சொற்பொழிவு தொடர் -- 14
அன்பார்ந்தவர்களுக்கு வணக்கம்!!!
மனிதன் அறிவை வளர்ப்பது ஏன்? அதாவது மனிதனுக்கு கல்வி என்பது எதற்காக என்று வள்ளுவனை கேட்டால் உலக பேரறிஞானான அவனே சொல்கிறான். இறைவனை தொழுவதற்கு என்று இந்த கருத்தை மேலோட்டமாக பார்த்தால் குழந்தைத்தனமாக தெரியும். அறிவியல் படிப்பது, புவியியல் அறிவுபெறுவது, மொழியியலை வளர்ப்பது எல்லாமே இறைவனை வணங்குவதற்காக என்றால் இத்தனை தகுதி இருந்தால் தான் கடவுளை வணங்க முடியுமா? கல்வி இல்லாத பாமரர்கள் அவனை வணங்க முடியாதா? என்பது போன்ற கேள்விகள் மட்டுமல்ல படிப்பது வணங்குவதற்காக என்றால் அந்த படிப்பு எதற்காக? படிக்காமலே வணங்கிவிட்டு போகலாமே என்றும் நமக்கு தோன்றும்.
ஆனால் வள்ளுவன் சொன்னதை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். கல்வி அறிவை மேம்படுத்த உதவ வேண்டும். அறிவு என்பது ஞானத்தை நோக்கி வளரவேண்டும். ஞானம் என்பது புலன் ஒடுக்கம் என்ற தவத்தை நோக்கி மனிதனை அழைத்துச் செல்ல வேண்டும். தவம் முத்தி பாதையை காட்டவேண்டும் என்ற ஒப்பற்ற உண்மை தெரியவரும். இந்த நாட்டில் தோன்றிய அறிஞர்களும் சரி. ஞானிகளும் சரி. சாதாரண மனிதன் தனது சுயத்தன்மையை உணர்ந்து இறைவனுக்கு இணையாக அல்லது இறைவனோடு ஐக்கியமாவதற்கு என்ன சொல்கிறார்கள் என்று தான் பார்க்கப்படும். இறைவனை சென்றடைய வழிகாட்டாத எந்த அறிவாளிகளின் கருத்தும் இங்கே இரண்டாம் பட்சமாகத்தான் கருதப்படும். இது அன்று முதல் இன்று வரை மக்களிடம் உள்ள பொதுவான மனோபாவம்.
கெளதமர் புராண புருஷராக இருக்கலாம். ஒரு நிமிடம் யோசிப்பதை நிறுத்திவிட்டு அகலிகைக்கு சாபம் கொடுத்த முன்கோபியாக இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் அவர் ஒரு ரிஷி. அவர் கொடுத்த சாபம் கூட பெற்றவர்களின் தகுதியை உயர்த்துமே தவிர சிறுமை படுத்தாது. இருட்டில் கிடக்கும் மனிதனை வழிநடத்தி செல்வதற்கு அறிவு வேண்டும். அந்த அறிவு நல்லறிவாக இருக்க அதை தருகின்ற வழிமுறைகள் சரியானதாக இருக்கவேண்டும் என்று விஞ்ஞான பூர்வமாக தர்க்கத்தை தந்தவர் அவர் அவருடைய சிந்தனைப்படி முக்தி என்பது என்ன? இறைவன் என்பது என்ன? என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது ஆகும். காரணம் கடவுளை பற்றிய அடிப்படை அறிவு நமக்கு வேண்டுமென்றால் அவரது முடிவு மிகவும் தேவையானது.
ஜடமான பொருட்களிலிருந்து விடுபட்டு உணர்வுகளை முற்றிலுமாக அழித்துவிட்டு தன்மயமாக உயிர் இருக்கும் நிலைதான் முக்தி என்று கெளதமர் முக்தியை பற்றி கூறுவதை சுருக்கமாக ஒரே வரியில் கூறிவிடலாம். ஆனால், அப்படி கூறுகிற போது ஒரு சந்தேகம் நமக்கு வருகிறது. ஜட சம்மந்தத்திலிருந்து உயிர் விடுபட்டுவிட்டால் கெளதமரின் கருத்துப்படி உயிர் அறிவற்ற பொருளாக மாறிவிடுகிறது. அப்படி என்றால் அறிவு இல்லாமல் இருக்கும் நிலைதான் முக்தியா? என்பதே அந்த சந்தேகமாகும். நமது சாதாரண கண்களுக்கு அறிவோடு இருத்தல் என்பது உயர்ந்த நிலை. அறிவில்லாமல் இருப்பது என்பது தாழ்ந்த நிலை என்று தான் நினைக்கிறோம். அறிவில்லாத நிலைதான் முக்தி என்றால் முக்தி என்பது தாழ்ந்த நிலையாகிவிடுகிறது. ஒரு தாழ்ந்த நிலையை அடைவதற்கு உயிர்கள் பாடுபட வேண்டுமா? என்றும் நமக்கு தோன்றுகிறது.
