கடவுளும் நானும் ! - 4
அவன் திகைப்போடு பார்த்தது எனக்கு மகிழ்ச்சி தந்தது. ஆணவ மிகுதியால் தன்னை ஆண்டவன் என்று கூறி கொள்ளுகின்ற ஒரு கர்வி. கத்திரிக்கோலின் முனையில் அகப்பட்டு கொண்ட பழைய துணி போல தவிப்பது பார்ப்பதற்கு சுகமானது. இவனும் இப்படி எக்குத்தப்பாக அகப்பட்டு கொண்டது என் உற்சாகத்தை கிளறிவிட்டது.
கடவுள் என்றால் எல்லாம் தெரிந்தவர் எல்லாவற்றிற்கும் காரணமானவர் அனைத்து இயக்கமும் இயக்கமின்மையும் அவரை சார்ந்தே உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். நீரோ உம்மை கடவுளென்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லிக் கொள்கிறீர். இப்போது என் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தத்தளிக்கிறீர். ஒன்று வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்து பேசவேண்டும் அல்லது எதிர்த்து பேசவேண்டும். இந்த இரண்டு வழிகளை தவிர வேறு எந்த மார்க்கமும் கிடையாது. நீர் உம்மை கடவுள் என்று அறிமுகப்படுத்தியதனால் இரண்டு வழிகளிலும் பேசுவதற்கு பல சிக்கல் இருக்கிறது என்று எக்காளமாக கூறி அவனை பார்த்தேன்.
அவன் முகத்தில் இருந்த திகைப்பின் அறிகுறி இன்னும் மாறாமலே சாட்சாத் கடவுளே உன் முன்னால் நிற்கிறேன் இந்த அற்ப விஷயத்தில் கூட தெளிவு இல்லாமல் இருக்கிறாயே என்று நான் திகைப்படைகிறேனே தவிர நீ கேட்ட கேள்வியால் திகைத்து நிற்கவில்லை. ஒன்றை நன்றாக புரிந்து கொள். இலை பச்சையாக இருப்பதும், வயது முதிர்ந்த பிறகு பழுப்பு நிறமாக மாறுவதும் இயற்கையின் விதி. வர்ணாசிரம தர்மம் என்பதும் இயற்கை ஒழுக்கத்தின் கட்டாயமான விதியாகும். அதை தவறுதலாக புரிந்து கொள்பவன் தன்னை ஒருபோதும் மாற்றிக்கொள்ள மாட்டான். அதற்காக இயற்கையும் மாறாது. என்றான் அந்த மனிதன்.
ஜாதிகள் பார்ப்பதும் ஏற்றத்தாழ்வு கற்பிப்பதும் இயற்கையின் விதியாகும். அறிவுப்பூர்வமான ஆய்வுக்கு இது முற்றிலும் முரண்பட்ட கருத்தாகும். தன்னை பாப்பான் என்று கூறிக்கொள்ளும் ஒருவனுக்கு பிறந்தவன் என்பதற்காக எந்த தகுதியும் இல்லாத இன்னொருவனை உயர்ந்தவன் என்று ஏற்றுக்கொள்வதும் பறை சாற்றுவதும் காட்டுமிராண்டித்தனமாகும். மனிதர்கள் அனைவரும் மானுடகுலத்தை சேர்ந்தவர்கள். பிறப்பு விதியும், இறப்பு விதியும் அனைவருக்கும் பொதுவானது. இந்த நியதியை மாற்றி பிறவியிலே ஒருவன் உயர்ந்தவனாக இருக்கிறான். ஆயிரம் தகுதிகள் இருந்தாலும் இழிகுலத்தில் பிறந்ததனால் இன்னொருவன் தாழ்ந்தவனாக இருக்கிறான் என்பதை ஏற்பது மனிதாபிமானம் அற்ற செயல் என்று சூடாக பதில் சொன்னேன்.
