Store
  Store
  Store
  Store
  Store
  Store

கொடிய விஷத்தை வென்ற குருஜி..!


யோகியின் ரகசியம் 4


  குருஜிக்கு இளம்பிள்ளை வாத நோய் தாக்கப்பட்டு அவரால் நடக்க முடியாமல் இருப்பது அனைவரும் அறிந்தது. இன்றும் அவரால் இரண்டு கைகளையும் மேலே உயர்த்தவோ அல்லது காற்று புகுந்து வெளியேறுகிற வண்ணம் இடைவெளி விட்டு வைத்து கொள்ளவோ இயலாது. இதனால் அவரது இரண்டு கை இடுக்கிலும் சிறிய சிறிய கட்டிகள் உருவாகி அதிகமான வலியை கொடுத்து தொந்தரவுபடுத்தும். இன்று பார்த்து கொள்ளலாம். நாளை பார்த்து கொள்ளலாம் என்று பொது வேலைகளில் கவனம் செலுத்தி இரண்டு மூன்று வருடகாலம் கட்டிகளை அவர் கவனிக்கவே இல்லை.

ஒரு முறை குருஜி அரியலூர் சென்றிருந்த போது டாக்டர் ஷரூக்கை சந்தித்தார். ஷரூக் குருஜியின் மீது நல்ல பாசம் உடையவர். குருஜிக்கும் அவர் மீதும், அவர் தொழில் மீதும் நல்ல மதிப்பு உண்டு. நான் பார்த்த மருத்துவர்களில் இவர் மிகச் சிறந்தவர் என்று பல முறை சான்று கொடுத்திருக்கிறார். எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குருஜியை எப்படியாவது சிகிச்சை எடுத்து கொள்ள வைக்க வேண்டும் என்று கருதி டாக்டரிடம் விஷயத்தை சொன்னோம். டாக்டரும், குருஜியிடம் ஒரு சிறிய அறுவை சிகிச்சை மூலம் கட்டிகளை எடுத்து விடலாம் என்று சொல்லி அனுமதியும் வாங்கி விட்டார். கட்டிகள் சிறிது என்றாலும், பல இடங்களில் பரவி இருந்தது அதை ஒரே அறுவை சிகிச்சையில் எடுக்க இயலாது என்பதனால் ஒவ்வொன்றாக கவனித்து கொள்வோம் என்று கருதிய டாக்டர் ஒரு பகுதியில் இருந்த கட்டியை முற்றிலுமாக எடுத்துவிட்டார்.

அறுவை சிகிச்சை முடிந்து இரவு நேரம் காயத்தை தானே முன்னின்று சுத்தப்படுதினால் தான் சிறந்தது என்று கருதிய டாக்டர் அதை செய்தார். அந்த நேரம் காயத்திலிருந்த இரத்த நாளம் ஒன்று உடைந்து, இரத்தம் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. எந்த மருந்திற்கும் கட்டுப்படவில்லை. தையல் போட்டால் தான் இரத்தம் நிற்குமென்ற நிலை வந்து விட்டது. பச்சை புண்ணில் ஊசியை வைத்து தைப்பது, அதுவும் வலி மறுப்பு ஊசி போடாமல் செய்வது என்றால் வேதனை அதிகமாக இருக்கும். ஆனால் குருஜி அதை செய்யுங்கள் என்று கூறிவிட்டார்.

டாக்டர் ஷரூக்கும், அவர் மனைவி டாக்டர் ஷகிலாபானுவும் அந்த வேலையை செய்தார்கள். நாங்களும் அருகில் இருந்தோம். ஒவ்வொரு தையல் போடும் போதும் குருஜி வலியால் துடித்தார் வேதனையை அவரால் தாங்க முடியவில்லை. ஒரு வழியாக பத்து தையலுக்கு பிறகு இரத்தம் வருவது நின்றது. மருத்துவர்கள் நிம்மதி அடைந்தார்கள். இனி வலி இல்லை என்ற திருப்தியில் எழுந்து உட்கார்ந்த குருஜி இரவு ஒரு மணி ஆன நேரத்தில் எப்படியாவது தேநீர் வாங்கி வா என்று எங்களில் ஒருவரை அனுப்பி வைத்தார்.

