Store
  Store
  Store
  Store
  Store
  Store

குருஜியிடம் தோன்றிய இமயமலை லிங்கம் !


யோகியின் ரகசியம் 7


    சித்தர்கள் செய்கின்ற சித்துக்களை படித்தாலே நமக்கு ஆர்வம் மிகுதியாகும். அவர்களை போல நம்மாலும் செய்ய இயலாதா? என்ற ஆற்றாமையும் நமக்கு வரும். இதன் பயனாக எந்த சக்தியும் இல்லாத போதே அவைகள் இருப்பதாக நினைத்துக் கொண்டு, கற்பனை வானத்தில் சிறகடித்து பறப்போம். அம்பிகையின் தாண்டவம், சிவபெருமானின் ருத்ர தாண்டவம் இவைகளை நமது கற்பனை கண் திறந்து பார்ப்பது போல, சித்துக்களால் வானில் பறப்பதாகவும், தேசம் விட்டு தேசம் போவதாகவும், உருவமே இல்லாமல் ஆகாய விமானத்தில் பயணம் செய்வது போலவும் நம்மைப்பற்றி சொந்த கனவில் மூழ்கி விடுவோம். என்னிடம் மட்டும் சிறிய சித்து இருந்தால் அகில உலகத்தையே ஆட்டிவைக்க முடியும். என்ன செய்வது! கடவுள் அப்படி சக்தி தரவில்லையே என்று மனதிற்குள் தினசரி அழுவோம்.

இந்த வகையில் மனிதனுக்கே இருக்கும் இயற்கையான அமானுஷ்ய சக்தி வெளிப்பட்டு, சிறிது சித்துக்களை கற்றவர்களை பார்ப்பதற்கே நமக்கு அதிசயமாக தோன்றும் நிலையில் குருஜியை போன்று பல வகையான சித்துக்களை அறிந்த வரை அருகில் வைத்துகொண்டு அதைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்க முடியுமா?  அல்லது எப்படியாவது பரிசோதித்து பார்க்க வேண்டும் என்ற சுவாரசியத்தை நிறுத்தி கொள்ள இயலுமா? நாமும் சாதாரண மனிதர்கள் தானே என்ற எண்ணத்தில் குருஜியிடம் நீங்கள் பல சித்துக்கள் இருப்பதாக சொல்கிறீர்கள். அதில் ஒன்றை கூட நாங்கள் பார்க்கும் வண்ணம் நீங்கள் செய்வது இல்லையே! ஏன்? அதை நாங்கள் பார்க்க கூடாதா? என்று கேட்டோம்.

சித்துக்கள் என்பது கவர்ச்சி மிக்கது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், சித்துக்களில் மட்டுமே கவனம் செலுத்தி, அதன் மேல் மயக்கத்தை வைத்து காலத்தை வீணடித்தால் இறைவனை நோக்கி நாம் சொல்லுகிற பயணத்தில் சுனங்கி விடுவோம். மேலும் நீங்கள் நினைப்பது போல சித்துக்கள் என்பது பொதுநலத்தை கண்டிப்பாக வளர்க்காது. சுயநலத்தின் இறுதி எல்லையில் நம்மை கொண்டுபோய் நிறுத்திவிடும். எனவே தான் நான் சித்துக்களை பெரிதுபடுத்துவது இல்லை. அதை மற்றவர்களுக்கு காண்பித்து கவர்ச்சி படுத்துவது கிடையாது என்று பதில் கூறினார்.

குருஜியின் இந்த பதிலில் உள்ள நியாயம் எங்களுக்கு புரிந்தது. ஆனாலும், ஆர்வம் எங்களை விட்டுவிடவில்லை. எப்படியாவது சித்துக்களை பார்த்துவிட வேண்டுமென்று துடித்தோம். எங்களில் ஒருவர், ஒரே ஒரு சித்தையாவது காட்டுங்களேன் என்று குருஜியை மிகவும் உரிமையோடு கட்டாயப்படுத்தினார். உங்கள் தொல்லை பெரிதாக போய் விட்டது. மனிதனுக்கு இருக்கும் நிம்மதியை கெடுக்காமல் இருக்க மாட்டீர்கள் போலிருக்கு என்று சலித்துக் கொண்ட குருஜி, ஆசிரமத்திலுள்ள அம்பாள் விக்ரகத்திற்கு அருகில் வெள்ளை நிறத்து பிளாஸ்டிக் டப்பாவில் உள்ள கற்பூர துண்டு ஒன்றை எடுத்து வா என்றார்.