ஆனால் கெளதமர் இந்த கூற்றுகளை முற்றிலும் புறக்கணிக்கிறார். அறிவு அற்ற அல்லது அறிவு உள்ள என்ற கருத்தில் பாகுபாடு படுத்திக்கொண்டு இது உயர்ந்தது. அது தாழ்ந்தது என்று மதிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. உணர்வுகள் என்பது இரும்பால் செய்த விலங்கு என்றால் அறிவு என்பது தங்கத்தால் செய்த விலங்கு என்பதாகும். இந்த விலங்கு பூட்டப்பட்ட நிலையை அதாவது கட்டுப்பட்ட நிலையிலிருந்து உயிர் விடுபடுவது தான் முக்தி என்பது கெளதமரின் கருத்து. எதுவாலும் தீண்டப்படாத தூய நிலையில் உள்ள ஜீவன் ஜட சம்மந்தபட்டு உணர்வுகளை பெற்று அதன் மூலம் அறிவு என்பதை வளர்த்து இறுதி நிலையில் அனைத்தும் பொய் என்பதை உணர்ந்து தன்னுடைய ஆதி நிலையான ஏகாந்த நிலையை அடைவது தான் முக்தி. இந்த நிலையில் அறிவு உள்ள அறிவு இல்லாத என்ற பேச்சிற்கே இடமில்லை என்று முடிவாக கூறுகிறார் கெளதமர்.
முக்தி அடைந்த உயிர் ஏகாந்த நிலையிலிருக்கும். உயிர் அறிவும் இல்லாமல் உணர்வும் இல்லாமல் தனித்து இருக்கிறது என்றால் ஒரு கற்பாறை கூட அப்படி தான் இருக்கிறது. அதனால், கல்லும் முக்தி அடைந்த உயிரும் ஒன்றானது என்று தான் கருதவேண்டிய நிலை வரும். என்று அறிஞர்கள் இந்த கருத்தை விமர்சனம் செய்யலாம். ஆனால், கெளதமர் அந்த விமர்சனத்திற்கும் தக்க பதிலை வைத்திருக்கிறார் கல் என்ற ஒன்று முற்றிலும் ஜடமயமானது. அதில் எத்தனை பாடுபட்டாலும் அறிவை ஏற்றிவிட முடியாது ஒருபோதும் கல்லால் ஒரு உடம்பிற்குள் புகுந்து உயிராக இயங்கிவிட இயலாது. ஆனால் அறிவு இல்லாமல் முக்தி நிலையிலிருக்கும் உயிரால் அறிவு மயமாகவும் ஆகமுடியும். ஒரு உடம்பையும் இயங்க வைக்க முடியும். அது தான் முக்தி அடைந்த உயிருக்கும் கல்லுக்கும் உள்ள வித்தியாசம் என்று விமர்சனம் வளர்வதற்கு முன்னாலேயே முடிவுக்கு கொண்டுவந்து விடுகிறார்.
முக்தி என்பதை பற்றி நாத்தீகர்களின் கருத்து ஒரு மாதிரியானது. புத்தரும், மகாவீரரும் முக்திக்கு வேறு இலக்கணத்தை தருகிறார்கள். சாங்கிய முனியான கபில மகரிஷியும் முக்தியை வித்தியாசமான கோணத்தில் அணுகுகிறார். வேதாந்தமும் புதுக்கருத்தை தான் கூறுகிறது. இப்படி ஒவ்வொரு தத்துவமும் முக்தியை பற்றி வித்தியாசமான விளக்கங்களை தருகிற போது கெளதமர் தருகின்ற விளக்கத்தையும் நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது.
