சொற்பொழிவு தொடர் -- 9
அன்பார்ந்தவர்களே
இது மாலை நேரம். பகலும், இரவும் சந்திக்கின்ற அருமையான பொழுது. உச்சி வெயிலின் தாக்கம் குறைந்து களைப்பு மறைந்து, சுறுசுறுப்பும் தெம்பும் புத்துணர்ச்சியும் மனதிலும் உடம்பிலும் சுடர்விடுகின்ற நேரம். இதனால் தான் நமது பெரியவர்கள் படிப்பதையும், சிந்திப்பதையும் சந்திப் பொழுதுகளான காலை நேரத்திலும் மாலை நேரத்திலும் வைத்து கொள்ள சொன்னார்கள். மாலை நேரத்தில் நமது மனதை தொடுகின்ற நல்ல விஷயங்கள் நம் வாழ்கையில் புதிய பாதையை காட்டும். பலருடைய வாழ்வின் திருப்புமுனைகளுக்கான சம்பவங்கள் மாலைப்பொழுதிலேயே நடந்திருப்பதை சிந்தித்து பார்த்தால் மாலையின் மகத்துவம் நன்றாக தெரியும்.
சென்ற அமர்வில் கபிலருடைய சாங்கிய தத்துவத்தில் காரண காரிய வாதம் பேசப்படுவதும், அதற்கு சத்காரிய வாதம் என்ற பெயரை சூட்டி இருப்பதும் நாம் அறிந்தது. எந்தவொரு செயலுக்கும் காரணம் இல்லாமல் செயல்கள் நடைபெறுவது இல்லை. என்று கூறிய கபிலர் அத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. ஒவ்வொரு செயலுக்குள்ளும், ஒவ்வொரு பொருளுக்குள்ளும் அடுத்த காரியத்திற்கான காரணங்கள் மறைந்திருப்பதாகவும் ஆராய்ந்து அதை உதாரணங்களோடு நிரூபிக்கவும் செய்தார்.
நமது உடலை மறைக்க ஆடைகள் அணிகிறோம். வண்ணமயமான ஆடைகள் நமக்கு இல்லாத அழகை இருப்பது போல செய்கிறது. சில நேரத்தில் நாம் அணிகிற ஆடைகள் நமது உடல் அழகை கெடுத்துவிடவும் செய்கிறது. இப்படி நமக்கு அழகை கொடுப்பதற்கும், அழகை கெடுப்பதற்கும் காரணமாக இருக்கின்ற ஆடையினுடைய மூலம் எது? நூல் இல்லாமல் ஆடைகளை நெய்ய இயலாது. ஆகவே ஆடைக்கு காரணமாக இருப்பது நூல் எந்த பொருளிருந்து வந்ததாக இருந்தாலும் நூல் இல்லாமல் ஆடைகளை தயாரிக்க இயலாது.
ஆடைக்கு நூல் காரணமாக இருப்பது போல, நூலினுடைய காரியமாக ஆடை இருக்கிறது. இப்படி தான் ஒன்றுக்குள் ஒன்று மறைந்திருக்கிறது. எந்த பொருளும் திடீரென்று எந்த மூலமும் இல்லாமல் தோன்றிவிட இயலாது. உடை என்பது நூலிலிருந்து தான் தோன்ற முடியுமே தவிர ஓங்கி உயர்ந்து நிற்கின்ற மலையிலிருந்தோ, சீறிப் பாய்கின்ற நதியிலிருந்தோ ஆடை வந்துவிட முடியாது. காற்று ஆடையை தராது. நெருப்பு ஆடையை உருவாக்காது. நூல் மட்டும் தான் ஆடையை உருவாக்க முடியும். ஏன் அப்படி? நெருப்பிலோ, காற்றிலோ, நீரிலோ, மலையிலோ ஆடைக்கான தன்மை சிறிது கூட கிடையாது. இல்லாத ஒன்றிலிருந்து ஒன்றை உருவாக்கிட முடியாது.
இன்னும் விளக்கமாக இதை புரிந்துகொள்ள வேண்டுமானால், ஆடையின் அம்சம் தண்ணீரிலோ காற்றிலோ அல்லது வேறு எந்த பொருளிலோ இல்லை. அதனால் அவைகளிலிருந்து ஆடையை உற்பத்தி செய்ய முடியாது. இதை பற்றி கபிலர் கூறுவது என்னவென்றால் உடையின் அம்சம் நூலில் இருக்கிறது. அதாவது காரணத்திற்குள்ளேயே காரியம் இருக்கிறது. உடை உடையாக மாறுவதற்கு முன்பே நூலுக்குள் அது சூட்சமமாக மறைந்திருக்கிறது. வேறொரு விளக்கத்தில் இதை சொல்வது என்றால் தயிர் ஒரு காரணம். அதிலிருந்து கடைந்தெடுக்கப்படுகின்ற வெண்ணை ஒரு காரியமாகும். இன்னும் சொல்வது என்றால் மண் காரணம். பானை காரியம். தயிரில் எப்படி வெண்ணை முன்பாகவே மறைந்திருக்கிறதோ அதே போல மண்ணில் பானை மறைந்திருக்கிறது. பானையின் தன்மை மண்ணில் இல்லை. என்றால் ஒருபோதும் மண்ணால் பானை செய்ய இயலாது.