எடுத்து வந்து கொடுத்தோம். அதை வாங்கி கற்பூர கரண்டியில் வைத்த குருஜி, இந்த கற்பூரம் தானாக பற்றி கொள்ளும் அதிசயத்தை பார்க்க போகிறீர்கள் என்று சொல்லி எங்களில் ஒருவரை கற்பூரத்தை பார்த்து ஊத சொன்னார். வாய் நிறைய காற்றை எடுத்து கற்பூரத்தை நோக்கி அந்த சீடர் ஊதினார். ஊதிய மறு வினாடியே கற்பூரத்தில் நெருப்பு பற்றிக் கொண்டு ஜெக ஜோதியாக எரிய ஆரம்பித்தது. எங்கள் கண்களை எங்களால் நம்ப முடியவில்லை. கற்பூரம் எடுத்து வந்தது, நாம் அதை கற்பூர கரண்டியில் வைத்தது நாம். குருஜி அதை தொடவே இல்லை பிறகு எப்படி? அது எரிந்தது? என்று ஆயிரம் கேள்விகள், எங்கள் மனதில் பேயாட்டம் போட்டது.

இத்தோடு குருஜி நிற்கவில்லை. இன்று அமாவாசை. இரவில் நல்ல இருட்டு இருக்கும். நடுநிசி நேரத்தில் என்னை வந்து பாருங்கள். இருட்டிற்குள் பார்க்கும் சக்தியை உங்களுக்கு தருகிறேன் என்றார். பற்ற வைக்காமல் எரிந்த கற்பூர அதிசயமே இன்னும் எங்களால் ஜீரணிக்க முடியாத போது, அதற்குள் வேறொரு அதிசயமா? என்று நினைத்து நினைத்து ஒரு புறம் பரவசப் பட்டோம். மறுபுறம் பதற்றம் அடைந்தோம். என்ன நடக்கப் போகிறது?  என்று துடிதுடிக்கும் மனதோடு நடு இரவு வரை காத்திருந்தோம்.

இரவும் வந்தது. எங்கள் படபடப்பு அதிகரித்தது. எங்களை வரிசையாக தன் முன்னால் உட்காரச் சொல்லிய குருஜி, கண்களை மூடிக்கொள்ள சொன்னார். எங்கள் நெற்றிப் பொட்டில் ஆட்காட்டி விரலால் தொட்டார். ஏதோ பிசுபிசுப்பான பொருள் அவர் விரலிலிருந்து நெற்றியில் ஒட்டிக் கொள்வதை உணர்ந்தோம். ஐந்து நிமிட நேரம் மெளனத்திற்கு பிறகு, கண்களை திறந்திடுங்கள் என்று கட்டளையிட்டார்.

மூடிய கண்களை திறந்தோம். என்ன அதிசயம் டார்ச் லைட் வெளிச்சம் வட்டமாக ஓரிடத்தில் விழுவது போல எங்கள் பார்வை படும் இடத்தில் உள்ள பொருட்கள் துல்லியமான வெளிச்சத்தில் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தெரிந்தது. வெளிச்சம் தெளிவாக இருந்ததாலோ என்னவோ பொருட்களை முழுமையாக காண முடியவில்லை. முக்கால் பங்கு பார்த்தோம் என்றால் அது சரியாக இருக்கும் என்று நினைக்கிறன்.

குருஜியின் ஆற்றல் எங்களை வியக்க வைத்தது. சில நிமிட நேரத்தில் தான் சித்து செய்யாமல் எங்களை செய்ய வைத்து எங்களுக்கு உண்மையை உணர்த்திய அவரின் சக்தியை கண்டு மலைத்துப் போய் நின்றோம். இது எப்படி சாத்தியமாற்று?  என்று ஆயிரமாயிரம் கேள்விகள் மேலும் தோன்றி எங்கள் அறிவு தேடலில் விறகுகளாக வந்து விழுந்து எரிந்தன. மேலும் பதிலில்லாமல் அவஸ்தை பட இயலாது என்பதனால், குருஜியிடமே இது சாத்தியமான சூழ்நிலை என்ன? என்று கேட்டோம்.

