Store
  Store
  Store
  Store
  Store
  Store

கர்மா என்றால் என்ன ...?


சொற்பொழிவு தொடர் -- 6


ன்பார்ந்தவர்களே!!!

நிறமில்லாத தண்ணீர் எதனோடு சேருகிறதோ, அந்த நிறத்தையும் வடிவத்தையும் அடைவது போல, சர்வ வல்லமை படைத்த இறைவனை எந்த நோக்கத்தில் வேண்டுமென்றாலும், எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் அணுகலாம், அனுபவிக்கலாம், ஆனந்தப்படலாம். பகவான் கிருஷ்ணரை எடுத்து கொள்ளுங்கள். அவனை இப்படி தான் என்று ஒருவரையறைக்குள் கட்டுபடுத்தி யாராலும் பேசமுடியுமா? நிச்சயம் முடியாது. அவன் வட்டங்களுக்குள் அகப்படாத வசந்த காற்று. நீங்கள் எப்படியெல்லாம் உங்களது கற்பனைத்தேரை கிருஷ்ணனை நோக்கி செலுத்துகிறீர்களோ அவன் அப்படி எல்லாம் உங்கள் முன்னால் வருவான். 

கற்றறிந்த அறிஞனாக, அனைத்தும் தெரிந்த ஞானியாக, எல்லாம் வல்ல நிபுணனாக, மாவீரனாக, யுத்த தந்திரியாக, அழகனாக, காதலனாக, காமுகனாக, தோழனாக பகடி செய்யும் விகடகவியாக ஒன்றுமே தெரியாத குழந்தையாக, இப்படி எப்படி வேண்டுமென்றாலும் கண்ணனை காணலாம். கண்ணனை மட்டுமல்ல. அவன் உலகத்திலுள்ள ஆத்மாக்கள் அனைத்தும் பக்குவம் அடைய வேண்டுமென்று பார்த்தனுக்கு பகர்ந்த பகவத் கீதையையும், எந்த வடிவத்திலும் எந்த வகை கருத்து பெட்டகமாகவும் பார்க்கலாம்.

கீதை ஆன்மீக நூல். கீதை விஞ்ஞான நூல். கீதை மனோதத்துவ நூல். கீதை அரசியல் நூல். கீதை இலக்கிய நூல். மனிதனுக்கு எத்தனை வகையான ஆர்வங்கள் இருக்கிறதோ அத்தனை வகை கருத்து தேடலுக்கும் ஆகாரம் கொடுக்கும் அட்சய பாத்திரம் கீதை. காந்தி கீதையை அஹிம்சை நூலாக பார்த்தார். பாலகங்காதர திலகர் புரட்சி நூலாக பார்த்தார். மகாகவி பாரதியார் கர்ம நூலாக பார்த்தார். இது மட்டுமல்ல கீதை அத்வைத நூலாக சங்கரருக்கு பட்டது. விசிஷ்டாத்வைத நூலாக ராமானுஜருக்கு தோன்றியது. துவைத நூலாக மத்வருக்கு காட்சி அளித்தது. எப்படி வேண்டுமென்றாலும் எந்த விஷயத்தை வேண்டுமென்றாலும் கீதை தரும் என்கின்ற அளவிற்கு அதுவொரு ஞான பொக்கிஷமாக இன்று வரை இருந்து வருகிறது. நாளைக்கும் இருக்கும்.

அந்த கீதை எழுநூறு சுலோகங்களால் ஆனது. பதினெட்டு அத்தியாயங்களாக விரிந்தது என்று நம்மில் பலருக்கும் தெரியும். ஒவ்வொரு அத்தியாயமும், ஒவ்வொரு யோகமாக கண்ணனால் காட்டப்படுவதை நாம் அறிவோம். அந்த யோகங்களில் கர்மயோகம் என்று ஒன்று பலராலும் பாராட்டப்படுகிற, விளக்கப்படுகிற வியந்து போற்றப்படுகிற ஒன்றாக இருக்கிறது. அதற்கு காரணம் நமது இந்து மதத்தில் ஆத்மா என்ற விஷயம் எந்தளவு பேசப்படுகிறதோ, மாயை என்பது எந்தளவு சொல்லப்படுகிறதோ அதே அளவு கர்மா என்பதும் பேசப்படுகிறது. கர்மா என்றும், கர்ம வினை என்றும் பேசாத வார்த்தையை பயன்படுத்தாத இந்துக்களே கிடையாது என்று கூறலாம்.

