Store
  Store
  Store
  Store
  Store
  Store

பிரம்மதிற்குள் மனிதன்



சொற்பொழிவு தொடர் -- 7


  ரங்கம் அமைதியாக இருந்தது இன்றைய அமர்வுக்கு சிலர் மட்டுமே வந்திருந்தார்கள். அதில் ஒருவர் குருஜியை வணங்கி, சென்ற அமர்வுகளில் மாயை என்றால் என்ன? என்பதை விளக்கினீர்கள் எளிமையாக புரிந்து கொண்டோம். கர்மா என்றால் என்ன? ஆத்மா என்றால் என்ன? பிரம்மா என்றால் என்ன? என்பதை பற்றியெல்லாம் தெளிவாக்கினீர்கள். எல்லாவற்றிற்க்கும் மகுடம் வைத்தாற் போல ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் விளக்கமாகவே உங்கள் சொற்பொழிவை துவக்கினீர்கள். இருட்டில் கிடப்பவன் வெளிச்சத்தை பார்ப்பதை போல உங்கள் கருத்துக்கள் எங்கள் அறியாமையை போக்க துணை செய்தது. 

இப்போது நாங்கள் ஒன்றை அறிய ஆசைப்படுகிறோம். ஆத்மா, பிரம்மா, கர்மா என்பதை பற்றியெல்லாம் விளக்கமாக கூறுவது இந்திய சாஸ்திரங்கள். அந்த இந்திய சாஸ்திரங்கள் இவைகளை பற்றி கூறுவதை இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம். இந்திய சாஸ்திரங்களுக்கு,சிந்தனைகளுக்கு மூலமாக இருப்பது உபநிஷதங்கள் என்று பல பெரியவர்கள் கூறுவதை அறிந்திருக்கிறோம். எனவே உபநிஷதங்களின் கருத்துக்களையும் எங்களுக்கு தெரிவிக்குமாறு பணிவோடு வேண்டுகிறோம் என்று விண்ணப்பம் ஒன்றை முன்வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுகொண்ட குருஜி அன்றைய அமர்வில் தமது கருத்துக்களை முன்வைக்க துவங்கினார். 

இன்று உலகத்தை அரசியல் ரீதியிலும்,ராணுவ ரீதியிலும் மிரட்டி கொண்டிருக்கின்ற அமெரிக்கா மற்றும் அதை சார்ந்த ஐரோப்பிய நாடுகளின் சரித்திரத்தை எடுத்து பார்த்தால் அதிகபட்சமாக எண்ணுறு வருடங்களுக்கு மேல் இருக்காது. ஆயிரம் வருட சரித்திரம் என்றாலே அவர்களின் நாடுகளுக்கு என்னவென்று தெரியாது. ரோமாபுரி, கிரேக்கம், எகிப்து போன்ற நாடுகளின் இலக்கிய புதைபொருள் சான்றுகளை அடிப்படையாக வைத்து உலக சரித்திரத்தின் வயதையே ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தான் ஆரம்பிப்பார்கள். அதற்கு முன்பு மனிதன் இல்லையா? அவன் நாகரீகமாக வாழவில்லையா? என்று கேட்டால் அதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவே ஐயாயிரம் வருடத்திற்கு முன்னால் மனிதர்கள் வாழ்ந்திருக்கலாம் ஆனால் அந்த வாழ்க்கை கற்கால வாழ்க்கையாக, நவீன கண்டுபிடிப்புகள் இல்லாத வாழ்க்கையாக இருக்குமே தவிர சொல்லி கொள்கிற மாதிரி இருக்காது என்று முடித்துவிடுவார்கள். 

நல்லதோ? கெட்டதோ? வெள்ளைக்கார துரைமார்களிடம் தான் நவீன கண்டுபிடிப்புகள் இருக்கிறது. நவீன கருவிகளின் துணைகொண்டு அவர்களால் தான் காலத்தை துல்லியமாக கணக்கிட முடியும். நம்மால் இயலாது என்று கூறுகின்ற அறிஞர் பெருமக்கள் நாடு முழுவதும் நிறைந்திருப்பதாலும் அவர்கள் வகுத்து கொடுத்த வரலாற்று பாடமே நமது மூளை முழுவதும் ஆக்கரமித்து இருப்பதாலும் அதற்கு இசைந்தார் போல சில விவரங்களை முன்வைத்து அதன்பிறகு உபநிஷத சிந்தனைகளை கூறலாம் என்று கருதுகிறேன். எனவே இப்போது நான் கூறுகின்ற வரலாற்று நிகழ்வுகள் என் கருத்தோ,என் நம்பிக்கைக்கு உடன்பட்டதோ அல்ல. எல்லோரும் சொல்கிறார்கள் அதை நானும் சொல்கிறேன் அவ்வளவு தான்.

கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆரியர்கள் என்ற கூட்டம் இந்தியாவிற்குள் ஆடுமாடுகள் மேய்க்கவும், வசதியாக வாழ்க்கை நடத்தவும் பாரசீக நாடுகளின் பகுதிகளிலிருந்து வந்தார்கள். அப்படி வருகின்ற போது அவர்கள் இங்கே இருந்த பூர்வ குடிகளோடு சண்டைபோட வேண்டிய நிலைமை வந்தது. வெள்ளைநிறமாக இருந்த ஆரியர்களுக்கும் கருப்பு நிறமாக இருந்த பூர்வகுடி மக்களுக்கும் மிக கொடூரமான சண்டை நடந்தது. இந்த சண்டைகளே ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் தேவாசுர யுத்தங்கள் என்றும் பின்னாளில் அவைகளே புராணங்களில் அரக்கர்களுக்கு எதிரான தேவர்களின் சண்டை என்று வர்ணிக்க பட்டதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 

பூர்வகுடி மக்களுக்கும் வந்தவர்களுக்கும் நடந்த சண்டையில் ஆரியர்கள் வெற்றி பெற்றார்கள். ஆயுத பலத்தால், சரீர பலத்தால் வெற்றி பெற்றார்களே தவிர இங்கே இருக்கும் பூர்வகுடி மக்களை எண்ணிக்கையின் அடிப்படையில் அவர்களால் வெற்றிகொள்ள இயலவில்லை. எனவே பூர்வகுடி மக்கள் தொகையே ஆரியர்களுக்கு மிகப்பெரிய சிக்கல்களாக உருவெடுத்தது. இந்த மக்களை என்ன செய்வது என்று அவர்கள் யோசித்தார்கள். அப்போது அவர்கள் முன்னால் இருந்தது இரண்டே இரண்டு தீர்வுகள் தான். ஒன்று பூர்வகுடி மக்களை பூண்டோடு கொலை செய்யவேண்டும் அல்லது அவர்களையும் தங்களது சமூகத்தோடு இணைத்து வாழவேண்டும். 

பூர்வகுடி மக்கள் அனைவரையும் கொலைசெய்வது என்பது அசாத்தியமான காரியம். கொலை என்பது நீடிய நிரந்தரமான அமைதி என்பதை தராது என்று சிந்தித்த ஆரியர்கள். அந்த மக்களோடு இணைந்து வாழ்வது என்று புத்திசாலித்தனமாக முடிவு செய்தார்கள். இணைந்து வாழும் நிலை என்று வருகிற போது விந்தையான சிக்கல் ஒன்று இருக்கிறது. நீயும் நானும் சேர்ந்து வாழ்வோம் எனும் போது உன் பண்பாட்டை நான் ஏற்றுகொள்ள வேண்டும். என் பண்பாட்டை நீ ஏற்றுகொள்ள வேண்டும். பூர்வகுடி மக்கள் தோற்றவர்கள். தோற்றவர்களின் பண்பாட்டை வென்றவர்கள் ஏற்றுக்கொள்வது என்பது தன்மானத்தை பாதிக்கும் செயலாகும். 

ஆதிகால ஆரியர்கள் இயற்கையின் சக்தியை உற்றுக்கவனித்தார்கள் இயற்கையை தெய்வமாக்கி அந்த தெய்வங்களை மந்திரங்களால் போற்றி வழிபட்டார்கள். காற்றை வாயுபகவான் என்றார்கள், நெருப்பை அக்னி தேவன் என்றார்கள், நீரை வருண தேவன் என்றார்கள்,சூரியன்,சந்திரன், இடி,மின்னல் அனைத்துமே அவர்களுக்கு தெய்வமாக தெய்வீக சக்தியாக தெரிந்தது. அவர்களுக்கு தெம்பையும் சிந்தனை திறத்தையும் கொடுத்த சோமபானம் என்ற மூலிகை சாறு கூட தெய்வமாக தெரிந்தது. இயற்கையின் அபூர்வ சக்திகளை இப்படி தொழுவதே ஆரியர்களின் மதமாக இருந்தது. 