தனது வழக்கமான சிரிப்பை இங்கேயும் தந்த குருஜி, மனிதர்களாக பிறந்த அனைவராலும் சித்தர்கள் ஆக முடியும் என்றேன் அல்லவா? அதன் அடிப்படையில் நீங்களும் சித்தர்களாகி சித்துகள் செய்திருக்கிறீர்கள் என்று கூறி கேலியாக சிரித்தார். நாங்கள் அமைதியாக எங்கள் அறியாமையை எண்ணி அவர் முன்னால் மெளனமாக நின்றோம். மேலும் அவர் தொடர்ந்தார். இங்கே இப்போது செய்தது எதுவும் மந்திரங்களால் ஏற்பட்டது அல்ல. தந்திரத்தால் ஏற்பட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லி இந்த சித்துக்கள் எப்படி சித்தரிக்கப்படுகின்றன. அதன் உருவாக்கம் எப்படி? அதற்கு என்னென்ன தேவை? என்பவைகளை விளக்கமாக எங்களுக்கு சொன்னார் இதைப் பற்றி குருஜியே பல இடங்களில் வெளிப்படையாக எழுதி இருப்பதனால் தந்திரத்தின் சூட்சமத்தை இங்கே சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறோம்.

மீண்டும் குருஜியிடம் மண்டியிட்டோம். தந்திரத்தால் நீங்கள் சித்து விளையாடியது போதும். நிஜமான சித்தை எங்களுக்கு காட்டுங்கள் என்று கெஞ்சி கேட்டோம். சரி என்று கூறிய அவர், கண்களை மூடி இரண்டு கைகளையும் வானத்தை பார்த்து விரித்து ஏதோ மந்திரங்களை சொல்ல ஆரம்பித்தார். அவர் மந்திரம் சொல்ல சொல்ல அந்த இடம் முழுவதும் சந்தனமும், ரோஜா மலரும் கலந்து வாசனை வீசுவது போல் இருந்தது. சித்திரை மாத இரவு உருக்கத்தையும் தாண்டி குளிர்ந்த காற்று அந்த அறையினுள் வீசியது. எங்களையும் அறியாமல் உடல் சிலிர்ப்பு ஏற்பட்டு தெய்வீகமான சூழலுக்கு நாங்கள் அழைத்து செல்லப்பட்டோம். அன்று அப்போது குருஜியிடம் பெற்ற இந்த தெய்வீக அனுபவத்தை வேறு எப்போதும் நாங்கள் அதற்கு முன்னால் பெற்றது இல்லை.

குருஜியின் உடல் நடுங்க ஆரம்பித்தது. அவரது கை வானத்தை நோக்கி விரிந்த வண்ணமே இருந்தது. கண்மூடி கண் திறப்பதற்குள் அவர் கைகளில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. கறுப்பாக பளபளப்பாக சிவலிங்கம் ஒன்று மின்னியது. அது எங்கே இருந்து வந்தது? எப்படி வந்தது? என்பது எங்களுக்கு விளங்கவே இல்லை. நிச்சயமாக அவர் மறைத்து வைத்து எடுக்கவில்லை. காரணம் நாங்கள் ஆறு பேர் கண்கள் மூடாமல் அவர் கைகளை மட்டுமே கவனித்து வந்தோம். நாங்கள் அவரை கவனிக்கிறோமா இல்லையா என்பதை அறியாத வண்ணமே குருஜியும் கண்களை மூடி இருந்தார்.  காற்றில் கரைந்து, மறைந்து எங்கிருந்தோ வந்த லிங்கம் ஒன்று வினாடி நேரத்தில் அவர் கைகளில் தென்பட்டதை காணும் போது இறைவனின் அருளையும், குருஜியின் கருணையையும் எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.