அந்த நேரத்தில் டாக்டர் ஷகிலாபானு குருஜி, நீங்கள் பெரிய தவசீலர் ஆபத்தான நிலையில் மரணப்படுக்கையில் இருக்கும் நோயாளியை கூட காப்பாற்றி இருக்கிறீர்கள். அதை நான் என் அனுபவத்தில் பலமுறை பார்த்திருக்கிறேன். மற்றவர்களின் நோயை அகற்ற தெரிந்த உங்களுக்கு உங்கள் நோயை குணப்படுத்த முடியவில்லையா? குறைந்தபட்சம் வலி இல்லாமலாவது செய்திருக்கலாம் அல்லவா? என்று கேட்டார். அவர் கேள்வி எங்களுக்கு சரியானதாகவேபட்டது. ஏன் குருஜி இதுவரை அப்படி தன்னுடைய சொந்த தேவைகளுக்காக எதையும் செய்து கொள்ள மாட்டேன் என்கிறார் என்று பலமுறை நாங்கள் யோசித்ததுண்டு. ஆனால், அதை துணிச்சலோடு கேட்க தோன்றியது இல்லை. நல்லவேளை இந்த அம்மையார் எங்களுக்கு பதிலாக கேள்வியை கேட்டுவிட்டார்.

அந்த வலியிலும், இரவு ஒன்றரை மணிக்கு மேல் தேநீரை அருந்தியவாறு எங்கள் கேள்விக்கு பதிலை சொன்னார். நான் தகப்பனாரின் கடையில் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்த போது, என் தந்தையின் நண்பர் பாபாகான் பாய் என்றொருவர் அடிக்கடி வருவார். அவருக்கும் எனக்கும் வயது வித்தியாசம் எண்பதுக்கு மேல் இருக்கும். அவர் தன்னுடைய நூற்றி பத்தாவது வயதில் தான் இயற்கை எய்தினார் என்றால் எங்களது வயதின் ஏற்றத் தாழ்வை புரிந்து கொள்ளுங்கள். அவரும், நானும் மிகச்சிறந்த நண்பர்கள். சினிமா கதையிலிருந்து அரசியல், ஆன்மிகம் என்ற நிறைய வாதங்கள் செய்வோம்.

பாபாகான் பாய்க்கு இறை வணக்கத்திற்கு கட்டாயப்படுத்தினால் பிடிக்காது. ஐந்து வேளை தொழுதால் தான் கடவுள் ஏற்றுக்கொள்வாரா? ஆறு வேளை பத்து வேளை என்று வணங்கினால் தூக்கி தூர எரித்து விடுவாரா? என்று விதாண்டாவாதம் பேசுவது போல் பேசுவார். எண்பது வயதை கடந்த போதும் புகைபிடிப்பது, மது அருந்துவது, மாமிசம் சாப்பிடுவது என்று எதையும் நிறுத்தியவர் கிடையாது. தினசரி இரண்டு கட்டு சலாம் பீடி புகைத்து விடுவார். ஆயினும் அவருக்கு பல மந்திர சித்தி உண்டு. பாம்பு கடித்தவர்கள், தேள் கடித்தவர்கள் அவரிடம் வருவார்கள். இடுப்பு பெல்டில் கத்தி ஒன்று வைத்திருப்பார். அந்த கத்தியால் தொட்டும், தொடாமலும் கடிவாயில் வைத்து கொண்டு மந்திரம் சொல்வார். சிறிது நேரத்தில் நீல நிறத்திலோ, கரும் பச்சை நிறத்திலோ இரத்தத்தோடு விஷம் வெளியே வருவதை நான் பார்த்திருக்கிறேன். கடிபட்டவர்கள் சிறிது நேரத்தில் குணமாகி விடுவதையும் கண்டிருக்கிறேன். நாகப்பாம்பு கடித்தவர்களை கூட, உள்ளுக்குள் மருந்து கொடுக்காமல் அவர் காப்பாற்றி இருப்பதை நான் அறிவேன்.