எனவே வேதங்களில் காட்டப்படுகின்ற கடவுள்கள் அனைவரும் சாதாரண மனிதர்களை போலவே குறைபாடுகள் உள்ளவர்களாக காணப்பட்டார்கள். கடவுள்களிலும் புரோகிதர்கள் உண்டு,சண்டைக்கு நிற்கும் மல்லர்கள் உண்டு, ஆட்சி செய்யும் அரசர்கள் உண்டு, குடிகார கடவுளும், காமவசப்பட்ட கடவுளும் கூட உண்டு. மனிதர்கள் தங்களது தேவைகள் எதுவோ அந்த தேவைகளுக்கு ஏற்றவாறு கடவுளை இனங்கண்டு போற்றி வணங்கி வரங்களை பெற்றுக்கொள்ளலாம், கடவுளை திருப்தி படுத்த யாகங்களை செய்தார்கள். அந்த யாகங்களில் மிருகங்களை பலி கொடுத்தார்கள். மனிதர்களை கூட பலி கொடுத்ததாக அறிய முடிகிறது. 

வேத பாடல்களில் மனிதனின் உடல் உறுப்புகளை வர்ணிப்பது போலவே தேவதைகளின் உடல் உறுப்புகளும் அதன் வனப்புகளும் வர்ணிக்க பட்டன. ஆனாலும் கூட அந்த தேவதை வடிவங்கள் வழிபாட்டுக்காக வேதகாலத்தில் சிலைகளாக செதுக்கப்பட வில்லை. வழிபாடு செய்வதற்கென்று தனி கோவில்களும் கிடையாது. கடவுளுக்கும், மனிதனுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் இடைத்தரகர்களான பூசாரிகளும் கிடையாது. கடவுளை வழிபட நினைத்த எவனும். நேரடியாக அவரை வணங்கலாம். புரோகிதரை வைத்து கொண்டு தான் பூஜைகள் செய்யவேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த மாதிரியான எண்ணங்கள் கொண்ட ஆரியர்கள் பூர்வகுடி மக்களோடு இணைந்து வாழவேண்டும் என்று முடிவு செய்த போது நாளாவட்டத்தில் அவர்களது சிந்தனை போக்கில் மாறுபாடு ஏற்பட்டது .

அதாவது வெள்ளைநிறத்து ஆரியர்கள் கருப்பு நிற பூர்வகுடி மக்களோடு இணைந்து வாழ்வது என்ற முடிவை எடுத்து இருந்தாலும் கூட கருப்பு நிற மக்களின் கருத்துக்களை ஏற்றுகொண்டது கிடையாது, இதனால் உருவ வழிபாடுகளை ஆரம்ப காலங்களில் விமர்சிக்கவும் செய்தார்கள் ஆனால் இந்த நிலை அதிக நாட்கள் நீடிக்கவில்லை. எண்ணெய்யோடு சேர்ந்த தண்ணீரும் பிசு பிசுப்பாக ஆகிவிடுவது போல். பூர்வகுடி மக்களோடு சேர்ந்த ஆரியர்கள் மாற துவங்கினார்கள். இயற்கை வழிபாட்டோடு எளிமையாக இருந்த ஆரியர் மதம் அளவுகடந்த வெற்றிகளால் அதன் மமதைகளால் சடங்குகளுக்கும், ஆடம்பரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது. இதனால் ஒட்டைகப்பல் மூழ்குவது போல ஆரியமதம் தள்ளாட ஆரம்பித்தது. 

உண்மையை விரும்பும் மக்கள், அறிவை ஆராய்ச்சிக்கு பயன்படுத்திய மக்கள் சடங்குகளை வெறுத்தார்கள். ஆடம்பரங்களை கண்டு அஞ்சி நடுங்கினார்கள், மனம் போன போக்கில் மனிதகுலம் நடந்து கொண்டால் இறுதியில் அழிவை நோக்கி சென்றுவிடும் என்று கருதிய அவர்கள். நிலையான வஸ்துவை பற்றி சிந்திக்க துவங்கினார்கள். அந்த சிந்தனையின் துவக்கம் தான் உபநிஷதங்களின் ஆரம்பம் என்று கூறலாம்.