மற்றவர்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் முக்தியை பற்றி மட்டும் கவலைப்படுவதனால் தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான விளக்கங்களை கொடுக்கிறார்கள். முக்தி என்பது முக்கியம் அது யாருக்கு முக்கியம்? உயிருக்கு தான் முக்கியமானது எனவே முக்தி என்ற தத்துவத்தை ஆராய்வதற்கு முன்னால் உயிரின் இயல்பை பற்றி அறிந்துகொள்வது அவசியமாகிறது. முதலில் உயிர் என்றால் என்னவென்று தெரிந்துகொள்ள வேண்டும். உயிர் என்பது பிராண வாயு, மூச்சுக் காற்று என்கிறார்கள். சிலர் உயிர் என்பது ஒளி என்கிறார்கள். வேறு சிலர் உயிர் என்பது சத்தம் என்றும், உயிர் என்பது துடிப்பு என்றும் பலரும் பலவிதமாக கருதுகிறார்கள். இவைகள் அனைத்துமே சரியாக இருக்கலாம். ஆனால் இவைகள் ஒவ்வொன்றிற்கும் முன்னால் அறிவு என்பதை இணைத்துக் கொள்ள வேண்டும். அதாவது உயிர் என்றால் அறிவு என்று அறிந்துகொள்ள வேண்டும்.
அறிவு தான் உயிர் என்று நம்பினால் அந்த அறிவை திரைபோட்டு மறைத்து நிற்கும் ஜடசம்மந்தத்திலிருந்து விடுவிப்பதே முத்தியாகும். ஆனால் உயிர் என்பது அறிவுமயமானது அல்ல. அறியப்படுவதினால் அறிந்துகொள்ளக்கூடிய ஒன்று எதை சார்ந்து இருக்கிறதோ அதுவாகவே மாறிவிடுகிற ஒன்று என்று நம்பினால் அப்படி உயிருக்கு அறிவிக்க கூடிய முற்றிலும் அறிவுமயமானது எதுவோ அதனை சேர்ந்து அறிவுமயமாகி விடுவது தான் முக்தி கெளதமரின் சித்தாந்தப்படி உடலோடும், மனதோடும் சம்மந்தப்பட்டதனால் தான் உயிர் உணர்வையும் அறிவையும் பெறுகிறது. உடலும் அறிவும் தனித்தனியான பொருள் இரண்டும் இணையுமே தவிர ஒன்றாகிவிட முடியாது. ஜடசம்மந்தபட்ட உயிர் உணர்வு பெற்று அந்த சம்மந்தத்தை உதறிவிட்டு அதாவது அறிவையும், ஜடத்தையும் சுவைத்து பார்த்துவிட்டு இவைகள் நிலையானது அல்ல என்று உணர்ந்து அவைகளை உதறிவிட்டு தனித்து நிற்பதே உயிர் அடையும் முக்தி என்கிறார் கெளதமர்.
கெளதமர் ஜடப்பொருளை பற்றி பேசுகிறார். உயிரைப் பற்றி பேசுகிறார். உயிர் அடையும் உன்னதமான நிலையை பற்றியும் பேசுகிறார் இவைகளெல்லாம் ஒழுங்குமுறைப்படி இயங்க வைப்பதற்கு காரணம் யார்? எது? என்பதை பற்றி பேசுகிறாரா? என்று கேட்டால் நிச்சயம் பேசுகிறார். இவைகளை இயங்க வைப்பது கடவுள் தான் என்று சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் பதிலும் தருகிறார். கடவுளை பற்றிய கெளதமரின் தத்துவம் மிகவும் சுகமானது. அந்த சுகத்தையும் சற்று நாம் அனுபவிக்கலாம்.
