யோகியின் ரகசியம் 12
மந்திரங்களின் மீது குருஜிக்கு உள்ள ஆழ்ந்த நம்பிக்கையும், ஈடுபாடும் மற்றும் அனுபவமும் மிகவும் அதிகம். புதியதாக ஒரு மந்திரம் கிடைக்கிறது என்றால் அதற்காக எத்தனை சிரமங்களை அனுபவித்தாலும் அதை பெற்றுக்கொள்வது என்ற உறுதியில் இருப்பார். சற்றேறக்குறைய இருபது வருடங்களாக மந்திரத்தின் பால் அவர் கொண்டிருக்கின்ற அனுபவம் பல்வேறு நபர்களை வாழ வைத்திருக்கிறது.
இனி பிழைப்பதற்கு வழி இல்லை. வாழ்வின் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டோம் என்று மரணத்தை தழுவ நினைத்தவர்களும், துன்பம் மட்டும் தான் எனக்கு விதிக்கப்பட்டது. தோல்வியை மட்டும் தான் நான் அனுபவிக்க பிறந்திருக்கிறேன் என்று விரக்தியில் விழுந்தவர்களும், தன்னம்பிக்கை அற்று செயல்களில் ஆர்வம் குன்றி எதற்கும் உதவாத உளுத்துபோன மரக்கட்டை போன்று இருந்தவர்களும், குருஜியிடம் மந்திரங்களை பெற்று முறைப்படி ஜெபித்து வந்ததனால் வாழ்க்கையில் ஜொலித்து கொண்டிருப்பதை நாங்கள் தினசரி கண்டு வருகிறோம். அந்த வகையில் அமிர்த தாரா மஹா மந்திரம் என்ற புதிய ஆன்மீக அஸ்திரத்தை, பக்தர்களுக்கு குருஜி தரப்போகிறேன் என்றவுடன் எங்களுக்கு அளவிடமுடியாத சந்தோஷம் வந்தது.
அமிர்த தாரா மஹா மந்திரம் என்றால் என்ன? அதை அனைவருக்கும் நீங்கள் கொடுக்க வேண்டுமென்று விருப்பப்படுவதற்கு மூல காரணம் என்ன? என்று குருஜியிடம் நாங்கள் உரிமையுடன் கேட்டோம். அதற்கு அவர் மந்திரங்கள் என்பது சப்தங்களின் கூட்டம். மனிதனுடைய உயிரும், தேஜசும் சத்தத்தின் வடிவாகவே இருக்கிறது. ஒரு மனிதனது உயிர் சக்தியானது குறைந்து போனாலோ அல்லது மிகுந்து போனாலோ அவனது வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படுகிறது. அந்த நேரத்தில் அவனது உயிர் சக்தியை சமப்படுத்த வேண்டும். இந்த தத்துவம் ஆயுர் வேதத்தில் கூறப்படுகிற வாத, பித்த, சிலேத்தும தத்துவங்களை கொண்டதே. ஆயுர்வேத தத்துவம் உடலை மையமாக வைத்து பேசுகிறது. மந்திர தத்துவம் ஆத்மாவை மையமாக வைத்து பேசுகிறது.
மந்திரங்களின் மூலம் ஒருவனது உயிராற்றலை அதிகப்படுத்தலாம். குறைக்கவும் செய்யலாம். இதை சக்தி வாய்ந்த ஒரு மனிதன் தனது சகமனிதனான இன்னொருவனுக்கு செய்யலாம் என்றாலும் தனக்கு தானே செய்து கொள்வது மாபெரும் சிறப்பு. எனக்கு நோய் வந்தால் நான் தானே மருந்து சாப்பிடவேண்டும். அதே போன்று தான் சொந்த மந்திரங்களை பயன்படுத்துவது. மந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் அடைவதற்கு கடினமான பல சங்கதிகளையும் மிக சுலபமாக அடைந்து விடலாம். ஒருவேளை மந்திரத்தை பயன்படுத்தி மனிதன் சுய நல வேட்டையில் ஈடுபடுவானோ என்று நினைக்கலாம்.
மந்திரங்களில் ராஜச மந்திரம், தாமச மந்திரம், சத்வச மந்திரம் என்ற வகைகள் உண்டு. இதில் தாமச மந்திரங்கள் மட்டுமே தீய செயலுக்கு பயன்படும். அதை நாம் மற்றவர்களுக்கு கற்றுகொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. ராஜச, சத்வச மந்திரங்களை பிறருக்கு கொடுப்பதில் யாருக்கும் தீங்கு விளையப் போவது கிடையாது. எனவே அவைகளை மக்கள் பயன்படுத்துவதற்கு தடையேதும் இல்லாமல் கொடுக்க நான் விரும்புகிறேன்.