தற்காலத்து கண்ணாடியை போட்டுக் கொண்டு வர்ண தர்மத்தை பார்க்கும் எவரும் உன்னைப்போலவே சிந்திபார்கள். எந்த கருத்தையும் மேம்போக்காக பார்க்க கூடாது. ஆழ்ந்து பார்க்க வேண்டும். வர்ண தர்மம் என்பது இந்தியாவிற்கு மட்டும் சொந்தமான விதி அல்ல. மனிதன் வாழுகிற ஒவ்வொரு நிலப்பரப்பிலும் வர்ண தர்மம் என்பது உண்டு. அது இல்லாமல் சமூகம் நடந்து செல்ல முடியாது. நீ வர்ணாசிரமம் என்பதை ஜாதி என்ற போர்வையில் பார்க்கிறாய் அந்த பார்வை முற்றிலும் தவறானது.
மனிதனாக பிறந்தவர்கள் எவரும் ராஜசம், சத்வசம், தாமசம் என்ற மூன்று குணங்களால் ஆனவர்கள். அதாவது மனிதர்களது மனோபாவம் இந்த மூன்று விதிக்குள் அடங்கி விடும். இந்த மூன்று வார்த்தையின் பொருள் என்னவென்று உனக்கு தெரிந்திருக்கும். இருந்தாலும் சொல்கிறேன். ராஜசம் என்றால் வேகம். தாமசம் என்றால் சுணக்கம். சத்வசம் என்றால் நிதானம் பொதுவாக மனிதர்களின் குணம் இப்படித்தான் இருக்கும். இது தனிமனித தர்மமாகும். அடுத்தது ஒவ்வொரு மனிதனுக்கும் பிரம்மச்சரியம், கிரஹஸ்தம் வானப்பிரஸ்தம், சந்நியாசம் என்ற நான்கு பருவ நிலைகள் இருக்கிறது.
கிரஹஸ்தம் என்றால் உலக நடைமுறைகளை, சமூக பழக்க வழக்கங்களை கல்வி கேள்விகளை கற்றுக் கொள்வது ஆகும். கிரஹஸ்தம் என்றால் தனிமனித வாழ்க்கையிலிருந்து விடுபட்டு துணை ஒன்றை தேடிக்கொண்டு இல்லற தர்மத்தை துவங்குவது ஆகும். வானப்பிரஸ்தம் என்பது இல்லற வாழ்க்கையால் ஏற்பட்ட வாரிசுகளிடத்தில் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு வெறும் வழிகாட்டியாக மட்டும் இருந்து குடும்பத்திலிருந்து ஒதுங்கிகொள்வது அல்லது விலகி இருப்பதாகும்.
சந்நியாசம் என்பது குடும்ப தொடர்பையே முற்றிலுமாக அறுத்துக் கொண்டு சமூகத்தை உலக ஜீவர்களை தன்னுடைய குடும்பமாக கருதி தன் ஆத்மா இறை ஐக்கியத்தை பெற அகம் வழியாக பாடுபடுதல் அல்லது தவம் செய்தல் இந்த சந்நியாச புத்தி ஒருமனிதன் படித்து முடித்து திருமணம் நடத்தி குழந்தை பெற்று அதன்பிறகு தான் வரவேண்டும் என்பதில்லை எந்த பருவத்தில் வேண்டுமென்றாலும் அந்த எண்ணம் வரலாம். காரணம் சந்நியாசம் வாழ்க்கை முறை மட்டுமல்ல. அதுவொரு புனிதமான உணர்வு இதை அறிந்து கொள்கின்ற நீ இந்த நியதிகள் எல்லாம் மனித குலத்திற்கே பொதுவானது என்பதை சிந்தித்து பார்த்து ஒத்துக்கொள்வாய்.
