Store
  Store
  Store
  Store
  Store
  Store

அணுவை ஆராய்ந்த ரிஷி !


சொற்பொழிவு தொடர் -- 15


ன்பார்ந்தவர்களுக்கு வணக்கம்!!!

சென்ற அமர்வுகளில் இதுவரையிலும் நம்மால் புராணங்களில் மட்டுமே அறியப்பட்டுவந்த கெளதமர் என்பவருடைய நியாய சித்தாந்தத்தை சிந்தித்து வந்தோம். புராணங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வருகின்ற கெளதமரை நாம் அகலிகைக்கு சாபம் கொடுத்தவர் என்பதாக மட்டுமே இதுவரை அறிந்திருந்தோம். அவருடைய தத்துவத்தை ஆராய்கிற போது அவருக்குள் இருந்த ஆழமான சிந்தனை அறிவுக் கூர்மை நம்மை வியப்பில் ஆழ்த்தாமல் இருக்கவில்லை. அக்காலத்தில் ரிஷிகள் என்பவர்கள் கோபம் கொள்வதற்கும், சாபம் கொடுப்பதற்கும் மட்டுமே தெரிந்தவர்கள் என்று நினைத்தவர்களுடைய எண்ணங்கள் இப்போது சற்று மாறி இருக்கும் என்று நினைக்கிறேன்.

நமது இந்திய சிந்தனை வரலாற்றை ஆராய்கின்ற போது பல சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். ஆராய்ச்சி செய்பவர்கள் தங்களுக்கென்று சில கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வைத்துக்கொண்டு அதை ஒட்டியே தமது ஆராய்ச்சிப் பொருளும் அமையவேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். நாத்திக வாதத்தில் நாட்டமுடையவர்கள் ஆத்திக சிந்தனைகள் எந்த அளவு கேவலமானது என்பதை காட்ட முனைவார்கள். அதே போலவே ஆத்திக வாதிகளும் நாத்திகத்தை சிறுமைப்படுத்த பாடுபடுவார்கள். ஒரு சிலர் மட்டுமே ஆத்திகம், நாத்திகம் இரண்டிலும் உள்ள நல்ல கருத்துக்களையும் தீய கருத்துக்களையும் பாகுபாடு இல்லாமல் மக்களின் முன்னால் வைப்பார்கள்.

குறிப்பாக சொல்வது என்றால் தத்துவங்களின் கால நிலைகளை கணிக்கிற போது மிக பயங்கரமான சச்சரவுகள் அறிஞர்கள் மத்தியில் ஏற்படுகிறது. சனாதன சிந்தனைக்கு எதிராக இருப்பவர்கள் கெளதம புத்தரின் காலத்திற்கு பிறகே இந்தியாவில் தத்துவ விசாரணைகள் தோன்றின என காட்டுவதற்காக மற்ற தத்துவ பிரிவுகளை எந்தளவு திரிபு செய்ய முடியுமோ அந்தளவு திரிப்பார்கள். பெளத்தத்திற்கு எதிரான சிந்தனை உடையவர்கள் புத்தரின் சிந்தனை காலத்தால் மிகவும் பிந்தியது என்று காட்டுவதற்கு அரும்பாடு படுவார்கள். இதனால் ஏற்படுகிற விளைவு என்னவென்றால் புதியதாக தத்துவங்களை அறிந்துகொள்ள விரும்பி அதனுள்ளே நுழைபவர்கள் வெகுவாக குழம்பி விடுவார்கள்.

வைசேடிகம் என்ற தத்துவமும் இத்தகைய வாத பிரதிவாதங்களில் சிக்கி தவிக்கின்ற ஒன்றாக இருந்து வருகிறது. வைசேடிகத்தை உருவாக்கிய கணாதர் புத்தருக்கு தோன்றியவர் என்று பலர் வாதிடுகிறார்கள். ஆனால், அடிப்படையான உண்மை என்னவென்றால் கெளதம மகரிஷி உருவாக்கிய நியாயம் என்ற சிந்தனை மரபு கணாதரரின் வைசேடிக சிந்தனை மரபின் தொடர்ச்சியாகும். கெளதமர் புத்தருக்கு முன்னால் வாழ்ந்தவர் என்றால் அவருக்கும் முன்னால் இருந்தவர் கணாதரர் ஆவார். பிறகு எப்படி இவர் புத்தரை விட இளையவராக இருக்க முடியும்? இந்த அடிப்படை சிந்தனையை மறந்தே அறிஞர்கள் வாதிடுவது விந்தையிலும் விந்தை.

