குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். எனக்கு ஆறு மாதம் காலமாக ஒரே மாதிரியான கனவுகள் தொடர்ந்து வருகிறது. வானத்தில் பறந்து வருகிற விமானம் ஒன்று, தீ பிடித்தோ, நொறுங்கியோ தலைகீழாக விழுவது போல அந்த கனவு இருக்கிறது. எனது மனபிரம்மை அல்லது நான் பார்த்த சினிமாக்களின் தாக்கம் அப்படி இருக்கிறதா என்றும் பரிசோதனை செய்தும் பார்த்துவிட்டேன். நான் விமானத்தை பற்றி முற்றிலுமாக நினைக்காத நாட்களில் கூட அந்த கனவு வருகிறது. எனவே எனது எண்ணத்திற்கும், கனவிற்கும் சம்மந்தம் இல்லை என்று நினைக்கிறன். பிறகு ஏன் இப்படிப்பட்ட கனவு மீண்டும் மீண்டும் வருகிறது. அந்த கனவின் மூலம் எனக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தப்படுவது என்ன? என்பது தெளிவாக தெரியவில்லை. தயவு செய்து நீங்கள் இந்த ஏழையின் மனக் குழப்பத்தை தீர்த்து வைக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
சுதாகரன் நம்பியார்,
திருவனந்தபுரம்.
கனவு சாஸ்திரம் உருவான காலத்தில் ஆகாய விமானங்கள் பயன்பாட்டில் இருப்பதையும், அதில் பயணப்படுவதை பற்றியோ, விபத்துக்கள் ஏற்படுவதை பற்றியோ எந்த குறிப்புகளும் கூறப்படவில்லை. ஆனால், பறப்பதற்கு உதவுகிற கருவியோ அல்லது வானத்திலிருந்து இனம் புரியாத பொருள் கீழே வந்து விழுவதை பற்றி கூறபட்டிருப்பதை மறுப்பதற்கு இல்லை.
அதன் அடிப்படையில் வானத்தில் ஒரு பொருள் பறப்பது போல கனவு வந்தால் அது விரைவில் வரவிருக்கும் ஆபத்தை குறிப்பதாகும். அதே நேரம் பறப்பதற்கு தெரிந்த அல்லது அந்த ஆற்றல் உள்ள மனிதர்களை கண்டால் எடுத்த காரியங்கள் பிறருடைய உதவி இன்றி வெற்றி பெறலாம்.
ஆனால் ஆகாயத்தில் பறக்கும் பொருள் எரிந்து கீழே வந்து விழுவது போல கனவு வந்தால் செய்து கொண்டிருக்கின்ற தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்படப் போகிறது என்பது அர்த்தமாகும். எனவே இப்படிப்பட்ட கனவு வருபவர்கள் சொந்த தொழில் செய்பவர்களாக இருந்தால் மிகுந்த ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். கனவு வந்து குறைந்தபட்சம் ஆறு மாதம் காலத்திற்காவது தொடர்ந்து துர்கையம்மனை வழிபட வேண்டும். துர்காஷ்டகம், துர்கா அஸ்டோத்திரம் போன்ற துதிகளை வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் செய்துவர வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் ஆபத்து நிச்சயம் விலகும்..