தியானம் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பலரும் பலவிதமான பதில்களை கூறுகிறார்கள். பெருவாரியான நபர்கள் எந்த சிந்தனையும் இல்லாமல் மனதை நிர்மலமாக வைத்து கொள்வதன் பெயர் தான் தியானம் என்கிறார்கள். அதாவது எந்த எண்ணமும் இருக்க கூடாது. புதியதாக எந்த எண்ணமும் உதயமாக கூடாது. ஏறக்குறைய சந்திர மண்டலம் எப்படி சூன்யமாக இருக்குமோ அதைப் போல மனதையும் ஆக்கிக் கொள்வதன் பெயர் தான் தியானம் என்கிறார்கள்.
எனக்கு இவர்கள் கூற்றில் உடன்பாடு இல்லை. மனித சரீரம் ஒரு உயிர் பொருள். உயிர் இருக்கும் எதுவுமே செயல் இல்லாமல் இருக்க முடியாது. மனம் என்பது தனி உறுப்பாக கண்ணுக்கு தெரியும் உருவமாக இல்லை என்றாலும் கூட அதுவும் ஒரு உறுப்பு தான். அது நமது உடம்பிற்குள் தலையிலோ, மார்பிலோ மறைந்திருக்கிறது. எப்போது அது உயிர் உள்ள உடம்பிற்குள் வாழ்கிறதோ அப்போதே அதுவும் உயிர் பொருள் ஆகிவிடுகிறது. எனவே மனதால் இயங்காமல் இருக்க இயலாது. இயக்கம் என்பது அதன் இயற்கை சுபாவம். மனதின் இயக்கம் தான் எண்ணங்களின் உற்பத்தி ஸ்தலம். எனவே எண்ணங்களே இல்லாமல் மனிதனால் எப்போதும் இருக்க முடியாது என்பது எனது அனுபவம்.
நான் அறிந்த வரையில் நான் நேராக சந்தித்த பல யோகிகளும், எனது இந்த கருத்தை ஏற்றுக் கொள்கிறார்கள். பகவத் கீதையில் எனது கண்ண பெருமான் கூட இப்படித்தான் சொல்கிறார். அதாவது மனதை அடக்குவது இயலாத காரியம். அதற்காக அதை அடக்கும் முயற்சியை விட்டு விட கூடாது. தொடர்ச்சியான அப்பியாசம் அந்த செயலை சாத்தியமாக்கும். எண்ணங்கள் அனைத்துமே என்னை நோக்கி சமர்பிக்கபட்டுவிடும் என்று கண்ணன் சொல்வது இதைதான் என்று நான் நினைக்கிறன். அதாவது எண்ணங்களே இல்லாமல் இருப்பது தியானம் அல்ல. அந்த எண்ணத்தை இறைவன்பால் அல்லது சத்தியத்தின்பால் நிலைநிறுத்தி வைப்பது தியானம் என்பது என் கருத்து. நீங்கள் கூட தொடர்ந்து தியானத்தை பழகுவீர்கள் என்றால் நான் சொல்வது தான் சரியாகப்படும். அதற்காக மற்றவர்களின் அனுபவத்தை நான் குறைகான்பதாக யாரும் கருதவேண்டாம். நான் அறிந்ததை, நான் தெளிந்ததை என் அனுபவத்தை சொல்கிறேன். அவ்வளவு தான்.
