சொற்பொழிவு தொடர் -- 11
அன்பார்ந்தவர்களுக்கு வணக்கம்.
நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். ஐரோப்பியர்கள் வானத்தையும், கடலையும், பூமியையும் ஆராய்ந்தார்கள். இந்தியர்கள் மனதையும், அறிவையும், உயிரையும் ஆராய்ந்தார்கள். அதாவது அவர்கள் வெளியிலுள்ள பொருளைத் தேடி போனதனால் விஞ்ஞான உபகரணங்களை கண்டுபிடித்தார்கள். நாம் நமக்குள்ளே நமது தேடுதலை நடத்தியதனால் மனிதனுக்குள் மறைந்து கிடக்கும் இரகசியங்கள், ஆற்றல்கள் இடர்பாடுகள் போன்றவற்றை தெளிவாக கண்டுபிடித்து கொண்டோம். ஆக விஞ்ஞானம் மனிதனின் உடல் செளகரியத்தை கவனித்துக் கொண்டது என்றால் மெய்ஞானம் மன செளகரியத்தை கவனித்துக் கொண்டது எனலாம்.
கிரேக்கர்களும் சிந்தித்தார்கள். அரிஸ்டாட்டில், சாக்ரட்டிஸ் போன்ற மாமேதைகள் மேற்கே உண்டு. ஆனாலும் அவர்களது சிந்தனை உடலை தாண்டி செல்லுகின்ற போது குழந்தைத்தனமாக, அனுபவம் இல்லாத கற்பனாவாதமாக இருந்ததே தவிர இந்திய ஞானிகளின் சிந்தனைகளை போல தர்க்க ரீதியில் அமைந்திருக்கவில்லை. அரிஸ்டாட்டில் பெரிய புத்திசாலிதான் அதில் சந்தேகமில்லை. மருத்துவத்தை பற்றியும், வானியியலை பற்றியும் தற்கால சிந்தனைக்கு உரம் சேர்கின்ற அளவிற்கு சிந்தித்திருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால், அவர்களால் மனிதனின் ஆத்மாவை பற்றி மன உணர்சிகளை பற்றி உலக வாழ்க்கையில் ஏற்படும் கட்டுத்தளைகளிலிருந்து விடுதலை அடைவதை பற்றி சிந்திக்க முடியவில்லை.
நாம் வேதகாலத்திற்கு முன்பிருந்தே, பந்தத்திலிருந்து விடுதலை அடைவதை பற்றி சிந்தித்தோம். பந்தம் ஏன் ஏற்படுகிறது. அதை எப்படி கடந்து செல்வது என்பதை பற்றி சிந்தித்தோம். நமது பண்பாடு, நமது மதம், நமது இறைவழிபாடு என்பவைகள் அனைத்துமே பந்தத்திலிருந்து விடுதலை அடைவதை பற்றி அதாவது முக்தி அடைவதை பற்றி இருந்தது. கடவுள் இல்லை என்று சொன்ன புத்தராக இருக்கட்டும். கடவுளுக்கு அவசியமில்லை என்று குறிப்பிட்ட மகாவீரராக இருக்கட்டும். கடவுளை சிந்திப்பதை விட, உழைப்பை பற்றி சிந்திப்பது மேல் என்று சொன்ன குருநானக்காக இருக்கட்டும். அவர்கள் யாருமே முக்தி என்பதை கடந்து போகவில்லை. வாழ்க்கையின் இறுதி லட்சியம் முக்தியை அடைவதில் தான் இருக்கிறது என்பதில் உறுதியாக இருந்தார்கள். இன்று நவீன தத்துவவாதிகளும் இந்தியாவில் முக்தியை புறந்தள்ளிவிட்டு சிந்தனை விதிகளை விதைத்து விட முடியாது.
