Store
  Store
  Store
  Store
  Store
  Store

அறிவுக்கு நாலு கால் !


சொற்பொழிவு தொடர் -- 12

ன்பார்ந்தவர்களுக்கு வணக்கம்!!!

இங்கே மேடை இருக்கிறது. நாம் எல்லோரும் உட்காருவதற்கு நாற்காலிகள் இருக்கின்றன. இதமான காற்று வீசுவதற்கு மின்விசிறிகள் இருக்கின்றன. வெளிச்சம் தர விளக்குகளும், நமக்கு வேண்டியதை எழுதிக்கொள்ள குறிப்பு காகிதங்களும் இருக்கின்றன. இவைகள் நம் கண்ணுக்கு நிதர்சனமாக தெரிகிறது. இவைகள் நிச்சயமாக இருக்கிறது என்று உண்மையாக நம்புகிறோம். இதன் இருப்புகளை பற்றி நாம் சந்தேகப்படுவதே கிடையாது. ஆனால், உண்மையில் நமது இந்தியாவில் ஆதிகாலத்தில் தோன்றிய அறிவு ஜீவிகள் இந்த பொருட்கள் இருப்பது நிஜமா? அல்லது இவைகள் இருப்பதாக நமது மனது கற்பனை செய்து கொண்டிருக்கிறதா? இந்த பொருட்கள் வெளியில் இருக்கிறதா? அல்லது நமது மனதினுள்ளே இருக்கிறதா? என்று அடிப்படை விஷயத்தையே ஆட்டிப்படைக்கும் கேள்விகளை கேட்டார்கள்.

தெருவில் நடந்து செல்கிறோம். நமக்கு முன்னே நாம் நேசிக்கின்ற நம் காதலி சென்று கொண்டிருக்கிறாள். அவள் நடையழகும், உடையழகும் நமது மனதை கவர்கிறது. அவள் அருகில் செல்ல வேண்டும். அவள் தோள்மீது கைகளை போட்டு கொள்ள வேண்டும். அரவணைத்து நடக்க வேண்டும் என்று நமக்கு தோன்றுகிறது. ஆனாலும், அவளுக்கும் நமக்கும் இடைவெளி அதிகம் இருப்பதனால் மனதின் விருப்பத்தை நிறைவேற்ற முடியவில்லை. மனம் கற்பனையில் பறக்கிறது. அப்போது நமது எதிரே நமக்கு கல்வி கற்றுத்தந்த ஆசிரியர் வருகிறார். உற்ற நண்பர் வருகிறார். பிண ஊர்வலம் ஒன்று நம்மை கடந்து போகிறது. காய்கறி கடைக்காரன் தெருவிலே குப்பைகளை கொட்டுகிறான். இவைகளில் ஒன்று கூட நம் கவனத்தை கவரவில்லை. அந்த இடத்தில் நாம் இருப்பது உண்மை. அந்த சம்பவங்கள் நடப்பது உண்மை. ஆனால், நமது மனம் அங்கே இல்லை என்பதனால் நடப்பது எதுவும் நமக்கு தெரியவில்லை. நடக்காமல் இருந்திருந்தால் எப்படி இருக்குமோ அப்படி தான் இப்போதும் இருக்கிறோம்.

இப்போது நன்றாக யோசித்துப் பாருங்கள். வெளியில் நிகழ்வுகள் நடந்தாலும் நம் மனது அதில் இல்லை என்பதனால், அவைகள் நடக்கவில்லை என்று தான் நம்மை பொறுத்தவரை நாம் நம்புவோம். அத்தனை பொருட்கள் அத்தனை மனிதர்கள் வெளியில் இருந்தாலும் நமது சிந்தனையில் காதலி ஒருத்தியை தவிர வேறு யாரும் இல்லை. எனவே வெளியில் நடப்பவைகளை நமது மனம் தான் நடப்பதாக கருதிக்கொள்கிறேதே தவிர நம் மனம் அதில் செல்லவில்லை என்றால் வெளியில் எதுவும் நடக்கவில்லை என்பது தான் உறுதியாகிறது. எனவே தான் பொருட்கள் வெளியில் இல்லை இருப்பது போல் தெரிகிறது. உண்மையில் அவைகள் மனதில் இருக்கிறது. என்று அவர்கள் வாதிட்டார்கள். இந்த கருத்தை அப்போதே எதிர்ப்பவர்களும் இருந்தார்கள்.

