Store
  Store
  Store
  Store
  Store
  Store

தாராவி தந்த ஞானம் !



   சியாவின் மிகப்பெரிய சேரி தாராவி என்று எப்போதோ படித்த ஞாபகம் எனக்குண்டு. அப்போதிருந்தே தாராவியை நேரில் சென்று பார்க்க வேண்டும். அங்குள்ள மக்கள் எப்படி வாழ்கிறார்கள், அவர்கள் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆசைப்படுவேன்.

மும்பைக்கு நான் பலமுறை வந்திருந்தாலும் தாராவியை தரிசனம் செய்கின்ற வாய்ப்பு எனக்கு வாய்த்ததில்லை. பெலாபூர், கார்கர், பன்வேல் போன்ற பகுதிகளிலேயே பெருவாரியான நேரங்களில் என் சஞ்சாரம் முடிந்துவிடும். அதுவும் கார்கர் மலைப்பாதை, மத்திய பூங்கா போன்ற பகுதிகளில் கிடைக்கும் இயற்கை அழகும், செயற்கை அழகும் மனதை கட்டிபோட்டு விடுவதனால் வேறு எங்கு செல்லவும் மனம் வருவதில்லை. நேரம் கிடைப்பதில்லை என்பது வேறு விஷயம்.

இந்த முறை கண்டிப்பாக தாராவியை பார்த்துவிட வேண்டுமென்று உறுதிகொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்ய சொன்னேன். தாராவி ஜனநெருக்கடி உடைய பகுதி. சற்கர நாற்காலியில், சந்து பொந்துகளில் போக இயலாது. காரிலேயே போகலாம், காரிலேயே வரலாம். கார் போகும் பாதையில் உள்ள காட்சிகளை மட்டும் பார்த்துகொள்ளலாம் என்றார்கள். பசியாக இருப்பவனுக்கு, பாதி தோசை கிடைத்தாலே பெரிய விருந்து தானே எனவே அதற்கு சம்மதித்து தாராவிக்கு புறப்பட்டேன்.

அங்கே நான் கண்ட காட்சிகள் என் கண்களை விரியச் செய்தன. லாலா கடை மிட்டாயை ஈக்கள் மொய்ப்பது போல சாலை எங்கும் மக்களும், வாகனங்களும் மொய்த்து கொண்டிருந்தார்கள். அடிக்கு அடி நகர்வது கூட நிமிட கணக்கை தொட்டது. சில பகுதிகளில் சாலைகளின் இரு பக்கமும் இருந்த சோப்டா  வீடுகளை பார்த்தேன். தகரத்தில் கொட்டகை போட்டு அதிலேயே மூன்று மாடிகள் வரை எழுப்பி இருந்த கட்டிட கலையின் மாயாஜாலம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக ஆறு அடி உயரமுடைய வீடுகளுக்குள் இரண்டு பேர் மட்டுமே உட்காரக்கூடிய அகலத்தில் ஆறு பேர் ஏழு பேர் என்று அவர்கள் வாழும் முறை நெஞ்சத்தில் புகுந்து இனம்புரியாத வேதனையை தந்தது. பகல் நேரத்தில் உள்ளேயும் வெளியேயும் வாழ்க்கையை கழித்துவிடுகிறார்கள். இரவு பொழுதை அப்படியே போக்கி விடுகிறார்கள். ஆனால் மழை நேரத்திலும், பனி நேரத்திலும் பாவம் குழந்தை குட்டிகளை வைத்துகொண்டு என்ன பாடுபடுவார்கள் என்று நினைத்த போது பாரதியின் நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாடல் வரிகள் செவிகளில் சம்மட்டி போல் இறங்கியது.

இட வசதி போதவில்லை. வயிறு வளர்க்க வேறு வழியில்லை என்பதனால் அவர்கள் அந்த குறுகிய பிரதேசத்தில் வாழவேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் வீட்டு வாசலிலேயே சாக்கடையை தேங்க விடுவதும், சாதம் வடித்த நீரை ஊற்றிவிடுவதும், சமையலுக்கு மீன்களை கழுவி கழிவுப் பொருட்களை இறைத்து விடுவதும், எந்தவகையில் வறுமையின் கொடுமை என்று எனக்கு தெரியவில்லை. கந்தையானாலும் கசக்கிகட்டு என்ற தமிழனின் சுகாதார முறை இங்கே மறந்து போனது எப்படி என்று எனக்கு புரியவில்லை. இவர்களை பார்க்கும் போது புத்தனுக்கு போதி மரத்தடியில் ஞானம் பிறந்தது போல எனக்கும் சிறிய அளவில் ஞானம் பிறந்தது என்று சொல்ல வேண்டும்.

கிராமத்தில் வாழ வேண்டிய நிலையில் நம்மை கடவுள் வைத்திருந்தாலும் நாம் சொர்க்கத்தில் இருக்கிறோம். மருத்துவ உதவிகள், நவ நாகரீக தேவைகள் நமக்கு கிடைப்பது சற்று தாமதமே என்றாலும், நாமிருக்கும் பகுதிகள் இறைவன் கொடுத்த வரம் என்பது தெளிவாக தெரிந்தது. நகரத்தில் இருந்தாலும், வாய்ப்புகள் கிடைத்தாலும் சுகாதாரமாக கூட வாழமுடியாமல் இருக்கும் இவர்களை எண்ணி பரிதாபமாக இருந்தது. நோய் தருவது இயற்கை. வறுமை என்பது அரசியல் சுகாதாரமற்ற நிலை என்பது நம்முடைய அசட்டை. அசட்டை இல்லாமல் வாழலாம் அல்லவா?



Contact Form

Name

Email *

Message *