கபிலரும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர் உயிரை பற்றி புது தத்துவம் சொன்னவர். உலக உற்பத்தியை பற்றி, அறிவியல் பூர்வமான விளக்கத்தை தந்தவர். அவருடைய எல்லா சிந்தனை போலவே முக்தி என்பதும் புதுவிதமாக இருந்தது. மற்றவர்கள் எளிதாக அறிந்துகொள்ளும் விதமாகவும் இருக்கிறது. சென்ற அமர்வுகளில் சொல்லப்பட்ட கபிலரின் சிந்தனைகளை ஆழமாக மனதில் வாங்கிக்கொண்டு முக்தி பற்றிய அவர் கருத்தை தொடர்ந்து சென்றால் மிக எளிதாக கபிலரின் மனதோடு நாம் கலந்துவிடலாம்.
பிரபஞ்ச உற்பத்திக்காக புருஷனும் பிரகிருதியும் இணையும் போது தான் தளை என்பது ஏற்படுகிறது. பிரகிருதியிலிருந்து புருஷன் விடுதலை அடைவதை முக்தி என்று சொல்லலாம். அத்வைதிகள் பிரம்மம் மாயை வசப்படுவதால் உலகம் தோன்றுவது போல் இருக்கிறது என்று கூறுவது போலவே, கபிலரும் அஞ்ஞானத்தால் தளை ஏற்படுகிறது ஞானத்தால் விடுதலை ஏற்படுகிறது என்கிறார். அஞ்ஞானம் எங்கு இருக்கிறதோ, எங்கிருந்து செயல்படுகிறதோ அங்கே பிரகிருதியும் இருக்கிறது. தான் பிரகிருதியோடு இணைந்து இருந்தாலும் கூட நாம் வேறு, பிரகிருதி வேறு என்று புருஷன் எப்போது சிந்திக்க துவங்குகிறதோ அப்போது தான் முக்தியை நோக்கி அது பயணப்பட துவங்குகிறது.
முக்தி என்பது அத்வைதம் சொல்வது போல பிரம்மத்தோடு ஆத்மா ஐக்கியமாவது அல்ல. விசிஷ்டாத்வைதம் கூறுவது போல ஆத்மா, பகவானின் பாதத்தில் இளைப்பாறுவது இல்லை. துவைதம் காட்டுவது போல பகவானின் சன்னதியில் கைங்கரியத்தில் ஈடுபடுவது அல்ல. கபிலர் இவைகளிலிருந்து முற்றுலும் முரண்பட்டு முக்திக்கு ஒரு புதிய சிந்தனை வடிவம் தருகிறார். தன்னை உணர்வது தான் முக்தி என்கிறார். தான் யார் என்று அறிந்து கொள்கிறவனிடம் அஞ்ஞானம் இருக்காது அந்த உன்னத நிலையே முக்தி என்கிறார்.
புருஷனின் உண்மைத் தன்மையை ஏதாவது ஒன்று மறைத்து கொண்டிருக்கின்ற வரை முக்தி என்பது புருஷனுக்கு கிடைக்கப்போவதே இல்லை. புருஷன் தன்னை உணர்ந்து விடுதலை அடைந்த பிறகு, அது மீண்டும் பிரகிருதியோடு இணையப்போவதும் இல்லை. அதை தேடி போவதுமில்லை. தன்னைத்தவிர வேறு எதையும் கவனிப்பதும் இல்லை. பிரகிருதியினுடைய துணை இனி அதற்கு தேவை இல்லை. தத்துவ நோக்கில் பார்க்கப்போனால் புருஷனை பொறுத்தவரை அது தளைப்படுவதுமில்லை விடுதலை அடைவதுமில்லை சுடர்விட்டு எரிகின்ற விளக்கிற்கு முன்னால் திரை ஒன்று பிடித்தால் திரையால் விளக்கிற்கு எந்த பங்கமும் ஏற்படுவது கிடையாது. விளக்கிலிருந்து வருகின்ற வெளிச்சத்திற்கு தான் பங்கம் ஏற்படுகிறது. இதே போன்று தான் புருஷன் தளைக்கு ஆட்பட்டு இருக்கிறது என்று கூறுவதாகும். தளை என்ற திரை புருஷனின் தேஜசை மறைக்கிறது. அதாவது நினைவை அறிவை சிறிது தடுமாற செய்கிறது. இதனால் புருஷனின் நிலை குறைவது கிடையாது. எப்போது அது தான் சுதந்திரமானவன் என்பதை உணர்ந்து கொள்கிறதோ அப்போதே திரையில்லாத விளக்காக அது மாறிவிடுகிறது.
