சொற்பொழிவு தொடர் -- 2
ஓம் என்ற எழுத்து கடவுள், ஓம் என்ற எழுத்தின் வடிவம் கடவுள். ஓம் என்ற எழுத்தின் சத்தமும் கடவுள் மொத்தத்தில் ஓம் என்பதே கடவுளின் அம்சம் என்று சென்ற அமர்வில் சற்று ஆழமாக சிந்தித்தோம். ஓம் என்ற எழுத்தில் கடவுள் இருக்கிறார் என்றால், அந்த எழுத்தே கடவுளாக இருக்கிறது என்றால் உலகில் கடவுளை பற்றி பேசுகின்ற மதங்கள் அனைத்தும் ஓம் என்பதை பற்றி தானே பேசவேண்டும். சிந்திக்க வேண்டும் என்ற ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு சரியான பதிலையும் ஓரளவு பெற்றோம்.
இப்போது நமது முன்னால் இன்னொரு கேள்வி நிற்கிறது கடவுள் கடவுள் என்று சொல்கிறோமே அந்த கடவுள் என்றால் என்ன? அவரது தன்மை என்ன? அவர் எப்படி இருப்பார்? எதற்க்காக அவர் இருக்கிறார்? என்றெல்லாம் ஆயிரம் கேள்விகணைகள் நம் முன்னால் எழுந்து நிற்கிறது. அவைகள் ஒவ்வொன்றிற்க்கும் விடைகாண முற்படுவது தான் மனித பிறவியின் இலட்சியமென்று நமது முன்னோர்களும் சொன்னார்கள் நமது அனுபவமும் சொல்கிறது. கடலுக்கடியில் விழுந்தவன் மூச்சி காற்றை தேடுபவனை போல நாமும் விடை தேடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் முன்னே அந்தகால இருள் சூழ்ந்திருக்கிறது. மையிருட்டு நம் கண்களை கட்டிபோட்டிருக்கிறது. அறியாமையும், மாயையும் நம்மை சவுக்கு கொண்டு அடிக்கிறது. நமது உடம்பிலிருந்து சொட்டுகிற ஒவ்வொரு சொட்டு குருதியும் அறிவு பசியால் நெருப்பில் விழுந்து ஆவியாகிவிடுகிறது. எனவே அனைத்து நோய்க்கும் ஒரே மருந்தாக இருக்கும் கடவுளை பற்றிய ஞானத்தை நாம் பெற்றாக வேண்டும்.
இந்து மதத்தில் பலவித கொள்கைகள் இருக்கிறது. கடவுள் இருக்கிறார் என்று ஒரு கொள்கை சொல்கிறது, அவர் இல்லை என்று இன்னொரு கொள்கை மறுக்கிறது. கடவுளுக்கு உருவம் உண்டு என்று சொல்கிற கொள்கையும் உண்டு, உருவமே கிடையாது என்று மறுத்து பேசுகிற கொள்கையும் உண்டு. இப்படி ஆயிரம் கொள்கை பேதங்கள் உள்ள இந்து மதத்தை பின்பற்றி தான் கடவுளை பற்றிய நமது ஆராய்ச்சியை செய்ய போகிறோம். காரணம் நாம் இந்துக்கள். பிறந்தநாள் முதற்கொண்டு இந்துக்களாகவே வாழ்ந்து வருகிறோம். நமது மரணமும் ஒரு இந்துவின் மரணமாகவே இருக்கும். நமது சொல்லிலும், செயலிலும் இரத்தத்திலும், தசை அணுவிலும் இந்து என்ற உணர்வே ஆழ பதிந்து விட்டது. எனவே குழப்பங்கள் இருந்தாலும் குளறுபடிகள் மிகுந்து கிடந்தாலும் கடவுள் என்ற தத்துவத்தின் உண்மை பொருளை இந்து மதத்தின் வழியாகத்தான் நம்மால் தேட முடியும்.
