அன்பார்ந்த உஜிலாதேவி இணையதளத்தின் வாசகர்கள்,அன்பர்கள் அனைவருக்கும் மீண்டும் எனது வணக்கங்களும்,வாழ்த்துக்களும்......
மீண்டும் என்ற வார்த்தையை இந்த இடத்தில் பயன்படுத்துவதற்கு அர்த்தங்கள் பல உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். கடந்த ஜனவரி மாதம் ஆறாம் தேதி காலையில் மூச்சிறைப்பு சற்று அதிகமாக இருப்பதை உணர்ந்தேன். யாகங்கள்,ஹோமங்கள் இன்னும் பல காரணங்களுக்காக புகையோடு எனக்கிருந்த உறவில் மூச்சிறைப்பு என்பது பதினைந்து வருடமாக நெஞ்சார்ந்த தோழன் போல என்னோடு இருந்து வருகிறது.
அதனால் அன்று ஏற்பட்ட தொல்லையை நான் பெரிதுபடுத்தவில்லை. நேரம் செல்ல செல்ல உடல் ரீதியிலான மாறுதல்கள் அதிகரித்தன எனக்கு எதோ ஒன்று நடக்க போவதை உணர முடிந்தது. என் மனதிற்குள் இறைவன் வைத்து அனுப்பிய அடையாளம் தெரியாத பறவை எச்சரிக்கை சிறகுகளை ஓங்கி ஓங்கி அடித்தது. என் கண்முன்னே இருந்த வேலைகளும், கடமைகளும் அந்த எச்சரிக்கை ஒலிகளை அசட்டை செய்ய வைத்தது.
ஆனாலும் நெருப்பு புகைய துவங்கும் என்பது போல என் உடல் அறிகுறிகள் வெளியில் தெரிய ஆரம்பித்து விட்டன. இனியும் தாமதிக்க கூடாது என்ற என் சீடர்கள் கிடுக்கி பிடி போட்டதாலும் என்னாலும் தாங்க முடியாதபடி நிலைமை இருந்ததாலும் மருத்துவமனை செல்ல சம்மதித்தேன்.
வேலூர் ஸ்ரீபுரத்தில் உள்ள ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அன்று இரவே அனுமதிக்கப்பட்டேன். மருத்துவமனையின் நிறுவனரும் வேலூர் பொற்கோவிலின் ஸ்தாபகருமான ஸ்ரீ சக்தி அம்மா என்னுடைய அன்பரும்,நண்பரும் உற்ற துணைவரும் ஆவார். அவருடைய உத்தரவு படி எனக்கான சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. சிகிச்சை துவங்கி இருபது நாட்கள் வரையில் நான் பரிபூரணமான சுய உணர்வில் இல்லை.
வானத்துக்கும்,பூமிக்கும் உதைபடுபவன் போல மரணத்திற்கும்,வாழ்விற்கும் இடையில் விதி என்னை உதைத்து விளையாடி இருக்கிறது. மருத்துவர்கள் மிக நெருக்கடியான நிலையில் என் உயிர் இருப்பதாக கூறி இருக்கிறார்கள். அருகிலிருந்த எனது சீடர்கள் அனைவரும் கலங்கி போய்விட்டார்கள். நமது இணையதள வாசகர்கள் பலர் நேரில் வந்திருக்கிறார்கள். தபால் வழியில் மின்னஞ்சல் வழியில் தொலைபேசி வழியில் வேறு எந்த வகையில் இருந்தாலும் அத்தனை தொலைதொடர்பு வழியிலும் என்னை பற்றி என் நலத்தை பற்றி விசாரித்திருக்கிறார்கள். பிராத்தனை செய்திருக்கிறார்கள்.
மூச்சு விடுவதற்கு இயந்திரம், உணவு செல்வதற்கு தனிக்குழாய், இயற்கை உபாதைகள் வெளியேறுவதற்கு செயற்கை துவாரங்கள் என்ற நிலையில் இருந்தாலும் சுய உணர்வு வரும் போதெல்லாம் இரண்டு விஷயங்கள் என் நினைவுகளில் வந்து மோதின. ஒன்று புல்லாங்குழல் ஊதிய கிருஷ்ணன், இன்னொன்று நமது இணையதளத்தில் இன்னும் நான் எழுத வேண்டிய பல கருத்துக்கள் இவைகள் எனக்குள் கடல் அலையை போல ஓங்கி ஓங்கி வீசியதால் வாசுதேவனின் பாதங்களை தொட நான் விரும்பாமல் மீண்டும் இந்த பூமிக்கு ஓடி வர முயன்று கொண்டே இருந்தேன்.
என் முயற்சிக்கு உறுதுணையாக பொற்கோவில் ஸ்ரீ சக்தி அம்மா, மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் தலைமை நிர்வாகி திரு பாலாஜி, அறக்கட்டளையின் ஒருங்கிணைந்த செயலாளர் சுரேஷ்பாபு, அன்னதான பிரிவின் இயக்குனர் திரு விஜயகுமார், மருத்துவர்கள் ஜெயப்பிரகாஷ் நாராயணன், திரு ரமேஷ் மற்றும் பல மருத்துவர்கள் துணை நின்றார்கள்.
