Store
  Store
  Store
  Store
  Store
  Store

கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்...?



சொற்பொழிவு தொடர் -- 3



ன்பார்ந்தவர்களே!!!

கடவுள் என்றால் யார்? என்று சென்ற முறை சிந்தித்தோம். அவரின் அருள்நிலையை, சத்திய தன்மையை, சாஸ்வதமான இன்ப நிலையை அறிந்து கொள்ள ஓரளவு முயற்சித்தோம். அதில் முழுமை பெற்றோமா? வெற்றி கண்டோமா? என்பது முக்கியமல்ல. முயற்சி செய்தோம் என்பதே மிக முக்கியமாகும். இப்போது நாம் கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அவரது வேலை என்ன? அவருக்கு வேலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்பதை பற்றி எறும்புக்கும், தன் கையால் எண்ஜான் உடம்பு என்பது போல நமது சிற்றறிவின் துணை கொண்டு முயற்சி செய்வோம்.

கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்? இது புகழ்பெற்ற கவர்ச்சிகரமான கேள்வி. இந்த கேள்வியை நாம் மட்டும் கேட்டுவிடவில்லை. நம்மை போல் எத்தனையோ இலட்ச ஜனங்கள் நாளும், பொழுதும் இந்த கேள்வியை கேட்டவண்ணம் இருக்கிறார்கள். சில காலங்களுக்கு முன்பு திரைப்படம் ஒன்று திருவருட்செல்வன் என்பது படத்தின் பெயராக இருக்கும் என்று நினைக்கிறன். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பல்வேறுபட்ட சிவனடியார்கள் வேடத்தில் நடித்திருப்பார். அதிலொரு காட்சி நாட்டு அரசனுக்கு ஒரு சந்தேகம் வந்துவிடும் கடவுள் எங்கே இருப்பார்? எந்த திசையை பார்த்து கொண்டிருப்பார்? என்ன செய்து கொண்டிருப்பார்? என்பது தான் சந்தேகம். இந்த சந்தேகத்தை நிவர்த்திக்க, அவை புலவரை நாடி நாளை மாலைக்குள் பதில் சொல்ல வேண்டுமென்று கட்டளையும் இடுவான். புலவருக்கு பதில் தெரியவில்லை. என்ன செய்வது என்றும் புரியவில்லை. அரசனின் சிறுபிள்ளை தனமான கேள்விக்கு சிறுபிள்ளையை வைத்தே பதில் சொல்ல திட்டமிட்ட இறைவன் புலவரின் பேத்தியை பதில் சொல்ல அரசவைக்கு அனுப்பி வைப்பார்.

பேத்தி வருவாள். அரசனிடம் கேள்விகளை கேட்குமாறு சொல்வார். அரசனும் கேள்விகளை முன்வைப்பான். பாலுக்குள் தயிர், மோர், நெய் என்பவைகள் எல்லாம் மறைந்திருப்பது போல இறைவனும் உலகத்து பொருள் அனைத்திலும் மறைந்திருக்கிறான் என்று முதல் கேள்விக்கும், தூண்டா மணிவிளக்கில் அணையா தீபம் எல்லா திசைகளையும் பார்த்து கொண்டிருப்பதை போல, இறைவனும் சகல திக்குகளையும் பார்த்து கொண்டிருக்கிறார் என்று இரண்டாவது பதிலையும் கூறியதோடு, மூன்றாவது பதிலை சொல்ல தன்னை சில மணிநேரம் அரசியாக்கும் படி கேட்பாள். அரசனும் அதையே செய்வான். ஆட்சிக்கு வந்த சிறுமி, மக்களை பட்டினி போடு. பழைய அரசனை தூக்கி சிறையில் போடு என்று கட்டளை போடுவாள். அரசவையே பதறிப் போகும். அதன் பிறகு இறைவன் ஒரே வினாடியில் சிறுமியை அரசனாக்கி, அரசனை கைதியாக்கி விளையாடி கொண்டிருக்கிறான் என்ற பதிலை அனுபவ வாயிலாக தருவாள்.