அவரிடம் அந்த விஷ முறிவு மந்திரங்களை கற்றுக்கொள்ள வேண்டுமென்று வெகுவாக ஆசைப்பட்டேன். அவ்வளவு சீக்கிரம் அவர் கற்றுத்தரவில்லை. கோபமாக திட்டுவார். முடியாததை வாங்கி தரச்சொல்லி அடம்பிடிப்பார். ஆயிரம் செய்தாலும், எதிலும் குறை காணுவார். என்னிடம் அவர் நடந்து கொள்வதை பார்த்து அவரிடம் போய் சகவாசம் வைத்திருக்கிறாயே உனக்கு மானமே இல்லையா? என்று நிறைய பேர் கேட்டிருக்கிறார்கள். நான் அதைப்பற்றி எல்லாம் கவலைபட்டது கிடையாது. என்னுடைய குறிக்கோள் அந்த மந்திரத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒன்று தான் அதற்காக எதையும் இழக்க சித்தமாக இருந்தேன். இப்படி சில வருடம் போராடிய பிறகு ஒரு வழியாக எனக்கு கற்று கொடுத்து, முதன் முதலில் இந்த மந்திரத்தை பரிசோதித்து பார்ப்பதை வெளி மனிதர்களுக்கு வைத்துக்கொள் சுயமாக செய்யாதே. அப்படி செய்தால் ஒரு முறை மட்டுமே இது பயன்தரும் என்றார். நானும் ஒப்புதல் சொல்லிவிட்டேன்.

இரண்டாயிரமாவது வருடம் பிறந்த அன்று என்று நினைக்கிறன். நமது ஆசிரமத்தில் இரவு எட்டு மணி பூஜை நடந்து கொண்டிருந்தது. உடல் நல பாதிப்பு சற்று இருந்ததனால், மாலையில் நான் குளிக்கவில்லை. அதனால் பூஜையில் கலந்து கொள்ளாமல் வெளியே புங்கமரத்துக்கு கீழ் போடப்பட்ட கட்டிலில் உட்கார்ந்திருந்தேன். அந்த நேரம் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வரவே கட்டிலில் இருந்து எழுந்து, காலை கீழே போட்டவண்ணம் சிறுநீர் பாட்டிலில் போக துவங்கினேன். அப்போது என் பாதங்களுக்கு அடியில் ஏதோ ஒன்று நெளிவது போல உணர்ந்தேன். அந்த நெளிவு அதன் குளிர்ச்சி நிச்சயமாக ஒரு சிறிய பாம்பின் மீது நான் கால் வைத்திருக்கிறேன் என்பதை சொல்லாமல் சொல்லியது. காலை வேகமாக எடுத்தாலும் கடிக்கும். அழுத்தினாலும் கடிக்கும். அப்படியே இருப்பது தான் சரி என்று தோன்றி காலை எடுக்காமல் மற்றவர்களை அழைத்தேன். அவர்கள் அனைவரும் பூஜையில் இருந்ததனால் என் குரல் அவர்கள் காதில் விழவில்லை.

என் வலது காலில் பலம் என்பது சுத்தமாக கிடையாது. கைகளால் அழுத்தினால் தான் அழுத்த முடியும். சிறுநீர் கழிக்கும் நிலையில் இருந்ததனால் கைகள் கொண்டும் கால்களை அழுத்த முடியவில்லை. என் கால்களுக்குள் அகப்பட்டு கொண்ட சிறிய பாம்பு எப்படியோ நெளிந்து வெளியே வந்து விட்டது. வந்த பாம்பு ஆத்திரத்தில் என் கண்டை காலில் இரண்டு முறை கொத்தி விட்டது. குனிந்து பார்த்தேன் சிறிய நாகப் பாம்பு குட்டி என்பதை தெரிந்து கொண்டேன். பெரிய நாகம் கடித்தால் அவ்வளவு பயப்பட வேண்டிய அவசியம் இருக்காது. தன்னை தற்காத்து கொள்ள கடிப்பது போல் நடிக்குமே தவிர, விஷத்தை விரைவில் இறக்காது. ஆனால் சிறிய பாம்புகள் அப்படியல்ல அனுபவம் இன்மையால் விஷத்தை முழுமையாக செலுத்திவிடும். உடனடியாக சிகிச்சை இல்லை என்றால் கடிபட்டவர்கள் எமபட்டினம் பயணம் செய்வதை நிறுத்த முடியாது.

