ஒருவனின் மனைவி இறந்து போனாள், மனைவியை பறிகொடுத்த புருஷன் சுடுகாட்டிற்கு சென்று அவளை புதைத்த இடத்தில் விசிறியால் வீசிக்கொண்டு இருந்தான்.
பார்த்தவர்கள் அனைவரும் அவன் மீது பரிதாபபட்டார்கள், இவனுக்கு தான் மனைவியின் மீது எத்தனை பாசம், புதைக்குழிக்குள் கிடக்கும் மனைவிக்கு புழுங்க கூடாது என்று வீசுகிரானே இவன் அன்பல்லவா அன்பு என்று வியந்து போனார்களாம்.
அதற்கு அவன் சொன்னானாம் அவளுக்கு புழுங்குமே என்பதற்காக வீசவில்லை, கல்லறையின் ஈரம் காய்வதற்கு முன்பே அடுத்த கல்யாணம் செய்துகொண்டான் என்று யாரும் பேசகூடாது பாருங்கள், அதற்காக புதைத்த இடம் காய்ந்து போவதற்காக வீசுகிறேன் என்றானாம்.
அந்த உத்தம புருஷனாவது கல்லறை காய்வதற்கு விசிறிகொண்டு வீசினான், ஆனால் இன்று தமிழ்நாட்டில் உயிர் போன சூடே இன்னும் அடங்கவில்லை, அதற்குள் நான்தான் அடுத்த பட்டத்து ராணி என்று ஒரு அம்மையார் கட்டியம் கூறி குதிக்கிறார், இதை பார்பதற்கு வேதனையாக இருக்கிறது.
நாட்டு வரலாற்றை பொறுத்தவரை தலைவர்கள் சாகலாம் நாடுசாகாது. ஒருதலைவர் இறந்துவிட்டாரே என்று மற்றவர்கள் வளர்ச்சி பணிகளை மக்கள் பணிகளை செய்யாமல் இருக்க முடியாது, ராஜ ராஜ சோழன் காலம் தொடங்கி நரேந்திரமோடி காலம் வரையில் இது தான் நடந்துவருகிறது, இது தான் இயற்க்கை.
ஆனால், அதற்கும் எல்லையும் இலக்கணமும் இருக்கிறது, மகாத்மா காந்தி மறைந்துவிட்டார் என்பதற்காக அவருடைய புதல்வனுக்கோ, பேரனுக்கோ அதே மரியாதையை நாட்டில் கொடுக்க முடியாது. காந்தியை போன்றோ அல்லது காந்தியை விடவோ அவர்களது தகுதி இருந்தால் அவர்களை மதிப்பதில், அவர்களின் வழிகாட்டுதலை ஏற்பதில் சிக்கல் இருக்காது, ஆனால் காந்தியின் வாரிசு என்ற ஒரே காரணத்திற்க்காக யாருக்கும் பட்டுக்கம்பளம் விரிக்க இயலாது.
காந்திக்கே இந்த நிலை என்றால் ஜனநாயக நாட்டில் மற்றவர்களின் நிலை சற்று கவனிக்க வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை தனது அரசியல் வாரிசு என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்ற ஒன்றை தவிர மற்ற எல்லாவற்றையும் செய்தார், சினிமா வாய்ப்பு இல்லாமல் இருந்த அம்மையாரை அழைத்து வந்து சத்துணவு திட்டத்திற்கு பிரச்சாரம் செய்யும் பணியை கொடுத்தார்.
பொதுகூட்டங்களில் பேசவும், கட்சியில் கொள்கைகளை பரப்பவும், பாராளுமன்ற மேல்சபையில் கட்சியின் பிரதிநிதியாக பங்குபணி ஆற்றவும் வாய்ப்பை வழங்கினார். ஜெயலலிதா அதை சரிவர பயன்படுத்திக்கொண்டு கட்சிக்குள் வளர்ந்தார், எதிர்ப்புகளை சமாளித்தார், எம்,ஜி.ஆருக்கு பிறகு தானே கட்சியின் வழிகாட்டி என்று பிரகடனபடுத்திக் கொண்டார்.
இதில் விமர்சனங்கள் செய்ய எதிர்கருத்துக்களை சொல்ல வழி இருக்கிறது, ஆனாலும் கூட அவர் கட்சியின் தலைமை பொறுப்பிற்கு வந்ததை இயல்புக்கு விரோதமானது என்று யாரும் துணிந்து கூறிவிட முடியாது, காரணம் எம்.ஜி.ஆர் வாழும் காலத்திலேயே அம்மையாருக்கு என்று மக்கள் மத்தியில் சிறிது செல்வாக்கு இருந்தது. அதனால் தான் கட்சி தலைமை கொடுத்த பணியை அவரால் செல்வனே செய்ய முடிந்தது.
ஆனால் சசிகலாவின் நிலைமை என்பது வேறு, அவர் ஜெயலலிதாவின் தோழி, அவரோடு கூட இன்பத்திலும் துன்பத்திலும் இருந்திருக்கிறார், சில நேரங்களில் அம்மையாரால் துண்டிக்கப்படவும் செய்திருக்கிறார். இவைகள் எல்லாம் அவர்கள் இருவருக்கும் மத்தியிலிருந்த தனிப்பட்ட உறவுகள், விரிசல்கள் அவைகளை மட்டுமே வைத்து கொண்டு கட்சி தலைமைக்கு நானே தகுதியானவள் என்றால் அது நேர்மைக்கும் ஜனநாயகத்திற்கும் விரோதமானது.