மகரிஷி கெளதமர் இதை பற்றி கூறுகிற போது இருக்கிறதா இல்லையா என்று சந்தேகத்திற்கு இடம் கொடுக்கின்ற பொருள் வெளியிலுள்ள வஸ்துக்கள் அல்ல. உண்மையில் நமது மனது தான் உள்ளதா இல்லையா என்ற சந்தேகத்தில் இருக்கிறது. மனது இருந்தாலும் சரி, இல்லாமல் போனாலும் சரி வெளியிலுள்ள பொருட்கள் நிச்சயமாக எப்போதும் இருக்கிறது என்று கூறுகிறார். மனம் என்பது அழிந்து போனாலும் கூட சூரியன் உதிக்கும் காற்று வீசும். தண்ணீர் தாகத்தை தணிக்கும். இது கற்பனையானது அல்ல. அதே நேரம் மனது இருக்கின்ற வரை வெளியிலுள்ள இந்த பொருட்கள் எல்லாமே மனதிற்குள் இருக்கிறது அதுவும் நிஜம் என்று அகக்காட்சியும், புறக்காட்சியும் நிஜம் தான் என்று சமரசமான சிந்தனையை முன் வைக்கிறார் கெளதமர்.

ஒரு பொருள் கண்ணுக்கு தெரிகிறது. நாம் கண்களால் காண்பதை போலவே அது புற உலகிலும் இருக்கிறது என்று கூறுவதற்கு தத்துவ நோக்கில் காட்சி அளவியல் என்று கூறுவார்கள். இதையே வடமொழியில் பிரதியட்ச அனுமானம் என்று சொல்லலாம். இந்த காட்சி அளவியல் தான் கெளதம மகரிஷி உருவாக்கிய நியாயம் என்ற தத்துவ பிரிவுக்கு மிக ஆதாரமான ஊன்றுகோலாகும். சொல்லையும், பொருளையும் பிரிக்க முடியாது என்பது போல கெளதம சிந்தனையையும், காட்சி அளவியலையும் பிரிக்க முடியாது என்று சொல்லலாம். ஆனாலும் கூட அவர் இந்த ஒன்றை மட்டுமே வைத்துக்கொண்டு உலகத்தின் இருப்புத் தன்மையை நிலைநாட்ட முற்படவில்லை. கண்களால் பார்க்கின்ற சாட்சி மனது எண்ணுகின்ற நம்பிக்கை இவைகளை மட்டுமல்லாமல் முன்னோர்கள் அறிவாளிகள் அனுபவத்தையும் ஆப்த வாக்கிய பிரமாணம் என்ற பெயரில் ஏற்றுக்கொள்கிறார்கள். இதன் அடிப்படையில் வேதங்கள் குறிப்பிடுவது போல உலகம் என்பது மாயை அல்ல. நிஜமான பொருள் என்று அவர்கள் வாதிடுகிறார்கள்.

ஒன்றை உண்மை என்று கூறிவிட்டால் போதுமா? அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறபடி தர்க்க ரீதியில் நிரூபிக்க வேண்டாமா? அப்படி நிரூபித்து காட்ட தர்க்கம் புரிவதற்கான இலக்கணத்தை இவர் வகுத்தார். உலகத்திலேயே வாதம் புரிவதற்கு வரைமுறைகளை முதல் முறையாக வகுத்தவர் கெளதமர் என்று சொன்னால் அது மிகையாகாது. வாதம் செய்து அதனால் அடையக்கூடிய முடிவை விட, வாதம் புரிவதற்காக வகுக்கப்பட்ட பாதைகளே இலக்கண மரபுகளே முக்கியமானது என்று இவர்கள் கருதினார்கள். இந்தியாவிலும் சரி, வேறு எந்த நாட்டிலும் சரி வாதம் முறைக்கு இவர்கள் கொடுத்த அதி முக்கியத்துவ நிலையை வேறு எவரும் கொடுக்கவில்லை என்பதனால் இவருடைய கொள்கை நியாயம் அல்லது நையாபிகம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. கெளதமரை கூட நையாபிகர் என்று சிறப்பு பெயர் கொடுத்து அறிவுகலகம் இன்றும் அழைத்து வருகிறது.