ஆரியர்கள் இந்தியாவிற்குள் நாடோடிகளாக வந்தார்கள், ஆடுமாடுகளை மேய்த்தார்கள், இங்கே இருக்கின்ற பூர்வகுடி மக்களோடு கொடூரமாக சண்டை போட்டார்கள் என்ற வரலாற்று கதையை மறுப்பவர்களும் நிறைய உண்டு. ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல இந்தியாவை பிறப்பிடமாக கொண்டு வாழ்ந்தவர்கள் இவர்களின் கருத்துக்கள் தான் பாரசீகம் வழியாக மற்ற நாடுகளுக்கு சென்றதே தவிர மற்ற நாடுகளிருந்து இவர்கள் வரவில்லை என்ற கருத்து கொண்டவர்களும் இன்றுவரை இருக்கிறார்கள். நான் அந்த வரலாற்று சண்டைகளோடு சம்மந்தப்பட விரும்பவில்லை நான் கூறவருவது இயற்கையை வழிபட துவங்கிய மனிதன் தனது வழிபாட்டை முறைதவறி அற்ப ஆசைகளை நிறைவேற்றும் கருவிகளாக மாற்ற துணிந்தபோது அறிவை தேடும் கூட்டத்தார் உருவாக்கியது உபநிஷத சிந்தனைகள் என்பதை மட்டும் இங்கு சுட்டிக்காட்டவே வரலாற்றின் சிறுபகுதியை இங்கே எடுத்து காட்ட விரும்பினேன். 

இந்திய சிந்தனைகள் அனைத்திற்குமே மூலம் எதுவென்று கேட்டால் உபநிஷதங்கள் என்று அடித்து கூறலாம். பாரதத்தில் தோன்றிய ஒவ்வொரு ஞானியும் தங்கள் தவ வாழ்க்கையில் கண்ட ஆன்மீக இரகசியங்களுக்கு விடைகளை உபநிஷதங்களில் தான் தேடினார்கள். முகம் பார்க்கும் கண்ணாடி, பார்ப்பவரின் முகத்தை அச்சு அசலாக காட்டுவது போல உபநிஷதங்களும் ஞானிகளின் அனுபவத்தை அப்படியே, உள்ளது உள்ளபடி உண்மை என்று காட்டியது. அப்படி காட்டியதாலோ என்னவோ ஒவ்வொரு ஞானியும்  தான் கூறுவதை மட்டும் தான் உபநிஷதங்கள் சரியென்று கூறுகின்றன, உண்மை என்று ஒத்துக் கொள்கின்றன என்று விளக்கம் கொடுக்க துவங்கி விட்டார்கள். 

காசு பண வரவை பற்றி பொருளாதார நூல்கள் பேசும், இயற்கையின் ஆற்றலை பற்றி இயற்பியல் பேசும், கணிதமும், பொறியியலும் தான் சார்ந்த துறைகளை பற்றி பேசும் இது நமக்கு தெரியும். ஆனால் உபநிஷதங்கள் எதை பற்றி பேசுகிறது என்று கேட்டோமானால் அது ஆத்ம ஞானத்தை பற்றி போதிக்கிறது என்று கூறலாம். ஆனாலும் அவை மட்டுமே அவற்றில் உள்ளன என்று கூறிவிட முடியாது. மனித சிந்தனைக்கு தேவையான அனைத்துமே உபநிஷதங்களில் நிறைந்து கிடக்கிறது என்று துணிந்து கூறலாம். குறிப்பிட்ட ஒரு தத்துவத்தை பற்றி மட்டும் பேசாமல் எதை அறிந்து கொண்டால் எல்லாவற்றையும் அறிந்து கொண்டதாக ஆகுமோ அதைப்பற்றி உபநிஷதம் பேசுவதனாலையோ அது தனித்த புகழை கொண்டிருக்கிறது. 

சுருக்கமாக சொல்வது என்றால் தனித்த வாழ்க்கை முறை என்பதே உபநிஷதத்தின் குறிக்கோளாகும். மனிதனாக இருப்பவன் உடல் அவஸ்தையிலிருந்து விடுபட்டு அதாவது சரீரமே தானென்று மூடத்தனமாக நம்பிகொண்டிருக்கின்ற ஆத்மாவை அதிலிருந்து விடுவித்து தன்னை உணரும் ஆனந்த நிலையில் நிலைநிறுத்துவதே அதன் முக்கிய குறிக்கோள் என்று சொல்லலாம். இப்படி கூறுகிற போது மிக முக்கியமான சந்தேகம் ஒன்று வரும் உபநிஷதங்கள் தோன்றுவதற்கு முன்னாலிருந்த வேதங்களும் பிரம்மாணங்களும் உடல் அவஸ்தையிலிருந்து ஆத்மாவை விடுவிப்பதை பற்றி தானே பேசியது அதிலிருந்து உபநிஷதங்களின் கூற்று எந்த வகையில் மாறுபட்டதாகும் என்பதே அந்த சந்தேகமாகும். 

