Store
  Store
  Store
  Store
  Store
  Store

தாசியின் உருவமும் இறைவனே !


   வானவில்லில் ஏழு வர்ணனங்கள் உண்டு. சூரியனின் வண்ண பிம்பமாக காட்சி அளிக்கும் வானவில் நிறங்களே ஏழு என்பதனால் உலகிலுள்ள ஒட்டு மொத்த நிறங்களே ஏழு தானோ? என்ற முடிவிற்கு நம்மால் வரமுடிவதில்லை. காரணம் சோலைகள் தோறும் மலர்ந்து சுந்தர புன்னகை வீசும் பல்லாயிரக்கணக்கான மலர்களை கண்கள் குளிர்ச்சியடையும் வண்ணம் தினசரி காண்கிறோம். அவைகள் எத்தனை எத்தனை வண்ணங்கள் நினைத்துப் பார்க்கவே முடியாத வண்ணக் கலவைகள் கொட்டி வைத்து இறைவன் என்ற ஓவியன் எழுதிய மலரோவியங்களை வியப்போடு பார்க்கிறோம். அப்போது நமக்கு தெரிகிறது. கடலுக்கு இறுதியான ஆழமில்லை. வானத்திற்கு எல்லை இல்லை. காற்றுக்கு வேலியில்லை கணக்கற்ற நிறங்களுக்கு கணக்கே இல்லை.

நிறங்கள் மட்டுமா பல வகை இருக்கிறது? மனித மனங்களும் பலவகையாக இருக்கிறது. நிறங்களின் எண்ணிக்கையை கூட கற்பனை என்ற எல்லைக்கோடு வரைந்து வரையறை செய்து விடலாம். கற்பனைக்கே எட்டாத, கற்பனையே செய்ய முடியாத விதவிதமான மனங்கள் உலகம் முழுவதும் நிறைந்து கிடக்கிறது. கறுப்பனுக்கு ஒரு மனம். சிவப்பனுக்கு ஒரு மனமென்று வகைபடுத்த முடியாது. கருணை பொங்கும் விழிகளுக்குள் கயமை மிக்க மனம் ஒளிந்திருப்பதை பார்க்கிறோம். கடுகடுத்த முகத்தில் கனியை விட சுவை மிகுந்த மனமிருப்பதையும் அறிகிறோம். உருவத்தை வைத்து உள்ளத்தை எடைபோட்டு விட முடியவில்லை

ஆறும் ஆழமில்லை. அது சேரும் கடலும் ஆழமில்லை. அனைத்தையும் விட பெண்ணின் மனதே ஆழம் என்று சொல்வார்கள். நிஜமாகவே பெண்களின் மனம் தான் ஆழமானதா? ஆண்களின் மனம் மேலோட்டமானதா? இதற்கு ஆமாம் என்று பதிலை கூறிவிட்டால் சாணக்கியனது புத்தியையும், காரல்மார்க்சின் அறிவையும் எடைபோடும் போது தோற்றுப் போகும். எனவே நடைமுறையில் பார்க்கும் போது, ஆண் மனதும் பெண் மனதும் இரண்டுமே ஆழமானது, ரகசியமானது புரிந்து கொள்ள முடியாது. இதை எதை வைத்து சொல்கிறேன் என்றால், பெண்ணை புரிந்து கொள்ளாத பத்து ஆண்கள் இருக்கிறார்கள் என்றால், ஆண்களை தெரிந்தே தெரியாத பனிரெண்டு பெண்கள் இருக்கிறார்கள். நடைமுறையில் இது தான் நிஜம்.