இவர்களை விட நான் வணங்குகிற கிருஷ்ணனும் ஸ்ரீ கிருஷ்ணனின் நேரடி வடிவங்களான மருத்துவ செவிலியர்களும் மிக முக்கிய காரணம் எனலாம். என் முனங்கல்கள், முகம் சுளிப்புகள், வேதனைகள் அத்தனையையும் வார்த்தைகளால் நான் வெளியிட முடியாத நிலையில் இருந்தாலும் அதை உணர்ந்து கொண்டு எனக்கு சேவை செய்த அவர்களின் கருணையும், அன்பும் என் கண்ணீரால் அபிஷேகம் செய்ய தக்க தகுதி வாய்ந்தது.
என்னை கருவில் பத்துமாதம் சுமந்து, இருபது வயது வரை தூக்கி வளர்த்த தாயார் மட்டுமல்ல இந்த நாற்பது நாட்களில் எனக்கு மலம், மூத்திரம் சுத்தம் செய்து குளிக்க வைத்து ஆடை உடுத்தி அசிங்கம் பாராமல் என் சளியை கைகளில் ஏந்தி குழந்தையை விட கவனத்தோடு பார்த்துகொண்ட செவிலியர்கள் ஒவ்வொருவரின் பெயரையும் நான் குறிப்பிட வேண்டும். ஆனால் இங்கே அதற்கான இடமில்லை எனவே எனது சாஸ்டாங்கமான வணக்கத்தை அவர்களுக்கு சமர்ப்பித்தே ஆகவேண்டும்.
தன்னை துறவி என்கிறான், இறை சேவை செய்வதற்கு பிறந்தவன் என்கிறான், கடவுளின் திருவடியை அடைவதே தனது நோக்கம் என்கிறான் இப்படியெல்லாம் வாய் வழியாக பேசிவிட்டு மரணத்தையும், பிணியையும் கண்டு அச்சப்படுகிறானே அவைகளின் கைகளில் விழ இசையாது ஓடி ஒளிகிறானே என்று சிலர் நினைக்க கூடும். அவர்கள் எண்ணுவது தவறல்ல மனிதனாக பிறந்த தன் இறுதி லட்சியமே இறைவனோடு இரண்டற கலப்பது தான்.
முக்திக்கு கிடைக்கும் எந்த சந்தர்ப்பத்தையும் கைவிடாமல் இருப்பதே புத்திசாலித்தனம் என்பதை தெரிந்தும் நான் ஏன் அவற்றை கையிலெடுக்க தயங்குகிறேன் என்றால் ராமன் பாலம் கட்டுவதற்கு அணில் பிள்ளை உதவியதை போல இறைவன் நிர்மாணிக்க இருக்கும் சத்திய யுகத்தின் அஸ்திவார கற்களில் ஒன்றாக நான் இருக்க மாட்டேனா? என்ற ஆசையில் தான். அதில் சிறு கல்லாக நான் உபயோகப்படுவதற்கு இன்னும் என்னை செப்பனிட்டு கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. பல குருட்டு கண்களை திறப்பதற்கு உழைக்க வேண்டிய தேவை இருக்கிறது. பள்ளத்தில் விழுந்து பரிதவிக்காமல் பாதுகாக்க வேண்டிய வேலை இருக்கிறது.
அவைகளை செய்தால் மட்டுமே முக்தி என்றும், சத்திய யுகத்தின் புள்ளிகளில் ஒன்று என்றும் நான் நன்கு அறிவேன். அதனால் மட்டுமே கிடைத்திருக்கும் இந்த அரிய பூமி வாழ்க்கையை இன்னும் சற்று காலம் பயன்படுத்தி கொள்ள விரும்புகிறேன். இதுவே எனது நிஜமான நிலைப்பாடாகும். இதை யாருக்காகவும் நான் மறைக்க வேண்டிய மறைத்து புண்ணுக்கு புனுகு பூசுவது போல் பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.
என் விபரம் தெரிந்த நாளிலிருந்து இறைவன் ஒருவனை தவிர வேறு எவருக்கும் தலைவணங்கியது கிடையாது. இந்த மருத்துவ பணியாளர்களின் கருணை மிகுந்த செயல் என்னை வணங்க வைத்து விட்டது. என் நெஞ்சத்திலிருந்த சிறிதளவு வேற்றுமை உணர்ச்சிகளையும் மறைந்து போக செய்துவிட்டது. எனவே ஒரு நோயை தந்து பல நோயை எனக்குள் இருந்து வெளியேற்றிய ஸ்ரீ கிருஷ்ணனின் அருளுக்கும், மனித தெய்வங்களின் கருணைக்கும் ஆயிரம் கோடி வந்தனங்கள்.
இனி வழக்கமாக நமது உறவு தொடரும்.....