Store
  Store
  Store
  Store
  Store
  Store

ஓம் என்றால் என்ன...?


சொற்பொழிவு தொடர் -- 1

ன்பார்ந்தவர்களே!!!

இந்த இனிய மாலை பொழுதில் உங்களை சந்திப்பதற்கு கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தை இறைவன் கொடுத்த நல்ல வாய்ப்பாக கருதி நமது சிந்தனைக்கு விருந்தளிக்கும் வகையிலும் கலங்கி குழம்பி, சேரும் சகதியாக கிடைக்கின்ற நமது உள்ளத்தை சீர்படுத்துகிற வகையிலும் சில நல்ல விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

நாம் இங்கே அமைதியாக உட்கார்ந்து கொண்டிருந்தாலும் இந்த அரங்கத்திற்கு வெளியே எங்கும் அமைதி இருப்பதாக கூறமுடியாது. வாகனங்கள் செல்லுகிற சத்தம், மனிதர்கள் விளையாடுகிற சத்தம், விலங்குகளின் சத்தம், வினோதமான இயந்திரங்களின் சத்தம் என்று ஆயிரக்கணக்கான சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இந்த உலகில் சத்தம் என்பது இல்லாத இடமே இல்லை. ஆழமான தண்ணீருக்குள்ளும் காற்றே புகாத மண்ணுக்குள்ளும் சத்தம் இருப்பதை நவீன விஞ்ஞானம் உறுதி செய்கிறது.

உலக முழுவதும் ஒலி மயமானது. ஒலியில் தான் உலகமே  இருக்கிறது. இன்னும் ஒருபடி சொல்லப்போனால் உலகம் என்பதே ஒலிதான் என்று பலர் சொல்கிறார்கள். மனிதரின் மூலாதாரத்தில் ஏற்பட்டு கொண்டிருக்கின்ற ஒலி அலையே உயிர் என்றும், அந்த ஒலி நின்றுவிட்டால் சரீரம் சவமாகி விடுமென்றும், நமது சித்தர்கள் கூறுகிறார்கள். உலகம் என்பது சத்தம், உயிர் என்பது சத்தம் அப்படி என்றால் கடவுள் என்பதும் சத்தம் தானா? என்று கேட்டால் ஆம். ஒலியின் விந்தாக, நாத விந்தாக இறைவன் இருப்பதாக அனுபவித்து பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

ஓடி விளையாடுகிற காலத்தில், உயர்த்தி பிடிக்கின்ற காற்றாடி சுற்றுகிற போது ஒரு ஓசை வருகிறது. மாட்டுவண்டியின் சக்கரம் சுற்றுகிற போது, ஒரு ஓசை வருகிறது. குழந்தையின் சிரிப்பிலும், குமரி பெண்களின் கலகல பேச்சிலும், பிணத்தின் முன்னால் வைக்கின்ற ஒப்பாரியிலும், ஒரு ஓசை வருகிறது. இப்படி அனைத்து செயல்களுக்கும் அதனதன் தரத்திற்கு ஏற்ற ஓசை வருகிற போது, உலகம் என்ற மிகப்பெரிய பந்து நிற்காமல், நிதானிக்காமல் யாருடைய கட்டளைக்கும் காத்திருக்காமல் சுற்றிக் கொண்டே இருக்கிறதே அதிலிருந்தும் பிரம்மாண்டமான ஓசை வரவேண்டுமே அது நமது காதுகளில் இதுவரை விழவில்லையே? அது ஏன் என்ற கேள்வியும், சிந்தனையும் நம் முன்னால் மலைபோல் நிற்கிறது.

சிறிய பொருளொன்று சுற்றினாலும் ஓசை வருகிறபோது, பெரிய பொருளான பூமி சுற்றுவதனால் ஓசை வராதா என்ன? கண்டிப்பாக ஓசை வருகிறது. அது நமது காதுகளால் கேட்க முடியாத ஓசை. மனித காதுகளில் சக்திக்கு ஒரு எல்லை உண்டு. அவற்றால் மிக மெல்லிய ஒலிகளையும் கேட்க இயலாது. பிரம்மாண்டமான சத்தத்தையும் கேட்க முடியாது. பூமி சுற்றும்போது வருகிற சத்தம் பிரம்மாண்டமானது. அதை சாதாரண காதுகளால் கேட்க இயலாது. ஆனால், அந்த சத்தம் வேறு சில பொருட்களின் மீது பட்டு எதிரொலிக்கும்  போது மனிதனால் சிறிது உணர்ந்து கொள்ள முடியும்.