பிரபஞ்சத்திலுள்ள கண்ணுக்கு தெரிகிற கண்ணுக்கு தெரியாத எந்த ஒரு பொருளையோ விஷயத்தையோ எடுத்துக்கொண்டாலும் அவைகளை உருவாக்குவதற்கு உருவாக்கி இயக்குவதற்கு ஒரு சக்தி தேவை என்பது புலனாகும். இவைகளை அடிப்படையாக வைத்து பார்க்கும் போது அந்த சக்தி என்பது கடவுள் என்று கூற வேண்டிய நிலை வருகிறது. எதை ஆழமாக பார்த்தாலும் கடவுளின் தேவை என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதனால் கடவுளை இல்லை அவர் வேண்டாம் என்று சொல்லுவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. எனவே கடவுள் இருக்கிறார் அவர் தேவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆத்மா இருக்கிறது என்றால் அதற்கு உயிர் என்ற தன்மை இருக்கிறது கடவுள் இருக்கிறார் என்றால் அவருக்கு என்ன தன்மை இருக்கிறது? ஆத்மாவிற்கும் கடவுளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்பதை பற்றி கெளதமர் சொல்கிறார். கடவுள் எல்லாம் வல்லவர் அவரால் எந்த நேரத்திலும் எதையும் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும். ஆனால் ஆத்மாக்களால் அது இயலாது அதனால் தான் ஆத்மாவை ஜீவாத்மா என்கிறோம். எல்லாம் வல்ல எல்லாவற்றிலும் உயர்ந்த கடவுளை பரமாத்மா என்கிறோம். ஆத்மா அறிவு பெற வேண்டுமென்றால் உணர்வுகளை பெற வேண்டுமென்றால் இரண்டிலுமிருந்து விடுபட்டு முக்தியை அடைய வேண்டுமென்றால் கடவுளின் சம்மந்தம் நிச்சயம் வேண்டும். இது பொதுவான நியதி ஆனால் பரமாத்மாவான கடவுளுக்கு எந்த துணையும் எந்த உதவியும் தேவையில்லை
கபிலர் உலகில் தொன்னூற்று ஆறு வகையான தத்துவங்கள் இருப்பதாக கூறுகிறார். கெளதமரும் பதினாறு வித தத்துவங்களை பற்றி பேசுகிறார். ஆனால் இவர் தத்துவங்களுக்கு பதார்த்தங்கள் என்ற பெயரை தருகிறார். இந்த பதினாறு வித பதார்த்தங்களின் துணை கொண்டு கடவுளாக இருப்பவர் உலகத்தை படித்தும், காத்தும், அழித்தும் வருகிறார். அவர் ஒரு வினாடி கூட செயல் இல்லாமல் இருப்பது இல்லை என்கிறார். பதார்த்தங்களை கொண்டு இறைவன் உலகத்தை படைக்கிறார் என்றால் உலகம் தோன்றுவதற்கு முன்பே பதார்த்தங்கள் இருந்தன என்பது தெளிவாகிறது. அப்படி என்றால் பதார்த்தங்களை படைத்தது யார்? என்று கேட்டால் கெளதமர் அதற்கு பதார்த்தங்களை கடவுள் படைக்கவில்லை. அது எப்போதும் இருக்கிறது அதை கடவுள் பயன்படுத்தி கொண்டார் என்று பதிலை தருகிறார். அப்படி என்றால் கெளதமரின் கருத்துப்படி கடவுள் என்ற சக்தி உலகின் மூலகாரணம் அல்ல நிமித்த காரணம் என்பதாக நாம் எடுத்துகொள்ள வேண்டும்.
கெளதமரின் வாதங்களில் சரியும் இருக்கலாம். தவறும் இருக்கலாம் ஆனால், ஒன்று மட்டும் நிச்சயமானது. தத்துவமென்ற அறிவாராய்ச்சி துறையில் தர்க்கம் என்பதற்கு அறிவுப்பூர்வமான முக்கியத்துவத்தை முதன் முதலில் கொடுத்தது கெளதமர். அவர் தான் மேற்குலகம் சிந்திப்பதற்கு முன்பாக உலகத்தின் வளர்ச்சிக்கு அறிவு வளர்ச்சியே பிரதானம் என்று சிந்தித்து முடிவுக்கு வந்தார். சரியான அறிவு வளர சாரியான உபகரணங்கள் வேண்டும் அப்படி இருந்தால் தான் பெறப்பட்ட அறிவு அறிவாக இருக்கும் அல்லது அறிவீனமாக அழிவு சக்தியாக இருக்குமென்று முடிவு செய்தார். ஆன்மீக பாதைக்கு உணர்வு மட்டும் முக்கியமானது அல்ல. அறிவும் முக்கியமானது. அந்த அறிவை நமக்கு தட்டுப்பாடு இல்லாமல் வாரி வழங்கி தருவது கெளதமர் உபதேசித்த நியாய சித்தாந்தமாகும். இதை போற்றி பாதுகாப்பதில் நமக்கு நிறையவே பங்குண்டு.