Store
  Store
  Store
  Store
  Store
  Store

கூடு விட்டு கூடு பாய்வது ஏன்...?


யோகியின் ரகசியம் 3
  
           சின்ன வயதில் மாயாஜால கதைகளில் படித்திருக்கிறோம். பழைய தெலுங்கு சினிமாக்களில் பார்த்து வியந்திருக்கிறோம். அப்போதெல்லாம், நமக்கும் அப்படியொரு வாய்ப்பு அமைந்தால் நமது உடம்பை விட்டு விட்டு வண்ணத்து பூச்சி உடம்பில் விண்ணைத் தொட்டு, பறக்கும் கருடனின் உடம்பில் புகுந்து உலகம் முழுவதையும் பார்ப்பதற்கு ரசிப்பதற்கு ஆசை பட்டிருக்கிறோம்.

சிறிது வயது வந்த பிறகு, அறிவு வளர்ந்த பிறகு, கூடு விட்டு கூடு பாயும் வித்தை என்பது இந்தா பிடி வைத்துக் கொள் என்று யாரும் தந்து விடுகிற பொம்மை அல்ல. அதற்கு இறைவனின் அருள் வேண்டும். கடினமான பயிற்சிகள் வேண்டும் என்று அறிந்திருக்கிறோம். அப்போது கூட எதையுமே நம்பாத நாத்திகர்களின் வாதங்களால் மயக்கம் அடைந்து, ஒரு வேளை இந்த வித்தைகள் அனைத்தும் தனிப்பட்ட மனிதர்களை, விஸ்வரூபமாக காட்டும் கற்பனை தந்திரமோ என்று நினைத்து குழம்பி இருக்கிறோம். எது எப்படி இருந்தாலும் கூடு விட்டு கூடு பாயும் கலையிலுள்ள ஆர்வம் எல்லா காலத்திலும் நம்மை தொடர்ந்தே வந்திருக்கிறது.

சித்தர்களின் தலைவரான திருமூலர், மாடு மேய்க்கும் ஆயர் குல இளைஞன் ஒருவனின் உடம்பிற்குள் புகுந்து, அவனது பசு கூட்டத்திற்கு ஆறுதல் அளித்துவிட்டு அவனது உடம்பிலேயே தங்கி திருமந்திரம் என்ற உயரிய நூலை படைத்த கதை நமக்கு தெரியும். அருணகிரிநாதரும், கிளி வடிவம் எடுத்து, கோபுரத்தில் தங்கி இருந்ததையும் நமக்கு பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதிலிருந்து அடிப்படையான ஒரு கேள்வி நமக்கு எழுகிறது. கூடு விட்டு கூடு பாய்தல் எப்படி நடக்கிறது. ஏன் நடக்கிறது? என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். கூடு விட்டு கூடு பாய்வதனால் ஏற்படும் நன்மைகள் என்ன?  என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் தோன்றி அதைப் பற்றி நமது குருஜியிடம் கேட்டோம்.

பகவத் கீதையில் கண்ணபெருமான் பயன் கருதாமல் செயல்களை செய் என்று சொன்னார். ஆனால் மனிதர்களான நமக்கு இறைவனின் கட்டளைப்படி நடக்க மிகவும் சிரமாக இருக்கிறது. நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களாக இருக்கட்டும். பெரிய ஞானிகளாக இருக்கட்டும் எதையாவது ஒன்றை எதிர்பார்க்காமல் எதையும் செய்ய முடிவதில்லை. நாம், நமது செயலால் நமக்கென்ன விளைகிறது என்று பார்ப்போம். ஞானிகள் அப்படி பார்க்கவில்லை என்றாலும், நன்மை என்ற ஒன்றாவது அவர்களது நோக்கமாக இருக்கிறது.