மாயமாக வந்த லிங்கத்தை ஒரு கிண்ணத்தில் வைத்து, எங்களிடம் கொடுத்த குருஜி இதை கவனமாக பார்த்துக் கொண்டே இருங்கள். இன்னும் அரை மணி நேரத்தில் இங்கே இருந்து மறைந்து விடும். பிறகு இதை நீங்கள் பார்க்க வேண்டுமென்றால் இமயமலைக்கு தான் நீங்கள் செல்ல வேண்டும் என்றார். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. எதற்காக இப்படி கூறுகிறீர்கள் என்று அவரிடமே கேட்டோம். அதற்கு அவர் சொன்ன பதில் எங்கள் சிந்தனைக்கு சிறந்த விருந்தாக அமைந்தது.

தந்திரத்தால் வாய்க்குள் இருந்து லிங்கம் எடுக்கலாம். விரல் இடுக்குகளிலிருந்தும் லிங்கம் எடுத்து கொடுக்கலாம். இதற்கு நமது கைகளில் லிங்கம் இருந்தால் போதும். ஆனால், மந்திரத்தின் மூலம் லிங்கம் எடுப்பது என்பது அந்த லிங்கம் வேறொரு இடத்தில் அதுவும் புனிதமான இடத்தில் இருக்கவேண்டும்.  நமது தியான சக்தியும், தவ சக்தியும், இறைவனின் அருளும் இணைந்து குறிப்பிட்ட அந்த பொருளை அணு அணுவாக பிரித்தெடுத்து நாம் இருக்கும் இடத்திற்கு கொண்டு வந்து, நமது கைகளில் சேர்த்து வைத்து பார்க்கும்படி செய்து விட்டு போய்விடும். பிறகு குறிப்பிட்ட நேரத்திற்குள் எடுத்த இடத்திலும் கொண்டு வைத்துவிடும் என்று அழகான விளக்கத்தை குருஜி கொடுத்தார்.


நேரம் செல்ல செல்ல கிண்ணத்தில் இருந்த லிங்கம் தூள் தூளாக மாற துவங்கியது. நாங்கள் பார்த்து கொண்டிருக்கின்ற போதே, ஒவ்வொரு தூளும் தூசிகளாக மாறி காற்றில் கலந்தன. எங்களில் ஒருவருக்கு கூட கண்களை தட்டி விழிக்க தோன்றவில்லை. பிளந்தவாய் பிளந்திருக்கும் போதே லிங்கம் காற்றிலிலே கலந்தது. இறுதியில் மறைந்தே போய்விட்டது. இமயமலையில் ரிஷிகளால் பூஜிக்கப்படுகிற லிங்கம் நம்மிடம் நமது தகுதிக்கு ஏற்றவாறு தங்குமா? நிலைக்குமா என்ன?

கட்டாயம் குருஜி போன்ற நிறை ஞானியிடம், இமயமலை லிங்கங்கள் ஆயிரக்கணக்கில் நிலைக்கும். காரணம் அவர் சித்துக்களை எப்போதும் வியாபாரப்படுத்துவதற்கோ, மற்றவர்களை வசிகரிப்பதற்கோ பயன்படுத்துவது இல்லை. யாரும் தன்னை நம்ப வேண்டும். அதற்கு தன் சக்தியை நிரூபித்து காட்ட வேண்டும் என்று எண்ணுபவரும் அல்ல. எங்களுக்கு அன்று ஒருநாள் மட்டும் காட்டியதோடு சரி. இதுவரை அவர் அதை மீண்டும் வெளிப்படுத்தியது இல்லை. என் தவத்தை, என் தியானத்தை நம்புவதாக இருந்தால் என்னோடு இரு. எனது அதிசய வித்தைகளை மட்டும் காண வேண்டும் என்று நினைத்தால் தயவு செய்து வேலையை பார்த்து போய் விடு. உன் அங்கீகாரம் எனக்கு தேவையில்லை என்ற அவரது பதில் தெளிவாக கிடைக்கும்.



                                    குருஜியின்  சீடர்,
பிரகதீஷ்வர்

Contact Form

Name

Email *

Message *