வாதத்திற்கு இவர்களை போன்று முக்கியத்துவம் கொடுப்பதில் ஓரளவு ஒப்பிடத்தக்கவர்கள் கிரேக்க தேசத்தின் பிரபல தத்துவ அறிஞர்கள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் என்று சொல்லலாம். கிரேக்க மாவீரன் அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படைநடத்தி வந்த கதை நாம் வரலாற்று புத்தகத்தில் படித்திருக்கிறோம். பாபரை போல் கஜினி முகமதுவை போல் இந்தியாவின் செல்வ வளங்களை மட்டும் கொள்ளையடித்து போக அலெக்ஸாண்டர் படையெடுத்து வரவில்லை மிக முக்கியமாக இந்தியாவிலிருந்த வைரங்களை விட தங்கத்தை விட அறிவு என்பதே அலெக்ஸாண்டரை கவர்ந்தது என்று சொல்லலாம். அந்த கவர்ச்சி அவருக்கு ஏற்படுத்தியவர் அவரது ஆசிரியரான அரிஸ்டாட்டில். இவருடைய உத்தரவுப்படி, இந்தியாவிலிருந்து எராளமான அறிவுக் கருவூலங்களை கிரேக்கத்திற்கு அனுப்பு வைத்தான் அலெக்ஸாண்டர் அப்படி போன மிக முக்கியமான கருத்து பெட்டகம் தான் கெளதம மகரிஷியின் நியாயம் என்ற தத்துவத்திலுள்ள வாதம் செய்யும் முறை. இதை மிக சரியாக அரிஸ்டாட்டில் பயன்படுத்தி கொண்டார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் எதை எடுத்தாலும் வெள்ளைக்காரர்களே பாராட்டி பழக்கப்பட்ட தற்போதைய நவீன இந்தியாவின் அறிவு ஜீவிகளில் சிலர் அரிஸ்டாட்டிலிடம் இருந்த வாதம் செய்யும் முறையையே நியாய வாதிகள் பின்பற்றினார்கள். இது கெளதமரின் சொந்த சரக்கு அல்ல என்று பேசி திரிந்தார்கள். இதற்கு அரிஸ்டாட்டில் சிந்தித்த சிந்தனைகள் பல அவரது காலத்திற்கு முன்பே இந்தியாவில் இருந்தது. எனவே இந்தியாவிலிருந்து தான் கிரேக்கம் கற்றுக்கொண்டேதே தவிர, கிரேக்கத்திடம் இருந்து இந்தியா அறிவை ஒருபோதும் இறக்குமதி செய்யவில்லை என்று ஆதாரத்தோடு தத்துவ மேதை ராதாகிருஷ்ணன் நிரூபித்து காட்டினார்.

கெளதமரின் வாத முறைகளுக்கு ஏற்றவாறு, உலகம் உயிர் இறைவன் என்பதெல்லாம் உண்மையா? வெறும் கற்பனையா? என்பதை நிர்ணயித்து கொள்ள முதலில் அறிவு என்பது வேண்டும். இதற்கு அறிவு எப்படி ஏற்படுகிறது. மிக முக்கியமாக உலகம், உயிர் இறைவனை பற்றிய அறிவை எதன் மூலமாக பெறுகிறோம் என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். நமக்கு அறிவை தருகின்ற வழிமுறைகள் எவை எந்த வழியால் நாம் சரியான அறிவை பெறுகிறோம் என்பதை பாகுபடுத்தி கொள்ள வேண்டும். கெளதமர் குறிப்பாக கண்களால் காண்பது யுகித்தி அறிவது பெரியவர்கள் கூறுவது ஆகியவையே அறிவுக்கான மூலம் என்று கூறுகிறார். இந்த மூன்று நடைமுறைகளை வைத்துக் கொண்டு நாம் அறிகிற அறிவு சரியானது தானா? நம்பக் கூடியது தானா? என்பதை எதை வைத்து தீர்மானம் செய்வது? அதற்கான ஆதாரம் எது?

