அன்புள்ள குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். தற்போது நீதி மன்றத்தில் ஆகம விதியில் அரசு விதிகள் தலையிடக்கூடாது என்ற தீர்ப்பு வந்திருக்கிறது. அதாவது பிராமணர்கள் மட்டுமே பூஜை செய்யும் ஆலயங்களில், மற்ற ஜாதியால் உரிமை கேட்கக் கூடாது என்பது இதன் பொருள் என பலர் கூறுகிறார்கள். இறைவனுக்கு அனைத்து மனிதர்களும் சமம் தானே பிராமணன் மட்டும் பூஜை செய்யலாம் என்றால் அவன் என்ன உயர்ந்தவனா? வழிபாட்டு முறையில் ஜாதி முறையை கடைபிடிப்பது சரிதானா? ஆகமம் வேதங்கள் இப்படிப்பட்ட உத்தரவுகளை பிறப்பித்து இருந்தாலும் கூட, மனித நேயம் வளர்ந்து விட்ட இந்த காலத்தில் அதை கடைபிடித்து தான் ஆகவேண்டுமா? எந்த மறைபொருளும் இல்லாமல் உங்கள் மனதில் பட்டதை தெளிவாக கூறுங்கள். எங்களுக்கு சரியான பதிலும், மன ஆறுதலும் கிடைக்கும் என்று நம்புகிறோம்.
இப்படிக்கு,
வண்ணநிலவன்,
தர்மபுரி.
“ஜாதிகள் இல்லையடி பாப்பா” என்று பாரதி பாடினான். அவனே குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லுதல் பாவம் என்றும் சொல்லுகிறான். நமது நாடு முழுவதும் மேடைகளில் மிக அதிகமாக பேசப்படுவது ஜாதிகளை ஒழிக்க வேண்டும். ஜாதிகள் இல்லாத சம தர்ம, சமத்துவ சமூகம் உருவாக வேண்டும் என்பது தான். சுதந்திரம் பெற்று, இத்தனை வருஷத்தில் ஜாதிகளை ஒழிக்க இந்த மேடை பேச்சுக்களை தவிர வேறு என்ன நாம் உருப்படியாக செய்திருக்கிறோம்? என்று யோசிக்க வேண்டும்.
ஜாதிகள் இல்லை என்றால், ஜாதிகளை நம்பவில்லை என்றால், ஜாதிகளை வளர்க்க விரும்பவில்லை என்றால் முதலில் பள்ளிக்கூடத்தில் குழந்தைகள் இடத்தில் என்ன ஜாதி என்று கேட்பதை நிறுத்தவேண்டும். அதன் பிறகு சாதி வாரியாக இட ஒதுக்கீடு சலுகைகள் என்று இருப்பதை உடனடியாக மாற்ற வேண்டும். இப்படி மாற்றி விட்டு, சமூகத்தில் ஜாதிகள் இல்லை இல்லாத ஜாதியை ஆலய கருவறையில் மட்டும் ஏன் வைத்திருக்கிறீர்கள் என்று அரசாங்கமோ, அறிவாளிகளோ கேள்விகள் கேட்டால் அதற்கு பதிலை சொல்லலாம். அதுவரையில் இவர்களுக்கு என்ன கூறுவது?
கல்வியில் ஜாதி வேண்டும். பதவியில் ஜாதி வேண்டும். சலுகையில் ஜாதி வேண்டும். ஆனால், கோவில் கருவறையில் மட்டும் ஜாதி வேண்டாம் என்று சொல்வது ஜாதியின் மேல் உள்ள வெறுப்பா? அல்லது ஆலயத்தின் சொத்துக்களின் மீதுள்ள விருப்பமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். கடவுள் படைப்பில் எவனும் உயர்ந்தவனும் அல்ல. தாழ்ந்தவனும் அல்ல. ஆனால், சில குல வழக்கங்களில் சிலருக்கு சில தெரியும். வேறு சிலருக்கு அவைகள் தெரியாது. என் தகப்பனார் சவரம் செய்யும் தொழிலை செய்பவராக இருந்தால் அவர் எனக்கு அதை கற்று தருகின்ற வித்தை வேறாக இருக்கும். என் பாட்டனார் - தகப்பனார் பிறகு நான் என்று வருகின்ற போது அந்த தொழில் நுணுக்கம் நுண்ணியதாகவும் தேர்ச்சி பெற்று சிறப்புடையதாகவும் இருக்கும்.