உலகத்தின் நடைமுறையை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் இறைவனின் லீலை புரியாத புதிராக இருக்கும். ஒரே இடத்தில் மழையை கொட்டி தீர்ப்பார். இன்னொரு பகுதியில் சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் சுண்ட வைப்பார். ஒரு பக்கம் காற்று. ஒரு பக்கம் நெருப்பு. ஒரு பக்கம் பிறப்பு. ஒரு பக்கம் அடுக்கடுக்கான அர்த்தமே இல்லாத இறப்புகள். இதில் எதற்கும் நம்மால் காரண காரியத்தோடு இலக்கம் பெற முடியாது. இப்படி செய்வதனால் இறைவனுக்கு கிடைக்க போகும் நன்மை என்ன? இதனால் அவர் அடையும் ஆனந்தம் என்ன? துக்கம் என்ன? சோகம் என்ன? ஒன்றுமே புரியவில்லை. எந்த கருத்தும் இல்லாமல், எந்த புரிதலும் இல்லாமல் இறைவன் செயல்பட வேண்டுமா? அவன் என்ன பித்து பிடித்து போன பைத்தியக்காரனா?

ஆதிசங்கரர் உருவாக்கிய அத்வைத கொள்கைப்படி உண்மையில் இந்த உலகில் பிரம்மம் மட்டுமே இருக்கிறது. பிரம்மத்தை தவிர வேறு எதுவும் கிடையாது. அந்த பிரம்மம் எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருக்கிறது. பிரம்மம் வேலை செய்வதாக தோன்றினால், செயல்புரிவதாக காட்சி அளித்தால், மாறுபாடு அடைவது போல் காணப்பட்டால், அது மனிதனுக்கு உண்டாகும் கற்பனையே. மனிதன் வீழ்ந்து கிடக்கும் மாயவலையே என்று கூறி கடவுள் வேலை செய்யவில்லையே என்று அடித்து சொல்கிறார் சங்கரர்.

ஆனால், இதற்கு முற்றிலும் முரணாக விசிஷ்டாத்வைதத்தை உருவாக்கி ஸ்ரீ ராமானுஜர் சிலந்தி ஒன்று தன் உடம்பிலிருந்து தானே வலையை உருவாக்குவது போல கடவுளும், தன்னிடமிருந்தே உலகத்தை உருவாக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார். அவர் சும்மா இருக்கவில்லை என்கிறார். இதில் எதை நாம் நம்புவது? மழை வருவதும், வெயில் அடிப்பதும், விருந்து வைப்பதும், பட்டினியால் சாவதும் பொய்யான தோற்றங்களா? மாய பிம்பங்களா? கற்பனை வடிவங்களா?

இதற்கு சரியான விடையை கண்ணன் கீதையில் தருகிறான். எனக்குள் பிரகிருதியின் எட்டு அம்சங்கள் இருக்கிறது. நிலம், நீர், அக்னி, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும், மனமும், புத்தியும் தான் என்ற எண்ணமும், எனக்குள் இருந்தே வெளிவரும் அம்சங்களாகும். இந்த எட்டு அம்சங்களும் ஒருவகையில் சொல்லப் போனால் தாழ்ந்த அம்சங்களே ஆகும். இவைகளை விட உயர்ந்த அம்சம் ஒன்று உண்டு. அதாவது அனைத்தையும் சேகரித்து தாங்கி நிற்கும் உயிர் நிலையம் நானே என்று கண்ணன் அழகாக சொல்கிறான். இந்த ஒன்பது அம்சங்கள் நிறைந்ததே உலகத்தில் உள்ள அனைத்து படைப்புகளும் ஆகும். மத்வாச்சாரியார் கூறிய துவைத கருத்துப்படி பார்த்தால் கூட, கடவுள் உலகத்தையும், ஆத்மாக்களையும் படைக்கிற வேலையை கடவுள் செய்கிறார். கடவுளின் கண்காணிப்பிலேயே இயற்கையானது அண்ட சராசரங்கள் அனைத்தையும் தோற்றுவித்து நடத்துகிறது என்று மத்வர் தெளிவாகவும், உறுதியாகவும் கூறுகிறார்.

புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனீ ஜடரே சயனம்

அதாவது மனிதன் மறுபடி பிறக்கிறான். மறுபடி ஒருநாள் மரணமடைகிறான். சாவு என்பது அவனது ஜீவ பயணத்தில் முற்றுபுள்ளி அல்ல. மீண்டும் அவனது ஆன்மா வேறொரு தாயின் கருவறையில் சிசுவாக உருவாகிறது. என்று ஆதி சங்கரர் பஜகோவிந்தத்தில் கூறுகிறார். மறுபடி பிறந்து, மறுபடி இறந்து, மறுபடியும் பிறப்பது மனிதருக்கு மட்டும் உடைய வியாதி அல்ல. இது உலகத்திற்கே பொதுவானது. உலகத்தில் உயிர்கள் ஜனனம் எடுப்பதை படைப்பு என்கிறோம். உலகம் அழிந்து போவதை பிரளயம் என்கிறோம். பிரளயத்திற்கு பிறகும் உயிர்கள் தோன்றி மறைகின்றன. ஒரு சிருஷ்டியும் சம்ஹாரமும் சேர்ந்து தான் ஒரு கர்ப்பகாலம். கர்ப்ப துவக்கத்தில், உயிர்கள் முளைவிடுகின்றன. கர்ப்பத்தின் முடிவில், உயிர்கள் அனைத்தும் கடவுளை அடைந்து கடவுளுக்குள் மறைந்து போகின்றன. மறுபடியும் தோன்றும் வேறொரு கர்ப்ப காலத்தில் உயிர்கள் மீண்டும் மீண்டும் படைக்கப்படுகின்றன. எனவே கடவுள் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று வேலைகளையும் இடைவெளி இன்றி தைலதாரை போல செய்து கொண்டே இருக்கிறார். இதை தான் கம்பர்

உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலைபெறுதலும் நீக்கிலும் நீங்கிலா 
அலகிலா விளையாட்டுடையார்

என்று பாடுகிறார். படைக்கப்பட்ட பொருட்களுக்குள் கடவுள் எப்படியெல்லாம் ஊடுருவி நிற்கிறார் என்று எண்ணுவதே நமது சிந்தனைக்கு பெரும் விருந்தாக அமையும். கண்ணுக்கு தெரியாத வடிவத்தில், காணும் பொருள் ஒவ்வொன்றிலும் அவர் இருக்கிறார். ஒவ்வொரு பொருளின் தன்மையும் அவரே தான். அவர் தான் நீரில் குளிர்கிறார். நெருப்பில் சுடுகிறார். வேதத்தில் ஓம் ஹார பொருளாக இருக்கிறார். பாலில் சுவையாக, மழலையின் கள்ளமில்லா சிரிப்பாக, தாயின் அன்பாக, மனையாளியின் அரவணைப்பாக, தோழமையின் நட்பாக அவரே இருக்கிறார். தவமும் அவர் தான், தவத்தின் வேகமும் அவர் தான் தவத்தின் பயனும் அவர்தான்

மனிதன் அற்பமான ஜீவன் பிரபஞ்ச வெளியை கணக்கிடும் போது ஒரு சிறிய புள்ளிகூட அவன் தேறமாட்டான். எப்போதும் வெற்றிமாலை அவன் கழுத்தை அலங்கரித்து கொண்டே இருக்காது. துன்பம் வரும். துயரம் வரும். சோகமும் துக்கமும் வந்து அவனை பந்தாடும். தன்னை காப்பதற்கு தன்னை மீட்பதற்கு கடவுள் வரமாட்டாரா? என்று ஏங்குகிறான். தவிக்கிறான். புரண்டு புரண்டு அழுகிறான். அந்த நிலையிலும் கடவுள் மனிதனுக்கு சில நிபந்தனைகளை தருகிறார். என்னை நம்பினால் மட்டும் போதாது. பூரணமாக என்னை தொழுதால் மட்டும் போதாது. முழுமையான அர்ப்பணிப்போடு என்னை சரணடை. சுய நலமற்ற சரணாகதியே உன்னை காக்க என்னை தூண்டும் என்கிறார்.

கலியுகத்தில் மனிதனாக வந்து, மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து நித்தியம் எது? அநித்தியம் எது? என்று எடுத்துக் காட்டிய கண்ணன் சொல்கிறான். என்னையே சிந்தித்து, என்னை உபாசித்து இடையறாத யோக முயற்சியில் ஈடுபடும் பக்தர்களின் சோம பாரத்தை நானே தாங்குகிறேன் என்று அமுத வாக்கு தருகிறான். மனிதரில் மாமனிதனாகிய வள்ளுவனும் இதே கருத்தை

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தாருக்கு
யாண்டும் இடும்பை இல