உலகத்தில் எந்த மதத்திலும் இல்லாத தனிச்சிறப்பு இந்து மதத்திற்கு உண்டு என்றால் அது மறுபிறப்பு கொள்கையால் என்று உறுதியாக கூறலாம். இஸ்லாம் மார்கத்தின் படி மனிதன் இறுதி தீர்ப்பு வரும் வரை கல்லறைக்குள் காத்திருக்கிறான். கிறிஸ்தவ மதத்தின்படி இயேசுவின் இரண்டாவது வருகைக்காக ஒவ்வொரு ஜீவனும் கல்லறை தோட்டத்தில் உறங்க வேண்டும். நாம் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்ற தீர்ப்பை இறைவன் வரும் போது தருவான். தவறு செய்தால் தண்டனை உறுதி. அதிலிருந்து தப்ப இயலாது. முடிவே இல்லாத நரக பள்ளத்தில் தவறு செய்த ஆத்மாக்கள் தள்ளப்படும். கடவுள் எக்காரணத்தை முன்னிட்டும், தவறு செய்தவர்களை நரகத்தில் தள்ளாமல் விடமாட்டார் என்பது அந்த மதங்களின் அசைக்க முடியாத கொள்கைகளாகும்.

ஆனால், இந்து மதம் அவைகளுக்கு முற்றிலும் முரணான ஒரு பாதையை காட்டுகிறது என்றால் அது மறுபிறப்பு என்ற பாதையாகும். தவறு செய்தவன் அவன் தவறுக்கு ஏற்ற பிறப்பை எடுத்து, அதை அனுபவிக்க வேண்டும். அனுபவித்த பிறகு அவனுக்கு நற்கதி கிடைக்கும். முடிவே இல்லாத நரக வாழ்க்கை என்பது எந்த ஜீவனுக்கும் கிடையாது. தனது தவறுக்கு தண்டனை அனுபவித்த பிறகு, அவன் இறைவனின் அருள் நிழலை நிச்சயமாக அடையலாம் என்று இந்து மதம் கூறுகிறது. அப்படி மறுபிறப்பை கூறுவதனால், மறுபிறப்புக்கு ஆதாரமாக கர்ம கொள்கை என்பது இருப்பதனால் கர்மா பற்றிய சித்தாந்தம் இந்து மதத்தை பொறுத்தவரை மிக முக்கியமான தத்துவமாகும்.

காலையிலேயே சூரிய பகவான் கிழக்கே உதிக்கிறான். மாலை வந்தவுடன் மேற்கே மறைகிறார். பங்குனி சித்திரை மாதங்களில் கத்திரி வெயில் வாட்டி எடுக்கிறது. ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பெருமழை புரட்டி எடுக்கிறது. மார்கழி, தை மாதங்களில் குளிரும் நம்மை தொல்லை செய்கிறது. இந்த இயற்கை மாற்றங்கள் பல லட்சம் ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று கொண்டே இருக்கிறது. ஒரு வருடத்தில் கூட சித்திரை மாதத்தில் பனி பொழிவதில்லை. மார்கழி மாதத்தில் கத்திரி வெயில் சுடுவதில்லை எல்லாம் நியதிப்படியே நடக்கிறது.

மரம் பழத்தை தருகிறது. பழத்திலிருந்து கொட்டை கிடைக்கிறது. கொட்டை மீண்டும் மரமாகிறது. இப்படிதான் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வொன்றும் சக்கரம் போல சுற்றிக் கொண்டே இருக்கிறது. அனைத்தையும் உன்னிப்பாக கூட அல்ல மேலோட்டமாக பார்த்தாலே ஒரு ஒழுங்கு இருப்பது நமக்கு தெரியும். இந்த ஒழுங்கை தான் நடைமுறை பழக்கத்தில் இயற்க்கை விதி என்கிறோம். இந்த இயற்கை விதிக்கு கட்டுப்படாமல் உலகத்தில் எதுவும் இருக்க முடியாது. இருந்தால் அவைகளால் நிலைக்க முடியாது. வானை அளந்து, கடல் நீரை அளந்து, சந்திர மண்டலத்தை ஆட்சி செய்ய துடிக்கும் மனிதன் கூட, இயற்கை விதிக்கு கட்டுபட்டவனாகவே இன்று வரை இருக்கிறான்.