மேலும் இதற்கு வேறொரு வலுவான காரணம் இருக்கிறது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் சந்நியாச தீட்சை பெற்றுக்கொள்ள நான் பலவாறு முயற்சித்தேன். அதன் மீது எனக்கிருந்த ஆர்வம் கஞ்சனுக்கு பணத்தின் மீதிருக்கும் ஆர்வத்திற்கு ஒப்பிடலாம். எப்படியாவது தீட்சை பெறவேண்டுமென்று துடியாக துடித்தேன். ஆனால் என் தவிப்பை யாரும் புரிந்து கொள்ளவில்லை. தகுதி வாய்ந்த சிலரிடம் கேட்டபோது அவர்கள் எனது உடல்நிலையை காரணமாக கருதி புறக்கணித்தார்கள் வாழ்க்கையில் எதை பற்றியுமே வருத்தப்படாத நான், முதல் முதலாக அவர்களது புறக்கணிப்பை கண்டு வருத்தப்பட்டேன்.
இந்த நிலையில் இருட்டான வானத்தில் சூரியன் உதித்தது போல எனது குருதேவர் ருத்ர பரமஹம்சர் வந்தார். வந்தவர் வெறுமனே சந்நியாச தீட்சை மட்டும் எனக்கு தரவில்லை. காலம் காலமாக தவமிருந்தாலும் கிடைப்பதற்கரிய வித்தைகள் பலவற்றை எனக்கு கற்பித்தார். ஆன்மீக உலகில் பரம ரகசியமாக போற்றி பாதுகாக்கப்படும் பிரம்ம ஞானங்களின் சூட்சமத்தை நான் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி தந்தார். அப்போது அவர் எனக்கு இட்ட கட்டளை ஒன்றே ஒன்று தான். நீ பெற்ற ஆன்மீக ஞானத்தை ஆன்மீக வித்தைகளை தகுதி உள்ள அனைவருக்கும் தடையில்லாமல் கொடு. உனது அறிவையும், அனுபவத்தையும் பிறருடைய துன்பங்களை தீர்ப்பதற்காக தயங்காமல் கொடு. கஷ்டப்படுகிறவன் எவனாக இருந்தாலும், ஜாதி மதம் பார்க்காதே. அவன் ஆறுதல் அடையும் மார்க்கத்தை தயங்காமல் கொடு என்பது தான். அதன் அடிப்படையில் தான் அமிர்த தாரா மஹா மந்திரத்தை தேவைப்படுகிற அனைவருக்கும் கொடுக்க விரும்புகிறேன். என்று தெளிவாக பதில் சொன்னார்.
இந்த மந்திரத்தை முதல் முறையாக யாருக்கு கொடுத்தீர்கள். இதனால் அனைவரும் நன்மை அடைவார்கள் என்று எதை வைத்து நம்புகிறீர்கள் என்று குருஜியிடம் கேட்டோம். இந்த கேள்வி அதிக பிரசங்கித்தனமான கேள்வியாக இருந்தாலும் கூட, எங்கள் ஆர்வத்தால் அதை கேட்டோம். ஆனால் குருஜி இந்த கேள்வியால் சிறிது கூட வருத்தப்படவில்லை கம்பராமயணத்தில் சித்திரத்தில் எழுதிய தாமரை பூ என்று ஸ்ரீ ராமனின் முகத்தை கம்பன் வர்ணிப்பான் அல்லவா அதே போலவே சிரித்த முகத்தோடு குருஜி எங்களது கேள்வியை ஏற்றுக்கொண்டு பதிலை சொன்னார்.
