படுக்கையின் ஓரத்தில் அமைதியாக கிடந்த செல்போன் மெலிதாக சிணுங்கியது. விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் கலையாத தூக்கத்தை அழுத்தி உட்காரவைத்து விட்டு செல்போனை எடுத்து செவியில் வைத்தான் சதீஷ். எதிர்முனையில் பார்த்திபன் படபடத்தான் சதீஷ் காலையில் உனக்கு துக்கமான செய்தி சொல்கிறேன் நம்ம மாணிக்கம் சார் செத்து போய்விட்டார் என்றான்.
வாரி சுருட்டிக்கொண்டு உட்கார்ந்த சதீஷ் எப்படி... எப்படி நடந்தது...? நேற்று இரவு ஒன்பதுமணி வரையும் நம்மோடு தானே இருந்தார்..? நல்லாதானே இருந்தார்...? பிறகு எப்படி என்று நிஜமான பதட்டத்தோடு கேள்விகளை அடுக்கினான்.
எனக்கு வேறு விபரம் எதுவும் தெரியாது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது மட்டும் தெரியும். அவர், வீட்டுக்கு கிளம்பி கொண்டிருக்கிறேன். நீயும் வந்து சேர். அங்கு பேசி கொள்ளலாம் என்று போனை கட் செய்தான் பார்த்திபன்.
மாணிக்கம் சார் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியை நம்பவே முடியவில்லை. அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை. கை நிறைய பணம். நல்ல புகழ். அருமையான மனைவி. அடக்கமான குழந்தைகள் என்று இல்லறத்தானுக்கு வேண்டிய அனைத்து விதமான செளரியங்களோடு தானே வாழ்ந்தார். பிறகு தற்கொலை செய்து கொள்ள வேண்டிய தேவை என்ன வந்தது? யோசிக்க யோசிக்க மண்டை குழம்பியது.
முகத்தை அலம்பி வாய் கொப்பளித்து விட்டு பைக்கில் ஏறி மாணிக்கம் வீட்டை நோக்கி பறந்தான் சதீஷ். அவர் வீட்டு வாசலில் சோகத்தோடு நண்பர்கள் பலர் நின்றனர். போலிஸ் ஜீப் ஒன்றும் நின்றது. ஒன்றிரண்டு காக்கி சட்டைகளும் தென்பட்டன. வாசலை கடந்து நடுஹாலுக்கு சென்ற சதீஷின் மனம் தீடிரென்று சோகமயமானது. மாணிக்கம் ஸ்ட்ரச்சரில் நீட்டி படுக்க வைக்க பட்டிருந்தார். அவர் தலை கோணலாக விட்டத்தை பார்த்து வளைந்து கிடந்தது. கழுத்தில் கயிறு இறுக்கமாக நெரித்த இரத்த காயம் அப்பட்டமாக தெரிந்தது. நாக்கு லேசாக வெளியில் துருத்தியும் கண்கள் விரிந்தபடியும் இருந்ததை பார்ப்பதற்கு என்னவோ போலிருந்தது.
சதீஷ் பிணங்களை பார்ப்பது ஒன்றும் புதியதல்ல. மிக கோரமாக கொலை செய்யப்பட்ட உடல்களையும் தீ வைத்து எரிக்கப்பட்ட பிணங்களையும் கூறு கூறாக சிதைந்து போன எத்தனையோ மனித உடல்களையும் பார்த்திருக்கிறான். அப்போதெல்லாம் அவன் மனம் சஞ்சலமடைந்தது இல்லை. காரணம் அப்படி இறந்ததில் யாரும் அவனுக்கு அறிமுகமானவர்கள் இல்லை. இன்று பார்க்கும் மாணிக்கத்தின் கதை வேறானது.
மாணிக்கம் நடுவயதை தாண்டியவர். ஊரில் பெரிய வியாபாரி அது மட்டுமல்ல. லயன்ஸ் க்ளப், ரோட்டரி க்ளப் என்று சமூக இயக்கங்களோடு தொடர்பு படுத்தி கொண்டு சுறுசுறுப்பாக இருப்பார். அந்த வகையில் தான் சதீசுக்கு அவர் அறிமுகம். அவன் மாணிக்கத்தை மதிப்பதற்கு இவைகள் மட்டும் காரணம் இல்லை. அவர் நல்ல படிப்பாளி. சகல விஷயங்களை பற்றியும் விவாதம் செய்வார். சிக்கலான பிரச்சனைகளுக்கு மிக சுலபமான தீர்வுகளை எடுத்து சொல்வார். பேசும் போது பாரதி, கம்பன் என்று இலக்கிய வாதிகளை மேற்கோள் காட்டி தனது பேச்சாற்றலால் மற்றவர்களை கவர்ந்திழுப்பார்.