வேதங்கள் சடங்குகளை நம்புகின்றன பிரம்மாணங்கள் மந்திரங்களை நம்புகின்றன உபநிஷதங்கள் இவை இரண்டுகளை மட்டுமே நம்பவில்லை அதனுடைய அறிவு சடங்குகளையும் மந்திரங்களையும் தாண்டி செல்கின்றது. யாகங்கள் செய்துவிடுவதால் இறைவன் மகிழ போவதில்லை, மந்திரங்களால் அர்ச்சனை செய்வதால் இறைவனுக்கு ஆனந்தம் வரபோவதில்லை என்று அவைகள் பேசுகின்றன. உபநிஷதங்களின் குரலை உன்னிப்பாக காதுகொடுத்து கேட்டால் வேதங்களின் கருத்துக்களை மறுப்பது போலவே நமக்கு தோன்றும். உண்மையை ஒழிக்காமல் சொல்வதென்றால் அது தான் உண்மை. புரட்சிகரமான இந்த கருத்து சடங்குகளிலும் மந்திரங்களிலும் ஊறிகிடந்த அந்தகால மக்கள் காதுகளில் கேட்பது மிகவும் கடினம். எனவே உபநிஷத ஞானிகள் வேறுவகையில் தங்களது சிந்தனைகளை வெளிப்படுத்தினார்கள். 

வேதகாலத்தில் கடவுளை திருப்திபடுத்தி நமக்கு வேண்டிய பொருட்களை நலன்களை பெற்று கொள்வதே யாகங்களின் மிகவும் முக்கிய குறிகோளாக இருந்தது. இந்த குறிக்கோளை சற்று மாத்தினார்கள் உபநிஷத ஞானிகள். மனிதன் தன்னை உணர்வதற்கான ஒரு சாதனமே யாகம், வாழ்க்கை என்பதே ஒரு யாகம் தான் அந்த யாக நெருப்பில் நம்முடைய மோகத்தையும், கோபத்தையும், காமத்தையும் ஆகுதிகளாக போடுவதே யாக பலி எனப்படும். உண்மையும் வாய்மையும் தான் யாகத்தால் கிடைக்கும் நன்மைகளாகுமென்று புதிய பாதை காட்டப்பட்டது.  ஆத்மா என்பது என்ன வென்ற விளக்கத்தை முதல் முதலில் தந்தது உபநிஷதங்கள் தான் பிரம்மத்தை பற்றியும் பிரபஞ்சத்தை பற்றியும் தெளிவான விளக்கங்களை அந்த ஞானிகள் நமக்கு தருகிறார்கள். 

ஆத்மா கண்ணுக்கு தெரியக்கூடியது அல்ல, அதை காணமுடியாது, அதை தீண்டவும் முடியாது. மரணத்தோடு அதன் வாழ்க்கை முடிந்து விடுவதும் கிடையாது. ஒரு மரத்தில் ஒரு கிளையில் இருக்கின்ற பறவை அடுத்த மரத்தில் அடுத்த கிளையில் சென்று அமர்வது போலதான் ஆத்மாவும் மரணத்தால் உடம்பை மாற்றி கொள்கிறது. பாவம் என்பதும் ஆத்மாவை தீண்டாது, புண்ணியம் என்பதும் அதை தொடாது. மூப்பும் அதற்கில்லை, பிணியும் அதற்கில்லை, எந்த உணர்வும் அதற்கு கிடையாது. அதே நேரம் புலன் என்பதன் உணர்வாக ஆத்மா இருக்கிறது. 

ஆத்மாவிற்கு உணர்வுகள் கிடையாது என்றும் கூறப்படுகிறது. அதே நேரம் புலன்களின் உணர்வாகவும் அது இருப்பதாகவும் கருதபடுகிறது. இதை கேட்டவுடன் நமக்கு குழப்பமாக இருக்கிறது. இது எப்படி சாத்தியமாகும் என்றும் நமக்கு தோன்றுகிறது. ஆனால் அதற்க்கான விளக்கம் மிக அருமையானது. கண் என்பது ஒரு புலன் அது பார்க்கிறது அந்த பார்வை தான் ஆத்மா, செவி கேட்கிறது அந்த ஓசையின் உணர்ச்சி தான் ஆத்மா, உடல் தொட்டு உணர்கிறது அந்த பரிசம் தான் ஆத்மா, அதாவது புலன்கள் என்பது ஆத்மாவின் கருவிகள் நாம் பயணப்படுவதற்கு வாகனங்களை எப்படி பயன்படுத்துகிறோமோ அப்படி புலன்களை ஆத்மா பயன்படுத்துகிறது. அப்படி என்றால் ஆத்மா என்பது நமது உடம்பில் எந்த நிலையில் செயல்புரிகிறது என்று ஒரு கேள்வி நமக்கு தோன்றும். 