எந்த விதமான அறிவு விஷயமாக இருந்தாலும் அவை நிகழ்வதற்கு நான்கு வித அம்சங்கள் கண்டிப்பாக தேவை. அதில் முதலாவது அறிவு நிகழ்வதற்கு நிலைக்களனாக இருக்கும். அறிபவன் என்பவன் தேவை இதை சமஸ்கிருதத்தில் பிரமாதா என்பார்கள். இரண்டாவாதாக அறியப்படும் பொருள் இதற்கு பிரமேயம் என்பது பெயராகும். மூன்றாவது அறிவு வருகின்ற வழி இது தான் பிரமாணம் எனப்படுவது. நான்காவதாக உள்ளது அறிவு இது பிரமிதி எனப்படும். அதாவது அறிகின்றவன், அறியப்படும் பொருள், அறிவு வருகிற வழி, அறிவு ஆகிய நான்கிற்கும் அறிவு வருகிற வழியாகிற பிரமாணம் என்பதே மிக முக்கியமான விஷயமாகும். பிரமாணம் என்பது சரியாக இருந்தால் தான் அதாவது கண்ணால் காணுகிற காட்சி சரியான காட்சியாக இருக்க வேண்டும். யூகித்து அறிவதற்கு சரியான முறையில் யூகம் வேண்டும். பெரியவர்களின் அனுபவத்தை பின்பற்ற அந்த பெரியவர்கள் சரியான வழியில் நடந்து, சரியான கோணத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி மூன்றும் நடந்திருந்தால் மட்டும் தான் ஒருவன் பெறுகின்ற அறிவு செம்மையான அறிவாக இருக்கு மென்று கெளதமர் முடிவு செய்கிறார்.

கெளதமரின் சிந்தனைப்படி நான்குவித பிரமாணங்கள் முக்கியம் என்பதை அறிந்தோம். இதில் முதலாவது பிரமாணம் பிரதியட்சம் என்பது அதாவது கண்களால் காணும் காட்சி என்பது இதன் பொருளாகும். இதை யாரும் மறுக்க மாட்டார்கள். மறுக்கவும் முடியாது. ஆனால் இந்த காட்சி அமைப்பை கூட கெளதமர் வித்தியாசமான முறையில் சிந்திக்கிறார். நமது வீட்டில் ஒரு அறையில் நாம் அமர்ந்திருக்கிறோம். அறையிலுள்ள ஜன்னலை திறந்தவுடன் தோட்டத்தில் நிற்கின்ற வாழை கண்ணில் படுகிறது. இப்போது அறியப்படும் பொருள் வாழை. அறிவது நாம். நாம் காண்பது வாழை என்ற உணர்வு மனதில் ஏற்படுகிறது. அல்லவா இதன் பெயர் தான் அறிவு என்பது இந்த அறிவுக்கு தான் கண்ணால் காணும் காட்சி அறிவு அல்லது பிரதியட்சம் என்று பெயர். வாழை மரத்தை நாம் நேராக பார்க்கிறோம் அதனால் அதன்பெயர் பிரதியட்சம்