வைசேடிகம் என்பது மிக பழமையான சிந்தனை தொகுப்பு. இந்த சிந்தனையை தழுவி தான் நியாய தத்துவம் தோன்றியது எனலாம். கபிலருடைய சாங்கிய சிந்தனையையும், பதஞ்சலி மகரிஷியின் யோக சிந்தனையையும் ஒன்றாக இணைத்து சாங்கிய யோகம் என்று அழைப்பார்கள் அதே போன்று தான் கெளதமரின் சித்தாந்தத்தையும், கணாதரரின் சிந்தனையையும் இணைத்து நியாய வைசேடிகம் என்று அழைப்பது மரபு. உண்மையில் நியாய தத்துவத்திற்கும் வைசேடிக தத்துவத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் அடிப்படையில் சில பொருட்களுக்கு வைசேடிகம் கொடுக்கின்ற விளக்கம் நியாய சித்தாந்தத்தை மிகத் தெளிவாக புரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

நிஜமாக இந்த உலகத்தில் இருப்பது மனம் என்ற ஒன்று மட்டும் தானா? அல்லது வெளியே பார்க்கின்ற பொருட்களும் இருக்கின்றதா? என்ற இந்த கேள்வி தான் இந்திய சிந்தனை மரபில் அடிக்கடி தோன்றுகிற கேள்வியாகும். பொருள் என்பது பொய். மனம் என்பதே மெய். மனம் தான் பொருட்கள் பற்றிய சிந்தனைகளுக்கு அடித்தளம் ஒரு பொருளை இது பொருள் என்று உணர்வது அடையாளப்படுத்துவது மனம் தான். மனம் என்பது இல்லை என்றால் பொருள் என்பது இல்லாததாகி விடும். ஆகையால் மனம் தான் உண்மை பொருளாக தெரிவது எல்லாமே மாயை கற்பனை பொய்கள் என்று வாதிடுபவர்கள் நிறைய பேர் உண்டு.

மனதை இல்லை என்று சொல்லவில்லை. மனம் என்ற ஒன்று இருக்கிறது மனம் எப்படி இருக்கிறதோ அதே போலவே வெளியிலே பொருட்களும் இருக்கிறது மனம் உள்ள பொருள் என்றால் பொருட்களும் உள்ளது தான் இல்லாதது இல்லை இல்லாததது ஒன்றை இருப்பதாக உணர முடியாது. எனவே இரண்டும் பொய் என்று சொல்வது தவறு இரண்டுமே உண்மை என்று வாதிடுவதில் வைசேடிகம் முன்னணியில் இருக்கிறது. அதனாலேயே வைசேடிக சிந்தனையை மெய்மை வாதம் என்ற சிறப்பு பெயர் கொடுத்து அறிவுலகம் அழைக்கிறது.

பொருட்கள் உண்மை என்றால் பொருட்களால் ஆன உலகமும் உண்மை என்றாகிவிடுகிறது. இப்படி உண்மையான உலகம் எதிலிருந்து தோன்றியது? இது தோன்றுவதற்கு மூலகாரணம் ஒன்றா? இரண்டா? அல்லது பலவா? என்பது இந்திய சிந்தனை மரபில் மிக முக்கியமான கேள்வியாகும். இந்த கேள்விக்கு பதிலை தராமல் எந்த தத்துவ ஞானமும் தப்பித்துவிட முடியாது. மனம் மட்டும் தான் இருக்கிறது பொருட்கள் இல்லை என்று கூறுபவர்கள் மிக சுலபமாக இந்த கேள்வியிலிருந்து தப்பித்து விடலாம். அதாவது பொருட்களால் தான் உலகம் ஆனது எனும் போது பொருட்களே இல்லை அவைகள் கற்பனைகளே என்று கொண்டால் உலகம் என்பதும் இல்லாத பொருள் மாயா ஜால வஸ்து என்றாகிவிடுகிறது. இல்லாத பொருள் ஒன்றால் ஆனால் என்ன? ஆகாவிட்டால் என்ன? ஆனால் மனமும் இருக்கிறது பொருளும் நிஜமாக இருக்கிறது என்பவர்களுக்கு இந்த கேள்வி சற்று சிக்கலானது.