மாணிக்கத்தின் மனைவி வார்த்தைகள் வராமல் அழுதுகொண்டிருந்தார். அவர் மகன் பித்து பிடித்தது போல தந்தையின் பிணத்தையே வெறித்து பார்த்து கொண்டிருந்தான். அவன் தோள்களை சதீஷ் மெல்ல தொடவும் இவன் மீது சாய்ந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டான். அவனை ஆறுதலாக தோளில் தட்டி கொடுத்து ஹாலிலிருந்து வெளியே அழைத்து வந்த சதீஷ் எப்படி நிகழ்ந்தது என்று கேட்டான்.
தெரியலையே சார். நீங்க எல்லோரும் பேசிட்டு போன பிறகு சாப்பிட வந்தார் நானும் அவரோடு தான் சாப்பிட்டேன். எப்போதும் போல கலகலப்பாக தான் உறங்க போனார். அம்மா பால் வந்து கொடுத்துவிட்டு வந்துவிட்டார்கள் அப்பா இரவு நேரம் படிக்கும் பழக்கம் கொண்டவர். அவர் எப்போது தூங்க போவார் என்று எனக்கு தெரியாது. காலையில் அம்மா சென்று கதவை தட்டும் போது திறக்கவில்லை. என்னை எழுப்பினார். நானும் தட்டினேன் பிறகு வேலைக்காரனை கூப்பிட்டு கதவை உடைத்து பார்த்தோம். எல்லாமே போயிருச்சு சார் என்று கூறி மீண்டும் அழ ஆரம்பித்து விட்டான்.
அதற்குள் பார்த்திபன் வந்துவிட்டான் அவன் என்னிடம் விபரம் கேட்டான் எனக்கும் முழுமையாக தெரியவில்லை என்று கூறினேன். அப்போது எங்கள் பக்கத்தில் வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆசாத், சதீஷ் நீங்கள் தான் பெரிய துப்பறியும் புலியாச்சே உங்கள் நண்பரின் மரணத்திற்கு காரணம் உங்களுக்கு முன்பே தெரியாதா? என்று பூடகமாக கேள்வி கேட்டு கண்களை சிமிட்டினார்.
சதீஷ் அவரை முறைத்தான். மாணிக்கம் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியமே இல்லாதவர் பிறகு ஏன் அப்படி செய்தார் என்று புரியவில்லை போக போக தெரியும் என்று பதிலை சொல்லிவிட்டு மீண்டும் மாணிக்கத்தின் பிணம் கிடத்தபட்டிருந்த இடத்திற்கு சென்றான். போலீஸ் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. உடல் சிறிது நேரத்தில் அமரர் ஊர்தியில் ஏற்றப்பட்டது. சதீஷ் நிலைமையை உணர்ந்து பார்த்திபனோடு இடத்தை காலி செய்தான்.
மாணிக்கம் காலமாகி இரண்டு நாட்கள் ஆகிவிட்டன. காவல் நிலைய சடங்குகள் எல்லாம் முடிந்து அவரை அடக்கமும் செய்தாகி விட்டது மருத்துவ பரிசோதனை உறுதியான தற்கொலை தான் சாவுக்கு காரணமென்று அடித்து சொல்லியது. ஆனால் சதிஷுக்கு மாணிக்கத்தின் மரணத்தை தற்கொலை என்று ஏற்று கொள்ளவே முடியவில்லை அவனும் பார்த்திபனும் இது சம்மந்தமாக விவாதம் செய்தனர்
பார்த்திபன் சொன்னான் பெரிய மனிதர்களுக்கு இரண்டு வாழ்க்கை இருக்கும். ஒன்றை மட்டும் தான் நம்மை போன்ற நண்பர்களுக்கு காட்டுவார்கள். இன்னொரு பக்கத்தை மறைத்து விடுவார்கள். மாணிக்கம் பணக்காரராக இருந்தாலும் கடன்காரராக இருந்திருக்கலாம். அடைக்க முடியாத நிலை வரும் போது தனது சமுதாய அந்தஸ்து பறிபோய்விடுமே என்ற பீதியில் தற்கொலை செய்திருக்கலாம் என்றெல்லாம் சொன்னான்.
