Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுள் என்ற தச்சன் !


சொற்பொழிவு தொடர் -- 16

ன்பார்ந்தவர்களுக்கு வணக்கம் !!!

பொதுவாக உலகம் என்பது உருவாக ஐம்பூதங்கள் என்பது அவசியம் அந்த பூதங்களின் சேர்க்கையால் உலகமும், உலகத்திலுள்ள பொருட்களும் தோன்றுகின்றன என்று சொல்லப்படுகிறது. ஆனால் வைசேடிக சித்தாந்தத்தை உருவாக்கிய கணாதர் இந்த ஐந்து பூதங்களோடு காலம், இடம், மனம், உயிர் ஆகிய நான்கும் சேர்ந்தே மொத்தமாக ஒன்பது பொருளாக ஆன பிறகே பிரபஞ்சம் என்பது தோன்றுகிறது என்கிறார்.

பிரபஞ்சம் என்பது தோன்றுவதற்கு மூலமாக இருக்கும் இந்த ஒன்பது பொருளையும் அவர் திரவியம் என்ற பொதுவான பெயரை வைத்து சிறப்பிக்கிறார். மேலும் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்து பொருட்களோடு காலம், இடம், மனம், உயிர் ஆகிய நான்கு பொருட்கள் இணைந்தாலும் கூட இந்த ஒன்பது பொருட்களுக்குள் உலகம், உலக அனுபவம் அனுபவிக்கின்ற உயிர் ஆகியவைகளும் கலந்திருப்பதாக கூறுகிறார். இத்தோடு ஜாதி, தொழில், குணம், விசேஷம், சமவாயம் இன்மை என்பவைகளும் சிறப்பாக அடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இவைகளை எல்லாம் ஒட்டுமொத்தமாக பதார்த்தங்கள் என்று அழைக்கிறார்கள்.

வைசேடிக சித்தாந்தத்தில் மிக முக்கியமானது திரவியம் என்பது. கெளதமர் உருவாக்கிய நியாய தத்துவத்தின் படி மிக முக்கியமான பகுதியாக இருப்பது பிரமாணமாகும். அந்த பிரமாணத்தின் ஆதார தூண்களில் ஒன்று பிரமேயம் என்பதாகும். பிரமேயம் என்பதற்கு அறியப்படும் பொருள் என்பது அர்த்தமாகும். வைசேடிக தத்துவப்படி அறியப்படும் பொருள் என்பதை விட அறிவை தருகின்ற பாதை சிறந்தது அல்ல என்பதே இறுதியான கருத்தாகும். ஆனால் நியாய தத்துவவாதிகள் அறிவை பெறுவதற்கான வழிகளை முக்கியம் என்கிறார்கள். இந்த இடத்தில் தான் கெளதமரின் கொள்கைக்கும் கணாதரின் கொள்கைக்கும் வேற்றுமை வருகிறது. அதாவது கணாதர் பொருளை பற்றி மட்டுமே கவலைப்படுகிறார். கெளதமர் பொருளை அறியும் வழியை பற்றி கவலைப்படுகிறார் எனலாம்.

இத்தனை பொருட்களை மூலமாக கொண்ட பிரபஞ்சம் எப்படி தனது உற்பத்தியை துவங்குகிறது? எதனை மையமாக வைத்து பொருட்களை பிரபஞ்சம் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. என்ற கேள்விக்கு இவர்கள் தருகின்ற பதில் அணுக்களின் சேர்க்கையால் பொருட்கள் உற்பத்தியாகிறது என்பது தான். சாங்கிய தத்துவத்தை உலகிற்கு தந்த கபிலர் காரணத்தில் இல்லாத காரியம் புதியதாக ஏற்படாது என்கிறார். அதாவது ஒரு மூலப்பொருளில் காரிய பொருளுக்கான அம்சம் இல்லை என்றால் அதில் உற்பத்தி என்பது ஏற்படாது என்பது கபிலரின் கருத்து. ஆனால் கணாதர் இரண்டு அணுக்கள் ஒன்றோடு ஒன்று சேருகிற போது இரண்டு அணுக்களிலும் இல்லாத புதியதான வேறொரு அம்சம் தோன்றுகிறது என்கிறார். இப்படி அவர் சொல்வதற்கு சமவாயம் என்ற தத்துவத்தை ஆதாரமாக காட்டுகிறார்.