இது தியானத்தை பற்றி குருஜி கொடுத்த அழகான விளக்கம். இந்த கருத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையிலும் அறிவும், அனுபவமும் அளவு கடந்த அன்பும் இருப்பது யாருக்கும் தெரியும். தியானத்தை புரியாத பாஷையில் தத்துவ மொழியில் பலரும் விளக்கம் சொல்வதனால் தான் அதன் எளிமை தன்மை மற்றவர்களுக்கு மிரட்சியை ஏற்படுத்தி தியானத்திலிருந்து விலகி நிற்கிறார்கள் என்பது உண்மை. ஆனால், குருஜி போன்ற எளிய ஞானிகள் வார்த்தை ஜாலங்களை காட்டுவது இல்லை. தனது மொழியறிவை விட கருத்தே பிரதானமானது. அதை மற்றவர்கள் புரிந்து கொள்வதே முதன்மையானது என்று கருதபவர்களால் மட்டும் தான் இத்தகைய விளக்கத்தை தர இயலும். குருஜியிடம் இதே போன்ற எத்தனையோ கருத்துக்கள் அலங்காரம், ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக இருப்பதை நாங்கள் அறிவோம்.
ஒரு முறை அவர் தனது பூர்வாசிரம கிராமத்திற்கு சென்ற போது அருகிலுள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலுக்கு எங்களையும் அழைத்து சென்றார். சுவாமி தரிசனம் முடிந்த பிறகு இந்த ஆலயத்தில் வைத்து தான் எனது தாத்தா காலமானார். அவருக்கு ஏதோ ஒரு நோய் இருந்ததாம். அதை சுயம்பு லிங்க சுவாமி கண்டிப்பாக குணப்படுத்துவார் என்ற நம்பிக்கையில் என் பாட்டி அவரை இங்கேயே வைத்திருந்தாராம். பாவம் கடைசியில் தாத்தா புறப்பட்ட இடத்திற்கே போய் சேர்ந்துவிட்டார். மனிதனுக்கு நம்பிக்கை அவசியம். ஆனால், அதே நம்பிக்கை மூட நம்பிக்கையாக இருக்க கூடாது. நோய்களை தானே நேராக குணபடுத்திவிடலாம் என்றால், மருந்துகளையும் மருத்துவர்களையும் கடவுள் ஏன் படைக்கவேண்டும்? எனவே உடம்புக்கு வைத்தியம் பார்ப்பதும், மனதிற்கு வழிபாடு நடத்துவதும் வேறு வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இறைவன் அருள் இல்லாவிட்டால் நோய் போகாது என்பதை ஒத்துக்கொள்கிறேன். அதற்காக சிகிச்சையை தவிர்ப்பது சரியல்ல என்று எங்களுக்கு விளக்கம் சொல்லுவார்.
அந்த உவரியில் கடற்கரை பக்கத்தில் கல் மண்டபம் ஒன்று உண்டு. அதில் குருஜி அமர்ந்து கடலை பார்த்த வண்ணம் தியானம் செய்வார். அவர் தியானம் செய்யும் போது நாங்கள் விலகி விடுவோம். கடல் அலையும், காற்றும் தான் அந்த இடத்தில ஒலி எழுப்பும். அதுவும் ஆள் அரவம் இல்லாத இரவு நேரத்தில் கடற்கரையில் குருஜியின் இந்த தியான கோலத்தை பார்ப்பதற்கு பரவசமாக இருக்கும். அவரிடம் நீங்கள் மற்ற நேரங்களில் தியானம் செய்வது கூட எங்கள் யாருக்கும் தெரியாது. அவ்வளவு இரகசியமாக செய்வீர்கள். இந்த இடத்தில் மட்டும் எப்படி வெளிப்படையாக செய்கிறீர்கள்? என்று நாங்கள் பல முறை கேட்டாலும் இதுவரை அவரிடமிருந்து பதில் வந்தது இல்லை.
உவரி என்றில்லை கன்னியாகுமரி செல்லுகின்ற இடத்திலுள்ள முப்பந்தல் இசக்கி அம்மன் ஆலயத்திலும், குமரிமுனையிலும், திருவண்ணாமலை வாயுலிங்கம் அருகிலும், திருப்பதி ஸ்ரீபாதம் பக்கத்திலும் அவர் யாரையும் எந்த இடைஞ்சலையும் பொருட்படுத்தாமல் தியானம் செய்வார். சில நாட்கள் கால்மணி நேரமும் வேறு சில நாட்கள் மணிக்கணக்கிலும் தியானம் செய்யும் நேரம் நீடிக்கும். எங்களுக்குள் காரணம் தெரியாமல் இருந்த குழப்பத்தை ஒருநாள் குருஜியின் சீடர் சந்தானம் தெளிவுபடுத்தினார். குருஜி தியானம் செய்யும் போது வீசுகின்ற காற்றை அவர் இடது பக்கத்திலிருந்து ஐந்தடி தள்ளி நின்று நுகர்ந்து பாருங்கள். சில இரகசியங்கள் தெரியும் என்றார்.