குறிப்பிட்ட காரணங்களுக்காக குறிப்பிட்ட மந்திரங்களை பயன்படுத்தினால் சர்வ நிச்சயமாக வெற்றி கிடைக்கும் என்பது எனது சொந்த அனுபவம். எனது அனுபவமாக அவைகள் இருந்தனவே தவிர ஒருகாலத்தில் அதை மற்றவர்கள் வாழ்க்கையில் பரிட்சை செய்து பார்த்ததில்லை. முதல் முறையாக அரகண்டநல்லூருக்கு மிக அருகில் இருக்கிற சு.பில்ராம்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்ற இளைஞருக்கு இந்த அமிர்த தாரா மந்திரத்தை கொடுத்தேன். அது நடந்து பதினெட்டு வருடங்கள் இருக்குமென்று நினைக்கிறன். அப்போது அந்த வீராசாமி நமது ஆசிரமத்தில் நடந்த இலவச தனிப்பயிற்சி வகுப்புகளில் முழுநேரமும் ஆர்வத்தோடு மாணவர்களுக்கு கல்வி போதனை செய்து வந்தான். அவனுக்கு கல்வி கற்பிப்பதில் நல்ல ஆற்றல் இருந்ததே தவிர அதில் ஆர்வம் இல்லை. அவனது ஆர்வம் முழுவதும் அரசியலில் ஈடுபட்டு மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்பதாகவே இருந்தது.
அரசியலில் ஈடுபட வேண்டுமென்றால் பணம் வேண்டும். குடும்ப செல்வாக்கு வேண்டும். இவற்றிற்கெல்லாம் மேலாக அதிர்ஷ்டம் வேண்டும். இவை எதுவும் தன்னிடம் இல்லை என்று அவன் வருத்தப்பட்டான் தனது விருப்பத்தை தனிப்பட்ட ரீதியில் என்னிடம் சொன்னபோது நான் அவனுக்கான அமிர்த தாரா மந்திரத்தை கொடுத்து இதை ஜெபித்துவா உன் எண்ணம் ஈடேற இறைவன் துணை செய்வான் என்றேன். அவனும் என் வார்த்தையை தெய்வ வாக்காக நம்பி ஆர்வத்தோடு ஜெபித்து வந்தான். அந்த நேரத்தில் பஞ்சாயத்து தேர்தல் வந்தது. இவன் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒன்றிய கவுன்சிலராக விரும்பினான். ஆனால் இவனது நண்பர் ஒருவன் இவன் மனதை மாற்றி அப்போதைய ஆளும் கட்சியான தி.மு.கவில் வேட்பாளராக நிற்க முடியுமா? என்று முயற்சி செய் என்று கூறியிருக்கிறார்.
இவனும் அந்த கட்சியின் நிர்வாகிகளை சந்தித்து பேசி இருக்கிறான். அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத நிலையில் தனது கட்சியின் அதிகாரப் பூர்வ கவுன்சிலர் வேட்பாளராக இவனை அறிவித்து விட்டார்கள். தேர்தலின் முடிவில் வெற்றியும் பெற்றுவிட்டான். அப்போது தான் எனக்கு இந்த மந்திரத்தை பிறருக்கு நாம் கொடுத்தாலும் நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது. அதன் பிறகு திருப்பூரில் உள்ள ஒரு தொழிலதிபருக்கும், கரூரை சேர்ந்த ஒரு நண்பருக்கும் இந்த அமிர்த தாரா மந்திரத்தை கொடுத்தேன் அதில் ஒருவர் சிறந்த ஏற்றுமதியாளர் என்ற விருதை அப்போதைய ஜனாதிபதியிடம் இருந்தே பெற்றார். இந்த மாதிரியான சம்பவங்களினால் மந்திரத்தின் மீது எனக்கு நம்பிக்கை அதிகப்படியாக வளர்ந்து விட்டது.
எட்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவிலிருந்து ஒரு வெள்ளைகார பெண்மணி என்னை காண வந்திருந்தார். திருவண்ணாமலைக்கு வந்த போது யாரோ என்னைப்பற்றி சொன்னதாகவும், அதனால் காண வந்திருப்பதாகவும் தெரிவித்தார். சந்நியாசிகளை பார்த்தால் அவர்களிடம் ஜெபம் செய்வதற்கு எதாவது மூல மந்திரம் வேண்டி பெறுவது தனது வழக்கமென்றும் அதனடிப்படையில் நானும் அவருக்கு மந்திரங்கள் ஏதாவது சொல்லித்தர வேண்டுமென்றும் கேட்டார். உங்கள் வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனைகள் உண்டா? அவைகள் நீங்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களா? என்று அந்த பெண்மணியிடம் கேட்டேன். அவர் சிரித்து கொண்டே அப்படி எதுவும் இல்லை என்று கூறினார். அவர் கூறுவது உண்மை இல்லை என்று எனக்கு தெரியும். அவர் மனதிற்குள் மறைத்து வைத்திருந்த பிரச்சனைகள் தீர்வதற்கும், மன அமைதி ஏற்பட்டு இறைவனை அடைவதற்கும் ஏற்ற மந்திரத்தை அவருக்கு கற்பித்து அனுப்பினேன்.