சாதாரணமாக நேரடிக் காட்சியை  பிரதியட்சம் என்ற பெயரை பயன்படுத்தி அழைக்கிறோமே தவிர இதனுடைய சூட்சமத்தை முழுமையாக நாம் சிந்திப்பது கிடையாது. வாழையை நேரடியாக பார்க்கிறோம் வாழை என்று அறிகிறோம் இதில் சிந்திப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் என்ன இருக்கிறது என்று பலருக்குத் தோன்றும். ஆனால், அதைப் பற்றி சிந்திக்க துவங்கினால் தான் இதிலுள்ள சிக்கல்கள் புரியும். தத்துவ ஞானம் என்பது இப்படிப்பட்ட சிந்தனை சிக்கலிலிருந்து தான் உதயமாகிறது. மிகப்பெரிய வேதாந்தம், சித்தாந்தம் என்பவைகள் கூட இதிலிருந்து விதிவிலக்கு அடைவது இல்லை.

வாழைமரம் நிற்கின்ற இடத்திற்கு நாம் போகவில்லை. நாம் இருக்கின்ற இடத்திற்கு வாழைமரம் நகர்ந்தும் வரவில்லை. தூரத்தில் எங்கேயோ கைக்கு எட்டாத அந்த வாழை மரம் நமது உள்ளத்தை புகுந்து கருத்தில் நிறைவது எப்படி? இந்த கேள்விக்கு மிகச் சரியான பதிலை நாம் பெறவேண்டும் என்றால் வெளிச்சம் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எப்படி பயணம் செய்கிறது என்ற துறையில் நாம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வெளிப் பொருட்களால் தாக்கப்பட்டு மனதானது எப்படி சிந்திக்க துவங்குகிறது என்பதை அறிய மனோதத்துவ சாஸ்திரம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இதையெல்லாம் விட, மனதையும் வெளிப்பொருளையும் உயிரானது எப்படி இணைக்கிறது என்ற உயிரியல் பாடமும் நாம் அறிந்திருக்க வேண்டும். இத்தனை தெளிவு இருந்தால் தான் பிரதியட்சம் என்ற தத்துவத்தின் உண்மை நிலையை உணர்ந்துகொள்ள இயலும்.

பிரதியட்சம் என்பதற்கு நமது புலன்களுக்கும் வெளியே இருக்கின்ற பொருட்களுக்கும் நேரடியான தொடர்பு உண்டா? இல்லையா? என்ற ஒரு கேள்வி சிந்தனை போன போக்கில் எழுந்து நிற்கும். இதற்கு கெளதம மகரிஷியின் பதில் என்னவென்றால் வெளியே இருக்கின்ற பொருளுக்கும் நமது புலன்களுக்கும் கண்டிப்பான தொடர்பு இருக்கிறது என்பது ஆகும். இதற்கு பிராப்பியக்காரி என்று பெயர். அதாவது புறப்பொருள் எதுவுமே நமது மனதை பொறுத்தது அல்ல. அது சுதந்திரமாக வெளியிலே இருப்பது ஆகும் என்பது அவர்களது கருத்து. இதை இந்திய சிந்தனை வாதிகளில் மிமாம்சகர்கள் போன்றோர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், பெளத்தர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. உதாரணமாக புலன்களுக்கு கட்டுப்படுகிற விஷயங்களை எடுத்துக்கொள்வோம். கெளதமர் கூறுவது போல புலன்கள் சென்று பொருட்களை அடைவதனாலேயே அறிவு ஏற்படுகிறது என்பது உண்மையானால் ஒரு மரத்தினுடைய உச்சிக் கொம்பையும், அதை விட மிக உயரத்திலுள்ள சந்திரனையும் ஒரே நேரத்தில் புலன் அறிந்து விடுகிறதே அது எப்படி என்று பெளத்தர்கள் கேட்கிறார்கள்.