அதை விட்டு விட்டு ஆறு மாதம் சலூனில் வேலை செய்து, அனுபவம் இருக்கிறது என்ற வகையில் ஒருவன் தொழிலை ஆரம்பித்தால் அது சரியாக இருக்கலாமே தவிர நுணுக்கம் பெற்று முழுமையாக இராது. புரோகித தொழிலும், பூசாரி தொழிலும் ஏறக்குறைய அப்படிதான். சில தொழில்களை கல்லூரி படிப்பின் மூலம் பெற்று விட இயலாது. அது மரபில் ஊற வேண்டும். அப்போது மட்டும் தான் அந்த தொழில் தொழிலாக இருக்கும். நமது தற்கால நாகரீக அறிவு வளர்ச்சியை வைத்துக் கொண்டு சில விஷயங்களை மாற்றுவதற்கு முயற்சி செய்தால் அதில் விபரீதம் தான் ஏற்படும்.
ஆகம விதி படி உருவான கோவில்கள் அனைத்துமே அந்த கால மன்னர்கள் மக்களின் வரிப்பணத்தில் கட்டியது. எனவே, அது மக்கள் சொத்து. அரசாங்கம் தான் விரும்புகிறபடி நிர்வாகத்தையும், வழிபாட்டு முறையையும் நடத்தலாம் என்று சில புத்திசாலிகள் பேசுவதை கேட்டால் வேதனையாக இருக்கிறது. ஆதி கால மன்னர்களின் மாண்புகளை உணராத இந்த தற்குறிகள் மன்னர்களின் ஆத்மாவை காயப்படுத்துபவர்களாகவே நான் கருதுகிறேன். எந்த மன்னனும் கோவிலை எழுப்பிவிட்டு இது என் சொத்து என்று பிரகடனம் செய்யவில்லை. கோவில் தன்னைத் தானே சுயமாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று நிலங்களை மானியமாக எழுதி வைத்து தனி அமைப்புகளாக விட்டு விட்டார்கள். மக்களும், அரசாங்கமும் இறைவனுக்கு கட்டுப்பட்டு நிர்வாகம் செய்தார்களே தவிர, யாரும் தனியுரிமை கொண்டாடி இறுமாப்பு கொள்ளவில்லை.
ஜீயர்களின் கட்டுபாட்டிலும், மடாதிபதிகளின் கட்டுபாட்டிலும் உள்ள விஷ்ணு, சிவ ஆலயங்கள் தவிர அரசாங்க நிர்வாகத்தில் உள்ள ஆலயங்கள் அனைத்துமே எப்போதும் அந்தத்த ஊர் மக்களை அறங்காவலர்களாக கொண்டு செயல்பட்டு வந்தது. இடையில் வந்த அரசு கோவில் சொத்தை கபளீகரம் செய்து கொள்ள நிர்வாகத்தை வல்லாட்சி தன்மையுடன் பிடுங்கி கொண்டது. இதனால் கோவில் சொத்துகள் பல தவறான முறையில் குத்தகைக்கு விடப்பட்டு யார் யாரோ அனுபவிக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. இதை மாற்றுவதற்கு அரசாங்கமும், அறிவாளிகளும் முயற்சி செய்யாமல் ஊருக்கு இரண்டு பேர் என்று இருக்கும் பூசாரிகளை பிராமணர்கள் என்று பழிவாங்க கிளம்பி இருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.