நான்கு வருடங்கள் சென்று என்னை பார்ப்பதற்கென்றே இந்தியாவிற்கு வந்தார். அந்த வெள்ளைகார அம்மணி நான் கொடுத்த மந்திரத்தை ஆரம்பத்தில் நம்பிக்கை இல்லாமல் ஜெபம் செய்யவில்லை என்றும், ஒரு வருடத்திற்கு முன்பு தனது கல்லீரலில் நோய் தொற்று ஏற்பட்டு உயிருக்கு அபாயமான நிலை வந்ததாகவும், அப்போது இந்த மந்திரத்தை சொல்லி பார்ப்போமே என்ற எண்ணத்தில் சொல்ல துவங்கியதாகவும் மருத்துவர்களே வியப்படையும் வண்ணம் தான் நோயிலிருந்து குணமடைந்ததாகவும் நன்றியோடு சொன்னார். அவரது கூற்று எனக்கு சந்தோசத்தை தந்தது. நமது முன்னோர்களின் தவ வலிமையை நினைத்து ஆனந்தம் அடைந்தேன்.
அதன் பிறகு அந்த பெண்மணியின் நண்பர்களான பெரு நாட்டை சேர்ந்த ஒரு மருத்துவரும், இத்தாலியை சேர்ந்த கணிப்பொறி ஆய்வாளர் ஒருவரும், சீனாவை சேர்ந்த விமானி ஒருவரும் ஆர்வத்தோடு என்னிடம் வந்து அமிர்த தாரா மஹா மந்திர தீட்சை எடுத்து கொண்டார்கள். அவர்களது தனிப்பட்ட பிரச்சனைகள் மிக சுலபமாக தீர்ந்ததனால் இவர்கள் மூலம் கேள்விப்பட்ட சில வெள்ளைக்காரர்கள் இன்று வரை என்னிடம் வந்து அமிர்த தாரா மந்திரம் கற்றுக் கொள்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இருந்தாலும் இதை நான் உடனடியாக எல்லோருக்கும் தெரியப்படுத்தவில்லை. சுமார் பதினெட்டு வருடங்களாக பலருக்கும் கொடுத்து அவர்கள் வாழ்க்கையில் முழுமையான வெற்றி பெற்ற பிறகே பொதுவான அறிவிப்பாக இதை செய்ய விரும்புகிறேன் என்று சொல்லி அந்த மந்திரத்தை பற்றிய “கேட்டதை தரும் அதிசய மந்திரம்” என்ற முழு கட்டுரையை எங்களிடம் தந்தார். அதை நாங்கள் உஜிலாதேவி இணையத்தளத்தில் பதிவு செய்தோம். அன்று முதல் இன்று வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்பு கொண்டு அமிர்த தாரா மந்திரத்தை பெற்று பயனடைந்து வருவது நாங்கள் சொல்லாமலே உங்களுக்கு தெரியும்.
அமிர்த தாரா மஹா மந்திரம் என்பது பொதுவான மந்திரம் அல்ல. ஒவ்வொரு மனிதனது குணங்களுக்கு ஏற்றவாறு முற்றிலும் மாறுபட்டு உள்ள மந்திரமாகும். அதாவது ஒவ்வொருவருக்கும் தனித்தனியான மந்திரங்கள் உண்டு. யாருக்கு என்ன மந்திரமென்று குருஜி தீர்மானிப்பதன் இரகசியம் என்னவென்றால் மனிதர்கள் ஒவ்வொருவரை சுற்றியும் பலவிதமான வண்ணங்களில் ஒளி அலைகள் உண்டு. இதை “ஆரா” என்று அழைப்பது வழக்கம். ஒவ்வொருவரின் ஆராவின் நிறம் என்னவென்று அதன் சூட்சமத்தை அறிந்தவர்கள் மிக சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள். குருஜியும் பக்தர்களின் “ஆரா” வை கவனத்தில் கொண்டே அவரவர்களுக்கான மந்திரங்களை தேர்ந்தெடுக்கிறார். ஒருவர் பெற்ற மந்திரத்தை இன்னொருவர் சொல்லக் கூடாது. சொல்ல முடியாது. சொன்னாலும் பயனில்லை என்று கூறுவது இதனால் தான்.