அன்னையின் கருவறையில் சிசுவாக இருப்பதும், குழந்தையாக பிறப்பதும், சிறுவனாக சிறுமியாக வளருவதும், இளைஞர்களாக மாறுவதும் முதிய பருவம் எய்தி காலனுக்கு இரையாக வீழ்வதும், காலம் காலமாக மனித சமுதாயம் சந்திக்கும் தவிர்க்க முடியாத நிகழ்வாகவே இருக்கிறது. இப்படி இயற்கை விதிப்படி சக்கரம் போல் மனித பருவங்கள் மாறி மாறி அமைவதால் தான் சங்கிலி தொடர் போல அடுத்த தலைமுறைகள் என்பது வந்த வண்ணம் இருக்கிறது.

இயற்கை நியதிக்கு கட்டுப்பட்டு அது போகிற வழியிலேயே மனிதன் தனது வாழ்க்கை பயணத்தை செலுத்துவான் என்றால் அவன் நன்மை செய்தவனாக இருக்கிறான். அதற்கு எதிரான பாதையில் முரண்டுபிடித்து கொண்டு செல்கின்ற போது தீமை செய்தவனாக மாறுகிறான். உதாரணமாக சொல்லுவது என்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்பது இயற்கை வகுத்த விதி. அந்த விதியை மாற்ற முனைகிறபோது ஒழுக்கம் கெடுகிறது. அமைதி தடுமாறுகிறது. அழிவும் வந்துவிடுகிறது. எனவே இயற்கைக்கு எதிரான செய்கையால் ஏற்படுவதே தீமை என்று நாம் முடிவு செய்து கொண்டால் அதுவே சரியாக இருக்கும்.

வேலை செய்தால் கூலி கிடைக்கும் என்பது போல, எந்தவொரு செயல் செய்தாலும், நேர்வினைக்கு எதிர்வினை கண்டிப்பாக உண்டு. நல்ல செயல்களுக்கு புண்ணியம் கிடைக்கிறது. எனவே நல்ல செயல் செய்தால் கிடைப்பது சொர்கமென்று இந்துமதம் கூறுகிறது. மாறாக கெட்ட செயலை நிகழ்த்துகிற போது பாவம் வந்தடைகிறது. அந்த பாவமே நரகமென்றும் இந்துமதம் கூறுகிறது. இதனடிப்படையில் பார்க்கப் போனால் ஆழ்ந்து சிந்தித்தால் சுவர்க்கம் நரகம் என்பது நாம் வாழுகிற இந்த வாழ்க்கையிலேயே இருக்கிறது. தனியாக விண்ணுலகில் இல்லை என்பதும் தத்துவ நோக்கில் தெளிவாகிறது.

ரிக் வேதமும் அதன் சிந்தனையும் இந்திய சமுதாயத்தில் வேரூன்றி நின்ற காலத்தில், இந்த உலகமும் பிரபஞ்சமும் இயற்கை நியதிப்படி நடக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய வல்லமை பெற்ற தேவனாக வருண பகவான் இருந்தான் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் இருந்தது. வருணன் நன்மை செய்தவர்களுக்கு நன்மையையும், தீமை செய்தவர்களுக்கு தீமையும் கொடுக்கும் கடவுளாக வணங்கபட்டான் வருண தேவனின் விழிப்புள்ள கூர்மையான கண்களிலிருந்து நன்மை தீமைகள் தப்பவே தப்பாது என்ற எண்ணம் வலுவாக இருந்தது. இந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே ரிக் வேதத்தில் உள்ள பல பாடல்கள் வருணபகவான் நன்மைக்கான பலனை உடனே தரவேண்டுமென்றும் எதிரிகளின் தீய செயல்களுக்கான விளைவுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டுமென்றும் பல பாடல்கள் இருப்பதை இன்றும் நாம் பார்க்கலாம்.