இல்லை அதற்கு வாய்ப்பே இல்லை. எனக்கு அவர் தொழிலை பற்றி தெரியும். கடன் வாங்கி தொழிலை செய்வதை விட பட்டினி கிடந்து சாகலாம். என்பது தான் மாணிக்கத்தின் சித்தாந்தம். நான் அவரோடு பழகிய ஐந்து வருடத்தில் யாருக்கும் அவர் கடன் கொடுத்தும் பார்த்ததில்லை வாங்கியும் பார்த்ததில்லை எனவே அவர் சாவுக்கு அது காரணமாக இருக்காது என்று சதீஷ் மறுத்தான்.
ஒருவேளை குடும்ப சூழல் காரணமாக இருக்குமோ? என்று பார்த்திபன் கேட்டவுடன் இருக்கலாம். அது நமக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனால், அப்படியே இருந்தாலும் பத்து பேருடைய பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லக்கூடிய மாணிக்கம் கோழைத்தனமாகக் தற்கொலை செய்ய மாட்டார் இருந்தாலும் அந்த சந்தேகத்தையும் நாம் தீர்த்துவிடுவோம் வா அவர் வீட்டிற்கு என்று பார்த்திபனை அழைத்து கொண்டு புறப்பட்டு விட்டான் சதீஷ்.
வீட்டில் மாணிக்கத்தின் மகன் நடுஹாலில் தலையில் கை வைத்து தரையில் உட்கார்ந்திருந்தான். சுவற்றில் மாட்டிய மாணிக்கத்தின் போட்டோவை வெறித்து பார்த்து கொண்டிருந்த அவர் மனைவி இவர்களை கண்டதும் எழுந்து உள்ளே போய்விட்டார். வாங்க உட்காருங்க என்று மெல்லிய குரலில் வரவேற்ற அவன் சதீஷை பார்த்து நானே உங்களை பார்க்க வரவேண்டும் என்று நினைத்தேன் நீங்களே வந்துவிட்டீர்கள் என்று சொன்னான்.
பார்த்திபனும், சதீசும் மாணிக்கத்தின் மகன் ரகுநாதன் பக்கத்தில் அமர்ந்தார்கள். சிறிது நேர மெளனத்திற்கு பிறகு அப்பா எதற்காக இப்படி செய்தாரென்று உனக்கு தெரியுமா? என்று சதீஷ் கேட்டான்.
நானும் யோசித்து யோசித்து பார்க்கிறேன் ஒண்ணுமே பிடிபடவில்லை. வியாபாரம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இந்த வருடம் லாபம் சற்று கூடுதலாகவே வந்திருக்கிறது. அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. வீட்டிலும் எந்த சண்டை சச்சரவும் கிடையாது எனக்கு மட்டும் இன்னும் திருமணம் கூடிவரவில்லை என்ற சின்ன வருத்தம் தான் அப்பாவுக்கு உண்டே தவிர வேறு எந்த வருத்தமும் அவருக்கு கிடையாது. பிறகு எதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றே புரியவில்லை என்று சொல்லி அழ ஆரம்பித்து விட்டான்.
சிறுது நேரம் அவனை அழவிட்டு விட்டு பிறகு சதீஷ் கேட்டான் என்னை எதற்காக பார்க்க வரவேண்டும் என்று நினைத்தாய் ரகு? கண்களை துலக்கி கொண்டு அப்பா சாவு என் மனதை போட்டு பிசைகிறது அவர் எதற்காக இறந்தார் என்பதற்கு விடை கிடைத்தாக வேண்டும் நீங்கள் பல கொலை வழக்குகளை துப்பு துலக்கி குற்றவாளிகளை பிடித்திருக்கிறீர்கள் இந்த விஷயத்திலும் நிஜமான காரணத்தை உங்களால் கண்டுபிடிக்க முடியும். என்று நினைக்கிறேன் என்றான் ரகுநாதன்.
போலீஸ் என்ன சொல்கிறார்கள்?