ஒருவர் கைரேகை போல் இன்னொருவர் ரேகை கிடையாது. ஒருவர் கருவிழியை போல் வேறொருவர் கருவிழி கிடையாது. இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் ஒருவர் உடம்பிலிருந்து வரும் வியர்வை நாற்றம் இன்னொருவருக்கு வருவதில்லை. இப்படி மனிதனுக்கு மனிதன் ஆயிரம் வேறுபாடுகள் இருப்பது போல, மனதுக்கு மனதும் எண்ணிக்கையில் அடங்காத வேறுபாடுகள் இருக்கிறது. இது இறைவன் சிருஷ்டியில் உள்ள விந்தை. ஆயிரம் விஞ்ஞான கண்டுபிடிப்புகள் மனிதனால் உருவாக்கபட்டாலும், அவனும் நினைத்து பார்த்தால் அதிசயப்படும் வித்தை இது. ஏன் இப்படி மனிதன் இருக்க வேண்டும்? ஒருவனுக்கு ஒருவன் எள்முனை அளவுகூட ஒற்றுமை இல்லாமல் ஏன் படைக்கப்பட வேண்டும்? அதன் காரணம் என்ன? நினைக்க நினைக்க நூல் கண்டு சிக்கல் போல் குழப்பங்கள் நம்மை வசப்படுத்துகிறதே தவிர எதுவும் வெளிச்சத்தை காட்டவில்லை.

நாம் நினைக்கிறோம். எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்குமென்று நாம் எதிர்பார்க்கிறோம். எல்லா கேள்விகளுக்கும் பதில் தேவை என்று நாம் நினைப்பதும், எதிர்பார்ப்பதும் சரிதானா? நடைமுறைக்கு சாத்தியம் உள்ளது தானா? ஆகாயத்தில் இருக்கின்ற கங்கை, பூமிக்கு பிரவாகம் எடுத்து வருவது போல சிந்தனையை நமது அறிவை வளர்த்துக் கொண்டே சென்றாலும், பாறைகளை புரட்டி போடுவது போல ஆராய்ந்து கொண்டே சென்றாலும் விடையில்லாத கேள்விகள் எத்தனையோ இருக்கிறது? அதை நாம் பார்க்க மறுக்கிறோம். அல்லது உண்மையை நேருக்கு நேராக சந்திக்க அஞ்சுகிறோம்.

ஒரு சிறிய கேள்வி இதற்கு உங்களால் பதில் சொல்ல முடியுமா என்று யோசித்து பாருங்கள் ஒரு குழந்தை எப்படி பிறக்கிறது என்று நமக்கு தெரியும். ஒரு துளி நீராக இருக்கும் ஜீவன், தாயும் தகப்பனும் இணைந்து, கருவறையில் வளர்ந்து, பத்தாவது மாதம் குழந்தையாக வெளிவருமென்று நமக்கு தெரியும். ஆனால் அந்த குழந்தை ஏன் பிறக்கிறது? அதன் பிறவியின் நோக்கமென்ன? விடை உங்களுக்கு தெரியுமா? குழந்தையை பெற்றவர்களுக்கு தெரியுமா? ஏன் அந்த குழந்தைக்காவது தெரியுமா? இறைவன் ஒருவனை தவிர வேறு எவனுக்கும் இந்த கேள்விக்கு பதில் தெரியாது. பலவற்றிற்கு பதில் இல்லை என்பதனால் நம்மால் கேள்விகள் கேட்காமல் இருக்க முடிகிறதா என்ன? பதில் கிடைக்கிறதோ இல்லையோ கேள்விகளை மனித சமுதாயம் காலங் காலமாக கேட்டுக் கொண்டே இருக்கிறது.

மகேந்திர பல்லவனின் கேள்விகள் மாமல்லபுர சிற்பங்களாயின. ராஜ ராஜசோழனின் கேள்விகள் பிரகதீஸ்வரர் ஆலயமாக எழுந்து நிற்கிறது. ஐசக் நியூட்டனின் கேள்விகள் கண்டுபிடிப்புகளாக மலர்ந்து கிடக்கின்றன. கேள்விகளால் நன்மையையும் உண்டு. கேள்விகளால் தீமையும் உண்டு. நான் ஏன் உலகத்தை ஆளக்கூடாது என்று ஹிட்லர் கேட்டான். இலட்சக்கணக்கான மனித உயிர்கள் மடிந்து விழுந்தன. ஒசாமா பின்லேடனின் கேள்விகள் இரட்டை கோபுரத்தை தகர்த்து சிரித்தன. துறவுக்கு வந்த பிறகு பெண்ணை தொட்டால் என்ன என்று சில சந்நியாசிகள் கேட்ட கேள்விகள் ஆன்மீக பாதையை இழிவுபடுத்தின. இப்படி எத்தனையோ கேள்விகள் நல்லதும் கெட்டதுமாக இருந்தாலும் மனிதனின் கேள்விகள் நிற்கவில்லை.