உலக உற்பத்திக்கு காரணமானது ஒரே ஒரு பொருளென்றால் உலகத்தில் மாறுபட்ட தன்மைகள் இருக்காது. பாறையை பார்த்தாலும், மலரை பார்த்தாலும், நெருப்பை பார்த்தாலும் வித்தியாசம் இல்லாமல் எல்லாம் ஒன்றாகவே இருக்கும். எனவே உலகம் என்பது ஒரு பொருளிலிருந்து தோன்றவில்லை. அது பல பொருளிலிருந்து தோன்றியிருக்க வேண்டும். அதனால் தான் மரத்தின் தன்மை ஒருவிதமாகவும், மண்ணின் தன்மை ஒருவிதமாகவும் உடல்களின் சதைகளின் தன்மை வேறு விதமாகவும் இப்படி பலப்பல விதமாக இருக்கிறது என்று கணாதர் ஆழ்ந்த சிந்தனைக்குரிய விடையை தருகிறார்.

உலகம் என்பது மாயை என்றால் பிரபஞ்சமும் மாயை என்றாகிவிடுகிறது. இந்த வாதத்தை ஒரு விவாததிற்காக ஒத்துக்கொண்டால் பிரம்மம் ஒன்று தான் நிஜம் மற்றவைகள் எல்லாம் மாயை என்றால் பிரம்மம் இருக்கின்ற வரையில் மாயை என்பதும் இருக்கும் அப்போது மாயா வசத்தால் உருவான உலகமும் பிரபஞ்சமும் இருந்து கொண்டே இருக்கும் அழிவு என்பதே இவைகளுக்கு கிடையாது. என்பதை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைவரும். ஆனால் உலகம் என்பது பொருள் பிரபஞ்சம் என்பதும் பொருள் என்றால் ஜடப்பொருள் என்றுமே நிலையானது அல்ல ஒரு குறித்த காலத்திற்கு பிறகு அழிந்து போகக்கூடியது பொருட்களால் தான் பிரபஞ்சம் உருவானது என்று கருதுகிற வைசேடிக தத்துவம். இந்த உலகமும் பிரபஞ்சமும் ஒருகாலத்தில் அழிந்து போய்விடும் என்று கூறுகிறது.

இப்படி அழிந்து போகக்கூடிய பிரபஞ்சம் அழியாத பொருளிலிருந்து உற்பத்தி ஆவதாக அது கருதுகிறது. அதாவது பொருளாக இருந்தது உலகமாக மாறுகிறது என்றால் உலகம் அழிந்த பிறகு பொருள் தான் இருந்த இடத்திற்கே மீண்டும் போய் சேர்ந்துவிடும் அல்லவா? அதனால் பொருள் அழிவற்றது என்று கருதப்படுகிறது. இப்படி அழிவற்ற பொருளின் மூலமாக இருப்பது அணுக்கள் என்று கணாதரர் கருதுகிறார். உலக பொருட்கள் அனைத்தும் பஞ்ச பூதங்களால் ஆனது பிரளயம் ஏற்பட்ட பிறகு பஞ்ச பூதங்கள் தனித்தனியாக பிரிந்து போய்விடும்.