வேதங்களுக்கு பின்னால் வந்த பிரமாணங்களால் மக்கள் சிந்தனையில் பெரிய மாற்றம் வந்தது. இந்த மாற்றத்தை இந்து மதத்தின் திருப்பு முனை என்று கூறினால் கூட அது சரியானதாக இருக்கும். இயற்கை நியதி என்பதை யக்ஞம் அல்லது வேள்வி என்ற கருத்தில் பார்க்க துவங்கினார்கள். அதாவது வருணதேவனை திருப்தி படுத்த யக்ஞம் நிகழ்த்தினால் அவன் மனமுவந்து நன்மைகளை தருவான் என்று அவர்கள் நம்ப துவங்கினார்கள். அதனால் யாகங்கள் நடத்துவதே நல்ல கர்மம் என்ற சிந்தனை வலுப்பட துவங்கியது. ஒரு செயல் செய்தால் அதற்குரிய பலன் விளையும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் யாகம் என்ற நன்மையை செய்தால் அதற்கான நன்மை கிடைக்கும். தீமை மறையும் என்ற சிந்தனை வேரூன்ற துவங்கியது.

இந்த இடத்தில் தான் இயற்கையின் போக்குப்படி இயந்திரம் போல இருந்த மனித வாழ்க்கையை தனது தனித்தன்மையை காட்டும் விதத்தில் திருத்தி அமைத்துக்கொள்ளலாம் என்ற புதிய பாதை பிறக்க துவங்கியது. இயற்கையின் போக்கிலே செக்குமாடாக சுதந்திரமற்று இருக்கிறோம் என்ற நிலைமையை மாற்றி தானே இஷ்டப்பட்டு தனது வாழ்க்கையை சுதந்திரப்படி அமைத்து கொள்ளலாம். அதற்கு இறைவன் துணை செய்வான் என்ற எண்ணம் வளரத் துவங்கியது. ஆனாலும் கூட, இந்த காலத்தில் கர்மவினை என்ற கோட்பாடு முழுமையாக உருவானது என்று கூறுவதற்கில்லை ஆரண்யங்கள் எனப்படுகிற உபநிஷத காலத்தில் தான் முழுமையான கர்ம கொள்கை உருவானது எனலாம். அதன் பிறகு புகழ்பெற்ற காரண, காரிய சித்தாந்தமும் தோன்றியது.

சுற்றும் வரை உலகம் சுடும் வரை நெருப்பு போராடுகிற வரை மனிதன் என்று கூறுவார்கள். அதாவது செயல் என்ற ஒன்று நடந்து கொண்டிருக்க வேண்டும். செயல்பாடு இல்லை என்றால் இயக்கம் என்பது நின்று விடும். அழிவு என்பது தவிர்க்க முடியாததாக ஆகி விடும் என்பது தான் இதன் பொருள். அதனடிப்படையில் பார்க்கப் போனால் இந்த உலகம் ஒவ்வொரு கணமும் ஓய்வு என்பதே இல்லாமல் செயல்பட்டு கொண்டே இருக்கிறது. மனிதன் என்பவனும் இதற்கு விதிவிலக்கல்ல. நான் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கிறேன் என்று யாராவது சொன்னால் அது அறியாமையின் முதல்தரமான வாதம் என்பதை மறக்க கூடாது. மனிதன் ஒவ்வொரு வினாடியும், தெரிந்தோ தெரியாமலோ கர்மங்களை செய்து கொண்டே இருக்கிறான்