ஆடையாக அலங்காரமாக உடம்பில் அணிந்து கொள்கிறோமே இந்த துணி ஒரு பொருள் இந்த துணியின் பகுதியாக நூல் என்ற இன்னொரு பொருளும் இருக்கிறது. நூலுக்கும், துணிக்கும் உள்ள உறவை தான் சமவாயம் என்ற பெயரிட்டு கணாதர் அழைக்கிறார். நூலையும், துணியையும் பிரிக்க வேண்டுமென்றால் இவற்றில் எதாவது ஒன்றை அழித்து ஆகவேண்டும். ஒன்றை அழிக்காமல் மற்றொன்றை பிரிக்க இயலாது. நூல் நமக்கு வேண்டுமென்றால் அதை தனித்தனியாக பிரிக்க நேரிட்டால் துணி என்பது முற்றிலும் அழிந்துவிடுவது இயற்கை அல்லவா? அதே நேரம் சமவாய சம்மந்தம் என்ற ஒன்று இருக்கிறது அதாவது ஒன்றை அழித்தாலும் மற்றொன்று அழியாது என்பதாகும். துணியிலே கறை படிந்திருக்கிறது அந்த கறையை அகற்றினால் துணி அழியப்போவது இல்லை. இதைத்தான் துணிக்கும் கறைக்கும் உள்ள சமவாய சம்மந்தம் அல்லது உறவு என்று கூறுவது. இந்த வாதம் எப்படி இல்லாத ஒன்றிலிருந்து இருப்பது தோன்றுகிறது என்ற அசத் காரிய வாதத்திற்கு துணை செய்கிறது என்பதை பார்ப்போம்.

கபிலருடைய தத்துவப்படி பானை உருவாக்கம் பெறுவதற்க்கான இயல்பு மண்ணில் இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பானை என்பது உருவாகாது என்பதாகும். இதற்கு கபிலர் சூட்டியிருக்கின்ற பெயர் காரண காரிய வாதம் என்பதை முன்பே நாம் அறிவோம். ஆனால், இங்கே கணாதர் அசத் காரிய வாதம் என்ற ஒரு புதிய சிந்தனையை கொண்டுவருகிறான். அதாவது காரணத்தில் இல்லாத ஒரு பொருள் காரியத்தில் வரும் என்பது இதன் பொருளாகும். அதாவது காரியத்தை அழித்தால் பொருள் அழிந்து பழையபடி சாதாரண நிலைக்கு காரண நிலைக்கு போய்விடும். உதாரணமாக மண்ணால் செய்த பானையை போட்டு உடைத்துவிட்டால் மீண்டும் பானை பானையாக இருக்காது மண்ணாக மாறிவிடும்

ஆனால் சத்காரிய வாதப்படி காரணத்திலே காரியம் உண்டு என்றால் காரியம் அழிந்தாலும் பொருள் என்பது அழியாமல் அப்படியே இருக்க வேண்டும். காரணம் காரணத்தில் காரியம் ஏற்கனவே அப்படியே இருக்கிறது. ஆகவே பொருளை அழிக்க முடியாது. அது காரண நிலையிலேயே அழியாமல் நிலைத்திருக்கும் என்றாகிறது அதாவது சமவாய சம்மந்த தத்துவப்படி காரியத்தை அழித்தால் பொருளும் அழிந்துவிடும். காரணம் மட்டுமே நிலைத்திருக்கும். மேலும் கணாதரின் சித்தாந்தப்படி இன்னொரு அம்சம் என்னவென்றால் பகுதிகளுக்கும் பொருளுக்கும் உள்ள சம்மந்தத்தையே தனிப்பொருளாக குறிப்பிடுகிறார்கள் அதனால் தான் அணுக்கள் எல்லாம் ஒரே மாதிரியான தன்மையில் இருப்பது இல்லை அளவையில் மட்டும் ஒத்திருந்தாலும் அதனுடைய குணாம்சத்தில் ஒவ்வொன்றும் மாறுபாடு கொண்டே அமைந்திருக்கும் என்று கருதினார்கள்.

பொதுவாக இந்திய தத்துவ மரபாக இருக்கட்டும். ஐரோப்பிய தத்துவ மரபாக இருக்கட்டும். எல்லோருமே பிரபஞ்சம் முழுவதையும் ஒன்றுக்குள் ஒன்றாக உட்படுத்தி இறுதியில் எல்லாம் ஒரே பொருள் தான் என்னும் ஒருமை வாதத்தில் போய் நிற்பார்கள். ஆனால் கணாதர் பிரபஞ்சத்தை பகுதி பகுதியாக பிரித்து பலப்பொருட்களாக காட்டி ஒவ்வொன்றும் தனித்தன்மை வாய்ந்தது என்பதை அடையாளபடுத்தி பன்மை வாதத்தை நிலைநாட்டுகிறார். இப்போது அவர் உயிரின் துவக்கத்தை பற்றி சொல்வதை நாம் ஓரளவு புரிந்துகொள்ள முயலவேண்டும். அணுக்கள் செயற்கைதான் உடல் அந்த உடலின் உற்பத்தியை இணைத்துப் பிடிக்க உயிர் என்ற புதிய பொருள் அதாவது பூதங்களின் காரணத்தில் இல்லாத காரியமாகிய உயிர் என்ற பொருள் வருகிறது என்பதாகும்.