மலைகளின் உச்சியின் மீது காற்று ஓங்கி வீசுகிற போது அந்த சத்தத்தை கேட்கலாம். மரங்கள் காற்றில் அசைகிறபோது அந்த சத்தத்தை, சண்ட மாருதம் என்ற சூறைக்காற்று வீசுகிற போது அந்த சத்தத்தை கேட்கலாம். கடல் அலைகள் ஓங்கி ஓங்கி தரையில் அடித்து, மீண்டும் கடலுக்குள்ளே செல்லுகிற போது அந்த சத்தத்தை கேட்கலாம். ஆலயங்கள், மண்டபங்கள், மைதானங்கள், சந்தகடைகள் இவற்றிலிருந்து வருகிற மனித சத்தங்களை தூரத்திலிருந்து கேட்கும் போது அந்த சத்தத்தை கேட்கலாம். மரங்களில் கூடு கட்டி குடும்பம் நடத்துகிற பறவைகள் எழுப்புகிற கூட்டுக்குரல் இசையிலும், வெண்கலம், இரும்பு, வெள்ளி இவற்றை ஒன்றோடு ஒன்று தாக்க செய்யும் போது எழும் ஓசையிலும் அந்த சத்தத்தை கேட்கலாம். எல்லாவற்றிற்கும் மேலாக நெருப்பு கட்டுக்கடங்காமல் எரிந்தாலும் அந்த இடத்திலும் அந்த சத்தத்தை கேட்கலாம்.

இந்த சத்தங்களை பலமுறை நாங்கள் கேட்டிருக்கிறோம். இவைகள் எல்லாம் “ஓம்” என்ற ஓம்கார சத்தம் தானே இதற்கும் உலகம் சுற்றுவதற்கும் என்ன சம்மந்தமென்று நீங்கள் கேட்கலாம். நிச்சயம் சம்மந்தம் இருக்கிறது. உலகம் சுற்றுகிற சத்தமே ஓம்காரம் என்பது தான். பூமி மட்டுமல்ல பிரபஞ்சத்தில் உள்ள அணைத்து கோள்களுமே ஓம்கார நாதத்தில் தான் சுற்றி வருகிறது. இன்று நாம் கண்களில் காணுகிற, காணமுடியாத பொருட்கள் அனைத்துமே “ஓம்” என்ற சத்தத்தில் தான் அடங்கி இருக்கிறது. கடவுளும் கூட “ஓம்” என்ற உருவத்திலேயே இருப்பதாக மெய்ஞானிகள் கூறுகிறார்கள். பக்கம் சாராது பேசுவதில் வல்லவன் என்று பேர் பெற்ற வள்ளுவன் கூட, அகரமுதல எழுத்தெல்லாம் என்று துவங்கி சர்வேஸ்வரனை அகர எழுத்தோடு ஒற்றுமைபடுத்தி காட்டுகிறார். அகரம் என்பதே ஓம்காரம் தான். ஓம் காரம் வேறு, அகரம் வேறு அல்ல.

குருஜி இப்படி உரையாற்றி கொண்டிருந்தபோது ஒரு அன்பர் பணிவோடு எழுந்து தங்கள் உரையின் போது குறுக்கீடு செய்வதற்கு மன்னிக்கவும். அடியேனுக்கு சிறிய சந்தேகம் இருக்கிறது. அகாரம், முகாரம், மகாரம் ஆகிய மூன்றும் கலந்து தான் ஓம்காரம் என்று கூறுவார்கள். நீங்கள் கூட அதே அர்த்தத்தில் தான் வள்ளுவனின் குறளையும் குறிப்பிடுகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கு வருகின்ற சந்தேகம் இதில் அல்ல. அகாரமும், ஓங்காரமும் ஒன்று என்பது தமிழ் மொழிக்கு மட்டும் தானா? தமிழ் மொழிக்கு மட்டும் தான் என்றால் ஓம் காரமே உலகத்தின் வடிவாக இருக்கிறது என்ற உங்கள் பொது கருத்தை ஏற்பது சிரமம் அன்றோ என்று கேட்டார். அவரது கேள்வியையும் உள்வாங்கி கொண்ட குருஜி தனது உரையை தொடர்ந்தார்.

