மரணம் என்பது இயற்கையானது
பிறப்பவர் ஒருநாள் இறந்தாக வேண்டும் என்பது இறைவன் வகுத்த நியதி
நேற்று இருந்தவர் இன்றில்லை, இன்று இருப்பவர் நாளை இருக்க போவதில்லை என்பது வாழ்கையின் யதார்த்தம் என்பதை மனது நன்றாக அறிந்து வைத்திருக்கிறது.
ஆனாலும் சில மரணங்களை எதிர்கொள்ளும் போது மனது பாரம் தாங்காமல் தள்ளாடுகிறது. அந்த வகையில் தமிழக முதல்வரின் மரணம் நெஞ்சத்தின் மீது ஆழமான வடுவை உண்டாக்கி இருக்கிறது.
அவருக்கு இந்த நேரம் மரணம் வந்திருக்க கூடாது
அவரை தமிழ்நாடு இப்போது இழந்திருக்க கூடாது
ஆயினும் இறைவனின் கணக்கை அர்ப்ப மனிதர்களான நம்மால் புரிந்து கொள்ள இயலாது. மக்களின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் போல மகேசனின் தீர்ப்புக்கு தலை வணங்கித்தான் ஆக வேண்டும்.
ஜெயலலிதா அம்மையாரின் மீது தனிப்பட்ட விமர்சனங்கள் இருக்கலாம். அவரது அரசியல் செயல்பாடுகள் மீது விரோதமும், கசப்பும் இருக்கலாம். ஆனால் யாருக்கும் அவரது மனவுறுதியின் மீது மரியாதை இல்லாமல் போகாது.
குழந்தை பருவத்தில் பாசத்திற்கு ஏங்கியவர், விடலை வயதில் நம்பிகை துரோகங்களை சந்தித்தவர், இளமையில் அவமானத்தையும் வஞ்சகத்தையும் எதிர்கொண்டவர், வாழ்கை முழுவதுமே போராட்டங்களை சமாளிப்பதில் கடத்தியவர், ஆனால் எந்த சந்தர்ப்பத்திலும் மன தைர்யத்தை கைவிடாதாவர், அந்த ஒன்று தான் மரணம் வரையிலும் அவர் கூடவே இருந்தது.
இக்கட்டான சூழல்களில் அவர் தவிக்கும் போது, யார் ஆலோசனையும் ஏற்பதை விட பகவத் கீதைக்கும் தனது மனசாட்சிக்கும் அதிக இடம் கொடுத்தவர்.
அப்பழுக்கு இல்லாமல் சந்தேகத்திற்கே இடமில்லாமல் அவர் பரிபூரணமாக நம்பியது "கண்ண பெருமான்" ஒருவனைத்தான் பெருமாளின் மீது அவர் கொண்ட பக்தியும் நம்பிக்கையும் அசைக்க முடியாதது. ஸ்ரீரங்கத்து பெருமாளை மட்டும் தான் தோன்றாத துணையாக கருதினார்.
அவர் மரணத்தால் யாரும் இன்று சந்தோசம் அடையவில்லை, எதிரிகள் கூட அவர் இல்லாத தமிழகத்தை நினைத்து பார்க்க தயங்குகிறார்கள், பெருமாளின் மீது இவர் கொண்ட பக்தியும், பெருமாள் இவர் மீது கொண்ட கருணையும் தான் இந்த மகத்தான நிலையை அவருக்கு கொடுத்திருக்கிறது எனலாம்.
எனவே வேங்கடத்தான் திருவடியில் அவர் நிம்மதியாக ஓய்வு கொள்ள இறைவனை வேண்டுவோம் விரும்பியதை எல்லாம் தருகின்ற வைகுண்ட நாதன் அவர் ஆத்மாவுக்கும் தமிழக மக்களுக்கும் ஆறுதலை அருளட்டும்.