இந்து மதம், தத்துவங்கள் மிகுந்த செழிப்பான பீடபூமியாகும். இங்கே ஆயிரம் தத்துவ பிரிவுகள் இருந்தால் அவற்றில் மகுடம் வைத்தது போல் இருப்பது அத்வைதம், விசிஷ்டாத்வைதம், துவைதம் என்ற மூன்று பிரிவுகளே அவற்றில் மிக முக்கியமானது அத்வைதமாகும். அந்த அத்வைத தத்துவப்படி கடவுள் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியும் அல்ல எனவே அவரை அவன் என்றோ அவள் என்றோ அழைப்பது சரியான கருத்து அல்ல. அது அல்லது இது என்று சொல்வோதோடு அதற்கு பிரம்மம் என்ற பொதுப்பெயரை தருகிறார்கள் பிரம்மம் என்பது எந்த பாலினமும் அல்ல பாலினங்களின் எல்லைகளை தாண்டியது பிரம்மமாகும்.
பிரம்மம் ஸ்படிகத்தை விட தூய்மையானது, சர்வ சக்தி வாய்ந்தது, எங்கும் எதிலும் எப்போதும் நிறைந்து நிலைமாறாதது. இன்று இருந்து நாளைக்கு இல்லாமல் போவது அல்ல என்றும் நிலைத்திருக்கும் பிரம்மம் அச்சமற்றது, ஆசைகளற்றது அதனால் சுதந்திரமானது, ஆனந்தமானது எந்த உருவத்தாலோ எந்த குணத்தாலோ வரையறை செய்து எல்லைவகுக்க முடியாதது. இப்படி இருந்தது அப்படி இருந்தது என்று ஆயிரம் வர்ணனைகள் செய்தாலும் ஆயிரம் விளக்கம் கூறினாலும் விளக்கிட முடியாதது, விளங்கிடவும் ஆகாதது. மனிதனது மனதாலும் உடலாலும் அறிந்து கொள்ள முடியாதது என்று அத்வைத சாஸ்திரம் பிரம்மத்திற்கு அழகிய விளக்கம் தருகிறது.
பரபிரம்மம் என்று அழைக்கப்படுகிற பரந்தாமன் கிருஷ்ணன் தனது பகவத் கீதையில் பத்தாம் அத்தியாயம் இரண்டாம் சுலோகத்தில் கூறுகிறார் பிரம்மத்தின் தோற்றத்தை தேவர்களும் அறியார், தவத்தில் சிறந்த ரிஷிகளும் அறியார் என்று, அப்படி இருக்கும் போது அற்ப மானிட ஜீவன்களாகிய நம்மால் அதை அறிந்து கொள்ள முடியுமா? அறிந்தாலும் தெரிந்தாலும் புரிந்து கொள்ள முடியுமா? என்ற தயக்கம் மயக்கம் வருகிறது ஆனாலும் அது தேவையற்றது.
அறிய முடியாத அதிசூட்சும நிலையில் உள்ள பிரம்மத்தை சாதாரண மனிதன் உணர்ந்து கொள்ள முடியாது எனும் போது அந்த பிரம்மத்தால் என்ன பயன் அது இருந்தால் என்ன? போனால் என்ன? என்ற விரக்தி மனப்பான்மை வந்துவிடுவது இயற்கை. ஆனால் நமது பெரியவர்கள் முன்னோர்கள் நம்மைவிட புத்திசாலிகள் நிலையான ஆனந்தத்தை அறிந்து கொள்ள ஆர்வம் காட்ட மாட்டோம் தற்கால சுகத்தை தேடியே நமது மனம் உருண்டோடும் என்று அவர்களுக்கு நன்றாக தெரியும். அதனால் பிரம்மத்தை அறிந்துகொள்ள சரியான சுலபமான வழி ஒன்றை கூறினார்கள்.
முதலில் பிரம்மத்திற்கு உருவம் இருக்கிறது என்பதை ஏற்றுகொள்ள வேண்டும். அந்த உருவம் அழகானது, இரசிக்க தக்கது, வணங்க தக்கது, ஆற்றல் மிகுந்தது என்ற எண்ணங்களை உறுதியாக வளர்த்து கொள்ளவேண்டும். இந்த எண்ணம் வளர்ந்த பிறகு ஆழமாக வேரூன்றி நிலைத்த பிறகு இறைவனது திருவுருவத்தை நினைத்தவுடனேயே பெற்ற குழந்தையை சிந்தித்தவுடன் தாயின் முலைப்பால் சுரப்பதை போல பக்தி சுரக்க வேண்டும், அன்பு பெருக வேண்டும், ஆனந்தம் பிரவாகமாக அலையடிக்க வேண்டும் அதன்பிறகு மெதுவாக மிக மெதுவாக கடவுளுக்கு கொடுத்த உருவத்தை மறக்க முயற்சி செய்து காணுகின்ற பொருளெல்லாம் கடவுள் இருப்பதாக பார்க்க பழக வேண்டும். அப்படி பழக பழக நோக்கும் இடமெல்லாம் நிறைந்திருக்கும் நிர்மல பொருளான பரம்பொருளின் சூட்சுமத்தை, பரமாத்மாவின் இரகசியத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல சாமான்ய மனிதனும் புரிந்து கொள்ளலாம் என்று அனுபவ வாக்கியமாக நமது முன்னோர்கள் தந்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.