அவர்கள் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுகிறபடி கேசை முடிக்க பார்கிறார்கள். அப்பா தூக்கில் தொங்கிய அறையில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. பலாத்காரம் நடந்ததற்கான சூழலும் அங்கே இல்லை. எனவே அவர்களின் கணக்கு இது தற்கொலை இத்தோடு பைலை மூடிவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் என் ஆழ்மனது இதை தற்கொலை என்று ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. தயவு செய்து நீங்கள் ஏதாவது செய்யுங்கள் என்று அழுதான் பார்பதற்கு பாவமாக இருந்தது.
ரகு நீ நினைப்பது போல தான் நானும் நினைக்கிறேன். மாணிக்கம் சார் அன்று இரவு ஒன்பது மணி வரைக்கும் எங்களோடு பேசிக் கொண்டிருந்தார் நடைமுறை அரசியல், இலக்கியம் என்று பலதரப்பட்ட விஷயங்களை மிகவும் ஜாலியாக பேசினார். அவருடைய முகத்திலோ சொல்லிலோ துயரத்திற்கான அறிகுறியே தென்படவில்லை. அவர் செய்து கொண்டது தற்கொலை இல்லை என்று ஆழ்மனது சொல்கிறது. ஆனால் சூழல் தற்கொலை தான் என்கிறது என்று சதீஷ் இயலாமை என்ற வருத்தத்தோடு பேசினான்.
போலீஸ்காரர்கள் அப்பாவின் ரூமை பார்த்தார்களா? வித்தியாசமாக ஏதாவது இருப்பதை கண்டார்களா என்று கேட்ட பார்த்திபன் வாருங்கள் அவர் அறையில் சென்று பார்ப்போம் ஒருவேளை போலீஸ் கண்ணில் படாதது நமக்கு தென்படலாம் என்று எழுந்தான். அவனோடு சதீசும், ரகுநாதனும் எழுந்து மாணிக்கத்தின் அறைக்கு சென்றார்கள்.
அவர் அறை முழுவதும் புத்தகங்களும் இசை தட்டுகளும் அடுக்கி வைக்கபட்டிருந்தன அழகான படங்கள் சுவரை அலங்கரித்தன. உள்ளே செய்யபட்டிருந்த அலங்காரங்கள் மாணிக்கத்தின் கலை ஆர்வத்தை சொல்லாமல் சொல்லியது. சதீஷ் அணு அணுவாக ஒவ்வொரு பகுதியையும் பார்த்தான். எதுவும் அகப்படவில்லை மேஜையில் ஒரு புத்தகம் மட்டும் கவிழ்த்து வைக்கப்பட்ட நிலையில் அப்படியே இருந்தது. இதை இப்படி வைத்தது யார்? என்று சதீஷ் கேட்டான்.
அப்பா படித்துவிட்டு வைத்தது வைத்தபடி இருக்கிறது நாங்கள் அதை எதுவும் செய்யவில்லை என்று ரகுநாதன் சொன்னான். அப்படி என்றால் தற்கொலை செய்து கொள்ளுகின்ற நேரம் வரையில் இவர் படித்து கொண்டிருக்க வேண்டும் படித்து முடித்துவிட்டு நிதானமாக சென்று யாரும் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள். புத்தகத்தை கவிழ்த்து வைத்த நேரத்திற்கும் அவர் தற்கொலை செய்துகொண்ட நேரத்திற்கும் இடையில் எதோ ஒன்று நடந்திருக்க வேண்டும். அது தான் அவர் மரணத்திற்கான காரணமாக இருந்திருக்க வேண்டும். அது என்னவென்று தெரிந்தால் விடை கிடைத்துவிடும். அப்படி நடந்தது என்ன?
சதீஷ் திடீரென்று கேட்டான். போலீஸ்காரர்கள் இந்த புத்தகத்தை எடுத்து பார்க்கவில்லையா? அதற்கு ரகுநாதன் பதில் சொன்னான். பார்த்தார்கள் கடைசியில் அப்பா வைத்தது போலவே வைத்து விடுங்கள் அவர் ஞாபகமாக இருக்கட்டுமென்று நான் தான் சொன்னேன் அதனால் அப்படியே வைத்து விட்டார்கள். என்றான். நான் புத்தகத்தை பார்க்கிறேன் என்று சொன்ன சதீஷ் யாருடைய அனுமதியும் இல்லாமல் ஆட்காட்டி விரலை புத்தகத்தில் திறந்திருந்த பக்கத்தில் அடையாளத்திற்கு வைத்துகொண்டு கையில் எடுத்தான்.