அகாரம், உகாரம், மகாரம் என்பது தமிழ் மொழிக்கு மட்டுமே உரிய அட்சரங்கள் அல்ல. இன்று மனிதர்களால் பேசப்படுகிற மொழிகள் அல்லது பேச்சு வழக்கில் இல்லாத மொழிகள் ஆகிய அனைத்து மொழிகளுக்குமே இவைகள் சொந்தமானது. ஒவ்வொரு மொழியையும் எடுத்து, அதிலுள்ள உயிர் எழுத்துக்களில் ஓங்காரம் எப்படியெல்லாம் பரிமளிக்கிறது என்பதை எடுத்துச் சொல்ல எனக்கு ஆசை தான். ஆனால், சகல பாஷைகளும் அறிந்தவன் அல்ல நான். தாய் மொழியான தமிழை கூட ஒரு குழந்தையின் அளவிற்கு தெரிந்தவனாகவே இன்றுவரை இருக்கிறேன். இருந்தாலும் எனக்கு தெரிந்தவரையில் இதை விளக்குவது நலம் என்று கருதுகிறேன்.

தென்னிந்தியாவில் பேசப்படுகிற துளு, கன்னடம், தெலுங்கு, மலையாளம், மராட்டியம் போன்ற மொழிகளாக இருக்கட்டும். வங்கம், குஜராத்தி, அசாமி, இந்தி, உருது போன்ற வட இந்திய மொழிகளாக இருக்கட்டும். அவைகள் அனைத்துமே நமது தமிழை போலவே எழுத்து அமைப்புகளை ஏறக்குறைய பெற்றிருக்கின்றன. எனவே அவற்றிலும் அ, உ, ம போன்ற எழுத்துக்கள் ஒரே மாதிரியாகவே அமைந்து ஒம்ஹாரத்தை சொல்லுகின்றது. இன்று உலக மொழி என்று போற்றப்படுகிற ஆங்கிலத்திலும் a, i, m ஆகிய உயிர் எழுத்துக்கள் ஓம் காரத்தை காட்டுகிறது. அரபு மொழியில் முதல் எழுத்தாக அறியப்படும் அம்ஸா என்ற எழுத்தும், அகர வரிசையில் முதல் எழுத்தாக வருவதை வைத்தும், பாரசிக மொழியில் அலிப் என்பது முதல் எழுத்தாக இருப்பதை வைத்தும், மொழிகள் அனைத்திற்கும் மூலமாக இருப்பது ஓம்காரமே என்று நாம் உறுதியாக கூறலாம்.

இவைகள் மட்டுமல்ல உலகில் பல மதங்கள் இருப்பதை நாமறிவோம். அந்தந்த மதங்கள் இறைவனுக்கு பற்பல பெயர்களை கொடுத்திருப்பதையும் நாமறிவோம். அந்த பெயர்களை எல்லாம் எடுத்து, ஆராய்ச்சி செய்தோம் என்றால் அதிலும் “ஓம்” என்ற வார்த்தை மறைந்திருப்பதை அறிந்து, மறைத்து போகவேண்டிய நிலை இருக்கிறது. ஏறக்குறைய இந்து மதத்தை ஒட்டிய வயதுடைய பாரசிக மதமான சொராஸ்திரிய மதத்தில் கடவுளை அஜூர் மஸ்ட் என்று சொல்வார்கள். இதிலுள்ள a, w, m  என்ற எழுத்துக்கள் அ, உ, ம என்ற எழுத்துக்களுக்கான ஒம்ஹாரத்தையே அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறது. சீனா, ஜப்பான், தாய்லாந்து, திபெத் முதலான நாடுகளில் லாமக்களின் கருத்துப்படி இறை சக்தியினுடைய பெயர் மனி பத்மி ஹோம் என்ற சொல்லாகும். இந்த சொல்லினுள்ளும் “ஓம்” ஒளிந்திருப்பதை தெளிவாக காணலாம்.