ஆதிசங்கரரை தெரியும் உங்களுக்கு அவரின் அத்வைத கொள்கையும் அறியாதவர்கள் அல்ல நீங்கள் அவர் உலகம் பொய் என்றார், உயிர்கள் பொய் என்றார், கண்ணில் காணும் பொருட்கள் எல்லாம் பொய் என்றார், எல்லாமே மாய நிழலில் போலி தோற்றங்கள் என்று சொன்னார், கடவுள் மட்டும் தான் நிஜம், பிரம்மம் மட்டும் தான் சத்தியம், மற்றவை அனைத்தும் நிதர்சனம் இல்லாத பிம்பங்கள் என்றார். அப்படி கடவுளை பிரம்மமாக நிர்குண வடிவமாக ஆதிச்சங்கரரே சிவானந்தலகரி பாடினார், செளந்தர்ய லகரி தந்து மகிழ்ந்தார், பஜகோவிந்தம் தந்து நெஞ்சுருகினார், சுப்ரமணிய புஜங்கம் பாடினார் என்றால் அவர் வேற்றுமையை விதைக்க வந்தாரா? குழப்பங்களை முன்னெடுக்க வந்தாரா? இல்லை! இல்லை! அருவமான பொருளை முதலில் உருவமாக வணங்கு அதன் பிறகு உருவம் மறைந்து அருவம் தெரியுமென்று அனுபவத்தை அனுபவத்திற்கு ஏற்றதை சொல்லவே வந்தார். அதனால் தான் ஆறு பிரிவுகளாக கிடந்த இந்து மதத்தை ஒரே பிரிவாக மாற்றினார்.
உருவமற்ற பிரம்மத்தை உருவம் உள்ளதாக காட்டுகிற போது, அப்படி காட்டுவதற்கு துணையாக ஆத்மா, பிரகிருதி என்ற இரண்டு அம்சங்களை தத்துவ ஞானிகள் முன்வைக்கிறார்கள். ஆத்மா தூய்மையானது, நிலையானது அதன் ஒரு பகுதி மையமாக இருந்து கொண்டு தன்னை சுற்றி இன்னொரு பகுதியை உடலை இயக்க வைக்கும் உயிராக வெளிப்படுத்துகிறது பிரகிருதி என்பது ஆத்மாவின் உடலை போன்றது, பிரகிருதியில் இருந்தே நமது கண்களுக்கு தென்படுகிற பிரபஞ்சமும் உலகமும் உலகத்திலுள்ள ஜீவன்களுக்கான உடல்களும் படைக்க படுகிறது.
கணக்கு ஒன்று போடவேண்டுமென்றால் அதற்கு தக்க விடை காண சூத்திரம் ஒன்று வேண்டும் எல்லாவற்றிற்கும் ஆரம்பமாக இருப்பது சூத்திரம். சூத்திரம் இல்லை என்றால் எதற்கும் துவக்கம் என்பதே கிடையாது. அப்படி பிரகிருதி தத்துவத்தால் படைக்கப்பட்ட உயிர், அதாவது பிரபஞ்சம் முழுவதும் முதல் முதலில் தோன்றிய உயிர் ஹிரண்யஹர்பர் என்ற பெயர் கொண்டதாகும். இவரே சூத்திர ஆத்மா அதாவது மற்ற உயிர்கள் தோன்றுவதற்கு காரணமான ஆத்மா. இவரின் இன்னொரு பெயர் பிரம்மன் என்று உபநிஷதங்கள் அழைக்கிறது. தானே முளைத்த சுயம்புவான ஹிரண்யஹர்ப்ப பிரம்மதேவனே கடவுளாகவும் வடிவேடுக்கிறார் என்று பூரணங்களும், மனுநீதி சாஸ்திரமும் கூறுகின்றன. பிரம்மதேவரின் சக்தி எல்லையற்றது, அவர் தம்மிடமிருந்து பிரபஞ்சத்தை தோற்றுவித்தார், ஒரே நேரத்தில் பிரபஞ்சமாகவும் அதனுள் இருக்கின்ற உயிர்களாகவும் மாறுகிறார். இந்திரன், அக்னி சூரிய சந்திரன் போன்ற தேவ தேவதைகள் பிரம்மனால் படைக்கப்பட்ட உயிர்களே, சாதாரண உயிர்களாக சிருஷ்டிக்கப்பட்டு தனது கர்மாக்களால் உயர்வான நிலையை அடைந்த புண்ணிய ஜீவன்களே அவர்கள்.