அதிலிருந்த விஷயம் அது ஒரு பொருளாதார நூல் என்பது சொல்லியது ஆங்கிலத்தில் வழுவழுப்பான காகிதத்தில் அச்சிடப்பட்டிருந்த புத்தகத்தின் அமைப்பு கவர்ச்சியாக இருந்தது பக்கத்தை மாற்றாமல் மேலும் கீழும் புரட்டிபார்த்த சதீஷ் அதன் முன் அட்டையில் அடிப்பகுதியில் எதோ ஒன்று சொருகப்பட்டிருப்பதை பார்த்தான் விரல் நகத்தால் மெதுவாக கிளறவும் அது வெளியே எட்டி பார்த்தது. பார்த்திபனும் ரகுவும் ஆச்சரியத்தோடு அதை பார்த்தார்கள். இப்போது அந்த வஸ்து ஏறக்குறைய அட்டைக்குள் இருந்து வெளியே வந்துவிட்டது. மிகத் தெளிவாக அது ஒரு மெமரி கார்டு என்பது தெரிந்தது. இது செல்போனில் பயன்படுத்துகிற கார்டு தானே என்று சதீஷ் கேக்கவும். ஆமாம் என்று இருவரும் ஆமோதித்தார்கள்.
மெமரி கார்டை அவசரமாக தன் கையில் வாங்கி புரட்டி பார்த்த ரகுநாதன் இது தொலைந்து போன என்னுடைய மெமரி கார்ட் எப்படி இந்த புத்தக அட்டைக்குள் வந்தது என்று கூறி அதை சட்டைப் பையில் வைக்கப் போனான். சட்டென்று அவன் கையிலிருந்து வாங்கி கொண்ட சதீஷ் இதில் என்ன தான் இருக்கிறது என்று பார்த்து விடுவோமே என்று கூறவும் ரகுநாதனின் முகம் சற்று மாறுவதை சதீஷ் கவனத்தில் குறித்து கொண்டான்.
தன் சட்டைபையிலிருந்து போனை எடுத்த சதீஷ் இன்ஸ்பெக்டர் ஆசாத்தை அழைத்தான். ஹலோ மிஸ்டர் ஆசாத் நாம் நினைத்தபடி தூண்டிலில் பொறி சிக்கி கொண்டது. கிளம்பி வாருங்கள் என்று போனை கட் செய்தான். ரகுநாதன் எதற்க்காக அவரை கூப்பிடுகிறீர்கள் அவர்கள் பாடுகிற பல்லவியை தான் திரும்ப திரும்ப பாடுவார்கள். என்றான் வந்து தான் பாடட்டுமே என்று அர்த்த புஷ்டியோடு ரகுநாதனை பார்த்து சதீஷ் சொன்னான்.
நீங்கள் நினைப்பது போல இதில் அப்பா சம்மந்தப்பட்ட எதுவும் இருக்காது. அப்பா அந்த காலத்து மனுஷன் அவருக்கு இவைகளை பற்றி எதுவும் தெரியாது. இது எனது மெமரிகார்டாக தான் இருக்க வேண்டும். நான் தொலைத்து விட்டு தேடிக்கொண்டிருந்தேன் அப்பாவின் கையில் எதேச்சையாக கிடைத்திருக்கும். அதை இதில் சொருகி வைத்திருப்பார் என்ற ரகுநாதனின் குரலில் விசித்திரமான மாறுதல்கள் இருப்பதை சதீஷும் பார்த்திபனும் கவனிக்க தவறவில்லை. இருவரும் ஒருவரை ஒருவர் ஜாடையாக பார்த்துகொண்டனர்
பிறகு அந்த அறையை விட்டு வெளியே சதீஷ் வந்தான். கூடவே அவர்கள் இருவரும் தொடர்ந்தார்கள். செளகரிகமாக ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்ட சதீஸ் தனது செல்போனில் அந்த மெமரி கார்டை பொருத்தி இயக்க ஆரம்பித்தான். அதில் குரல் பதிவு என்ற ஒரு பகுதி மட்டும் இருந்தது அதை இயக்கவும் இரண்டு பேர் தொலைபேசியில் உரையாடுகிற பதிவு தெளிவாக கேட்டது.
