Store
  Store
  Store
  Store
  Store
  Store

கருகிய பருவம்




ருவேல முள்ளெடுத்து
காற்றாடி செஞ்சி வைச்சி
கண்ணார கண்டு ரசிச்சோம்
கள்ளிச்செடியில் பழம் பறிச்சி
முள்ளு நீக்கி தின்னும் போது
ரத்தம் வர நாக்கு கடிப்போம்

கழுதையின் வால் பிடிச்சி
தகர டப்பாவில் கல்லு போட்டு
காட்டுக்குள் துரத்தி அடிச்சோம்
பிஞ்சு மாங்காய் திருடிகிட்டு
ஏரிக்கரை மேட்டு மேலே
மிௗகாய் வைச்சி கடிச்சி சிலிர்த்தோம்

பூவரசன் காய்யெடுத்து
பம்பரமாய் சுற்ற விட்டு
கைகொட்டி கூவி சிரித்தோம்
ரயில் ரோட்டில் காசு வைச்சி
காந்தமாய் மாறுமென்று
கால்கடுக்க தவமிருப்போம்

கல்யாண வீட்டினிலே
கட்டி வச்ச வாழை மரத்தில்
காய் பறிக்க துரத்தப்படுவோம்
முட்டு சந்து எதுவென்றாலும்
மூணுபேரு சேர்ந்து விட்டால்
முன்னூறு கொட்டமடிப்போம்

அஞ்சு வயசு ஆன பின்னே
பள்ளிக்கூடம் போவென்ற
அப்பனையே சாபமிடுவோம்
வாத்தியாரை கண்ட பின்னே
பூச்சாண்டி கண்டது போல
அம்மாவின் பின்னால் மறைவோம்

நாலு சுவரு கட்டி
நடுவுல எழுத்தவச்சி
படியென்று கம்பை எடுத்தான்
படுபாவி வாத்தியாரு
கண்ணு ரெண்டை உருட்டி பார்த்து
நம்ம சுதந்திரத்தை கெடுத்து விட்டான்







Contact Form

Name

Email *

Message *