பிறப்பற்ற ஒரு நிலை என்று கூறப்படுவது போல பிரகிருதியோடு சேராமல் தனித்திருக்கும் ஒரு நிலை தான் புருஷனுக்கு கிடைக்கும் முக்தி என்பது. அந்த முக்தியை பெறுவதற்கு புருஷனை மறைத்துக்கொண்டிருக்கின்ற அஞ்ஞானம் என்ற திரை விலகவேண்டும். அந்த திரை விலகுவதற்கு புருஷன் ஞானத்தை அடைவதற்கு என்ன செய்ய வேண்டும். சாதனா மார்க்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்கிறார் கபிலர் சாதனா மார்க்கம் என்றால் ஆசனம், பிராணாயாமம், தியானம் போன்ற யோக நெறிகளாகும். இந்த யோக நெறிகளை கடைபிடித்து புலன்களை அடக்கி சமாதி நிலையை பெறவேண்டும். நான் என்ற அகங்காரம் வெட்டி வீழ்த்தப்படுவதே சமாதியாகும்.
நான் என்ற அகங்காரம் அஞ்ஞானத்தின் வடிவமாகும். அஞ்ஞானம் என்பது அறிவில்லாத தன்மை என்பதாக மட்டும் பொருள் கொள்ள கூடாது. மனித மனதினுள் அடங்கி கிடக்கும் காமம், குரோதம், பயம், பகை, பேராசை போன்றவைகளும் அஞ்ஞானத்தின் உறுப்புகள் தான். இந்த உறுப்புகள் நெருப்பு பட்டால் எப்படி விறகுகள் எரிந்து சாம்பலாக மாறுமோ அதே போல தியானம் என்ற நெருப்பு பட்டு அஞ்ஞானம் என்ற மரம் சுட்டெரிக்கப்பட்டுவிடும். யோகம், தியானம் போன்ற முறைகளால் புருஷனை பற்றியிருக்கும் அழுக்குகளை எல்லாம் சுத்தமாக கழுவிவிடலாம். அழுக்குகள் இல்லாத புனிதமான புருஷன் முக்தி என்ற பரமானந்த நிலையில் எப்போதும் நிலைத்து நிற்பான். இங்கே மிக முக்கியமாக ஒரு கேள்வி வந்து நிற்கிறது. புருஷன் ஞானம் அடைய வேண்டுமென்றால் முக்தி அடைய வேண்டுமென்றால் இறைவன் என்ற ஒருவன் தேவையா? தேவை இல்லையா? என்பதே அந்த கேள்வி இதற்கு கபிலர் தரும் பதில் அதிர்ச்சியானது.
ஆதி மனிதன் வேட்டையாடி பிழைப்பை நடத்தினான். அடுத்து வந்த மனிதன் வேளாண்மை செய்ய கற்றுக்கொண்டு ஒரே இடத்தில் வாழும் வகை தெரிந்து கொண்டான். ஓடுகிறவரை அவனுக்கு உடம்பு மட்டுமே வேலை செய்தது. உட்கார்ந்த பிறகு மூளையும் வேலை செய்ய ஆரம்பித்தது. அவன் அறிவு கேட்டது மழைவருகிறது, இடி இடிக்கிறது, மின்னல் வெட்டுகிறது இதெல்லாம் யார் செய்கிறார்கள்? கடல் ஆர்பரிக்கிறது. நதி ஆரவாரமாக ஓடுகிறது. அருவி உற்சாகமாக குதிக்கிறது. இதையெல்லாம் ஒழுங்குபடுத்தி நடத்துகிற முதலாளி யார்? பகலும் இரவும் வருகிறதே, கோடையும் மழைக்காலமும் வருகிறதே இந்த பருவ காலங்கள் சொல்லி வைத்த மாதிரி மாறி மாறி நிகழ்கிறதே இதற்கு இயக்குனர் யார்? மூல கர்த்தா யார்? அவர் எங்கே இருக்கிறார்? அவர் பெயர் என்ன? என்பது தான் சிந்திக்க துவங்கிய மனிதனின் முதல் கேள்வி.