படுப்பது,உட்காருவது,நடப்பது,தூங்குவது என்று விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மனிதன் செயல்பட்டு கொண்டே இருக்கிறான். இப்படி செய்கின்ற ஒவ்வொரு செயலும் செய்கின்ற அதற்குரிய விளைவை ஏற்படுத்தும். தூளியில் ஆடுகிற குழந்தை கால் கைகளை அசைத்தால் உறக்கத்தில் சிரித்தால் அதன் தசைகளும், நரம்புகளும் வலுப்படுகிறது என்ற எதிர்வினை நடக்கிறது. எதுவுமே செய்யாமல் சும்மா இருந்தால் கூட நமது சுவாசம் கட்டுப்பாடு இல்லாமல் நடந்து கொண்டிருக்கிறது சுவாச ஓட்டம் ஓடினால் தான் இரத்தம் ஓடும் உள்ளுறுப்புகள் இயங்கும் அவ்வளவு தூரம் போவானேன் மூச்சு காற்று ஒழுங்காக இயக்கம் செய்தால் தான் உண்ட உணவு கூட ஜீரணமாகும்.  எனவே மனிதனும் சரி, மற்ற ஜீவன்களும் சரி கர்மம் செய்யாமல் இருப்பது இல்லை

ஒவ்வொரு கர்மதிற்கும் அதற்கான வினை அதாவது பலன் உண்டு. இதை தான் கர்மவினை என்று சாதாரண மொழியில் சொல்கிறோம். பலநேரங்களில் கர்ம வினை என்ற வார்த்தையை செயலுக்கான பலன் என்ற பொருளில் கூறாமல் செயலே என்று தவறுதலாக கருதுகிறோம். கர்மம் என்பது செயல் கர்ம வினை என்பது செயலின் பலன் என்பதை மனதில் வைத்து கொள்ள வேண்டும். கர்மா என்பதை தவிர்த்து எப்படி மனிதனின் உயிர் வாழ்க்கை இல்லையோ அதே போலவே கர்ம வினை என்பதையும் தவிர்த்துவிட முடியாது. செயலற்ற நிலை என்பது உயிர் பொருளுக்கும் இல்லை உயிர் இல்லாத ஜடபொருளுக்கும் இல்லை.

செயல் என்றால் உடலால் மட்டும் செய்யும் செயலா? மற்ற எதுவும் செயல் இல்லையா? என்று கேட்டால் அதற்கு தக்க பதில் செயல் என்பது உடல் இயக்கத்தால் மட்டும் வருவது அல்ல. மன இயக்கத்தாலும் வருவதும் செயலாகும் என்று கூறலாம். செயல் என்பதன் மூல கூற்றை அலசி ஆராய்ந்தால் அது மனதில் இருந்தே உதயமாவது நன்றாக விளங்கும். வயல் வரப்புகளை சீர்படுத்த வேண்டுமென்று மனது முதலில் நினைத்தால் தான் சிந்தனை செய்தால் தான் கைகள் கருவிகளை தேடிப் போகும் உடலும் வேலை செய்யும். மனம் நினைக்காத போது வேலை என்பதே இல்லை. அதனால் செயலுக்கு மூல வித்து மனம் என்று சொன்னால் அது மிகையாகாது.

உடலால் செய்தாலும், மனத்தால் செய்தாலும் செயல் என்று வருகின்ற போது அது இரண்டு விதமான பின்விளைவுகளை உண்டாக்குகிறது. முதலாவது விளைவு ஒவ்வொரு செயலும் வருங்காலத்தில் அந்த செயலுக்கான பலனை நமக்கு தருகிறது. அதாவது பசியால் வருந்துகிற ஏழை மூதாட்டிக்கு சோறு கொடுத்தால் வருங்காலத்தில் நீயோ உன் தலைமுறையோ பசியால் துன்பம் அடைகிற போது உனக்கு எந்த வகையிலாவது உதவி வந்து சேருகிறது. அதே நேரம் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பதவியில் இருப்பவனுக்கு எதிராக நீ சதி செய்தால் உனது பதவியும் சதியால் பறிக்கபடுகிறது. சுருக்கமாக சொன்னால் நன்மையால் நன்மையையும், தீமையால் தீமையும் ஏற்படுகிறது. இதை மனோதத்துவ சாஸ்திரம் எதிர்விளைவுகள் என்ற பெயரிட்டு அழைக்கிறது.