இதற்கு காரணம் என்ன?  உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் தனி மனிதனாக, தனித்த மனிதனாக இருக்கிறானே தவிர கூட்டு மனிதனாக யாருமில்லை. நான் சொல்வது விளங்கவில்லை என்றால் அதை இப்படி திருப்பி போட்டு யோசித்து பாருங்கள். ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த சுபாவத்தால், தனித்தனியாக இருக்கிறானே தவிர ஒன்றாக ஒற்றுமையாக இல்லை என்ற தெளிவு உங்களுக்கு கிடைக்கும். சுபாவங்கள் மாறுபட்டு இருப்பதனால், எண்ணங்கள் மாறுபடுகிறது. எதிர்பார்ப்புகள் மாறுபடுகிறது. ஒவ்வொரு மனிதனின் மாறுபட்ட சுபாவங்கள் ஒன்றை ஒன்று தாக்கி கொள்வதனால், துன்பமும் துயரமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் தான் உலகம் முழுவதும் தேடி பார்த்தாலும் முழுமையாக சிரிக்கும் மனிதர்களை அதிகமாக பார்க்க முடியவில்லை.

நன்றாக கவனிக்க வேண்டும். சிரிக்கின்ற மனிதர்களை அதிகமாக பார்க்க முடியவில்லை என்று சொன்னேனே தவிர பார்க்கவே முடியவில்லை என்று நான் கூறவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது. முழுமையான மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள். இனியும் இருப்பார்கள் அவர்களை புரிந்து கொண்டால், அவர்களை அறிந்து கொண்டால், அவர்களை போல நீயும் நானும் கூட ஆகிவிடலாம். அதாவது நமது துயர சட்டைகளை கழற்றி எறிந்து விட்டு இன்பமான ஆடைகளை அணிந்து கொண்டு அலங்காரமாக பவனி வரலாம். அதற்கு நமது சிந்தனை மாறவேண்டும். நமது சுபாவம் மாறவேண்டும். நமது புலன்களுக்கு முடிந்தவரையில் கடிவாளம் போடவேண்டும். 

இருபது வருடங்களுக்கு முன்பு கம்யூனிஸ்ட் சிந்தனையை வளர்த்து கொள்வது எப்படி என்று ஒரு முதிய தோழரிடம் கேட்டேன். அவர் எனக்கு சொன்னார் கம்யூனிஸ்ட் என்பது தத்துவத்தில் இல்லை. அரசியலில் இல்லை. மனிதனின் சுபாவத்தில் இருக்கிறது. ஒருவன் கம்யூனிஸ்ட்டாக மாறிவிட முடியாது. அப்படி அவன் பிறக்க வேண்டும் என்று கூறி உண்மையான கம்யூனிஸ்ட் எப்படி இருப்பான் என்பதற்கு இலக்கணம் சொன்னார். ஒரு பெண், அழகான பெண் மேலாடை இல்லாமல் தெருவில் ஓரமாக கிடக்கிறாள். அவளை ஒரு காமுகன் பார்க்கிறான் அவள் உடல் வனப்பு இவனின் ஆசையை தூண்டுகிறது அவளை எப்படியாவது அனுபவிக்க முடியுமா என்று திட்டம் தீட்டுகிறான். ஒரு குடியானவன் பார்க்கிறான் ஐயோ யார் பெற்ற பிள்ளையோ கட்டிக்கொள்ள துணியில்லாமல் கிடக்கிறது யாரவது ஒரு ஆடை ஒன்று கொடுக்கலாம் நம்மால் என்ன செய்ய முடியும்? என்ற சிந்தனையோடு போய்விடுகிறான்.