ஒரு முறை திருவண்ணாமலையில் வைத்து இதை பரிசோதனை செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அமாவாசை முடிந்து மூன்றாவது நாள் நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு மேலிருக்கும் வாயுலிங்கம் எதிரில் இருக்கும் கோவில் மேடையில் குருஜி தியானத்தில் இருந்தார். சந்தானம் சொன்னபடி குருஜிக்கு இடது புறத்தில் நிற்கும் வாய்ப்பு கிடைத்தது. முதலில் ஒன்றும் தெரியவில்லை. சிறிது நேரம் செல்ல செல்ல ஜவ்வாது மனம் வீச துவங்கியது. நேரம் ஆக ஆக ஜவ்வாது வாசனை காற்று முழுதும் நிறைந்து எங்கள் நுரையீரல் வரையில் வாசனையின் இதம் கத கதப்பாக பரவியது. அந்த வாசனையை நுகர நுகர நாங்கள் சிந்தனை மறந்து மயக்க நிலையில் இருப்பது போல உணர்ந்தோம். குருஜி தியானத்திலிருந்து கலைந்து எங்களை பெயர் சொல்லி அழைக்கும் போது தான் சுயநினைவு பெற்றோம்.
தியானம் செய்யும் போது, ஜவ்வாது மனம் ஏன் வீசுகிறது என்று எங்களுக்கு குழப்பமாக இருந்தது. அந்த குழப்பத்தை நிவர்த்தி செய்து கொள்ள சந்தானம் அவர்களிடம் விளக்கம் கேட்டோம். ஒரு மனிதனின் நற்செயல்களை தேவதைகள் ஆசிர்வதிக்கும். தீய செயல்களை பூத, வேதாள, பைசாசங்கள் ஆசிர்வதிக்குமென்று குருஜி கூறுவார். தியானம் என்பது நற்கர்மம் அந்த கர்மத்தை மனிதர்கள் செய்வது தேவதைகளுக்கு மிகவும் பிடித்தமான செயலாகும். காரணம் இறைவனிடத்தில் ஐக்கியமாகும் தகுதி மனிதர் ஒருவருக்கு தான் உண்டு. தேவதைகளாக இருந்தாலும், மனிதனாக பிறந்த பிறகு தான் முக்தியை நோக்கி செல்ல முடியும். மனம் கூடி தியானம் செய்யும் பாக்கியம் ஒரே பிறவியில் கிடைக்குமென்று கூறமுடியாது. பல பிறவிகளை கடந்து, தேவதை என்ற நிலைக்கு உயர்ந்து, அதன் பிறகு எடுக்கும் மனித ஜென்மாவே முக்தியை நோக்கி அழைத்து செல்லும் வா கனமாகும். அப்படி தங்களில் ஒருவர் முக்தி அடைய எடுக்கும் முயற்சியை தேவதைகள் ஆசிர்வதிக்கும். இடையூறுகளை தடுத்து நிறுத்தும்.