ஒன்று ஒன்றாக உருவாவதற்கு முன்பே அது இருந்தது என்று கபிலர் கூறுவது சற்று விசித்திரமாக படும். உற்பத்தி ஆவதற்கு முன்பே அந்த பொருள் இருந்தது என்றால் உற்பத்தி என்பதை பற்றிய சிந்தனையே தேவையில்லையே காரணத்திற்குள்ளயே காரியம் அடங்கிவிட்டது என்றால் எதையும் புதியதாக செய்யவேண்டிய அவசியம் இல்லையே. மண்ணில் பானை இருக்கிறது என்றால், பானை செய்யக்கூடிய வேலையை வெறும் மண் செய்துவிட வேண்டியது தானே. நூலில் புடவை இருக்கிறது என்றால் நெசவு செய்யவேண்டிய அவசியம் இல்லையே. நூலை உடல் முழுவது சுற்றிக் கொண்டு அலையலாமே? என்று நமது அவசர புத்திக்கு தோன்றும்.
சற்று நிதானமாக சிந்தித்து பார்போம். காரணத்தில் காரியம், கண்ணுக்கு தெரியாத சூட்சம வடிவத்தில் இருக்கிறது. அதாவது மண்ணுக்குள் பானை என்பது சூட்சம ரூபத்தில் இருக்கிறது. காரணத்தில் சூட்சமமாக இருப்பது காரியத்தில் ஸ்தூலமாக இருக்கிறது. அதாவது அருவமான காரணம், உருவமான காரியமாக வருகிறது. உண்மையில் மண்ணில் பானை இல்லையென்றால் எத்தனை முயன்றாலும் அதிலிருந்து பானையை செய்துவிட முடியாது. காரியம் அதனுடைய காரணத்தில் அமைந்து இருப்பதனால் தான் படைப்பு நிகழ்கிறது. இல்லாத ஒன்றிலிருந்து எதையும் உருவாக்கிவிட முடியாது என்பதை மீண்டும் நாம் நினைவில் நிறுத்த வேண்டும். மஞ்சள் நிறத்திலிருந்து, நீல நிறத்தை உருவாக்குவதற்கு குட்டிக்கரணம் போட்டு நின்றாலும் முடியாது அல்லவா? ஆயிரம் நெசவாளர்கள் கூடி நின்று தறி போட்டாலும் தண்ணீரிலிருந்து ஆடையை நெய்துவிட முடியாது அல்லவா?
இந்த சத்காரிய வாதத்தை ஒப்புக்கொள்ள முடியாது என்றால் எதிலிருந்தும் எதையும் உருவாக்கலாம் என்ற விந்தையான கோட்பாடு உருவாகிவிடும். அதாவது ரோஜா செடியிலிருந்து மல்லிகை மலரைப் பறிக்கலாம். இளநீரிலிருந்து ஜவ்வாது எடுக்கலாம். மாமரம் பலாப்பழத்தை தரலாம். கடலுக்கடியில் காற்றாடி விடலாம். என்றாகிவிடும். ஆனால், இந்த விபரீதங்கள் ஒருபோதும் நடக்க முடியாது. உலகம் உள்ளமட்டும் வெண்டைக்காயில் மிளகாய் காய்க்காது. சூரியன் வடக்கே உதிக்காது. இருக்கும் ஒன்றிலிருந்து தான் எல்லாமும் உருவாகும். ஆக இந்த உலகத்திலுள்ள எந்த பொருளும் ஒன்றோடு ஒன்று சம்மந்தம் இல்லாமல் தனித்தனியாக இருப்பவை அல்ல. கண்ணுக்கு தெரியாத சங்கலி ஒவ்வொரு பொருளையும் இணைத்து கொண்டிருக்கிறது. அவைகள் மாறுபாடுடையதாக தெரிவதற்கு முக்குணங்களே ஏற்ற தாழ்வுகளாக இருக்கிறது.