அந்த பெண்ணை துணி வியாபாரி ஒருவன் பார்க்கிறான் எப்படியும் இவளுக்கு ஆடை தேவைப்படும் ஒன்று இவள் வாங்கி கொள்வாள் அல்லது யாராவது வாங்கி கொடுப்பார்கள் எப்படியோ இன்று நமக்கு தொழில் நடப்பது நிச்சயம் என்று நினைப்பான். கம்யூனிஸ்ட் மட்டும் தான் வலிமை இல்லாத இவளின் ஆடையை வலிமை பொருந்திய யாரோ சுரண்டி இருக்கிறார்கள் எனவே அவர்கள் சுரண்டலை தடுத்து நிறுத்தினால் தான் அப்பாவிகளின் பாதிப்புகள் விலகுமென்று ஒதுங்கி கிடக்கும் அவளை போராட்ட களத்திற்கு அழைப்பான். என்று அந்த தோழர் அழகான விளக்கமாக இதை தந்தார்.

அதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், நமது சுபாவத்தை பெருமளவு தீர்மானிப்பது இந்த உலகத்தை பற்றிய நமது பார்வையே ஆகும். அதாவது உலகத்தை பற்றி நாம் சிந்திக்கும் விதமே நமது சுபாவமாக வடிவமைகிறது அதனால் தான், நமது முன்னோர்கள் மிக அழகாக சொன்னார்கள். பார்க்கும் பொருளெல்லாம் பரமன் இருப்பதாக நினை நீ. தொடுகின்ற ஒவ்வொரு வஸ்துவும் இறைவனாக கருது. நாளடைவில் உனது எண்ணம் முழுவதும் தெய்வீகம் நிறைந்துவிடும். இதைப் பற்றி குருதேவர் இராமகிருஷ்ணர் மிக அழகான விளக்கம் ஒன்றை தருவார்.

ஒரு நாள் மகிழ மரத்தடியில் நீல நிற புடவை கட்டிக்கொண்டு ஒரு பெண் நின்று கொண்டிருப்பதை கண்டேன். அவள் ஒரு விலைமகள். அவளை பார்த்ததும், என் உள்ளத்தில் சீதையை பற்றிய உணர்வுகள் மேலெழுந்தன. அந்த பெண்ணை அடியோடு மறந்து விட்டேன். உண்மையாகவே இலங்கையிலிருந்து மீட்கப்பட்டு இராமருடன் செல்கின்ற சீதையை கண்டேன். நீண்ட நேரம் புறவுலக நினைவின்றி சமாதி நிலையில் ஆழ்ந்திருந்தேன் என்று கூறுகிறார் இராமகிருஷ்ணர். யுகந்தோறும் வருகை தரும் அவதார புருஷர் மஹாஞானி அவர் கண்டது யாரை? காசு கொடுத்து அழைத்தால் காமத்தை கொடுக்கும் விலைமகள் ஒருத்தியை. அவளை அவர் அப்படியா பார்த்தார்?  பெண்ணின் வடிவத்துள் மறைந்து கிடக்கும் அன்னை சீதையாக அவளை கண்டார். அந்த பெண்ணின் சோகமும், சீதையின் சோகமும் ஒன்றாக இருக்கலாம் அதை யாரறிவார். இராமகிருஷ்ண யோகியின் நெஞ்சமே அதையறியும்.

நமது பார்வையையும் இப்படி மாற்றி கொள்ள வேண்டும். சுழித்து ஓடுகின்ற ஆற்றின் செந்நிற மேனி சிவபெருமானை நமக்கு ஞாபகப்படுத்துகிறது என்றால், கரிய வானம் காளி தேவியை நமக்கு காட்டுகிறது என்றால், நீல கடல் கோபால கிருஷ்ணனை நமது கண்முன்னால் கொண்டு வருகிறது என்றால் அப்போது நாம் ஊனப் பாதையை விட்டு விட்டு, ஞானப் பாதையை நோக்கி நடைபயில துவங்கி விட்டோம் என்பது அர்த்தமாகும். நீங்கள் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி இந்த பார்வை உங்களுக்கு வரும் வரையில் நீங்கள் பிறந்தே ஆகவேண்டும்.  ஆயிரம் பிறவிகள் எடுத்த பிறகு இப்படி பார்ப்பதை விட இன்றே பார்க்க துவங்கலாம் அல்லவா. இந்த பிறவியே நமக்கு போதும் அல்லவா...






Contact Form

Name

Email *

Message *