குருஜி தியானம் செய்யும் போது அவரை சுற்றி தேவதைகள் ஒரு வட்டம் போல சூழ்ந்து கொள்கின்றன. அங்கு தேவதைகள் இருக்கின்றன. அவர்கள் குருஜிக்கு ஒத்தாசைகளை செய்கிறார்கள் என்பதற்கு அடையாளமே இந்த ஜவ்வாது வாசனையாகும். தெய்வீக சக்திகள் இருக்கும் இடத்தில் இயற்கையாகவே வீசுகின்ற நறுமணம் இதுவேதான். திருவண்ணாமலையில் மட்டுமல்ல. குருஜி வேறு எங்கு அமர்ந்து தியானம் செய்தாலும் இதே வாசனையே நீங்கள் நுகரலாம் என்று எங்களுக்கு பதில் தந்தார். நாங்கள் குருஜியோடு சாதாரணமாக உரையாடுகிறோம். அவர் திட்டினால் கோபித்துக் கொள்கிறோம். அவர் கூடவே சேர்ந்து நையாண்டி பேசுகிறோம். அவர் எல்லாவற்றிலும் சாமான்யனை போலவே எங்களோடு கலந்து கொள்கிறார். ஆனால், உண்மையில் எவ்வளவு பெரியவர். பல தலைமுறை தேடினாலும் கிடைக்காத அபூர்வ மனிதர். காலத்தால் அழிக்க முடியாத அவதார புருஷர். அவரை குருஜியாக பெற்றிருப்பது நாங்கள் செய்த பெரும் புண்ணியம் என்று எங்களுக்குள்ளேயே மகிழ்ந்து போனோம்.
சந்தானம் சொன்னதன் உண்மை எங்களுக்கு சிறிது சிறிதாக தெரிய ஆரம்பித்தது. காடகனூர் ஆசிரமத்தில் இரவு நேரம் மங்கிய நிலா வெளிச்சத்தில், மரத்தடியில் தன்னந் தனிமையில் மணிக்கணக்காக உட்கார்ந்து அவர் தியானம் செய்த போது ஜவ்வாது மனம் வீசுவதையும் விசித்திரமாக காற்று சுழன்றடிப்பதையும் பார்த்திருக்கிறோம். ஒருநாள் குருஜியிடம் நீங்கள் மனம் ஒப்பி தியானம் செய்வதை புரிந்து கொள்கிறோம். அதே போல எங்கள் மனமும், ஒருமைப்பட என்ன செய்ய வேண்டும். இனிப்பு பலகாரத்தை நீங்கள் மட்டும் உண்டால் போதுமா? எங்களுக்கும் சிறிது தரக்கூடாதா என்று உரிமையோடு கேட்டோம்.
தியானம் என்பது மாயாஜால வித்தை அல்ல. ஆற்றல் மிக்க குரு, இந்தா வைத்துக்கொள் என்று தருகிற பரிசும் அல்ல. அது தவம். தவத்தை நீ மட்டும் தான் செய்ய முடியும். உனக்காக வேறு எவரும் செய்ய இயலாது. தொடர்ந்து மணியோசை எழுப்பினால் அதில் ஓம் என்ற பிரணவ மந்திர ஒலியை நீ கேட்கலாம். தொடர்ந்து தியானம் செய்ய பழகு. ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு நாளும் தியானத்தை பற்றி சிந்தித்த வண்ணமே கடமைகளை செய். எறும்பு ஊற கல்லும் தேயும் என்பது போல உன் தொடர் முயற்சி மனதை நிச்சயம் ஒருநிலைபடுத்தும். குரு என்பவன் சீடனை சுமந்து செல்பவன் அல்ல. வழிகாட்டி நடப்பவன். நான் வழிகாட்ட மட்டுமே முடியும். நீ தான் என்னோடு நடந்து வரவேண்டும் என்று பதிலை கூறி போர்க்களத்தில் சிரிக்கும் தளபதியை போல சிரித்தார்.