சுற்றிக்கொண்டிருக்கின்ற இந்த உலகம் காரியம் என்றால், இதற்கு காரணமாக இருப்பது கபிலரின் தத்துவப்படி பிரகிருதி ஆகும். பிரகிருதி கண்ணுக்கு தெரியாத சூட்சம காரணமாக இருந்து ஸ்தூலமான உலகம் என்ற காரியத்தை உருவாக்குகிறது. இங்கு நாம் காணுகின்ற எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. எல்லை என்ற வரையறையை பற்றி பேசுகிற போது, அந்த எல்லையை தாண்டியும் எதோ ஒன்று இருக்கிறது என்ற பொருளும் வந்துவிடுகிறது. எல்லையில்லாத பிரபஞ்சம் என்று அழைக்கப்படுகிற இந்த உலகம் ஸ்தூல பொருளால் அதாவது பிரகிருதியால் ஆனது. என்பதனால் எதற்கும் எல்லை இருக்கிறது. பிரபஞ்சம் எல்லை இல்லாதது அல்ல இதன் எல்லைக்கு அப்பாலும் ஒன்று இருக்க வேண்டும். எல்லையுடைய உலகம் ஒரு காரியம் என்றால் எல்லைக்கு அப்பால் காரணம் இருக்க வேண்டும்.
இன்று நாம் உலகத்தில் அனுபவிக்கிற பொருட்கள் அனைத்துமே நமக்கு மூன்று விதமான அனுபவங்களை தருகிறது. ஒன்று இன்பமான பொருட்கள். மற்றொன்று துன்பமான பொருட்கள். ரோஜா மலர் இன்பத்தை தருகிறது. கற்றாழை நாற்றம் துன்பத்தை தருகிறது. தண்ணீர் இன்பத்தை தருகிறது. விஷம் துன்பத்தை தருகிறது. இப்படி இரண்டு விதமான தன்மைகளை தனித்தனியாக கொண்ட பொருட்கள் மட்டுமல்லாது, மூன்றாவதாக பொருள் ஒன்றும் உள்ளது. அது இன்பத்தையும் துன்பத்தையும் சேர்த்து தருவது. புகையிலை அனுபவிக்கும் போது இன்பம். அனுபவித்து முடிந்துவிட்டால் துன்பம். மது குடிக்கும் போது இன்பம். குடித்து பித்தேறி விட்டால் துன்பம். பெண் மோகமும், பணத்தாசையும், மண்ணாசையும் இன்பமாக தெரிந்தாலும் துன்பமாக முடியும். இந்த மூன்று தன்மை தான் உலகத்தில் உள்ள நாம் அனுபவிக்கின்ற பொருட்கள் அனைத்திற்கும் பொதுவான தன்மையாகும்.
பிரபஞ்சம் முழுவதும் தேடிப் பார்த்தாலும் இந்த மூன்று வகையான பொருட்கள் தான் கிடைக்கிறது. பிரபஞ்சத்தில் இந்த மூன்று விதமான தன்மைகள் இருப்பதனால் இதனுடைய காரணமாகிய பிரகருதியிலும் இந்த மூன்று தன்மைகளும் சூட்சமமாக அடங்கி இருக்க வேண்டும். இந்த மூன்று தன்மைகளும் பொருட்களின் ஸ்தூலத்தோடு சூட்சமமாக ஏதாவது ஒரு வகையில் கூடியோ குறைந்தோ இருப்பதனால் தான் மாறுபாடுடைய பல பொருட்கள் ஜனனம் எடுக்கின்றன. வெளிப்பார்வைக்கு பொருட்களின் தன்மையில் வித்தியாசம் இருந்தாலும் உள்ளுக்குள்ளே காரணங்கள் என்ற கையிற்றால் இணைக்கப்பட்டு ஒற்றுமை உடையதாகவே இருக்கிறது.
இது கபிலர் கூறுகிற சத்காரிய வாதமாகும். இந்த சத்காரிய வாதத்தை பார்க்கிற போது வேதாந்திகள் என்று அழைக்கப்படுகிற அத்வைதிகளின் கருத்துக்கள் நமக்கு இயல்பாகவே நினைவுக்கு வந்துவிடும். காரணமாகிய பிரகிருதியிலிருந்து காரியமாகிய பிரபஞ்சம் வந்தது என்று கபிலர் கூறுவது போல் தானே அத்வைதமும் காரணமாகிய பிரம்மத்திலிருந்து காரியமாகிய உலகம் தோன்றியது என்று கூறுகிறார்கள். எனவே கபிலரின் சாங்கிய தத்துவமும் வேதாந்திகளின் அத்வைத தத்துவமும் ஒன்றாகத்தான் இருக்க வேண்டுமோ. ஒரு சில வார்த்தை பிரயோகங்கள் தான் மாறுபட்டு இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுவதை தவிர்க்க முடியாது.