இங்கே மேலும் ஒரு சந்தேகம் நமக்கு வருகிறது. பொருட்கள் பொருளாக உதயமாவதற்கு முன்னால் அணுக்களாக இருந்தது இயற்கை என்றால் அப்படி தனித்தனி அணுக்களை ஒன்றாக சேர்த்து பொருளாக ஆக்கியது யார்? அணுக்களுக்கு தனிக்குணங்கள் உண்டு என்பதனால் அந்த அணுக்களே சுய விருப்பத்தின் அடிப்படையில் ஒருங்கிணைந்து பொருட்களாக உருவானதா? அல்லது இவைகளுக்கு அப்பாற்பட்ட சக்தியால் அவைகள் இணைக்கப்பட்டு பொருட்களாக உருமாற்றம் அடைந்தனவா என்பது மிக முக்கியமான கேள்வியாகும். இந்த கேள்விக்கான பதிலாக இரண்டு கருத்துக்களை முன் வைக்கலாம். ஒன்று கர்மா இன்னொன்று கடவுள்.

அணுக்கள் தனியான குணங்கள் கொண்டவைகள் என்பதனால் குணங்களுக்கு செயல்பாடு உண்டு செயல் என்ற ஒன்று வந்தவுடனேயே செயலுக்கான பலனும் பிறந்துவிடுகிறது. இதை தான் கர்மா கொள்கை என்று அழைக்கிறோம். இந்த கர்ம வினையானது செயல்பட துவங்கி அதற்கான பலனை அனுபவிக்க அணுக்களை ஒருங்கிணைத்து பொருட்களை அல்லது ஜீவன்களை உருவாக்குகிறது என்று சொன்னால் இந்த இடத்தில் கடவுள் என்ற சிந்தனைக்கு இடம் இல்லை கடவுள் தேவையே இல்லை. காரணம் கடவுள் செய்ய வேண்டிய வேலையை கர்மா செய்துவிடுகிறது. இப்படி தான் ஜைனர்களும், பெளத்தர்களும் தங்களது தத்துவங்களை ஸ்தாபிக்கிறார்கள். இதை முற்றிலுமாக கணாதரர் புறக்கணிக்கிறார்.

அணுக்களை இயக்குவது கர்மாதான் என்ற கருத்தை கணாதரர் மறுப்பதற்கு காரணம் இருக்கிறது காரணம் கர்மா என்பது அறிவுடைய பொருள் அல்ல கர்மாவுக்கு சுயசிந்தனை என்பது கிடையாது. சுய சிந்தனை கொண்ட பொருளாக இருந்தால் தான் உலகத்தை இப்போது படைக்க வேண்டும் இப்போது அழித்து மீண்டும் அணுவின் நிலைக்கே கொண்டுசெல்ல வேண்டும் என்பதை திட்டமிட்டு நிகழ்த்த முடியும் இப்படி சிந்தித்து படைக்கின்ற ஆற்றல் கர்மாவிற்கு முற்றிலும் கிடையாது கர்மா என்பது தானே இயங்குகிற சக்தி அதனால் அதற்கு அறிவு உண்டு என்று புத்தரும் மற்றும் பல கிரேக்க ஞானிகளும் கருதுவது வைசேடிக சிந்தனைப்படி அடிப்படையே இல்லாத கருத்தாகும்.

இயங்கும் சக்தி அல்லது இயங்கி கொண்டே இருக்கின்ற ஆற்றல் என்பது அனுவிற்கு இயல்பாகவே அமைந்தது அதனுடைய சுபாவமே அப்படிதான் என்றால் படைப்பு என்பது எப்போதும் ஒரே மாதிரியாக நடந்தவண்ணம் இருக்க வேண்டும் தானாக இயங்குகிற அணுவினால் படைப்பு மட்டும் தான் நடக்குமே தவிர இயக்கத்தை நிறுத்துகிற ஆற்றல் அனுவிற்கு இல்லை என்பதனால் அல்லது இயங்காமல் இருக்கின்ற இயல்பு அனுவிடம் கிடையாது என்பதனால் படைத்ததை அழிக்கின்ற சக்தி அனுவிற்கு கிடையாது. ஆனால் நாம் உருவாக்கத்தையும் பாக்கிறோம். ஒன்றுமே இல்லாமல் அழிந்து போவதையும் பார்க்கிறோம். எனவே இயக்கத்தை துவக்குவதற்கும் தக்க சமயத்தில் நிறுத்துவதற்கும் மீண்டும் ஆரம்பிப்பதற்கும் வேறொரு சக்தி தேவை அந்த சக்தியின் பெயர் தான் கடவுள்.