அதாவது வாழைமரம் அருகிலிருக்கிறது. அதனுடைய தாக்கம் புலன்களுக்கு உடனே கிடைத்துவிடுகிறது. அப்போது அது ஒரு அறிவாகவும், சந்திரன் வெகு தொலைவில் இருப்பதனால் அது வேறு வகை அறிவாகவும் தானே இருக்க வேண்டுமென்று பெளத்தர்கள் கேட்கிறார்கள். பொருட்களோடு சம்மந்தம் ஏற்படாமலேயே அறிவு தோன்றும் என்று பெளத்தர்கள் கூறுவதை முற்றிலுமாக மறுத்து தொடர்பு இருந்தால் தான் அறிவு என்பது இருக்கும் என்று உறுதிபட நியாயவாதிகள் வலியுறுத்துகிறார்கள். புலன்களுக்கு பொருட்களோடு தொடர்பு இருப்பதனால் தான் ஒரு பொருள் இருக்கிறது அல்லது இல்லாமல் போய்விடுகிறது என்ற அறிவை பெறமுடியும் என்கிறார்கள்.

கெளதமர் பிரதியட்சத்தை லெளகிக பிரதியட்சம், அலெளகிக பிரதியட்சம் என்று இராண்டாக பிரிக்கிறார். இதை நாம் புறம், அகம் என்று தமிழ்படுத்தி புரிந்துகொண்டால் சரியாக  இருக்கும். சுவை, ஒளி, தொடு உணர்ச்சி, ஓசை, வாசனை ஆகிய அனைத்தும் லெளகிக பிரதியட்சமாகும். ஒரு மனிதனை அவன் இன்னார் என்று பிரித்து அடையாளபடுத்துகிற போது அவனுக்குரிய பொதுத்தன்மைகளை பாகுபடுத்தி அறிந்து கொள்வது அலெளகிக பிரத்தியட்சமாகும். திடீரென்று ஒருவரை பார்க்கும் போது அவனுடைய குணாதிசயங்கள் நமக்கு தெரியாது. அதன் பிறகு நமது புத்தி நிதானப்பட்ட பிறகு தான் அந்த மனிதனின் குண இயல்புகளை அறிந்துகொள்ள முடியும். இப்படி அறியாத போது, பார்க்கும் காட்சியை நிகர்விகல்ப காட்சி என்றும் அறிந்த பிறகு இரண்டாவது நிலையை சவிகல்ப காட்சி என்றும் சொல்கிறார்கள்.

நாம் தனிமையாக இருக்கும் போது ஒரு மனிதன் நம்மை சந்திக்க வருகிறான். வருபவனை வரவேற்று உட்கார வைத்துவிட்டு அவனை கவனிக்கிறோம். அவன் அமருகிற விதம், நம்மை பார்க்கின்ற பார்வை, அவனுடைய ஆடை மற்றப்படி அவனது அங்கசேஷ்டை எல்லாமே நம் கவனத்திற்கு வருகிறது. அவைகள் இயல்பானதாக இருந்தால் இவன் சராசரி மனிதன் என்று கணக்கிடுகிறோம். இயல்புக்கு மாறுபட்டு இருந்தால் அவன் மீது தனிக் கவனம் செலுத்துகிறோம். இப்படி அவனை பார்த்தவுடன் வரவேற்பதும், பிறகு அவனை எடை போடுவதும் தனித்தனியாக வேறு வேறு நிலையில் நடந்தாலும் கூட இரண்டும் நடைபெறுகின்ற வேகம் ஒன்று போலவே நமக்கு தோன்றுகிறது. அதாவது இரண்டு செயலையும் ஒன்றாகவே நாம் பாவிக்கின்றோம். இப்படி ஒருவித காட்சியில் இரண்டுவித தன்மைகள் இருப்பதை கெளதமர் பிரித்து விளக்கம் சொல்வதை புகழ்பெற்ற ஜெர்மானிய தத்துவ அறிஞர் இமானுவேல் கான்ட் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் குணமும் குணத்தை வெளிபடுத்துகின்ற உருவமும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒரே நேரத்தில் தான் நிகழ்வுகளை வெளிப்படுத்துகிறது என்று கூறும் பெளத்தர்கள் கெளதமரின் கொள்கையை ஏற்றுக்கொள்வது இல்லை.