மனிதனுக்கு அவனது உடலையும், மனதையும், அறிவையும் உயிரை இயக்க கூடியதும், ஆத்மா என்ற பிரம்மனே !மனிதனது உடல் பிரகிருதியால் ஆனது. மனிதனுக்குள் இருக்கின்ற இறைத்தன்மையாகிய ஆத்மா பிரகிருதியின் மாய வலைக்குள் சிக்கி இருப்பதனால் மயக்கம் அடைகிறது, கலக்கம் அடைகிறது தனக்கு எந்த சக்தியும் இல்லையோ என்று பொய்யாக, போலியாக புலம்பி கிடக்கிறது. மனிதன் தான் மாயை என்ற கயிற்றினால் கட்டபட்டிருக்கிறோம், அதனால் சர்வ சக்தியை இழந்து நிற்க்கிறோம், தனது பலம் ஆளுமை முழுமையானது அல்ல தரம் குறைந்ததே என்று நினைத்து கலங்குகிறான். அந்த கலக்கத்தின் விடிவாக எல்லையற்ற சக்தியுடனும், ஆழமான கருணையுடனும் அமானுஷ்யமான தன்னை காக்க ஒரு சக்தி வரும். தான் நிச்சயம் இரட்சிக்கபடுவோம். தனது பாவ சுமைகளை இறக்கி வைக்க சுமை தாங்கி கல்லொன்று கிடைக்கும் என்று நம்புகிறான்.
விவரிக்க முடியாத அந்த அமானுஷ்யமான சக்தி சில மனிதர்களுக்குள் புகுந்து செயல்படுவதாக பல மனிதர்கள் நம்பினார்கள். அத்தகைய தெய்வ தன்மை வாய்ந்த மனிதர்களே இறைவனின் தூதர் என்றும், கடவுளின் குமாரர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். அந்த வகையில் முகமது நபியை இஸ்லாம் கடவுளின் திருத்தூதராக காண்கிறது. கிறிஸ்தவம் ஏசுவை தேவகுமாரனாக மதிக்கிறது. ஆனால் இந்து மதமோ தெய்வீகமான சக்தி தனக்கென்று வேறு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்காமல் தானே உயிர் கொண்டு, உடல் கொண்டு ஒரு ஜீவனாக உலகத்தில் ஜனனம் எடுக்கிறது அதன் பெயரே அவதாரம் என்கிறது.
கடவுள் மீனாகவும், ஆமையாகவும், பன்றியாகவும் அவதாரம் எடுக்கிறார். அப்படி அவதாரம் எடுக்கிறபோது சம்மந்தப்பட்ட உடல்களில் கர்ப்பம் தரிக்கிறார் என்று ஸ்ரீ வைஷ்ணவம் கூறுகிறது. சைவ சமயம் அவதாரத்தின் ஜனனத்தை வேறு விதமாக காண்கிறது. கர்ப்பவாசம் என்பது இறைவனுக்கு தேவையில்லை அவர் தானே நேரடியாக அவதாரத்தை எடுக்கிறார் என்று சைவ சமயம் நம்புகிறது. அவர் கர்ப்பத்தில் வருகிறாரா? கர்ப்பம் இல்லாமல் சுயம்புவாக வருகிறாரா? என்று சாதாரண மனிதன் ஆய்வுகள் நடத்துவது இல்லை, எப்படி வந்தாலும் அவரால் நடந்த, நடக்க போகும் நன்மைகளுக்கு ஆயிரம் கோடி வந்தனம் என்று போற்றி வணங்குகிறான்.