மாணிக்கம் நான் சொல்வதை கவனமாக கேள். எனது பேச்சை தட்டி நடந்தால் உன் கெளரவம் குட்டிசுவராகிவிடும். உன் சொந்த பந்தங்கள் கைகொட்டி சிரிப்பார்கள். இன்று உன்னை போற்றி புகழ்பவர்கள் காரி துப்புவார்கள். உன் வீட்டு நாய் கூட உன்னை மதிக்காது. இந்த குரல் ஆண் குரல் தான் என்றாலும் அதிலொரு பெண்மை தன்மை இருந்தது. எதிராளியை பணியவைக்கும் வக்கிரமும் அந்த குரலில் தொனித்தது.
இன்று என்னை மிரட்டுகிறாயே அன்று எப்படி என் முன்னால் கைகட்டி நின்றாய். விவாகரத்து வாங்கிய உன் அக்காவிற்கு வேலை தரும்படி எப்படியெல்லாம் கெஞ்சினாய். உன் மீது இரக்கப்பட்டு வேலை கொடுத்தேனே அதை மறந்து விட்டாயா? என்னை எதற்க்காக தொந்தரவு செய்கிறாய். உன் மீது இரக்கம் காட்டியதை தவிர வேறு என்ன குற்றம் செய்தேன். இது மாணிக்கத்தின் குரல் வழக்கத்திற்கு மாறாக கலக்கம் அடைந்திருந்தது. பயம் அந்த குரலில் இருப்பது இயல்பாகவே தெரிந்தது.
எந்த தப்பும் நடக்கவில்லை என்று உனக்கு எனக்கும் தான் தெரியும். உன் செல்போனிலிருந்து என் அக்காவின் செல்போனிற்கு நீ பேசுவது போலவே குரலை மாற்றி பேசியது நான் தான் என்று எப்படி உன்னால் நிரூபிக்க முடியும்? அப்படியே நீ நிரூபிக்க முயன்றாலும் அதற்குள் டெலிபோன் உரையாடலை வாட்சப், பேஸ்புக் என்று பகிரங்கபடுத்திவிடுவேன். நீ நிரூபித்து காட்டுவதற்குள் உன் பெயர் நாறிவிடும். அவன் மிரட்டல் குரல் மேலோங்கி இருந்தது.
நான் என்னதான் செய்யவேண்டும் பணம் வேண்டுமா? இது மாணிக்கம்.
உன் பணத்தை கொண்டு குப்பையில் போடு அது யாருக்கு வேண்டும். இது அந்த குரல்
பிறகு என்ன செய்வது? நீயே சொல். இது மாணிக்கம்
அப்படி வா வழிக்கு. உன் பெண்டாட்டியை விவாகரத்து செய். உன் மகனை வீட்டை விட்டு துரத்து. என் அக்காவை இரண்டாம் தாரமாக மணந்துகொள் அவள் தான் சட்டப்படி உன் வாரிசு என்று எல்லோருக்கும் அறிமுகபடுத்து இதை நீ செய்யவில்லை என்றால் நீ சம்பாதித்த நல்ல பெயர் எல்லாமே சாணியடிக்கப்பட்டுவிடும் இது அந்த குரல்
இல்லாத ஒன்றை உருவாக்கி என் வாழ்க்கையோடு விளையாடுவது எப்படி நியாயமாகும் வேண்டுமானால் பணம் தருகிறேன் என்னை விட்டு விடு. இது மாணிக்கம்
எதிர்முனையில் அந்த குரல் நக்கலாக சிரித்தது பிறகு இணைப்பு துண்டிக்கபட்டிருக்க வேண்டும் எந்த சத்தமும் வரவில்லை. இதை மூவரும் கேட்டு முடிக்கவும் வாசலில் போலிஸ் ஜீப் வந்து நிற்கவும் நேரம் சரியாக இருந்தது இனி மாணிக்கம் நிறுவனத்தில் வேலை செய்யும் விவாகரத்து ஆன பெண் யார் என்று கண்டுபிடித்தால் குற்றவாளியை நெருக்கிவிடலாம் என்று சதீஷ் முடிவு செய்து தனக்குள் நிம்மதி பெருமூச்சு விட்டான்.
நவீன கண்டுபிடிப்புகள் மனிதனை எந்த மாதிரியெல்லாம் விபரீத சிந்தனைக்கு ஆட்படுத்துகிறது என்பதை நினைத்த போது பார்த்திபனுக்கு வெறுப்பாக இருந்தது. அவனது ஆழமான பெருமூச்சு அங்கிருந்த அனைவரையுமே சிந்திக்க தூண்டியது.