நான் யோசித்தேன். பூஜை முடிந்து மற்றவர்கள் வர இன்னும் முக்கால்மணி நேரம் ஆகலாம். அதற்கு பிறகு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுக்க மேலும் ஒருமணி நேரம் ஆகும். அதுவரை உடலில் உள்ள சக்தி தாங்காது என்பதை உணர்ந்து செய்ய வேண்டிய வேலைகள் கண்முன்னால் வரிசையாக வந்து நின்று எங்களை முடிக்காமல் எங்கே போகப்போகிறாய் என்று கேட்டதனால் வேறு வழியில்லாமல் ஊராருக்கு பயன்பட வேண்டிய விஷ முறிவு மந்திரத்தை எனக்கு நானே பயன்படுத்தினேன். பாம்பு விஷத்திலிருந்து நான் தப்பிக் கொண்டாலும், விஷ முறிவு மந்திரத்தை இனி வேறு யாருக்கும் பயன்படுத்த முடியாத துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேன். கெஞ்சி கூத்தாடி, அவமானப்பட்டு கற்றுக்கொண்ட மந்திரம் பயனில்லாமல் நீர்க்குமிழி போல ஆகிவிட்டது. அன்று முடிவு செய்தேன் நான் கற்ற வித்தைகள் எதையும் எனக்காக பயன்படுத்துவது இல்லை. கர்ம வினை எதுவாக இருந்தாலும் அதை சொட்ட சொட்ட கடைசி துளி இருக்கும் வரை அனுபவித்து முடித்து விடுவது என்று முடிவு செய்துவிட்டேன். அதனால் தான் வலியை அனுபவித்தேன். அதுவும் நல்ல அனுபவம் தானே என்று கூறி சிரித்தார். அறுவை சிகிச்சை நடக்கும் போது வேதனையை வெளிபடுத்திய முகம், நொடி நேரத்தில் மறைந்து தாமரைப் பூ போல சிரித்த அவர் முகத்தை கண்ட போது இன்பத்தையும், துன்பத்தையும் எப்படி சம நோக்கோடு பாவிக்கிறார் என்பதை அறிந்து கொண்டோம். அவரை போல் நம்மால் முடியுமா? என்றும் எண்ணி பார்த்தோம். துயரத்தை கண்டால் ஓடி ஒளிகிற நமது போக்கும், சிறிய துன்பத்தை அனுபவித்தால் கூட அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் போக்கும் நம்மிடம் நிறைந்திருப்பது வெட்கத்தை தந்தது.

எனது கையிலிருக்கும் சாமரம் மற்றவர்களுக்கு வீசுவதற்கு தானே தவிர, என் சுகத்திற்கானது அல்ல என்று நினைப்பவன் தான் ராஜ விசுவாசி என்று சாணக்கியன் எழுதியதை படித்திருக்கிறோம். ராஜ விசுவாசியே தன் சுகத்தை கைவிடும் போது இறைவனை விசுவாசிக்கிற குருஜியை போன்ற புண்ணிய ஆத்மாக்கள் எப்படி பொதுநலத்தை மறப்பார்கள். அவர்கள் தாங்குகிற சுமைகள், நமது பாரத்தையும் குறைப்பதற்கு அவர்கள் குடிக்கிற விஷங்கள், நமது இரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கு என்பதை எண்ணி உணரும் போது அருளாளர்களின் மீது வியப்பை விட அன்பும், பக்தியும் மேலோங்குவதை உணர்வீர்கள்...

                                    குருஜியின்  சீடர்,
பிரகதீஷ்வர்

Contact Form

Name

Email *

Message *