வாழ்க்கை முழுவதும் அமிர்ததாரா மஹா மந்திரத்தை பயன்படுத்தலாம். அவ்வப்போது ஏற்படுகிற பிரச்சனைகளின் தன்மைகளை உணர்ந்து அந்த பிரச்சனைகளுக்காக இன்று நான் அமிர்த தாரா மஹா மந்திரத்தை ஜெபிக்கிறேன் என்று சங்கல்பித்து கொண்டு நீங்கள் ஜெபம் செய்தால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் மிக விரைவில் நல்ல தீர்வுக்கு வந்துவிடும். இதுவரை பொருளாதார கஷ்டத்தில் இருப்பவர்கள், தொழில் செய்ய முடியாமல் இருப்பவர்கள், வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டவர்கள், இல்லற வாழ்க்கை அமையாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், படிப்பில் சிக்கல் உள்ளவர்கள், வேலைவாய்ப்பு வாய்க்காதவர்கள், எண்ணங்கள் எதுவும் ஈடேறாமல் வருத்தப்படுபவர்கள், பெண் சாபம், பித்ரு சாபம், சத்ரு சாபம், ஜாதகக் கோளாறு, பில்லி சூனிய பாதிப்புகள், பேய் பிசாசு தொல்லைகள் மன நோய் தாக்கங்கள் என்று பல தரப்பட்ட பிரச்சனைகளுக்கு அமிர்த தாரா மஹா மந்திர தீட்சையை குருஜியிடம் பெற்று பயனடைந்தவர்கள் நிறையப்பேர் இன்றும் இருக்கிறார்கள். இனிமேலும் அவர்களது எண்ணிக்கை அதிகரிக்கும்.
இவைகள் எல்லாம் சாதாரண அபிலாஷைகளால் வருகின்ற பிரச்சனைகள் தானே இதை தீர்ப்பதற்கு குருஜி வேண்டுமா? குருஜி என்பவர் உலக பற்றுதலிலிருந்து மனிதர்களை விடுவித்து இறைவனது திருவடிகளை தியானிக்கும் பாக்கியத்தை தானே பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என்று நம்மில் பலர் யோசிக்கலாம். பசியாக இருக்கும் போது ஒருவன் ஞான உபதேசங்களை கேட்பதற்கு தயாராக இருக்கமாட்டான். முதலில் பசித்தவனுக்கு சாதம் படைக்கவேண்டும். அதன் பிறகே வேதம் படிக்க வேண்டும், என்று குருஜி அடிக்கடி கூறுவார். சாதாரண உலக கஷ்டங்களில் மூழ்கி கிடக்கும் நம்மை போன்ற பாவாத்மாக்கள் முதலில் கஷ்டங்களிலிருந்து விடுதலை அடைய வேண்டும். அல்லது கஷ்டங்களை எதிர்கொள்ளும் மனோதிடத்தை பெறவேண்டும். அதன் பிறகு தான் இறை நாட்டம் என்பது வரும். அதற்கான அருமருந்தாக அமிர்த தாரா மஹா மந்திரம் இருப்பதை புரிந்து கொண்டால் அந்த மந்திரமே சாதாரண மனிதரை கூட இறைவனின் பாதார விந்தங்களில் சேர்க்கும் வல்லமை பெற்றது என்பதை நாம் தெளிவாக அறியலாம்.
குருஜியின் அருளாற்றல் சிலவற்றையும் இறைவனோடு அவருக்கு இருக்கும் உறவு முறையில் சிறிதளவையும் மக்களுக்கு குருஜி கொடுக்கும் அனுக்கிரகம் என்னவென்றும் இதுவரை மிகச்சிறிய அளவில் உங்களிடத்தில் பகிர்ந்து வந்தோம். இதில் சொல்லபட்டிருப்பது மிக சொற்பமே இன்னும் சொல்ல வேண்டியது நிறைய உண்டு. அவைகளை வருங்காலத்தில் சொல்வதற்கு குருஜி ஆசிர்வாதமும், அனுமதியும் நமக்கு கிடைக்குமென்று நிச்சயம் நம்பலாம். அதுவரையில் குருஜி தருகிற அருள் பிரசாதமான அமிர்த தாரா மஹா மந்திரத்தை நாமும் நமது அன்பர்களும், நண்பர்களும் பெற்று இறைவனின் அருளை பரிபூரணமாக அடைய முயற்சி செய்வோம்.
குருஜியின் சீடர்,
பிரகதீஷ்வர்