யூதர்களில் தெய்வத்தின் பெயர் ஜெஹோவா. இந்த ஹிப்ரூ மொழியினுடைய வார்த்தைக்கு நான் இருக்கிறேன் என்பது பொருளாகும். இதை யப என்றும் அழைப்பார்கள். இதிலுள்ள e, a, o என்ற எழுத்தும், பிரணவ மந்திரத்தை குறிக்கும் எழுத்தாகும். கிறிஸ்தவ மதத்தில், இறை வழிபாட்டை முடித்தபிறகு பிரார்த்தனைகளை செய்தபிறகு ஆமென் என்று கூறுவது வழக்கம். என்பதை நாம் ஒவ்வொருவரும் நன்றாக அறிவோம். இந்த ஆமென் என்ற வார்த்தை ஓம் என்ற வார்த்தையின் திரிபு என்பது சொல்லாமலே விளங்கும். ஓம் என்பது தான் உலகமாக இருக்கிறது என்று இந்துமத நூல்கள் குறிப்பிடுவது போலவே கிறிஸ்தவ பைபிள் ஆதியாகமத்தில் முதலாம் அத்தியாயம் முதலாம் வசனத்திலேயே ஆதியில் வார்த்தை மட்டுமே இருந்தது அந்த வார்த்தையே  கடவுளாக இருந்தது என்று கூறுவது நன்கு கவனித்து பார்த்தால் ஓங்காரத்தின் நிலைப்பாடு என்னவென்று புரியும்.

இன்று இந்து மதத்திற்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தனித்தே பிரிந்து நின்று, முறைப்போடு இருக்கின்ற நமது சகோதரர்களின் மதமான இஸ்லாம் மதத்திலும் கடவுளை குறிக்கும் வார்த்தையாக அலிப்_லாம்_மீம் என்ற வார்த்தை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக குரானில் கருதப்படுகிறது. இந்த சொல்லின் உள்ளாக இருக்கும் a, l, m  என்பதும் அ, வு, ம என்பதற்கும் அதிக தூரம் இல்லை என்பது தெளிவாக தெரியும். இப்படி உலகில் உள்ள சகல பொருட்களிலும் ஒம்ஹாரம் என்ற ஓம் என்ற பிரணவ மந்திரம் மறைந்திருக்கிறது. இந்த ஓம் சாதாரணமானது அல்ல மந்திரங்களுகேல்லாம் உயர்ந்தது. அரச மந்திரம் காயத்திரி என்று கூறுவார்கள். ஆனால் அந்த காயத்திரியை விட ஆயிரம் மடங்கு உயர்வானது ஓம் என்ற மந்திரம். அதனால் தான் பகவான் கிருஷ்ணன் தனது பகவத் கீதையில் ஏழாம் அதிகாரம், எட்டாவது ஸ்லோகத்தில் எல்லா வேதங்களிலும் நானே ஓம்ஹாரமாக இருக்கிறேன் என்று கூறுகிறான்.

ஒம்ஹாரத்தில் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் ஆகிய மூன்று உலோகங்களும், பஞ்ச பூதங்களும், மனிதனது பத்து இந்திரியங்களும் அடங்கி இருப்பதோடு மட்டுமல்ல. இறைவனை கண்ணுக்கு காட்டுகிற வடிவமாகவும், காதுக்கு கேட்கிற ஒலியாகவும் இருக்கிறது. இதை உணர்ந்து கொண்டு தினசரி பிரணவ மந்திரத்தை யார் சொல்கிறார்களோ அவர்கள் வாழ்க்கையில் சர்வ மங்களமும் உண்டாகும் என்பதில் ஐயமில்லை.



Contact Form

Name

Email *

Message *