கேள்வி கேட்ட அறிவே பதிலையும் கண்டுபிடித்து சொன்னது. உன்னை படைத்தது கடவுள். இந்த உலகை படைத்து இதை இயக்கி கொண்டிருப்பது கடவுள். உலகத்தின் உள்ளேயும் வெளியேயும் சிறிது கூட பிசகாத காலநேரத்தை ஒழுங்குமுறையில் நடத்திகொண்டிருப்பது கடவுள். அந்த கடவுள் இல்லாமல் உலகமில்லை. அவன் நினைத்தால் உலகம் வாழும் வேண்டாம் என்றால் வினாடி நேரத்தில் சாம்பலாகிவிடும். எனவே கடவுள் தான் எல்லா வற்றிற்கும் மேம்பட்ட அதிகாரி என்று ஒருவன் யோசித்து பதிலை சொன்னான். அவன் அப்படி சொல்லிய மறுநிமிடமே இன்னொருவன் காற்று தானாக அடிக்கிறது. மழையும் தானாக வருகிறது. பஞ்சபூதங்கள் சேர்ப்பதனால் உயிர்களும் தானாக தோன்றுகின்றன. பிறகு தானாக மடிந்து போகிறது. எனவே இதையெல்லாம் நடத்துவதற்கு கடவுள் என்ற ஒரு சக்தி தேவையில்லை. கடவுளே இல்லை என்று மறுப்பை தந்தான்.
இப்படி கடவுள் உண்டு என்றும், கடவுள் இல்லை என்றும் வாதங்கள் அன்று முதல் இன்று வரை நடந்துகொண்டே இருக்கிறது. அது ஒரு முடிவிற்கு வந்தபாடில்லை. கடவுள் இருக்கிறார் என்று சொல்பவனும் அவர் இருப்புக்கான ஆதாரத்தை இதுவரை காட்டியதில்லை. கடவுள் இல்லை என்று மறுப்பவனும் அதற்கான ஆதாரத்தை இதுவரை தந்ததில்லை. எனவே இந்த வாதம் நீண்டு கொண்டே போகின்ற ஆஞ்சநேயர் வால் போன்றது. ஆனால் கபிலர் கடவுள் இருக்கிறார் என்றும் கூறவில்லை. கடவுள் இல்லை என்றும் மறுக்கவில்லை. முற்றிலும் மாறுபட்டு கடவுள் என்ற சக்தி தேவையே இல்லை என்கிறார். பிரகிருதி என்பதின் சமநிலையில் இருக்கின்ற முக்குணங்கள் தங்களது சமநிலையை விட்டு மாறி வேறு பொருளாக உருமாறுவதற்கு மூன்றாவது நபர் ஒருவரின் துணை என்பதே தேவையில்லை. புருஷன் என்ற சக்தியே போதுமானது. புருஷன் இருப்பதே பிரகிருதியின் தொழில் நடப்பதற்கு தூண்டுகோலாக அமையும்.