ஞானிகள் விரும்புவது என்ன? எப்படியாவது விரைவில் இறைவனின் பாதார விந்தங்களில் ஐக்கியமாக வேண்டும் என்பது தான். அதற்கு இடையறாத தியானமும், தவமும், ஜெபமும் வேண்டும். சில சமயம் நாம் பெற்றிருக்கின்ற இந்த உடம்பால் அவைகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் தவிப்பு ஏற்படுகிறது. இந்த பிறவியில் நாம், நமது முக்திக்கான மார்க்கத்தை தேடவில்லை என்றால் அடுத்த பிறவியை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படும். எனவே, பிறப்பை தடுப்பதற்கு முடிந்தால் இந்த உடம்பிலிருந்து ஆவியை விடுவித்துக் கொண்டு இன்னொரு உடம்பிற்குள் பிரவேசம் செய்து, அங்கே உட்கார்ந்து தனது தியானம், தவம் போன்றவற்றை முடித்து கொள்ள முனிவர்கள் விரும்பியதனால் தான் அரும்பாடுபட்டு கூடு விட்டு கூடு பாயும் பரகாயப் பிரவேசம் என்ற கலையை கண்டுபிடித்தார்கள்.

ஒரு பாம்பின் உடம்பில், திடகாத்திரமான ஒரு இளைஞனின் உடம்பில் அல்லது காடுகளுக்குள் அதிக பசி, தாகம் இல்லாமல் இருக்க கூடிய ஏதாவது ஒரு ஜீவனின் உடம்பில் புகுந்து கொண்டால் யாருடைய தொந்தரவு இல்லாமல், உடல் சோர்வும் இல்லாமல் தவம் செய்யலாம். தொடர்ச்சியான பீரங்கி தாக்குதல் அசைக்க முடியாத கற்கோட்டையையும் அடித்து வீழ்த்தி விடுவது போல, நமது தொடர் தவமும் முக்தியை நோக்கி நம்மை அழைத்து சென்று விடும். அதற்கு உடம்பு தடையாக இருந்தால் அதை விலக்குவதில் ஞானிகளுக்கு ஆட்சேபனை கிடையாது.

பரகாயப் பிரவேசம் எதற்காக நடத்தப்படுகிறது என்பது நமக்கு புரிகிறது. அது எப்படி நடக்கிறது என்ற அடுத்த கேள்வி நமக்கு எழுவதை தவிர்க்க இயலவில்லை. அதை அறிந்து கொண்ட குருஜி தெளிவாக விளக்கம் சொல்ல துவங்கினார். உயிர் என்பது மூலாதாரத்தில் இருக்கின்ற ஒரு வித சப்தம் அல்லது நாதம் அல்லது அதிர்வு என்று சொல்லலாம். இதை படிப்படியாக மேலே எழும்ப செய்து கபாலம் வரையில் அதாவது சகஸ்ரம் வரையில் கொண்டு செல்ல உதவுவது குண்டலினி பயிற்சி. இந்த குண்டலினி பயிற்சியை இன்னும் தீவிரப் படுத்தினால் நாம் விரும்புகிறப்படி உடம்பில் எந்த பகுதிக்கு வேண்டுமென்றாலும் உயிர் சக்தியை கொண்டு செல்லலாம். உடம்பிற்கு வெளியேயும் அதை எடுத்து செல்ல முடியும்.

அப்படி எடுத்து செல்வது தான் இந்த கலையின் அரிச்சுவடியாகும். எடுத்து செல்லப்படும் உயிர், வேறொரு உயிர் இல்லாத சடலத்திற்குள் புகுத்தப்படும் போது அந்த சடலம் உயிர் பித்து விடுகிறது. இப்போது உயிரும், மனதும் நாமாகவும், உடம்பு மட்டும் வேறாகவும் இருக்கிறது. உண்மையில் நமது பிறப்பின் இரகசியமே இது தான். நமது உயிர் காலம் காலமாக பயணப்பட்டுக் கொண்டே வருகிறது. வருகிற வழியில் எத்தனையோ சரீரங்களில் தங்கியும் வருகிறது. இதை நாம் அறிவதில்லை. கூடு விட்டு கூடு பாயும் வித்தையில் நிதர்சனமாக அறிந்து கொள்கிறோம்.