விழிப்பு நிலை, தூக்க நிலை, கனவு நிலை, தன்னுணர்வு  நிலை, என்று நான்கு நிலைகள் உண்டு விழிப்பு நிலையில் ஆத்மா வெளியுலக தொடர்போடு உறவாடி கொண்டிருக்கும். கனவு நிலையில் உடம்பு கட்டிலிருந்து விடுபட்டு சுதந்திரமாக சஞ்சாரம் செய்யும். ஆழ்ந்த உரக்க நிலையில் கனவுகளும் இல்லை, விழிப்பும் இல்லை, ஆசைகளும் இல்லை இந்த நிலை தான் தற்காலிகமாக ஆத்மா பிரம்மத்தோடு ஒன்றியிருக்கும் நிலைமை என்று சொல்லலாம். ஒரு ஆத்மா இறைவனோடு அதாவது பிரம்மத்தோடு ஒன்றிருக்கும் போது எப்படி சலமற்று இருக்கும்? எப்படி சஞ்சலமற்று இருக்கும்? என்பதற்கு சரியான விளக்கமே ஆழ்ந்த நித்திரை நிலை என்று சொல்லலாம். ஆனாலும் இது நிரந்தரமானது அல்ல உடனடியாக மாறக்கூடியது.

நிரந்தரமான பிரம்மத்தோடு கலந்திருக்கும் நிலை எதுவென்றால் தன்னுணர்வு நிலை என்று கூறலாம், அதாவது ஆத்மாவிற்கு தன்னைப்பற்றிய பிரக்சையும் இருக்கும். தான் யார் தனது நிலை என்ன என்பதை பற்றிய தெளிவும் இருக்கும். அதே நேரம் பிரம்மத்தோடு ஐக்கியமாகிவிட்ட ஆனந்தமும் இருக்கும். இதை இப்படி தான் என்று வார்த்தைகளை கொண்டு வர்ணிக்க இயலாது. காரணம் ஆத்மா கலந்திருக்கின்ற பிரம்மம் என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அது சொற்களுக்குள் அடங்காதது. அதன் இயல்பை பற்றி அதன் உணர்வை பற்றி கூறுவதற்கு உலகில் எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை. அப்படி என்றால் அவ்வளவு பெரிய பிரம்மம் என்ன? அதற்கு உபநிஷத ஞானிகள் தரும் விளக்கங்கள் என்ன? என்பதை அறிய நமக்கு ஆர்வம் ஏற்படுவது இயற்கை.. 

கடலுக்கு எல்லை உண்டு, வீசுகின்ற காற்றுக்கும் எல்லை உண்டு, சூரிய வெளிச்சத்திற்கும் எல்லை உண்டு ஆனால் எல்லையே இல்லாதது பிரபஞ்சம் என்பதை நாமறிவோம். முடிவே இல்லாத அந்த பிரபஞ்சம் எதிலிருந்து தோன்றியது?  அதனுடைய மூலம் யாது? என்று கேட்டால் பிரம்மம் என்ற பதிலை சொல்லலாம். பிரம்மத்திலிருந்து தான் எல்லாம் தோன்றுகின்றன தோன்றியது எல்லாம் மீண்டும் பிரம்மத்திலேயே சென்று ஐக்கியமாகி விடுகிறது. எதிலிருந்து ''எல்லாம்'' தோன்றியதோ எதில் போய் ''எல்லாம்'' முடிகிறதோ? அது தான் பிரம்மம். அந்த பிரம்மத்தை இன்னதென்று வார்த்தைகளால் வரையறை செய்து கூறிவிட இயலாது. உலகிலுள்ள எந்த மொழியிலும் பிரம்மத்தை வர்ணனை செய்யும் வார்த்தைகளே கிடையாது. அது சொற்களை கடந்தது, சிந்தனைக்கு அப்பாற்பட்டது, திடப்பொருளோ திரவபொருளோ, வாய்வு பொருளோ பிரம்மம் அல்ல. கனவோ, தன்னுணர்வோ பிரம்மம் ஆகாது. பின்பு எது தான் பிரம்மம் என்று கேட்டால் எல்லாமே பிரம்மம் என்று தான் பதில் கூறமுடியும். 