கெளதமர் சொல்லுகின்ற இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரமாணங்கள் அனுமானமும் ஆப்த வாக்கியமும் ஆகும். அனுமானம் என்றால் யூகம் அதாவது பட்டு புழு என்று ஒன்று இருந்தால் அது கூடு கட்டும் கூட்டை கலைத்து பிரித்து எடுத்தால் பட்டு நூல் கிடைக்கும் என்று புழுவை பார்த்தவுடனேயே முடிவு செய்துவிடுவது யூக அறிவாகும். இந்த யூக அறிவிற்கு பெரும் துணையாக இருப்பது ஆப்த வாக்கியம் எனப்படுகிற முன்னோர்களின் வழிகாட்டுதல். நெருப்பு என்றால் சுடும். அதை தொட்டால் வலிக்கும் என்று சுடப்பட்டவன் சொன்னால் அதை நம்ம வேண்டும் நான் தொட்டு பார்த்து தான் நம்புவேன் என்பது மூடத்தனம் பெரியவர்கள் அனுபவித்ததை ஆராய்ந்ததை தெளிவு பெற்றதை சொல்லியிருக்கிறார்கள் அதை நமது அறிவுக்கு ஆதாரமாக எடுத்து கொள்வதில் எந்த தவறும் இல்லை என்பது கெளதமரின் கருத்தாகும்.

கெளதமர் நான்காவதாக சொல்லுகின்ற பிரமாணம் உவமை அல்லது உவமானம் என்பதாகும். நாம் இதற்கு முன்னால் கண்ணால் பார்த்தறியாத மூலிகை செடி ஒன்றை தேடி கண்டுபிடித்து எடுத்துவர வேண்டும் என்று வைத்துக்கொள்வோம் அந்த செடியை இதற்கு முன்னால் பார்த்து அறிந்த ஒருவர் அது இப்படி இருக்குமென்று நமக்கு சொல்கிறார். அப்படி சொல்லுகிற போது நாம் அறிந்த வேறொரு செடியின் இலையோடு ஒப்பிட்டு அந்த இலை மாதிரி ஆனால் அதை விட சற்று பெரியதாக இருக்கும் என்கிறார் இதை தான் உவமான அறிவு என்கிறார்கள். அதாவது ரதி என்ற அழகான இதிகாச கதாநாயகியை நாம் அறிவோம் அவள் அழகு நமது மனதில் கற்பனையாக பதிந்திருக்கிறது நாம் பார்த்தறியாத ஒரு பெண்ணை பற்றி சொல்லுகிற போது அவள் ரதி மாதிரி அழகுடையவள் என்று கூறினால் நம் மனதில் இருக்கும் அழகிற்கும் இப்போது கூறபட்டிருக்கும் பெண்ணின் அழகிற்கும் ஒப்பிட்டு பார்ப்போமே அதன் பெயர் தான் உவமானம் என்பது. அறிவு வளர்ச்சிக்கு இந்த உவமானமும் நல்ல ஆதாரம் என்பது கெளதமரின் கருத்து.

எந்த விஷயத்திலும் உண்மையை மட்டுமே பேசவேண்டும் என்று முன்னிலையில் நிற்பவர் கெளதமர். அதனால் தான் அவர் அறிவு என்ற கண்ணுக்கு தெரியாத பொருள் வளர்வதற்கு பிரதியட்சம், அனுமானம், ஆப்தவாக்கியம், உவமானம் ஆகிய வெளியில் தெரியும் நான்கு விதமான பொருட்கள் உண்டு என்று காட்டுகிறார். அறிவு என்ற மாளிகைக்கு கெளதமர் வைக்கின்ற நான்குவித அஸ்திவாரங்கள் இவைகள் என்று சொல்லலாம். இவற்றை மையமாக வைத்தே தனது நியாயம் என்ற தத்துவ அரண்மனையை கெளதமர் கட்டி எழுப்புகிறார். அவற்றை பற்றி இன்னும் வருகிற அமர்வுகளில் குழப்பங்கள் இல்லாமல் நன்கு தெளிவாகவே சிந்திப்போம்.




Contact Form

Name

Email *

Message *