ஒரு மனிதனின் குணம் மூன்று வகையிலானது. ஒரு மனிதன் பருவம் நான்கு வகையிலானது என்று தனி மனிதனின் வாழ்க்கையை தீர்மானித்த இயற்கை சமுதாய வாழ்க்கையை சூத்திர, வைசிக, ஷத்திரிய, பிராமண என்று நான்கு வகையாக பிரிக்கிறது. மனிதனது தேவைகளுக்கு ஏற்ற பொருட்களை உருவாக்குபவன் சூத்திரன். உருவாக்கப்பட்ட பொருள் அனைத்து இடங்களுக்கும் பொதுவாக கிடைப்பதற்கு விநியோக முறையை கையாளுபவன் வைசீகன். உருவாக்குபவனையும் விநியோகம் செய்பவனையும் ஒழுங்கு முறைப்படி காவல் காப்பவன் ஷத்ரியன் மேலே சொல்லப்பட்ட மூன்று தரத்தாரும், காலத்துக்கு ஏற்றவாறு செயல்படுவதற்கு புதிய புதிய கருத்துக்களை, கண்டுபிடிப்புகளை கொடுத்துக்கொண்டே இருப்பவன் பிராமணன்.
இதுவரை நீ வர்ண தர்மத்தை பற்றி கொண்டிருக்கும் கருத்துக்களை அப்புறத்தில் வைத்துவிட்டு இப்போது நான் சொல்லிய கருத்துப்படி சிந்தித்து பார். வர்ணாசிரம தர்மத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கிறதா? அல்லது ஒரே நூலில் கோர்க்கப்பட்ட மணிகளை போல எல்லாம் சமமாக இருக்கிறதா? என்பது உனக்கு தெரியவரும். இயற்கையின் விதியாக இருந்த வர்ணாசிரம தர்மம் எப்படி ஏற்றத்தாழ்வு மிக்க சங்கதியாக மாறிப்போனது என்ற கேள்வி உனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வருவது இயற்கை. அதற்கான காரணத்தையும் சொல்கிறேன் கேள்.
சமூகத்தில் உள்ள நான்கு வர்ணத்தாரில், ஷத்திரியன் என்பவனுக்கு சூத்திரனும், வைசீகனும் பொருளை கொடுக்க வேண்டும். காரணம் ஷத்திரியன் தொழில் இவர்கள் இருவரையும் காப்பது மட்டுமே. வேறு தொழில் ஷத்திரியன் ஈடுபட முடியாது. இதனால் வாழ்க்கையை நடத்த அவனுக்கு பொருள் கொடுக்க வேண்டியது மற்ற வர்ணத்தாரின் கடமையாகிறது. அதே போல பிராமணன் என்பவனும், தனது அறிவை மூன்று வர்ணத்தாரின் செயல்பாட்டிற்காக பயன்படுத்துவதனால் அவனையும் போஷிக்க வேண்டிய கட்டாயம் மற்ற வர்ணத்தாருக்கு இருக்கிறது.
தகப்பனாகிய நான், அறிவாளி சமுதாயத்தால் மதிக்கப்படுபவன் அதனால் சமூகம் என்னை பாதுகாக்க சம்பாவனை தருகிறது. என் மகனோ தற்குறி சிந்திக்க தெரியாத மூடன் அவனை காப்பாற்ற வேண்டிய கடமை சமூகத்திற்கு கிடையாது. ஆனாலும் பிள்ளைப்பாசம் என்னை விட்டு போகாது உடனே நான் என்ன செய்கிறேன். என் பிள்ளை என்னைப் போலவே அறிவாளி. அவனையும் நீங்கள் காப்பாற்ற வேண்டுமென்ற கருத்தை போலியாக உருவாக்கி நடமாட விட்டு விடுகிறேன். இது நாளடைவில் பலருடைய பழக்கமாகி விட்டதனால் ஜாதி என்ற ஒன்று இதன் அடிப்படையாக தோன்றியது. மனிதனின் சுயநலமே ஜாதிகளின் பிறப்பிடம் என்பதை அறியாமல் எல்லா தேசத்திற்கும், எல்லா மக்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் பொதுவான வர்ணாசிரம தர்மத்தை குருடர்கள் யானையை பார்ப்பது போல் தூற்றிக்கொண்டு அலைகிறீர்கள். இதற்கு இயற்கை விதியை உருவாக்கிய கடவுளாகிய நான் பொறுப்பல்ல.