நிலம் தனியாக நிற்கும். நீர் தனியாக நிற்கும் நெருப்பு தனியாக நிற்கும் காற்றும் தனியாக நிற்கும் ஆகாயம் கூட தனியாக பிரிந்து சென்றுவிடும்.  இதில் ஆகாயம் ஒன்றை தவிர மற்ற நான்கு பூதங்களும் தங்களுக்குள்ளேயே தனித்தனியாக பிரிந்துபோகும் தன்மை உடையது. உதாரணமாக சொல்வது என்றால் நிலம் தனித்த ஒரு பூதம் இந்த நிலம் கூட ஒன்றாக இருக்காமல் தனித்தனியாக பிரிந்துவிடும். அப்படி பிரிந்ததையும் மேலும் கூறு கூறாக பிரிக்கலாம் இப்படி பிரித்துக்கொண்டே போனால் கடைசியில் பிரிக்கவே முடியாமல் ஒரு பகுதி வரும் அல்லவா? அந்த பகுதிக்கு பெயர் தான் அணு என்பது இதை பரமாணு என்று சொல்லலாம். அதாவது பகுதிகள் அற்ற பிரிக்க முடியாத அணு என்பது இதன் பொருளாகும். ஆகவே இந்த பிரபஞ்சத்தில் கடல் அழிந்து போகும் மரம் செடி கொடி அழிந்து போகும். சூரியனும் சந்திரனும் கூட இல்லாமல் போய்விடும். ஆனால் அணு என்ற ஒன்று மட்டும் எப்போதுமே இல்லாமல் போகாது. அதனால் தான் அந்த அணு படைப்பிற்கு மூலமாக இருக்கிறது என்று கணாதர் சொல்கிறார்.

அணுக்கள் என்பது தான் ஒரு பொருளின் ஆரம்பமும், முடிவும். படைக்கப்படும் போதும் அணுதான் வந்து நிற்கிறது. அழிக்கப்படும் போது அணுதான் மிஞ்சி நிற்கிறது. அதாவது கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்று பழமொழி சொல்வார்களே அதே போல பொருட்கள் அழிந்து அழிந்து இறுதியில் அணுவாக மாறிவிடும். அந்த அணுவும் அழியும் அல்லது பிரியும் என்று சொன்னால் இறுதியில் எதுவும் இல்லாமல் வெறும் சூன்யம் தான் இருக்கும் என்ற நிலை வந்துவிடும். சூன்யமாக ஒன்றுமே இல்லாமல் போய்விட்டால் ஒரு பெரிய அபாயம் இருக்கிறது. அழிவுக்கு பிறகு படைப்பு நடக்க வேண்டும் அல்லவா? அதற்கு எந்த பொருளும் இல்லாமல் போய்விடும். இல்லாமல் இருந்து அதாவது சூன்யத்திலிருந்து எதையும் உற்பத்தி செய்ய இயலாது. அதனால் தான் அணுவை அழிக்க முடியாது என்று கணாதர் சொல்கிறார்.

மேலும் இங்கே நாம் கண்களால் காணுகின்ற பொருட்கள் அனைத்தும் அது மிகப்பெரும் மலையாக இருந்தாலும் ஆற்றில் அடித்து வருகின்ற கூழாங்கல்லாக இருந்தாலும் அது அணுக்களால் ஆனது தான் பொருட்களில் சிறியதும் உண்டு பெரியதும் உண்டு. சிறிய பொருள் உருவாக அதற்கேற்ற அணுக்களும் பெரிய பொருள் உருவாக அதற்கேற்ற அணுக்களும் தேவைப்படும். ஒரு பொருள் பிரிந்து போகின்ற போது ஒரு அளவோடு மட்டும் தான் அது பிரியுமே தவிர அளவுக்கு மீறி பிரிந்து விடாது. இறுதியில் இருப்பது அணு ஒன்று தான் என்பதை நம்பவில்லை என்றால் அணுக்களின் எண்ணிக்கைக்கு தகுந்தபடி பொருட்களின் பருமன் அமைகிறது என்ற சித்தாந்தத்திற்கு இடமில்லாமல் போய்விடும். ஆனால் சிறிதும் பெரிதுமாக பல பொருட்கள் இருப்பதை ஒவ்வொரு நிமிடமும் பார்க்கிறோம். எனவே அழியாமல் இருப்பது அணு ஒன்று தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்க எதார்த்த காட்சிகளே சாட்சிகளாக இருக்கிறது.