மரத்திற்கு வேர் ஆதாரம், கடலுக்கு நீர் ஆதாரம், புடவைக்கு நூல் ஆதாரம், உலகத்திற்கு பிரம்மம் ஆதாரம். பிரம்மம் என்ற வஸ்து அல்லது சக்தி இல்லாத பொருட்களே உலகத்தில் இல்லை இன்று புதியதாக கண்டுபிடிக்கபட்டுவரும் நவீன பொருட்கள் கூட பிரம்மத்தின் ஒரு அங்கமே ஆகும். பிரம்மம் என்ற மஹாசமூத்திரத்திற்குள் மறைந்து கிடக்கும் அபூர்வ சக்திகளே இன்றைய கண்டுபிடிப்புகள் இன்னும் இன்னும் ஏராளமான அபூர்வ சக்திகள் பிரம்மத்திற்குள் புதைந்து கிடக்கிறது. சுரங்கம் வெட்ட வெட்ட வைரம் கிடைப்பது போல பிரம்மத்தினுள் பயணம் செய்ய செய்ய நவீன வஸ்துக்கள் வந்துகொண்டே இருக்கும். எல்லாமே பிரம்மம் எனும் போது மனிதனது ஆத்மாவும் பிரம்மமா? என்ற கேள்வியை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஞானிகள் இந்தியாவில் கேட்டார்கள். 

இதை இந்தியாவில் கேட்டார்கள் என்று நான் கூறுவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. இன்று மேற்கு நாட்டார் பலவித கண்டுபிடிப்புகளை மனித வாழ்க்கைக்கு தேவை என்று கண்டுபிடித்து அறிமுகம் செய்கிறார்கள். நாமும் அவற்றை பயன்படுத்தி அந்த பொருட்களுக்கு அடிமைகளாக கிடக்கிறோம். அந்த பொருட்கள் இல்லை என்றால் நாம் இல்லை என்றளவிற்கு சென்று விட்டோம் ஆனால் அந்த பொருட்கள் நமக்கு நிரந்தரமான அன்பை தருமா? அறிவை தருமா? அமைதியை தருமா? என்று கேட்டால் இவற்றில் எதையும் தராது, தர அவைகளுக்கு இயலாது என்ற பதில் கிடைக்கும். வெளியில் இருக்கின்ற பொருட்கள் எதுவுமே மனிதனுக்கு நீடித்த ஆனந்தத்தை தராது. தற்காலிக சுகங்களை மட்டுமே தரும். மேல்நாட்டார் தற்கால சுகத்தை மட்டும் கவனம் செலுத்திய போது இந்தியர்களாகிய நாம் மனதை துளைத்து ஆராய்ந்து நமக்கு பயணப்பட்டோம். அந்த பயணத்தின் முடிவு அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்ற பதிலை தந்தது. அதனால் தான் பிரம்மம் ஆத்மாவா? என்ற கேள்வியை நம்மால் கேட்க முடிந்தது. 

நமது உபநிஷதங்கள் தத்வமஸி என்று கூறுகிறது அதாவது நீ அதுவாக இருக்கிறாய் என்பது இதன் அர்த்தமாகும். அது என்றால் பிரம்மம், நீ பிரம்மமாக இருக்கிறாய், நீ சர்வ வல்லமை பொருந்தியவனாக இருக்கிறாய், நீ கடவுளாக இருக்கிறாய் என்பது தான் தத்வமஸி என்ற வார்த்தை பொருளாகும். இதே வார்த்தை வில்லின் அம்பு குறிப்பார்த்தவனை நோக்கியே திரும்புவது போல் நமக்குள் திரும்பினால் அஹம் பிரம்மாஸ்மி என்ற வார்த்தை வரும். அதாவது நான் பிரம்மமாக இருக்கிறேன் என்பது இதன் பொருளாகும். காணுகின்ற பொருட்கள் கண்ணுக்கு காணாத பொருட்கள் எல்லாமே பிரம்மம் எனும் போது நானும் பிரம்மமாக இருக்கிறேன் என்பதில் என்ன குறை இருக்கிறது. சுடர்விடுகிற விளக்கிலிருந்து பல சுடர்விளக்குகள் ஏற்றப்படுவது போல பிரம்மத்திலிருந்து பல கூறுகள் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. அந்த விரிவாக்கத்தில் ஆத்மாவும் ஒரு அங்கம் என்ற ஞானயோக விளக்கம் மிகவும் சரியானதே. 