குருஜி கூறுவதை ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் விந்தையாகவும் இருக்கிறது. பயமாகவும் இருக்கிறது. நான் இராணியின் புருஷன் என் உயிரை வேணியின் புருஷன் உடம்பில் செலுத்தி விடுகிறேன். இப்போது நான் மனதால் ராணியின் புருஷனாக இருந்தாலும், உடம்பால் வேறொருத்தியின் புருஷனாவேன். இந்த தர்ம சங்கடத்தை எப்படி நான் வெளிப்படுத்துவது. என் மன நெருக்கடியிலிருந்து எப்படி நான் விடுபடுவது? யோசித்தாலே இதயம் நின்றுவிடுவது போலிருக்கிறது. இதை குருஜியிடம் வெளிப்படுதினேன். அதற்கு அவர் கட கடவென சிரித்தார்.

இது பரவாயில்லை. ஜலதோஷம் பிடித்தது என்று வைத்துக் கொள். நான் சீந்தி (வெளியேற்றுவது) போடுவது வேறொருவன் சளியை. நான் விழுங்குவது கூட இன்னொருவன் எச்சிலை. இப்படி யோசித்துக் கொண்டே போனால் கூடு விட்டு கூடு பாய்வதில் உள்ள ஆர்வம் முற்றிலுமாக குறைந்து போய்விடும். அதனால் தான் பல ஞானிகள் வீணான, மன நெருக்கடியை தவிர்க்க இந்த வித்தையை அதிகமாக பயன்படுத்தாமல் இருந்தார்கள் என்று நினைக்கிறன் என்று எங்களுக்கு பதில் சொல்லிவிட்டு பொதுவாக இந்த வித்தைகள் உடலை பிரதானமாக கருதுபவர்களால் செய்ய இயலாது. உடம்பை தாண்டி சிந்திப்பவர்களால் மட்டுமே இது இயலும். அதனால் இந்த நெருக்கடி என்று நாம் பேசுவது வீண் பேச்சு என்று நான் கருதுகிறேன். என்று அந்த விஷயத்திற்கு குருஜி முற்றுப்புள்ளி வைத்தார்.

எங்கள் ஆர்வம் அத்தோடு நிற்கவில்லை. மீண்டும் சில கேள்விகள் தோன்றின. குருஜி, ஒருவர் கூடு விட்டு கூடு பாயும் போது, அவரது சொந்த உடலுக்கு எதாவது தீங்கு ஏற்பட்டு விட்டால் மீண்டும் பழையபடி வரமுடியுமா?  என்று கேட்டோம். நன்றாக புரிந்து கொள்ளுங்கள். ஒரு உடம்பில் ஒரு நேரத்தில் ஒரு உயிரால் மட்டும் தான் முழுவதுமாக வாழ முடியும். இரண்டு உயிர்கள் ஒரு உடம்பில் இருக்க இயலாது. அதே போல இரண்டு உடம்பில் ஒரு உயிரால் இருக்கவும் இயலாது. உடம்பு ஒன்று என்றால் உயிரும் ஒன்று தான். வேறொரு உடம்பில் வாழுகிற காலத்தில் நமது உடம்பிற்கு அழிவு ஏற்பட்டு விட்டால் ஒன்று புதிய உடம்பிலேயே வாழ்ந்தாக வேண்டும் அல்லது அதையும் விட்டு விட்டு ஆவி உலக வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும். இதை தவிர வேறு மார்க்கமே கிடையாது.