இரண்டாவது விளைவு உடம்பில் நெருப்பு சுட்டால், ஆயுதங்கள் தாக்கினால் ஆழமான வடு ஏற்பட்டு, உடம்பு இருக்கிற வரை அழியாது இருப்பது போல நமது செயல்கள், நமது மனதில் மிக ஆழமான பதிவுகளை ஏற்படுத்துகிறது. இந்த மன பதிவுகளே நமது பிரதியட்ச அனுபவங்களாக வளர்கிறது. இந்த அனுபவங்களே நமது குணங்களாகவும், நமது நடத்தையாகவும் பரிமானம் எடுக்கிறது. உதாரணமாக சொல்வது என்றால் விளக்கை சுற்றி பறக்கின்ற சிறிய பூச்சிகளை நெருப்பில் சுட்டு விளையாடும் பழக்கம் தொடர்ந்து வந்தால் குழந்தை பருவம் முதற்கொண்டே மற்றவர்களை இம்சை செய்து ரசிக்கின்ற சுபாவமும் செயல்பாடும் நமக்கு இயற்கையாக அமைகிறது. இதை மனோதத்துவ சாஸ்திரம் சுபாவ குண விளைவு என்று பெயரிட்டு அழைக்கிறது.

எனவே இன்று இப்போது செய்கின்ற செயலானது பிற்காலத்தில் குறிப்பிட்ட குணமாக மாறுவதோடு அல்லாமல் செயலாகவும் வடிவெடுத்து சரியான பின்விளைவுகளை தருகிறது. இதனால் தான் தமிழ்நாட்டு சான்றோர்கள் வினை விதைத்தால் வினை அறுக்கலாம். திணை விதைத்தால் திணை அறுக்கலாம் என்கிறார்கள் சகல துறையிலும் நல்ல ஞானம் பெற்ற வள்ளுவன் கூட

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தானே வரும்.

   என்று அழகாக சொல்கிறார். ஞானியாக இருந்தால் கூட உலக பந்த பாசங்களில் இருந்து விடுபட்டவராக இருந்தால் கூட கர்ம வினையின் தாக்கத்திலிருந்து தப்பித்துவிட முடியாது என்று ராமகிருஷ்ண பரமஹம்சர் தெளிவாக கூறுகிறார். ஆகையால் மனிதனின் இன்றைய துயரத்திற்கு அவனது நேற்றைய கர்மமே காரணம் என்பது சொல்லாமல் விளங்கும். இதனால் தான் நடைமுறை வாழ்க்கையை எளிமையான ஒழுக்க கட்டுப்பாடுகளால் வழிநடத்தி செல்லும் இந்து மதம் உன் வாழ்வும், தாழ்வும் உன் கையிலேயே இருக்கிறது என்கிறது. பகவான் கிருஷ்ணன் தனது கீதையில் உனக்கு நீயே நண்பன்! உனக்கு நீயே விரோதி!! என்று சத்திய வாக்கும் தருகிறான்.

விதியின் போக்கை கர்மா என்பது தான் தீர்மானம் செய்கிறது. இயற்கை நியதியை உடைத்துக்கொண்டு அதாவது பழைய கர்ம வட்டத்தை விட்டு விலகி புதிய பாதையில் மனிதன் செல்ல முடியுமா? என்ற வினாவிற்கு இந்து மதமும் விஞ்ஞானமும் ஒரு சேர, ஒரே குரலில் ஆம். என்ற பதிலை தருகிறது. இன்றைய விஞ்ஞானம் மாற்ற முடியாத முன்பே தீர்மானிக்கப்பட்ட நிகழ்ச்சி முறை ஒன்று இருப்பதாக நம்புவது இல்லை. அதற்கு மாறாக இயற்கை நிர்ணயிக்க இயலாத நிச்சயமற்ற தன்மையில் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது. கடந்த காலம் என்பது கடந்து விட்ட நடந்து விட்ட ஒன்று. எனவே அதை கணிப்பதில் எந்த சிரமமும் இருக்காது. ஆனால், எதிர்காலம் எப்படி இருக்குமென்று உயிர் பொருளுக்கு மட்டுமல்ல. ஜட பொருளுக்கு கூட முன்னறிவிப்பு செய்ய இயலாது.