வழிபாட்டில் ஜாதி கூடாது என்பவர்கள், முதலில் வழிபாட்டை ஏற்பவர்களாக இருக்க வேண்டும். கடவுளை வணங்குகிறவன், நம்புகிறவன் அனைவரும் முட்டாள் என்று பேசுகிற மனிதர்கள், வழிபாட்டில் ஜாதிகள் இருப்பதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எந்த பொது ஜனமும், இவர்களிடம் சென்று பார்ப்பனர்கள் எங்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துகிறார்கள் அதற்காக நீங்கள் போராடுங்கள் என்று விண்ணப்பம் வைத்தததாக தெரியவில்லை. தங்களது அரசியல் வளர்ச்சிக்காக வீணான பிரச்சனைகளை கிளப்பிவிட்டு குளிர்காய நினைக்கிறார்கள்.
பிராமணர்கள் மட்டும் தான் பூஜை செய்ய வேண்டுமா? அவர்கள் என்ன தேவலோகத்தில் இருந்து பூமிக்கு நேராக இறங்கி வந்த அவதாரங்களா என்று கேள்வி கேட்பவர்கள் முதலில் ஜாதிகளே இல்லாமல் செய்யட்டும். அதன் பிறகும் பார்ப்பனர்கள் ஜாதியை பிடித்துக் கொண்டு ஆடினால், அவர்கள் குடுமியை உண்டு இல்லை என்று ஆக்கி விடலாம். அதுவரை இப்போது இருப்பதே தொடரலாம்.
பிராமணர்கள் மட்டும் தான் பிறப்பால் உயர்ந்தவர்கள், இறைவனுக்கான வழிபாட்டை அவர்கள் தான் நடத்த வேண்டும் என்று இருப்பது இந்து மதத்தின் சாபக்கேடு என்று பலர் பேசுவதை பார்த்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. பிராமணன் உயர்ந்தவன், அவனே வழிபாடு செய்ய தக்கவன் என்ற விதிமுறை எந்த ஆகமத்திலும் கிடையாது. மேலும் நடைமுறையிலும் அது இல்லை. நான் பிராமணனுக்கு பிறந்தவன். காலை - மாலை இரண்டு வேளையும் காயத்ரி சொல்கிறேன். பூணூல் அணிந்திருக்கிறேன். குடுமி வைத்திருக்கிறேன். அதனால் நான் கருவறையில் நின்று பூஜை செய்வேன் என எல்லா பிராமணனும் கூறி விட முடியாது. அதற்கென்று தனியான தகுதிகள் உண்டு. அது இருப்பவன் மட்டும் தான் கருவறைக்குள் கால் வைக்க முடியும். மற்ற பிராமணர்கள் வெளியே நின்று தான் வழிபாடு நடத்த வேண்டும். நிலைமை இப்படி இருக்க, எரிகிற கொள்ளியில் நெய்யை ஊற்றுகிற வேலையை சிலர் செய்து ஜாதி சண்டைகளை உருவாக்க முனைகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது.
எல்லாம் இருக்கட்டும் பிராமணர்கள் பூஜை செய்து எங்களுக்கு அலுத்து விட்டது எனவே மாற்று ஏற்பாடுகள் செய்யுங்கள் என்று நமது கடவுள்கள் யாராவது இவர்களிடம் மகஜர் கொடுத்தார்களா என்ன? நம் கடவுளுக்காக இவர்கள் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. பிராமணர்கள் மற்ற இனத்தாரே தாழ்வாக நினைக்கிறார்கள் என்றால், அதை இரண்டு தரப்பினரும் பேசி தீர்த்துக் கொள்ளட்டும். இந்த நரிகளை யாரும் நாட்டான்மைக்கு அழைக்கவில்லை. கோவிலை சுத்தப்படுத்தும் வேலையை விட்டு விட்டு சட்டமன்றங்களை சுத்தப்படுத்துகிற வேலையை இவர்கள் கவனித்தால் நன்றாக இருக்கும்.