நாங்கள் முயற்சி செய்து தியானம் செய்வது தான் சரியான வழி என்று குருஜி கூறுவது எங்களுக்கு புரிகிறது. நாங்கள் அதற்காகத்தான் இரவு பகலும் பாடுபட்டு கொண்டிருகின்றோம். ஆனால், ஆரம்ப பாடசாலை குழந்தைகளிடம் ஆயிரம் கேள்விகள் இருப்பது போல, எங்களிடம் விடை தெரியாத எத்தனையோ கேள்விகள் இருப்பதனால் தான் குழம்பி இருக்கிறோம். இது சம்மந்தமான குழப்பங்களில் மிக இறுதியானது ஒன்று உண்டு. தியானம் என்பது மனம் சம்மந்தப்பட்ட விஷயம் என்றால், குருஜி போன்ற தெய்வீக புருஷர்களுக்கு மட்டும் இயற்கைக்கு அப்பாற்பட்ட அபூர்வ நிகழ்வுகள் நடக்கிறதே அது ஏன்? என்பதே அப்போது எங்களுக்கிருந்த இறுதி கேள்வியாகும். அதற்கும் சந்தானம் தெளிவான பதில் தந்தார்.
மதியம் உணவு சமைத்தால் சாம்பார் ஒரு சுவை. பொறியல் ஒரு சுவை. அவியல் ஒரு சுவை. தீயல் ஒரு சுவை என்று வகைக்கு ஒரு ருசி இருக்கும் ஒவ்வொன்றையும் ருசித்து பார்த்தால் தான் ரசிக்க முடியும் என்றால் யாருக்கும் உணவின் மீது ஈடுபாடு இருக்காது. உணவு சமைக்கும் போதே மணம் வர வேண்டும். அந்த மணம் நாசி வழியாக சென்று, சுவை நரம்புகளை தட்டி எழுப்ப வேண்டும். அப்படி நரம்புகள் தட்டி எழுப்பும் போது மனதில் வித விதமான கற்பனைகள் தோன்றும். அந்த கற்பனை தான் உணவை ரசிக்க தூண்டும். சுவைக்கவும் தூண்டும். ஞானிகளுக்கு நிகழ்கின்ற அபூர்வ நிகழ்வுகளும், உணவின் வாசனையும் ஒன்று தான். அவருக்கு அப்படி அதியசம் நடந்தது. இவருக்கு இப்படி விசித்திரம் நடந்தது என்று நான்கு விஷயங்களை கேட்டு அறிந்தால் தான் அந்த வியப்பால், மலைப்பால் நமக்கும் தியானத்தின் மீது ஈடுபாடு வரும். சிறிது சிறிதாக நமது நாட்டம் அதிகரித்து தியானத்தின் எல்லையை நாம் தொடுவோம். எனவே ஞானிகளுக்கு நிகழும் அபூர்வ நிகழ்வுகள் அவர்களுக்கானது அல்ல. நமக்கானது. நமது படிப்பினைக்கானது என்று சந்தானம் தந்த பதில் எங்களை அமைதி படுத்தியது.
குருஜியிடம் இப்படி மட்டும் அதிசயம் நிகழ்வது இல்லை. இன்னும் பல அதியசங்கள் இருக்கிறது. அவற்றை அமாவாசை இரவு நாம் காணலாம். எல்லோரும் வந்துவிடுங்கள் என்று எங்கள் ஆர்வ நெருப்பிற்கு டன் கணக்கில் நெய்யை ஊற்றினார். அன்றிலிருந்து அமாவாசை வருகிற வரையில் ஆர்வத்தால் நாங்கள் பட்டபாடு சொல்லிமாளாது. இப்படி நடக்குமோ, அப்படி நடக்குமோ என்று ஆயிரம் கற்பனை செய்து சோர்ந்தே போய்விட்டோம். சந்தானம் சொன்ன அமாவாசை வந்தது. அன்று இரவு பனிரெண்டு மணிவரையில் எங்களோடு உரையாடி கொண்டிருந்த குருஜி என்னை தூக்கி அந்த மரத்தடியில் உட்கார வைத்துவிட்டு நீங்கள் சென்று ஓய்வெடுங்கள். நான் அழைக்கும் போது வந்தால் போதும் என்றார் அவர் சொன்னபடியே நாங்கள் செய்தோம். ஆனால் ஓய்வெடுக்கவில்லை. ஆசிரமத்திலுள்ள தியான ஹாலில் ஜன்னல் வழியாக குருஜியை இமை கொட்டாமல் பார்த்து கொண்டே இருந்தோம்.