வருங்காலத்தை உணர முடியாமல் இருப்பதற்கு அறியாமை காரணமல்ல. பொருள்களின் உயிர்களின் இயற்கை தன்மையை அப்படி இருக்கிறது. உயிர் இல்லாத ஜடபொருளின் வருங்கால தன்மையே நிச்சயமற்றதாக இருக்கிறது எனும் போது சர்வ சுகந்திரம் உள்ள மனிதன் எந்த சமயத்தில் எப்படி நடந்து கொள்வான் என்று முன்னமே சொல்ல இயலும் இதன் அடிப்படையில் பார்த்தால் மனிதன் தனது பழைய கர்ம வினைகளை விட்டுவிட்டு புதிய கர்ம பாதையில் செல்ல இயலும். அதாவது கடந்த கர்மா துயரை தருகிறது என்றால் அதை நீக்க இப்போதைய நிலையில் முடிந்தவரை நன்மை செய்தால் அனுபவிக்கும் துயரத்திற்கு முற்றுபுள்ளி கண்டிப்பாக கிடைக்கும் இதனால் தான் இந்துமதம் தீங்கு செய்தவனுக்கு நிரந்தரமான நரகம் எப்போதும் கிடையாது. அதிலிருந்து அவன் முயன்றால் வெளியே வரலாமென்று கூறுகிறது. மனிதனது சுதந்திர தன்மையே அவன் அனுபவிக்கும் நரக வாழ்வை முடித்து வைக்கும் பலம் கொண்டதாக இருக்கிறது.

இப்போது நமக்கு ஒருவினோதமான சந்தேகம் வருகிறது. நல்லது செய்தால் நல்லது விளையும் என்றால் ராமகிருஷ்ண பரமஹம்சரும், ரமணமகரிஷியும் மிக கொடுமையான புற்றுநோயால் அவதிபட்டார்களே அது ஏன்? வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தை திருப்பி காட்டு என்று கருணைமொழி பேசிய ஏசுநாதர் மிக கொடுமையாக சிலுவையில் அறையப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டு உயிர் நீத்தாரே அது ஏன்? அறியாமை இருளில் மூழ்கி கிடந்த கிரேக்க மக்களை விழிப்படைய செய்த சாக்ரட்டிஸ் விஷம் கொடுத்து சாகடிக்க பட்டாரே அது ஏன்? என்பது தான் அந்த கேள்விகள் இது நியாமில்லாத கேள்விகள் என்று யாரும் கூற முடியாது.

இதற்கு தக்க பதிலை இந்து தர்ம சாஸ்திரங்கள் தருகிறது. இன்று ஞானியாக வணங்கத்தக்க புருஷர்களாக பிறந்திருப்பவர்கள் கடந்த காலத்தில் அப்படி இருந்தார்கள் என்று கூறுவதற்கு இயலாது. அப்போதைய அவர்களது கர்மாவிற்கு ஞான வாழ்க்கையை பெற்றாலும் தலைகொடுத்து தான் ஆகவேண்டும் என்ற நியதி இருக்கிறது. ஆனால், அதே நேரம் கர்ம வினைக்கு ஞான சீலர்களே தலை வணங்க வேண்டும் எனும் போது சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம் என்ற வைராக்கியத்தை மற்றவர்கள் பெறுவதற்காகவும், இறைவன் ஞானிகளுக்கு துயரத்தை தருகிறான் என்று நமது மதம் தெளிவாக சொல்கிறது.

எனவே இன்பத்தோடு வாழ நினைப்பவர்கள் தங்களது சொல்லாலும், செயலாலும் மற்றவர்களுக்கு இன்பத்தை கொடுங்கள். அப்படி செய்தால் நீங்கள் நடந்து செல்லும் பாதை முழுவதும் மலர்களால் அலங்கரிக்க பட்டதை காண்பீர்கள். மாறாக மாற்றான் தலையில் நெருப்பை வாரி கொட்டினால் நீங்கள் அக்னி வளையத்திற்குள் நடந்து செல்ல வேண்டிய துயரம் ஏற்படும். இது தான் இந்து மதம் கர்மத்தை பற்றி சொல்வதன் எளிமையான தாத்பர்யம் இதை உணர்ந்து கொண்டால் அனைவருக்கும் நல்லது.




Contact Form

Name

Email *

Message *