சிறிய உதவியை கூட பெரும் பேராக கருதுகிற மனிதன் அவதாரங்களின் பேராற்றலை சாமான்யமாக கணித்து விடுவானா என்ன? தர்மம் குன்றி அதர்மம் தலைதூக்கும் போதெல்லாம் தர்மத்தை காக்க மீண்டும் மீண்டும் வருவேன் என்று இறைவனாகிய கண்ணபெருமான் கீதையில் சொல்கிறான். அதனால் தான் இந்துக்களாகிய நாம் இயேசு, முகமது நபி போன்றோர்களை அந்நியர்கள் என்று வெறுத்து ஒதுக்காமல் போற்றி வணங்க தலைப்படுகிறோம். கண்ணன் கீதையில் பத்தாவது அத்தியாயத்தில் நானே விஷ்ணு, நானே சங்கரன், நானே ராமன் என்று ஒரு பிரம்மம் பல வடிவுகளாக, கடவுள்களாக வருவதை தெளிவாக கூறுகிறார். இதே தான் ரிக் வேதம் ஒன்றாக இருப்பதை பலவாக அறிஞர்கள் காண்கிறார்கள் என்று அழகாக சொல்கிறது. மீண்டும் கண்ணன் சொல்கிறான் மற்ற தேவதைகளை சிரத்தையோடு வணங்கும் எவனும் முறை தடுமாறினாலும் என்னையே வணங்குகிறார்கள் என்கிறான். நீரிலுள்ள குளிர்ச்சி நான், தீயில் அனல் நான், சூரிய சந்திரர்களில் வெளிச்சம் நான், புத்திமான்களின் புத்தியும் நானென்று கூறுகிற கண்ணன் கண்ணுக்கு தெரிகிற எந்த வடிவமும், எந்த சக்தியும் இறைவனே என்று கவிதா விலாசத்தோடு சொல்கிறான்.
இதை தான் மகாகவி பாரதியார்
பாலும் தெய்வம் பதியும் தெய்வம்
பாலைவனமும் கடலும் தெய்வம்
ஏழு புவியும் தெய்வம் தெய்வம்
எங்கும் தெய்வம் எதுவும் தெய்வம்
என்று சொல்கிறார். இதுமட்டுமல்ல அன்பே கடவுள், அறிவே கடவுள், உண்மையே கடவுள், ஒளியே கடவுள், ஒலியே கடவுள் என்று கடவுளுக்கு பலவித விளக்கங்கள் கொடுக்கப்படுகிறது. யானையை பார்த்த குருடர்கள் ஆளாளுக்கு ஒரு கதையை சொன்னது போல இறைவனை பற்றி ஞானிகள் ஒவ்வொருவரும் தனது போக்கில் தான் அறிந்ததை கூறி சென்றிருக்கிறார்கள். அவைகள் அனைத்தும் உண்மையே, ஆனால் அவைகள் மட்டும் உண்மை அல்ல அவைகளுக்கு மேலும் உண்மை இருக்கிறது.
அந்த உண்மைகளை அடுத்தடுத்து வரும் நாட்களில் ஒவ்வொன்றாக சிந்திப்போம். அதற்கு முன் பண்டிதர் ஜவகர்லால் நேரு சொன்ன ஒரு விளக்கத்தை கூறி இந்த உரையை முடிக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு மரத்தில் ஒரு பூவை பார்க்கிறோம் அதனால் மரத்தை பூவென்று சொல்லிவிடலாமா? அதே மரத்தை ஒருவன் இலையையும் இன்னொருவன் அடிமரத்தையும் பார்க்கிறான். மரத்தின் தனித்தனி பாகத்தை தனித்தனி மனிதர்கள் பார்க்கிறார்கள் மரமென்றால் பூ, மரமென்றால் இலை, மரமென்றால் அடிமரம் என்று கூறி வாதிட்டு சண்டைபோட்டு கொள்ளலாமா? என்று கேட்கிறார் நேரு. கடவுளும் அப்படி தான் ஒருவருக்கு அவர் அல்லா, ஒருவருக்கு அவர் கர்த்தர் , ஒருவருக்கு அவர் பிரம்மம், ஒருவர் கடவுளை உருவத்தோடு காண்கிறார், இன்னொருவர் அவருக்கு உருவம் இல்லை என்று காண்கிறார். அவரவர் நிலையில் அனைத்து வாதமும் சரியானதே, கடவுள் எல்லாமாகவும் இருக்கிறார் அவரை எப்படி வேண்டுமென்றாலும் பார்க்கலாம் வணங்கலாம்.