பரகாயப் பிரவேசம் செய்வதில் நிறைய சிக்கல்கள் இருக்கிறது. பழைய உடம்பு பாதுகாக்கப்பட வேண்டும். எந்த இயற்கை சீற்றமும் அதை பாதித்து விட கூடாது என்பதோடு மட்டுமல்ல. நமது உடம்பில் உள்ள உயிரை எடுத்து இன்னொரு உடம்பில் வைக்கின்ற போது நமது பழைய உடம்பு என்ன நிலையில் கிடக்கிறதோ அதே நிலையில் இருந்தால் தான் மீண்டும் இங்கே வரமுடியும். யாரவது கை கால்களை நகர்த்தி வைத்தால் கூட உயிர் உடம்பிற்குள் இறங்குவதில் இடர்பாடு ஏற்பட்டு விடும் என்ற தகவலை குருஜி சொல்லவும் எங்களுக்கு திக்கென்று பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது.

அன்று முதல் இன்றுவரை குருஜியின் மிக நெருக்கமான முக்கியமான சீடராக இருப்பவர் கோவிந்தசாமி. குருஜியின் ஒவ்வொரு இயக்கத்தையும், சொல்லையும் அணு பிசகாமல் கடைபிடிப்பவர்கள் மற்றவர்களும் அப்படி தான் கடைபிடிக்க வேண்டும் என்று கட்டளை போடுபவர். எவ்வளவு முக்கியமானவராக இருந்தாலும் கோவிந்தசாமியின் ஒப்புதல் இல்லாமல் குருஜியியை அணுகிவிட இயலாது. குருஜியின் உணவு, உடை, உறக்கம் எல்லாமே இவரின் தனிப்பட்ட கவனிப்பின் அடிப்படையில் தான் நடந்து வரும். அவர் சில வருடங்களுக்கு முன்பு காலை நேரத்தில் குருஜியை எழுப்புவதற்கு நாங்கள் அருகில் சென்றால் தொடாதே அவர் விழிக்கிற வரையில் அப்படியே காத்திரு என்பார்.

தூக்க கலக்கத்தில் குருஜியின் கால் கைகள் மடங்கி இருந்தால் கூட அதை நிமிர்த்தி விட எங்களை அனுமதிக்க மாட்டார் உனக்கும் எனக்கும் தான் அவர் உறங்குவது போல் தெரிகிறது. ஒரு வேளை அவர் தூங்காமல் கூட தூங்கலாம் அல்லது வேறு எதாவது மந்திர பிரயோகத்தில் யோக கலையில் இருக்கலாம். அதை நாம் கெடுத்து விடக் கூடாது. எக்காரணத்தினாலும் குருஜியின் அனுமதி இல்லாமல் அவரைத் தொடதே என்று எங்களை எச்சரிப்பார். அவர் அப்படி எச்சரிப்பது அப்போது எங்களுக்கு அதிகபட்சமாகப்படும். இப்போது கூடு விட்டு கூடு பாயும் கலையில் உள்ள நடைமுறை நுணுக்கத்தை குருஜி விவரித்த போது கோவிந்தசாமியின் கட்டளையின் அர்த்தம் புரிந்தது.

அத்தோடு மட்டுமல்ல, குருஜிக்கு கூடு விட்டு கூடு பாய தெரியுமா?  அதில் அனுபவம் இருக்கிறதா?  அப்படி என்றால் எப்போதெல்லாம் செய்திருக்கிறீர்கள்? என்று கேட்பதற்கு எங்களிடமிருந்த ஆயிரம் கேள்விகளுக்கும் பதில் சொல்லாமலே புரிந்து கொண்டோம். எப்போதுமே ஞானிகள் பேசாமல் இருக்கும் போது தான் அதிகமாக கருத்துக்களை வெளியிடுகிறார்கள். என்ற வாசகத்தின் உண்மை பொருள் புரிந்தது.
  
                                    குருஜியின்  சீடர்,
பிரகதீஷ்வர்.


Contact Form

Name

Email *

Message *