நான் கடவுள் என்றால் அல்லது எனக்குள் கடவுள் இருக்கிறார் என்றால் என்னால் அதை உணர முடியவில்லையே? மகனாக என்னை உணர முடிகிறது கணவனாக என்னை காணமுடிகிறது. தகப்பனாக என்னை பார்க்க முடிகிறது. தலைவனாக, தொண்டனாக, அடிமையாக, மூளை பிசகிபோன பைத்தியகாரனாக கூட என்னை காணமுடிகிறது. ஆனால் என்னை கடவுளாக என்னை ஒருபோதும் பார்க்க முடியவில்லையே அப்படி என்றால் நான் கடவுள் என்பது பொய்யா? எனக்குள் கடவுள் இருக்கிறார் என்பது பொய்யா? நான் கடவுள் என்பதை எந்த சக்தி மறைக்கிறது? எந்த சக்தி அதை உணர முடியாமல் செய்கிறது? என்னை ஆட்டுவிக்கும் அந்த வலுவான சக்தி எது? என்று கேட்டால் உடலும் சதையும் மட்டுமே நானென்று நம்பி கிடக்கும் அற்பமான மனிதா, நீ கடவுள் என்பதை உனக்குள் கடவுள் இருக்கிறார் என்பதை மறைத்து கொண்டிருக்கும் மதில் சுவர் மாயை. மாயை என்றால் ஆசை இந்த உலக பொருட்ளின் மீது நீ கொண்டிருக்கும் பற்று என்று ஞானிகள் பதில் தருகிறார்கள். 

பற்றுகளை அறுத்துவிட்டு பிரம்மத்தை பற்ற முயற்சிக்க வேண்டும். பற்றுக்கள் என்பது பறக்க துடிக்கும் பறவையின் சிறகுகளை வெட்டி எறியும் கோடரி போன்றது. மனிதனின் நிஜ தன்மையை மாற்றி அலங்கோலமாக்கிவிடும் இயல்பு கொண்டது. எனவே பற்றுகளை முற்றிலுமாக அறுக்க வேண்டும். இப்படி கூறியவுடன் ஒரு கேள்வி நமக்கு பிறக்கும். ஆசைகளை முற்றிலும் விட்டுவிட வேண்டுமென்றால் எப்படி வாழ முடியும். பிறந்த குழந்தைக்கு பாலூட்ட நினைப்பது ஒருவித ஆசை அந்த ஆசையை விட்டால் விபரீதம் அல்லவா நடக்கும்? ஆர்ப்பாட்டமாய் அலையடித்து கிளம்பும் நதிவெள்ளத்தை அணைகட்டி தடுக்க நினைப்பது உயிர்களுக்கு உணவளிக்க வேண்டுமென்ற ஆசையின் வெளிப்பாடு. அந்த ஆசையை விட்டு விட்டால் ஆக்க தொழில் என்ற அம்சமே இல்லாமல் போய்விடும்? என்றெல்லாம் தோன்றும்.

அனைத்து ஆசைகளையும் விட்டுவிடும்படி யாரும் கூறவில்லை விடவேண்டிய ஆசைகளை விட்டுதான் தீரவேண்டும், மனிதனின் ஆசை எதை நோக்கி செல்கிறதோ அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான், அழகின் மீது ஆசை விழுந்தால் கலைஞன் ஆகிறான், உடல் மீது ஆசை விழுந்தால் காமுகன் ஆகிறான், பொருள் மீது ஆசை விழுந்தால் லோபியாகிறான், வாழ்வின் மீது ஆசை விழுந்தால் இல்லறத்தான் ஆகிறான், இறைவன் மீது ஆசை விழுந்தால் ஞானியாக மாறுகிறான், எனவே ஆணவம், கோபம், காமம் இவைகளின் மீதுள்ள ஆசைகளை விட்டு விட்டு இறைவன் மீது வை, நீ இறைவன் ஆவாய் அல்லது உனக்குள் இருக்கும் இறைவனை காண்பாய் என்பது தான் உபநிஷ ஞானிகள் நமக்கு தருகின்ற உண்மைகளாகும். 

ஓடு நதிகள் கடலில் கலக்கும் போது தனது சுயரூபத்தை இழந்து கடலாக மாறிவிடுகிறது. அதே போலவே மனிதன் என்பவன் பிரம்மத்தை உணருகிற போது தனது சுயதன்மையை இழந்து பிரம்மாகிவிடுகிறான். அல்லது தனது சுயத்தன்மை என்பதே பிரம்மம் தான் என்பதை உணர்ந்து கொள்கிறான். பிரம்மத்தை உணருவது தான் சாவாமல் இருக்கும் இரகசியம். அதாவது பிறவாமல் இருக்கும் இரகசியம். இந்த இரகசியத்தை யாரும் மூடி மறைத்து வைக்கவில்லை. நாம் தான் தேடி கண்டடையாமல் இருக்கிறோம். தேடினால் கண்டிப்பாக நமக்கும் பிரம்மமாகும் இரகசியம், பிரம்மத்தை உணரும் இரகசியம் கிடைக்கும்.  




Contact Form

Name

Email *

Message *