சுயநலம் வந்தவுடன் மற்றவர்களை அடிமைபடுத்தி பார்க்கவேண்டுமென்ற ஆசை வந்துவிடுகிறது. பலம் இருப்பவன் எண்ணிக்கையில் அதிகமான கூட்டத்தில் இருப்பவன், பொருள்படைத்தவன் தன்னை உயர்ந்தவன் என்கிறான் மற்றவர்களை தாழ்ந்தவன் தீண்டத்தகாதவன் என்று ஒதுக்குகிறான். இது தான் ஜாதி கொடுமைகளின் ஊற்றுக்கண். நேற்று வரை சட்டையில்லாமல் நடமாடியவன் இன்று மேல் துண்டை போர்த்திக்கொண்டு போவதை பார்த்தால் பரம்பரையாக சட்டை போட்டவனுக்கு பிடிப்பதில்லை இதனால் அவன் வீட்டை கொளுத்துகிறான். வீதியை கொளுத்துகிறான். வழிபடும் தேரையும் கொளுத்துகிறான். இதற்கு நான் எந்தவகையில் அப்பனே பொறுப்பாளி என்று அவன் காட்டாற்று வெள்ளம் போல வார்த்தைகளை என் முன்னால் கொட்டினான்.
கடவுள்தான் எல்லாவற்றையும் படைத்தார் என்று பலர் சொல்கிறார்கள் நீனும் அப்படித்தான் சொல்கிறாய். பிறகு எதற்காக தீமைகளை படைக்க வேண்டும். நன்மைகளை மட்டுமே படைத்து விடலாமே ஒரு வாதத்திற்கு நன்மைகளை நான் படைத்தேன். இடையில் சாத்தான் புகுந்து தீமைகளை உருவாக்கி விட்டது என்று கூறி நீ தப்பிக்கலாம். அப்படி என்றால் சாத்தனை படைத்தது யார்? கடவுள் இல்லையா? கடவுள் சாத்தானையே படைக்காமல் இருந்திருக்கலாம் அல்லவா? என்று சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஒரு கேள்வியை கேட்டேன்.
உலகத்தில் மனிதனை படைக்கும் போது எனக்கு நிகரானவாகவே அவனை உருவாக்கினேன். என்னிடம் இருக்கும் சிருஷ்டி என்ற சூட்சமமும் மரணம் என்ற முடிவும் மனிதனிடம் இல்லையே தவிர மற்றபடி நானும் மனிதனும் ஒன்றுதான். என்னை போலவே சர்வ சுதந்திரமானவன். நீ உன் முன்னால் ஓடுகிற இரண்டு பாதைகளில் ஒன்று நல்லது. இன்னொன்று தீயது என்று உனக்கு நன்றாகவே தெரியும் அதில் எதை நீ தேர்ந்தெடுக்கிறாயோ அதை பொறுத்தே உன் நிலை. உன் சமூக நிலை அமைகிறது. நன்மை தீமைகளை தீர்மானிக்க வேண்டியது நீயே தவிர, நான் அல்ல. காரணம் என் பார்வையில் இரண்டுமே சிருஷ்டி தான். நேர் வினையும் எதிர் வினையும் இல்லாமல் இயக்கமில்லை. நாணயத்தில் இரண்டு பக்கம் இருப்பது போல, நாட்களில் பகல் இரவு உள்ளது போல, வெளிச்சமும் இருட்டும் கிடைப்பது போல, நானும் சாத்தானும் தவிர்க்க முடியாத இணைப்பாகும். ஒரு வகையில் நானே சாத்தான். ஒருவகையில் நானே கடவுள். என்னை கடவுளாக காண்பதும், சாத்தானாக பார்ப்பதும் உன் சுதந்திரம். அதில் நான் தலையிட மாட்டேன்.
அந்த மனிதனின் சில கருத்துக்கள் புரிந்தன. பலவற்றை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை அதனால் எனக்குள் இருந்த வேறு சில சந்தேகங்களை அவனிடம் கேட்டால் தெளிவு பிறக்கும். அதனால் இவன் கடவுளா? இலையா? என்ற உண்மை தெரியும் என்று தோன்றியது. அதனால் அவனது அருகாமையை நான் நேசிக்க துவங்கினேன்.
தொடரும்...