என்று இரத்தின சுருக்கமாக கூறுகிறார். கடவுளுக்கு நம் மீது வெறுப்பு கிடையாது. அதே நேரம் பெரிய விருப்பமும் கிடையாது. தண்ணீரிலேயே இருக்கும் தாமரை இலை, தண்ணீரில் ஒட்டாமல் இருப்பது போல சிருஷ்டி, பிரளயம் என்று படைப்பு தொழிலை ஓயாது செய்து கொண்டு இறைவன் இருந்தாலும், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இருக்கிறான். காந்தம் இரும்பை மட்டும் தான் இழுத்து கொள்ளும் என்பதை போல சரணாகதி அடைந்தவரை மட்டும் இறைவன் எந்த நேரமும் கைவிடுவது இல்லை. கண்ணுக்கு இமை போல இருந்து, காவல் செய்கிறான். மகாபாரத்தை பாருங்கள். சூதாட்டத்தில் வைக்கப்பட்டு இழந்து போன பாஞ்சாலியை அவைக்கு இழுத்து வரும் போது கண்ணன் காப்பற்றவில்லை. எப்படி தனது கணவன்மார்கள் தன்னை மீட்டு விடுவார்கள் என்று அவள் நம்பினாள். அவைக்கு வந்த பிறகு பீஷ்மரை பார்த்து, துரோணரை பார்த்து, கிருபரை பார்த்து நீதி கேட்டு வாதாடினாள். அப்போதும் கண்ணன் வரவில்லை. எப்போது தன் கைகளை மேலே தூக்கி கோவிந்தா உன்னையே சரணடைகிறேன் என்று கூறினாளோ அப்போது தான் கண்ணன் வந்தான். அஸ்தினாபுரத்திற்கும், துவாரகைக்கும் காததூரம் இருந்தாலும், புடவை கொடுக்கும் வேலை தடையில்லாமல் நடந்தது.

இப்படிப்பட்ட இறைவன் எப்படியெல்லாம் மனிதனுக்கு துணையாக வருகிறான் தெரியுமா? தாயாக வருகிறான்? தாயை விட சாலப்பரிவுடையவனாக வருகிறான். தந்தையாக வருகிறான். குழந்தையாக வருகிறான். தோழனாக வருகிறான். காதலனாக, காதலியாக, ஆசிரியனாக, பாடமாக, படிப்பினையாக வருகிறான். ஆட்சி செய்யும் அரசனாக, அடங்கி நடக்கும் சேவகனாக, குருவாக, சீடனாக இன்னும் சொல்லப்போனால் எத்தனை எத்தனை உறவாகவோ, உயிராகவோ இறைவன் வந்து கொண்டே இருக்கிறான்.

பால் இல்லாமல் குழந்தை அழுது புலம்பினால், கதறி அழுதால் பாலூட்டும் தாயாக திருஞான சம்மந்தருக்கு வந்திருக்கிறான். பதினாறு வயது காதலுக்கு தூது போகும் தோழனாக சுந்தரருக்கு வந்திருக்கிறான். பல் விழுந்து கூன் விழுந்த கிழவிக்காக, மண் சுமக்கும் கூலி ஆளாக வந்தான். பிரம்பால் அடிபட்டான், கண்ணப்பநாயனாரிடம் மிதிபட்டான். இப்படியெல்லாம் ஆயிரம் வடிவில் வந்து இன்றும் திக்கற்றவர்களுக்கு துணை செய்கிறான். அதை தான் கண்ணன் கீதையில் நான்காம் அத்தியாயத்தில் யார் யார் என்னை எந்த முறையில் நாடுகிறார்களோ அந்த வழியிலேயே அவர்களுக்கு அருள்வேன் என்கிறான்.

அழைத்த குரலுக்கு மட்டுமா ஆண்டவன் வருகிறான்? மனிதன் கேட்டதை எல்லாம் கூட அவன் தருகிறான். பணம் கேட்டால் பணம் தருகிறான். பதவி கேட்டால் தருகிறான். அறிவு கேட்டாலும் தருகிறான். ஞானம் கேட்டால் ஞானத்தையே தருகிறான். நாடிய பொருள் கைகூடும். ஞானமும், புகழும் உண்டாகுமென்று கவி சக்ரவர்த்தி கம்பன் பாடுகிறான். வழிப்பறி செய்து வானத்தையும், பூமியையும் இரண்டாக அளந்த வள்ளைக்கு ஆலயம் அமைக்க கொள்ளையடித்த மங்கை மன்னன் என்ற திருமங்கையாழ்வாரும்,

நலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பும் அருளும்
அருளோடு பெரும் நிலம் அளிக்கும்
வளம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்

என்று இறைவன் தருகிற பேர்களை எல்லாம் பட்டியல் போட்டு தருகிறார். அவைகளை பார்க்கும் போது நமக்கு மலைப்பாக இருக்கிறது. ஒரு பெரிய அங்காடிக்குள் நுழைந்து கொத்தமல்லி கட்டு, கருவேப்பிலை கட்டு முதல் கம்ப்யூட்டர் வரை வாங்கி வருவது போல, இறைவன் என்ற அருள் அங்காடி நமக்கு தராதது எதுவுமே இல்லை.