வைசேடிகம் உருவான காலத்தில் அது கடவுள் என்ற கருத்தை பற்றி எதுவும் சொல்லவில்லை இன்னும் ஒருபடி மேலே சொல்வது என்றால் கடவுள் என்ற வார்த்தையையே அது பயன்படுத்தவில்லை. இதனால் வைசேடிக தத்துவம் கடவுள் மறுப்பு, தத்துவம், சாங்கியம், சார்வாகம் போன்ற சிந்தனைகளை போலவே உலகம் படைக்கப்படுவதற்கு கடவுள் என்ற சக்தி தேவையில்லை என்று தான் கணாதரரும் கருதுகிறார். என்று வாதிடுவோர்களும் இன்று இருக்கிறார்கள். அவர்கள் மிக முக்கியமாக ஒரு விஷயத்தை கவனிக்க தவறுகிறார்கள் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

கணாதரர் கடவுள் என்ற சொல்லை பயன்படுத்தவில்லையே தவிர கடவுளுக்கு என்னென்ன இலக்கணங்கள் வல்லமைகள் கற்பிக்கப் படுகிறதோ அதையெல்லாம் ஒருங்கே கொண்ட அதிர்ஷ்டம் என்ற சொல்லை பயன்படுத்துகிறார். ஒருவேளை நாம் கடவுளுக்கு கணாதரர் அதிர்ஷ்டம் என்ற பெயரை கொடுத்தார் என்று கூட எடுத்துக்கொள்ளலாம். கணாதரர் காலத்திற்கு பிறகு வந்த ஞானிகள் அதிர்ஷ்டம் என்ற சொல்லுக்கு பதிலாக கடவுள் என்ற பதத்தையே நேரடியாக பயன்படுத்தினர் பிரபஞ்சத்தின் தோற்றத்தையும் முடிவையும் செய்விப்பவன் கடவுள் என்று வெளிப்படையாகவே பேசினார்கள்.

நாற்காலியை செய்வது தச்சனின் வேலை அத்தோடு அவன் பணி முடிந்து விடுகிறது. அதன் பிறகு நாற்காலியை பயன்படுத்துபவனுடைய விருப்பபடி தான் அது இயங்கும். இதில் தச்சன் பயன்படுத்துபவன் இரண்டுபேருமே நாற்காலியின் அதிகாரிகள் என்றாலும் கூட இருவரும் நாற்காலிக்கு மூலகாரணம் கிடையாது. நாற்காலியின் மூலம் காட்டிலிருக்கும் மரம் அதே போன்று தான் கடவுள் என்பவன் அநாதியான அணுக்களை ஒன்றுசேர்த்து உலகத்தை படைக்கிறான். அதாவது உலகத்தின் தச்சன் கடவுள் ஜீவன்கள் படைக்கப்பட்ட உலகத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால் உலகம் என்பதற்கு மூலமாக இருப்பது கடவுளோ ஜீவன்களோ கிடையாது. கடவுள் என்பது நிமித்த காரணமே தவிர மூல காரணம் இல்லை என்பது தான் கணாதரரின் இறுதியான முடிவு.

கணாதரர் கொண்ட இந்த முடிவுகள் சரியானது தானா? நடைமுறைக்கு ஏற்றது தானா? என்பதை தற்கால அறிஞர்கள் அலசி ஆராய்ந்தார்கள் சிலர் மறுத்தார்கள் சிலர் ஏற்றார்கள் அப்படி மருத்துவர்களில் ஒருசிலர் மட்டுமே அதற்கான சரியான காரணங்களை காட்டினார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் ஜைமினி மகரிஷியும் குமாரில பட்டரும் ஆவார்கள். அவர்கள் உலகத்தை பற்றி ஆத்மாவை பற்றி கடவுளை பற்றி என்ன சொன்னார்கள் என்பதை அடுத்துவரும் அமர்வுகளில் விரிவாகவே சிந்திப்போம்.




Contact Form

Name

Email *

Message *