நமது சிந்தனை தேரை சற்று விசாலமான பாதையில் செலுத்தி தேடி பார்த்தால் சாங்கியதிற்கும் வேதந்ததிற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. கபிலரின் கருத்துப்படி காரணத்தில் இருந்து காரியம் தோன்றியது. அப்போது உண்மையாகவே காரணம் என்பது காரியமாக மாறிவிடுகிறது. அதனால் ஆதி சங்கரரின் கருத்துப்படி காரணம் ஒருபோதும் காரியமாக மாறுவது இல்லை. மாறுவது போன்ற ஒரு மயக்கத்தை தான் அது ஏற்படுத்துகிறது.
ஒற்றையடி பாதை இருட்டுகிற வேளை தன்னந்தனியாக நடந்து செல்கிறோம் அப்போது பாதையில் ஏதோ ஒன்று வளைந்து நெளிந்து கிடக்கிறது. அதை பாம்பு என்று அடிக்கவும் முடியவில்லை. கயிறு என்று தாண்டி செல்லவும் முடியவில்லை. காரணம் இதுவா அதுவா என்று நமக்கு நிஜமாக தெரிவது இல்லை. இந்த இடத்தில் சங்கர தத்துவம் கயிரை காரணம் என்கிறது. பாம்பை காரியம் என்கிறது. அதாவது கயிறு பாம்பு போல் தெரிகிறதே தவிர உண்மையாக அது பாம்பு இல்லை. மேலும், எந்த சூழலிலும் கயிறு பாம்பாக மாறிவிட முடியாது இதே போன்று தான் பரம்பொருள் பிரபஞ்சம் போன்று தோற்றம் அளிக்கிறது. ஆனால், உண்மையில் அது பிரபஞ்சமாக மாறிவிடவில்லை இத்தகைய வேற்றுமை தான் சாங்கியத்தையும், வேதாந்தத்தையும் பெரிய கோடுபோட்டு பிரிக்கிறது.
கபிலரின் தத்துவம் சத்காரிய வாதமென்ற இந்த காரண காரிய சிந்தனையை ஏற்றுக் கொண்டதற்கும் மிக அழுத்தம் கொடுத்து பிரஸ்தாபிப்பதற்கும் காரணம் இருக்கிறது. பிரபஞ்சம் என்பதன் தோற்றத்தை பற்றிய இருவேறு கருத்துக்களை மறுக்கவேண்டிய கட்டாயம் சாங்கியத்திற்கு உண்டு. சர்வ வல்லமை படைத்த இறைவன் தன்னையே உலகமாக காட்டிக் கொள்கிறான் என்பது ஒரு தத்துவம். உலகம் என்பதோ ஜடப்பொருள். இறைவன் என்பதோ சித்து பொருள். அதாவது இறைவன் அறிவு மயமானவன். அந்த அறிவிலிருந்து ஜடப்பொருள் தோன்றுவது எப்படி அது ஆகாத காரியம் காரியத்தில் உள்ள தன்மைகள் காரணத்திலும் இருக்க வேண்டும் காரணத்தில் இல்லாத காரியம் என்பது இருக்க இயலாது. சித்து என்ற அறிவிலிருந்து அதற்கு மாறான ஜடம் தோன்றாது. காரியமாகிய ஜடம் தோன்ற வேண்டுமென்றால் அதனுடைய காரணத்திலும் ஜடம் இருக்க வேண்டும்.
இரண்டாவது தத்துவம் என்னவென்றால் இறைவன் வரம்பற்ற சக்தி படைத்தவன். அவனுடைய ஆற்றலுக்கு எல்லை வகுத்திட முடியாது. இது இறைவனால் முடியும் அது இறைவனால் முடியாது என்று வரையறை செய்து பேசுவது எல்லாம் முட்டாள்தனமாகும். அப்படிப்பட்ட சர்வ வல்லமை படைத்த இறைவன் சடப்பொருள் என்ற காரியத்திலிருந்து தான் பிரபஞ்சத்தை படைக்க வேண்டுமா என்ன? எதுவுமே இல்லாமல் அவனால் உலகத்தை தோற்றுவிக்க முடியும் என்று நம்புகிற நம்பிக்கை இரண்டாவது தத்துவம் எனலாம்.
இது கபிலரின் சிந்தனைப்படி மிகவும் தவறு. காரணம், இல்லாததிலிருந்து எதையும் உருவாக்க முடியாது. இருப்பதில் தான் உருவாக்கம் என்பதை நடத்த இயலும். இறைவன் என்றாலும் சரி. மனிதன் என்றாலும் சரி. இல்லாத பொருள் இல்லாதது தான் இருக்கின்ற பொருள் இருக்கின்றது தான். என்று சத்காரிய வாதத்தினால் இரண்டு தத்துவங்களையும் கபிலர் மறுக்கிறார். அந்த மறுப்பிற்கு அசைக்க முடியாத வேறு பல சான்றுகளையும் அவர் நமக்கு தருகிறார். அவைகளை பற்றி அடுத்த அமர்வில் விரிவாகவே பேசுவோம்.