கடவுள் எவ்வளவு பொருளை தந்தாலும், பொருள் என்றாலே அநித்தியமானது. அழிந்து போக கூடியது. நிலைமாறும் தன்மையுடையது. அவற்றின் மூலம் சாஸ்வதமான நிம்மதியை அமைதியை பெற்றுவிட முடியாது. இனிப்பாக இருக்கும் சர்க்கரை மிட்டாய் அதிகமாக போனால் கசக்கும். பொருளாசை பொருளை அனுபவித்தல் என்பதுவும் இப்படிதான் ஒரு நிலைக்கு மேல் திகட்டிவிடும். எனவே இறைவன் தருகிற மிக உயர்ந்த பரிசு எதுவாக இருக்குமென்றால் என்றும் பிறப்பற்ற, எப்பொழுதும் மகிழ்ச்சியான எந்நேரமும் பரவசம் ததும்பும் முக்தி நிலை ஒன்றாகத்தான் இருக்கும் இதை கீதையில் கண்ணன் தன்னை சரணடைந்தவர்களுக்கு நிச்சயம் தருவதாக சத்தியம் செய்கிறான்.

கண்ணன் மேலும் சொல்கிறான். உயிர்கள் அனைத்திற்கும் நானே கதி. அவர்களை காப்பவனும், ஆள்பவனும் நானே. நானே அனைத்து ஜீவன்களுக்கும் சாட்சி. இருப்பிடம், அடைக்கலம், பிறப்பிடம், ஒடுங்குமிடம் நானே. நானே அனைத்திற்கும் வசிப்பிடம். நானே பிறப்பிடம். நானே சாக மருந்து. நானே மரணம். இப்படி சொல்கிற கண்ணன் உலகத்திலுள்ள ஒவ்வொரு துளியும் இறைவனின் வல்லமையால் வந்தது. இறைவனின் அருளால் இயங்குகிறது. இறைவனே எல்லாவற்றிற்கும் காரண கர்த்தாவாக இருக்கிறான்.

இறைவனே படைக்கிறான். இறைவனே காக்கிறான். இறைவனே அழிக்கிறான் என்கிறார்களே? இப்படி படைப்பு, காப்பு, அழிப்பு என்று மாறி மாறி செய்வதனால் இறைவனுக்கு என்ன லாபம்? துன்பத்தை தருபவனும் நானே துன்பத்தை போக்குபவனும் நானே என்பது என்ன நியாயம்? பிறப்பினால் சிரிப்பை தருகிறேன் என்கிறான். இறப்பினால் அழுகையை தருகிறேன் என்கிறான். இது எந்த வகை தர்மம். இதையெல்லாம் செய்யாமல் இறைவன் இருக்கலாமே என்று நமக்கு தோன்றும்.

அது கடவுளின் இரகசியம். கடவுளின் விருப்பம். கடவுளின் விளையாட்டு என்று பதிலை சொன்னாலும் அவையெல்லாம் கேள்விகளுக்கான பதிலாக தெரியவில்லை. மழுப்பல்களாக தெரிகிறது. எதை கேட்டாலும் தெள்ளத் தெளிவாக பதில் தரும் கீதை இது சம்மந்தமாக என்ன சொல்கிறது என்று பார்ப்போமா?

மூவுலகிலும் நான் எதையும் செய்ய கடமைப்பட்டவன் அல்ல. நான் அடைய வேண்டியதாக எஞ்சி நின்று அடைய தகுந்த பொருள் ஒன்றும் இல்லை. ஆனாலும் செயலில் ஈடுபட்டே வருகிறேன். என்று கீதை மூன்றாம் அத்தியாயம் இருபத்தி இரண்டாம் ஸ்லோகத்தில் கண்ணன் கூறுகிறான். இந்த பதில் விளங்க வில்லை. அல்லது விளங்க கூடிய தகுதியும், பக்குவமும் இன்னும் நமக்கு வரவில்லை. காதலின் ஆழத்தை அறியப்போன உப்பு பொம்மை கடலிலே கரைந்து விட்டது போல நமது கதை இருக்கிறது. சர்வ சக்தி வாய்ந்த இறைவன் இரகசியத்தை அறிந்து கொள்ள, மனிதனின் அறிவு இன்னும் வளரவில்லை. அல்லது அப்படியொரு மனிதன் இன்னும் பிறக்கவில்லை.




Contact Form

Name

Email *

Message *