சசிகலா பதவிக்கு வருவதும் வராததும் அவர்களது சொந்த கட்சி விவகாரம், இதில் கருத்து சொல்ல மற்றவர்களுக்கு என்ன இருக்கிறது என்று சிலர் எண்ணக்கூடும், கட்சி என்பது தனிநபரின் சொத்தாக இருந்தால் அதில் கருத்து கூற எதுவும் இல்லை தான், ஆனால் அரசியல் கட்சி ஆட்சி நடத்துகிற தகுதியை பெற்றதனால் பொதுமக்களும் அதில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
ஒன்றரை கோடி உறுப்பினர்கள் தங்களுக்கு இருப்பதாக அவர்களே கூறுகிறார்கள். அந்த ஒன்றரை கோடி தொண்டர்களை வழிநடத்துகிற பொறுப்பும் அறிவாற்றலும் இவருக்கு இருக்கிறதா? இல்லையா என்றே நமக்கு தெரியவில்லை. மேலும் அ.தி.மு.க உறுப்பினர்கள் என்பவர்கள் தமிழ்நாட்டு மக்களே தவிர வேற்றுகிரகத்திலிருந்து வந்து குடியேறியவர்கள் அல்ல. அதனால் இதில் தமிழ்நாட்டு மக்கள் பிரச்சனையும் அடங்கி இருக்கிறது.
ஜெயலலிதா அவர்களின் அரசியல் வாரிசாக சசிகலா வர விரும்பினால், முதலில் அவர் கட்சியில் பொதுச்செயலாளர் பதவியை தவிர்த்து மற்ற ஏதாவது ஒரு சிறிய பதவியில் அமர்ந்து கட்சி பணியில் களத்தில் அனுபவம் பெறட்டும், ஆட்சியில் பங்குபெற விரும்பினால் கூட அமைச்சராகவோ, வாரிய தலைவராகவோ வரட்டும் அதன் பிறகு அவருக்கு திறமை இருந்தால் முதல்வர் பதவியை நோக்கி நகரட்டும், இது தான் ஆரோக்கியமான ஜனநாயகத்தின் வழிமுறையாக இருக்கும்.
அதைவிட்டு விட்டு வானத்திலிருந்து வந்த தேவதை, திடிரென்று நான் தான் ஆளவந்திருக்கும் அரசன் என்று சொன்னால், அதை ஏற்றுகொள்ளும் மக்கள் பலவற்றையும் சிந்திக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள், கட்சி தலைமை ஏற்க அனுபவமும், அறிவும், நிர்வாக திறமையும் கொண்ட எத்தனையோ தலைவர்கள் அதே கட்சியில் இன்றும் இருக்கிறார்கள், எம்,ஜி,ஆர் அரும்பாடுபட்டு உருவாக்கிய கட்சியை, ஜெயலலிதா பல இன்னல்களுக்கு இடையிலும் வளர்த்த கட்சியை, கோவில் கிடா பலிகொடுப்பது போல விட்டு விடுவது நாட்டுக்கும் நல்லதல்ல, அந்த கட்சி தொண்டர்களுக்கும் நல்லதல்ல.
ராஜாஜி பதவிவிலகி காமராஜர் வந்தபோது இவரென்ன படித்தவரா? இவருக்கு என்ன தெரியும்? என்று பலரும் கேட்டார்கள், அண்ணாத்துரையும் இந்த கேள்வியை எதிர்கொண்டார், இவர்கள் எல்லோரையும் விட அதிகமாக எம்.ஜி.ஆர், நடிகர், கூத்தாடி, திறமை என்பதே இல்லாத பொம்மை என்பது போன்ற கடினமான விமர்சனங்களையும் எதிர்கொண்டார். ஜெயலலிதாவும் அப்படிதான் அதேபோல்தான் இன்று சசிகலாவையும் சொல்கிறார்கள், போகப்போக எல்லாம் சரியாகிவிடுமென்று சில நடுநிலைவாதிகள் சமாதானம் கூறுகிறார்கள்.
இங்கே வந்திருப்பது சசிகலா திறமையில்லாதவர் என்ற விமர்சனம் மட்டுமல்ல, அவர் நம்ப தகுந்தவரா? என்ற கேள்வியும் வந்திருக்கிறது, இதற்கு முன்பு ஜெயலலிதா காலத்தில் நடந்த எல்லாவிதமான முறைகேடுகளுக்கும் சசிகலாவும் அவரது குடும்பத்தினருமே மூலக்காரணமென்று சாதாரண மக்கள் மட்டுமல்ல அவர்களது கட்சிக்காரர்களே கருதினார்கள். நேராகவும் மறைமுகமாகவும் விமர்சனமும் செய்தார்கள். எனவே முதலில் சசிகலா தன்மீது உள்ள நேர்மை இல்லாதவர் என்ற களங்கத்தை போக்க முயலவேண்டும், அதன்பிறகு கட்சியை பற்றியும் ஆட்சியை பற்றியும் நினைக்கவேண்டும், அதற்கு அவருக்கு பொறுமையும் சகிப்பு தன்மையையும் வேண்டும்.