கடவுள் தேவையில்லை என்று கபிலர் சொல்கிறாரே அப்படி என்றால் அவர் நாத்திக வாதத்தை வளர்க்கிறாரா? கடவுள் மறுப்பு சிந்தனை தான் கபிலரின் ஆதாரமான கருத்தா? என்று கேட்டால் கபிலர் தன்னை நாத்திகரென்று ஒரு இடத்திலும் சொல்லவில்லை. தன்னை அப்படியும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை கபிலரே நேரடியாக சொல்கிறார் கடவுள் உண்டு என்பதற்கு உணர்வுகளை தவிர நேரடியான ஆதாரங்கள் எதுவுமில்லை. அவரது இருப்பை தர்க்க ரீதியாக நிரூபிக்கவும் இயலவில்லை. ஆதாரதிற்குள்ளும் அடங்காமல், தர்க்கத்திற்குள்ளும் வராமல் நிற்கும் ஒரு பொருளை பற்றி விவாதிப்பது வீணான வேலை. அதனுடைய இயல்பை விவாதித்தல் என்பது கூட தத்துவங்களுக்கு முரண்பட்ட கற்பனா வாதமாக இருக்குமே தவிர நிஜம் என்ற வட்டத்திற்குள் அடங்காது. அதனால் தான் கடவுள் என்ற சக்தி தேவையில்லை என்ற முடிவிற்கு நான் வருகிறேன் என்கிறார்.
மேலும் அவர் இந்த உலகம் படைக்கபட்டிருக்கின்ற விதத்தை ஆழமாக ஊன்றி பார்த்தால் படைப்பில் உள்ள சிக்கல்கள் தெளிவாக தெரியும். கடவுள் தான் உலகத்தை படைத்தார் என்றால், உலகத்திலுள்ள சிக்கல்களும் குறைபாடுகளும் கடவுளாலேயே படைக்கப்பட்டது என்ற நிலை வந்துவிடும். இதனால் கடவுள் உயர்ந்தவர் என்ற தத்துவத்திற்கு இழுக்கு வரும். இது எப்படி என்றால் கடவுள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவர். அவருக்கு சுயநலம் என்பதே கிடையாது என்று கடவுளை வணங்குபவர்கள் கூறுகிறார்கள். அப்படிப்பட்ட கடவுளால் யாருக்கும் எந்த தீங்கும் நடக்காது நடைபெறவும் முடியாது.
ஆனால் உலகத்தின் நடைமுறை வேறாக இருக்கிறது. படைப்பு நிகழ்வதற்கு முன்பு எந்தவிதமான தளைகளும் இல்லாமல் சுதந்திரமாக இருந்த உயிர் படைக்கப்பட்டபிறகு உலக சூழலில் அகப்பட்டு அல்லல் படுவதை நமது கண்களால் காண்கிறோம். கடவுள் உயிரை படைத்தார் என்றால், அதை அவர் அல்லல் படுத்துவாரா? உண்மையாகவே அன்பு கசிந்து படைப்பு தொழிலை இறைவன் செய்தார் என்றால், அனைத்து ஜீவராசிகளையும் வேதனையற்ற நிலையில் வீழாமல் என்றும் ஆனந்தமயமாகவே இருக்கும் நிலையில் படைத்திருப்பார். ஆனால், நாம் இந்த பிரபஞ்சம் முழுவதும் பார்ப்பது வேதனையும், துக்கமும், அழுகையும், ஒப்பாரியும் தான். துக்கத்திற்கும் வேதனைக்கும் கடவுள் பொறுப்பல்ல. கர்மா தான் பொறுப்பென்றால் எல்லாவற்றையும் கர்மா பார்த்துக்கொள்ளும் அதற்கு கடவுளின் துணை தேவையே இல்லை.