இரவு நேரம். அதுவும் அமாவாசை இருட்டு வேறு. எந்த விளக்கும் கிடையாது. மையிருட்டில் கண்களை நன்று ஊன்றிப் பார்த்தால் மட்டுமே குருஜி தெரிய வாய்ப்பில்லை. பத்து பதினைந்து நிமிடம் அவர் இருக்கும் இடத்தையே கூர்ந்து பார்த்த பிறகு ஓரளவு அவர் தெரிய ஆரம்பித்தார். வழக்கமாக மடியில் தலையணையை வைத்துக்கொண்டு தலை குனிந்த நிலையில் இருந்தார். சிறிது நேரத்தில் அங்கே நடந்தது எங்கள் இருதயத்தை நிறுத்திவிடும் போலிருந்தது. காற்றில் பலூன் ஒன்று பறப்பது போல குருஜி அமர்ந்த நிலையில் தரையிலிருந்து ஓரடி உயரத்தில் மிதக்க துவங்கினார். எங்கள் கண்களையே எங்களால் நம்ப முடியவில்லை. நாங்கள் காண்பது கனவா, நினைவா அல்லது மாயாஜாலமா என்பது புரியாமல் திகைத்தோம். உடம்பெல்லாம் வியர்த்து கொட்டிவிட்டது. ஆரம்பத்திலேயே சந்தானம் சொன்னபடி நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு எந்த குரலும் எழுப்பாமல் அடக்கி கொண்டோம். குருஜி இருந்த இடத்தை நோக்கி சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் செய்தோம். கன்னத்தில் போட்டுக்கொண்டோம். ஆனந்தத்தில் வேறு எதுவும் செய்ய எங்களுக்கு தோன்றவில்லை. அந்த மரத்து அடியிலேயே மிதந்தவாறு அரைமணி நேரம் அவர் இருந்திருப்பார். சிறிது சிறிதாக அவர் தரையில் அமர்ந்தார். நாங்கள் சுயநினைவுக்கு வர துவங்கும் போது அவர் எங்களை குரல் கொடுத்து அழைத்தார்.
ஓடிச் சென்று அவர் கால்களை பிடித்துக் கொண்டு கதறி அழுதோம். எங்களை கரையேற்று என்று பிரார்த்தனை செய்தோம். அவர் எதுவும் நடக்காதது போல சர்வ சாதாரணமாக சூடாக வெந்நீர் இருந்தால் கொண்டுவா என்று கேட்டார். அவர் கட்டளையை நிறைவேற்ற நாங்கள் விரைந்த நேரத்தில், தனக்கு அருகில் நின்ற சந்தானத்தை பார்த்து முட்டாள்தனமான காரியத்தை செய்திருக்கிறாய். அவர்கள் சிறிய பையன்கள் இவைகளை பற்றி என்ன தெரியும்? தேவையில்லாத மனக்குழப்பம் தான் வரும். இனிமே இப்படியொரு காரியத்தை செய்யாதே என்று சற்றே குரலை உயர்த்தி பேசினார். கைகளை கட்டிக்கொண்டு பாவம் சந்தானம், எங்களுக்காக தலை கவிழ்ந்து குருஜியின் முன்னால் நின்றார். சந்தானம் எங்களிடம் தனிப்பட்ட ரீதியில் கேட்டுக் கொண்டதனால் இதை நாங்கள் ஆறு வருடமாக யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை. இப்போது சந்தானத்தின் முழு அனுமதி பெற்றே பிறகே வாசகர்கள் குருஜியை முழுமையாக அறிந்து கொள்ள பதிவு செய்கிறோம்...
குருஜியின் சீடர்,
பிரகதீஷ்வர்