரணம் சொல்லப்பட்டாலும் எல்லாவற்றிற்கும் ஆதிமூலம் கர்மாதான்

கர்மா என்றால் போன ஜென்மத்தின் கர்மா , இந்த பிறவியின் கர்மா, நம்மை பெற்றவர்களின் கர்மா, மூதாதையரின் கர்மா என்று எத்தனையோ வகையான கர்மாக்களால் நமக்கும் இன்னல் வந்து விளைகிறது, நோய்பிடித்து வாட்டுகிறது

இதைத் தான் பகவான் கிருஷ்ணன் கீதையில் உனக்கு நீயே நண்பன் உனக்கு நீயே பகைவன் என்று அழகாக கூறுகிறான்

எனக்கு நான் நண்பனாக இருக்கும் போது தீய வினைகள் என்னை தீண்டுவதில்லை, எதுவும் என்னை அடிமையாக்குவது இல்லை, யாரும் எனக்காக பரிதாபப்பட வேண்டி இருக்காது அமுதத்தை உண்ட தேவனைப் போல அமர நிலையில் எப்போதும் சுகித்திருப்பேன்

நான் பகைவனாக இருக்கும் போது என் நீல வானம் கருத்து விடுகிறது இடி முழக்கம் காதை செவிடாக்குகிறது என் முன்னால் தோகை விரித்தாடிய மயில்கள் கொடிய நாகங்களாக சீறுகின்றன

எனக்கு நான் நண்பனா பகைவனா என்று தீர்மானிப்பது நானல்ல என் கர்மா 

என் தோல்விக்கும் வெற்றிக்கும் காரணம் கர்மாவே

என் வெளிச்சத்துக்கும் இருட்டுக்கும் காரணம் கர்மாவே

அந்த கர்மா தான் என் ஆரோக்கியத்திற்கும் வியாதிக்கும் காரணமாக இருக்கிறது

கர்மாவின் ஆலகால விஷத்தில் இருந்து மனிதனுக்கு விடுதலை இல்லையா?அதன் அக்னி நாக்குகளிலிருந்து மனிதன் தப்பிக்கவே முடியாதா? அதள பாதாளத்தில் இருந்து மீண்டு வரவே முடியாதா? விமோஷனம் என்பது மனிதனுக்கு இல்லையா?

இருக்கிறது நிச்சயம் இருக்கிறது கீதையில் உனக்கு நீயே நண்பன் உனக்கு நீயே பகைவன் என்று கூறி கிருஷ்ணன் பொருப்புகளை எல்லாம் நமது தலையில் கட்டி விட்டு தான் ஒதுக்கி கொள்ளவில்லை, தாய் பூனை குட்டியை காப்பது போல நம் கூடவே இருக்கிறேன் என்கிறான்

கீதையில் அவன் சொல்கிறான் நானே பரம ஒளஷதம் என்று, அதாவது உனது கர்மாவை, கர்மாவால் வருகின்ற இன்னல்களை, வியாதியை நீக்கும் மருந்தாக நான் இருக்கிறேன் என்கிறான் கிருஷ்ணன்

கிருஷ்ணனே மருந்தாக வந்தால் அவனை எதிர்த்து எந்த நோய் நிற்கும்? வெளிச்சத்தை கண்டவுடன் மிரண்டோடும் இருட்டுத்தானே உண்டு? ஆயிரம் யானைகள் சூழ வலம் வரும் நாரணன் நம்பி மதுசூதனனை எதிர்த்து நிற்கும் வல்லமை யாருக்கு உண்டு?

கிருஷ்ணன் மருந்தாக இருக்கிறேன் என்றவுடன் அற்ப மானிட மனது இன்னொறு கேள்வியை கேட்கத் துவங்கும் இன்ன நோய்க்கு இன்ன மருந்து என்பது சரிதான் ஆனால் அந்த மருந்தை நோய் அறிந்து நோயாளியின் தன்மை அறிந்து கொடுக்க கூடிய வைத்தியன் வேண்டுமே? அவன் யார்? அவனைத் தேடி எங்கே போவது? என்பது தான் அந்த கேள்வி

நீ மருத்துவனை தேடி எங்கேயும் போக வேண்டாம் மருத்துவன் உன் கைக்கெட்டும் தூரத்திலேயே இருக்கிறான் நான்தான் அந்த மருத்துவன் என்று கிருஷ்ணன் அமுதூறும் திருவாய் மலர்ந்தருள்கிறான்

தேவதைகளில் நான் அஸ்வினி குமாரர்கள் என்கிறான் பகவத் கீதையில் பரந்தாமன்

அஸ்வினி குமாரர்கள் என்றால் ஆதி மருத்துவர் மருத்துவர்களின் பிதாமகர் என்பதாகும் 

அதாவது எல்லாம் வல்ல வாசுதேவ கிருஷ்ணனே மருந்தாகவும் மருத்துவனாகவும் இருப்பதாக சொல்கிறான்

பிறவிப்பிணியில் கிடந்துழலும் தேகத்தில் வியாதிகளால் இன்னல் அனுபவிக்கும் நாம் நல்ல மருத்துவனையும் மருந்தையும் எப்படி பெருவது? அதற்கு என்ன வழி?

இருட்டு வீதியில் குருட்டு கிழவனாக நடந்து செல்லும் நமக்கு வழியும் தெரியவில்லை வாய்க்காலும் புரியவில்லை என்று அழுது புலம்ப வேண்டாம்
.
கீதையின் தலைவன் கிருஷ்ண பரமாத்மா சொல்கிறான் உன் கர்மாக்கள் அனைத்தையும் என்பொருட்டே செய் என்னிடமே அர்ப்பணம் செய் என்னை முழுமையாக சரணடை நான் உன்னை மீட்டெடுக்கிறேன் என்கிறான்

எனவே நோய்கள் உன்னை வருத்தும் போதும் கிருஷ்ணனை கூப்பிடு 

வியாதிகள் உன்னை துரத்தி வரும் போதும் கிருஷ்ணனை கூப்பிடு

பிணிகள் உன்னை பிணைத்து அழுத்தவரும் போதும் கிருஷ்ணனை கூப்பிடு

கண்ணா கண்ணா என்று கதறி அழு மாதவா கேசவா மதுசூதனா க்ருஷிகேஷா என்று மண்டியிட்டு தொழு

அவன் வருவான் அன்பை தருவான் உன்னை வாரி அணைப்பான் உன் வருத்தமெல்லாம் தீர்ப்பான்


Contact Form

Name

Email *

Message *