உலக பொருட்கள் அணுக்களால் ஆனது என்று ஜைன மகரிஷி மகாவீரும் ஏற்றுக்கொள்கிறார் அவரை போலவே கிரேக்க தத்துவ ஞானிகளில் ஒருவரான எபிகியூரஷ் டெமாக்ரேஸ் போன்றோர்களும் ஏற்கிறார்கள். ஆனால், இவர்களது ஏற்பு கொள்கைகளுக்கும் கணாதரரின் அணுக் கொள்கைக்கும் சிறிது வித்தியாசம் உண்டு. ஒரே இயல்புடையதாக அணுக்கள் இருந்தாலும் கூட அவைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு பொருளாக உருமாறுகிற போது அணுக்களின் எண்ணிக்கையின் வித்தியாசத்தாலும் சேர்ந்த தேகத்தில் வித்தியாசத்தாலும் பொருட்கள் பலவிதமான தன்மை கொண்டதாக இருக்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

ஆனால் வைசேடிக தத்துவத்தை உலகிற்கு தந்த கணாதர் இதை ஏற்க மறுக்கிறார். அணுக்கள் ஒவ்வொன்றும் ஒரே தன்மை உடையது அல்ல ஒவ்வொரு அணுவும் வித்தியாசமான மாறுபட்ட தன்மைகளை கொண்டது. அணுவில் ஒற்றுமை என்பது அதனுடைய தரத்தை பொறுத்து இருக்கிறதே தவிர தன்மையை பொறுத்து இருப்பது இல்லை நிலத்திலுள்ள அணு ஒருவிதமாகவும், நீரிலுள்ள அணு வேறு விதமாகவும், நெருப்பிலுள்ள அணு மற்றோருவிதமாகவும், காற்றிலுள்ள அணு மற்றோருவிதமாகவும் பலத்தன்மைகளை கொண்டதாக இருக்கிறது. இப்படி பல தன்மைகளோடு, பல குணத்தோடு இருப்பதனால் தான் பலவிதமான பொருட்கள் தோன்ற முடிகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு என்று நான்குவித பூதத்திலிருந்து அணுக்கள் வருவதனால் நான்கு வித குணத்தில் அணுக்கள் அமைந்தாலும் கூட அந்த நான்கு குணத்திலும் ஒன்றுக்கொண்று இணைந்தும் பிரிந்தும் பலவித குணங்கள் இருப்பதே உலகில் எண்ணிலடங்காத பொருட்கள் இருப்பதற்கு காரணமாக இருக்கிறது.

பொருட்கள் பிரிந்து போனால் அணுவாக இருக்கிறது. அணுக்களெல்லாம் ஒன்று சேர்ந்து மீண்டும் பொருட்களாக வருகிறது என்று கணாதர் பிரபஞ்ச சிருஷ்டியின் ரகசியத்தை தனது கண்ணோட்டத்தில் கூறுகிறார். படைப்பின் மூல பொருட்கள் இப்படி தான் இருக்கின்றன என்று கூறுகிற வைசேடிக தத்துவம் படைப்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதையும் அறிவார்ந்த நிலையில் நமக்கு விளக்குகிறது. முதலில் பஞ்ச பூதங்களில் நான்கு மட்டுமே இணைந்து பொருளாக உருமாறினாலும் இறுதியில் ஆகாயத்தின் தன்மை பொருட்களோடு கலந்த பிறகு தான் அந்த பொருளின் சிருஷ்டி பரிபூரணமாக நிறைவடைகிறது.

ஐந்து விதமான பூதங்களும் இணைந்தால் பொருட்கள் அதாவது ஜடப்பொருட்கள் தோன்றுவதை தர்க்க ரீதியில் நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. இந்த ஜடப்பொருட்களில் இல்லாத இவைகளுக்கு முற்றிலும் முரணான ஜீவன் என்பது ஒன்று வந்து உடலோடு இணைகிறதே அது பொருள் என்ற நிலையிலிருந்து உடல் என்ற உயர்ந்த பொருளாக மாறுகிறதே அதற்கு ஆதாரமான ஜீவன் என்பது எப்படி வருகிறது?   எப்படி இதனோடு இணைகிறது? என்ற வினாவை நமது மனம் கேட்பதற்கு முன்பே அதற்கான பதிலையும் கணாதர் வைத்திருக்கிறார். அந்த பதில் என்ன? என்று அடுத்த அமர்வில் சிந்திப்போம்.




Contact Form

Name

Email *

Message *