கடவுள் அன்புமயமானவர் என்று சொன்னால் அவர் துக்கத்தை படைத்தார் என்ற குற்றத்தை சுமக்க வேண்டியது இருப்பது போலவே அவர் அறிவுமயமானவர் என்று சொல்வதிலும் சிக்கல்கள் இருக்கிறது. அறிவே மயமான கடவுளிடமிருந்து சிறிதுகூட அறிவே இல்லாத ஜடப்பொருட்கள் எப்படி தோன்றும்? உலகத்தில் அறிவுப்பொருட்கள் ஒன்றை தவிர ஜடப்பொருட்கள் என்பதே இருக்க முடியாது. ஆனால் ஜட வஸ்துக்கள் இருக்கிறன. அதனால் கடவுள் அறிவுமயமானவர் என்ற வாதமும் அடிபட்டு போகிறது. எனவே எந்த வகையில் வாதாடினாலும் கடவுள் கொள்கையை நிலைநாட்ட முடியாது கடவுள் தேவைப்படுகிறார் என்றும் அறுதியிட்டு கூறவும் முடியாது. எனவே கடவுள் என்ற தத்துவம் மனிதனுக்கும் மற்ற ஜீவராசிகளுக்கும் தேவையற்றது என்று கபிலர் தெளிவுபடவே கூறிவிடுகிறார்.
கபிலரின் இந்த கருத்து ஆஸ்திக சிந்தனையில் ஊறிப்போன நமக்கு ஆச்சரியமாக இருக்கும். கபிலர் ஒரு ஞானி. மிகப்பெரிய ரிஷி எல்லாவற்றிற்கும் மேலாக பகவான் கிருஷ்ணனே நானே கபிலராக பிறந்தேன் என்கிறார். அந்த வகையில் பார்த்தால் கபிலர் ஒரு அவதார புருஷர். அப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் இருப்பவரே கடவுள் தேவையில்லை என்று சொல்லுவது நமக்கு அதிசயமாக இருக்கும். கபிலருக்கு முன்னும், கபிலருக்கு பின்னும் பல்வேறு ஞானிகள் இந்த நாட்டில் அவதாரம் எடுத்திருக்கிறார்கள். அவர்களில் பலர் கடவுள் இருப்பதை மறுக்கவில்லை. நட்டகல்லை வணங்காதீர்கள் என்று கூறிய சித்தர்கள் கூட நாதன் உள்ளே இருக்கிறார் என்று கடவுள் மனிதனுக்குள் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார்களே தவிர ஒட்டுமொத்தமாக கடவுள் இல்லை என்று அவர்கள் மறுத்துவிடவில்லை. பிறகு எதற்காக கபிலர் இதை சொல்ல வேண்டும்? பகவான் கிருஷ்ணரும் கபிலரை ஏன் அங்கீகரிக்க வேண்டும் என்ற கேள்வி நமக்குள் எழும்.
சந்திரனிலும் களங்கமுண்டு. சுடும் நெருப்பாக தகிக்கும் சூரியனில் கூட கருப்பு உண்டு. அதே போன்று கபிலருடைய வாதத்திலும் குறைகள் இருப்பது இயற்கையின் விதி. கபிலரின் தத்துவ விளக்கங்களிலும் எடுத்துக்காட்டுகளிலும் இருக்கின்ற குறைகள் தான் கபிலர் தோற்றுவித்த சாங்கிய தத்துவம் வருங்காலத்தில் பல மாறுதல்களை சந்தித்தது என்று துணிந்து சொல்லலாம். பிரகிருதி என்பது தான் அறிவற்ற ஒன்றாயிற்றே அது படைப்பு தொழிலை மேற்கொள்வதற்கு புருஷனுடைய தேவை எந்த அளவிற்கு என்று முடிவு செய்ய முடியும். புருஷன் என்ற ஒன்று இல்லை என்றால் பிரகுருதி என்பது கேட்பாரற்ற அனாதையாகிவிடும். பிரகிருதியின் துணை இல்லை என்றாலும் புருஷனுடைய தளை நீங்காது. ஆகையால் பிரகிருதியும் புருஷனும் மாறுபட்ட தன்மையுடையது என்பதை தர்க்க ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாத நிலை வருகிறது.
