பிருந்தாவனம் முழுவதும்
உன்னை தேடி ஓடினேன்
ஆயர்பாடி வீதியெங்கும்
உன்னை காண தேடினேன்
யமுனை நதியின் ஓரத்தில்
உனக்காக காத்திருந்தேன்
உன்னை காண நான் ஏங்குவது
நீ நன்றாக அறிவாய் கண்ணா
என்னை காக்க வைப்பதில்
நீ காணும் இன்பம் என்ன
உன்னை காணமுடியாத
கண்களை வேல்கொண்டு குத்துகிறேன்
உன்னை நெஞ்சம் மறந்திடுமோ என்று
இதய கோவிலை இடிக்கிறேன்
கண்ணா என்று அழைக்காத என் நாவை
கத்தி முனையில் அறுக்கின்றேன்.
உன்னை அடையாத என்னை
வேள்வி குண்டத்தில் தூக்கி எறிகிறேன்
கண்ணா நீயும் நானும் வேறுவேறா
ஆத்மாவும் சரீரமும் போல்
ஒன்றாக இருப்பவர் அன்றோ நாம்?
உன்னை நான் பிரிந்தால் என்னை நீ பிரிந்தால்
பூபால இசையும் முகாரி ஆகுமன்றோ
வெண்ணிலவும் ஒளியிழந்து
கரித்துண்டாய் போகுமன்றோ
மழலை என்றும்
இளமை என்றும்
முதுமை என்றும்
பருவங்கள் நடந்து போகலாம்
காலங்கள் கடந்து போகலாம்
கடல்நீரில் விழுந்த
சிறு துளி நீரை போல
அகண்ட கால வெளியில்
என் தேகமும் கரைந்து போகலாம்.
மெழுகுவர்த்தி தீபம் ஒன்று
அணைந்து போக கிடக்கின்றது
சூறை காற்று தன் கரம் கொன்று
வெளிச்சத்தை முடித்து வைக்க துடிக்கிறது.