மேலும் பிரகிருதியோ அறிவற்றது. புருஷன் என்பதோ செயலற்றது. எதிலும் அக்கறை இல்லாதது. அதனால் புருஷனோடு சேரவேண்டும் என்றோ பொருட்களை உற்பத்தி செய்யவேண்டும் என்றோ சிந்திக்கிற அறிவு பிரகிருதிக்கு கிடையாது. செயலற்று இருக்கின்ற புருஷனோ தானாக போய் பொருளோடு இணைந்து கொள்ளும் என்பதற்கு அதற்கான ஆற்றல் இல்லை என்பதும் தெளிவாகிறது. ஆகவே அறிவற்ற ஒன்றையும் செயலாற்ற ஒன்றையும் இணைத்து வைத்து படைப்பு என்ற ஒன்றை நிகழவைக்க வேண்டுமென்றால் மூன்றாவதாக ஒரு சக்தி தேவை காரணம் பிரகிருதி புருஷன் ஆகிய இரண்டும் தானாக இணைய முடியாது. இரும்பு என்பது பிரகிருதியாகவும் காந்தம் என்பது புருஷனாகவும் சாங்கிய தத்துவயியலில் சொல்லப்படுவது உண்டு.
அதே உதாரணத்தை இங்கே நாம் எடுத்துக்கொள்ளலாம். காந்தமென்ற புருஷன் இரும்பு என்ற பிரகிருதியோடு சேருவதற்கு தானாக நெருங்கி வராது. அதை சேர்த்து வைத்தால் தான் இரும்பும் காந்தமும் ஒன்றாகி வேலை என்பது நடக்கும். இதை நன்றாக அறிந்த பிற்கால சாங்கிய ஞானிகள் பிரகிருதி புருஷன் இவைகளுக்கு அப்பால் இறைவன் என்ற ஒரு சக்தி இருப்பதாக ஒப்புக்கொண்டார்கள். ஆனாலும் கபிலருடைய இந்த தத்துவம் தான் இந்தியாவில் ஆன்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது எனலாம். வேதங்கள் சடங்குகளோடு நின்றுகொண்டிருந்த போது அந்த வேத காலத்திலேயே ஆன்மீக விஞ்ஞானத்தை உருவாக்கியவர் கபிலர். அவருக்கு பிறகு தான் அவரை போன்று பிம்மவாதினிகள் என்று சொல்லப்படுகின்ற உபநிஷத் கால ஞானிகள் தோன்றி ஆரண்யங்கள் என்ற உபநிச தத்துவங்களை வளர்த்தார்கள். அதிலிருந்து தான் அத்வைத முதலிய மகா உன்னதமான சிந்தனைகள் தோன்ற ஆரம்பித்தன. எனவே பாரத சிந்தனைக்கு கைகூப்பி வணக்கம் செலுத்த நினைப்பவர்கள் முதலில் கபிலரை நன்றியோடு வணங்க வேண்டும். அவர் நிச்சயம் அவதார புருஷர்தான் என்பதை நம்பவும் வேண்டும்.
ஒரு விஷயத்தை பற்றி நாம் அறிந்துகொள்வதன் பெயர் தான் அறிவு என்பது நாம் பெற்ற அறிவு உண்மையானதா? பொய்யானதா? என்பதை பரிசோதித்து பார்க்க நமது நாட்டில் ஒரு சிந்தனை மரபு இருக்கிறது. அதாவது அறிவை அறிவு துணைகொண்டு ஆராயும் தத்துவம் என்று இதை கூறலாம் இந்த தத்துவத்தை உலகுக்கு தந்தவர் யார் தெரியுமா? ராமாயணத்தில் கல்லாக கிடந்த அகலிகையை பாதம் பட்டதனால் பெண்ணாக மாற்றினாரே ராமபிரான் அந்த அகலிகையை கல்லாக போகும்படி சபித்த கெளதமர் தான் இந்த தத்துவத்தின் பிதாமகர். இவரது சிந்தனையை அடுத்து வரும் அமர்வுகளில் விரிவாக சிந்திப்போம்.