Store
  Store
  Store
  Store
  Store
  Store

பெயரை மாற்றினால் பலனுண்டா...?



ன்புள்ள குருஜி அவர்களுக்கு, பணிவான வணக்கம். குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? பெயரை மாற்றுவதனால் வாழ்க்கையில் ஏற்படும் தோல்விகளை மாற்றலாமா? முழுப் பெயரை மாற்ற முடியவில்லை என்றாலும், பெயரில் உள்ள எழுத்துக்கள் சிலவற்றை மாற்றுவது மூலம் மாற்றம் வருமா? எல்லோரும் அறிந்து, புரிந்து கொண்டு நடைமுறை படுத்தக்கூடிய விதத்தில் விளக்கம் தருவீர்கள் என்று நினைக்கிறன். உங்கள் பாதங்களுக்கு என் நமஸ்காரம்.

இப்படிக்கு,
ஜெகவீர பாண்டியன்,
சென்னை.




பெயர் என்பதே ஒரு மந்திரமாகும். நேற்று வரையில் எங்கோ ஒரு மூலையில் கிடந்த மனிதனை பிடித்து வந்து, நாட்டின் தலைவனாக்கி விட்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவன் சில நாட்களிலேயே தனது பழைய நிலையிலிருந்து மாறி, முழுமையான சக்திப் பெற்ற சக்திமான் போல காட்சி தருவான். இது எப்படி நிகழ்கிறது. ஆயிரம், அதிகாரம்மிக்க பதவி வந்தாலும் மூன்று வேளைக்கு மேல் உணவருந்த முடியாது. அதிகபட்சமாக ஒன்பதுமணி நேரம் உறங்கி ஓய்வெடுத்து கொள்ளலாம். இவைகளால் மட்டும் மனிதனின் சக்தி சில நாட்களில் கூடிவிட போவதில்லை. இன்று தலைவனாகி விட்ட இவனது பெயரை உலகம் முழுவதும் உள்ள பத்திரிக்கைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் அனைத்தும் உச்சரிக்கின்றன. பலகோடி உதடுகள் அவன் பெயரை வாசிக்கின்றன. மனதும் மனதும் அசைபோடுகின்றன. இப்படி ஒரே நேரத்தில் அவனது பெயரை பலபேர் சொல்வதனால் அந்த சொற்களில் உள்ள சக்தி இவனை வந்தடைந்து புதிய தெம்பை, தைரியத்தை, மனத்தெளிவை வெற்றி மிதப்பை கொடுக்கிறது. அது தான் இரகசியம். உதாரணத்திற்கு உங்கள் பெயரையே தினசரி சுவாமியின் பெயரை ஜெபிப்பது போல ஜெபித்து பாருங்கள். நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை காண்பீர்கள்.

நாம் நினைப்பது போல, பெயர்கள் செயற்கையாக சூட்டப்படுவது கிடையாது. நாடி ஜோதிட கணக்குப்படி ஒரு கரு உருவாகும் போதே, அதன் பெயர் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. ஒற்றைப் பெயரை பெறுவதாக இருக்கட்டும். பல பெயர்களை அவனுக்கு தருவதாக இருக்கட்டும். எல்லாமே நிச்சயிக்கப்பட்ட படியே நடக்கிறது. சில நல்ல அதிர்ஷ்டசாலிகளுக்கு நல்ல சரியான பெயர் இயற்கையாகவே முதலில் அமைந்து விடுகிறது அல்லது இடைப்பட்ட காலத்தில் கிடைத்துவிடுகிறது. பலருக்கு வாழ் நாள் முழுவதுமே சரியான பெயர் கிடைப்பதில்லை. இதை அவரவர் தலையெழுத்து, விதி என்று தான் கூற வேண்டும். இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், இடைப்பட்ட காலத்தில் பெயரை மாற்றிக் கொள்வது தவறல்ல. அது நல்ல பெயராக, நமக்கு ஏற்ற பெயராக அமைய வேண்டும் என்பது தான் முக்கியத் தேவையாக இருக்கிறது. அடுத்தது நம் பெயரை எப்படி மற்றவர்கள் அழைக்கிறார்களோ எப்படி நாம் நம்மை அறிமுகம் செய்து கொள்கிறோமோ அப்படியே தான் எழுத்தில் எழுத வேண்டும். எழுத்தில் மாற்றினால், மாற்றிய எழுத்துப்படியே வார்த்தையை உச்சரிக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், செய்ய முடியாது என்றால் எழுத்தை மாற்றுவதனால் எந்த பயனும் கிடையாது. இதை முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டும்.

குழந்தைகளுக்கு பெயர் வைக்கும் போது, அர்த்தம் இல்லாத பெயர்கள், விசித்திரமான வாயிற்குள் நுழைய முடியாத பெயர்கள், பெரிய தலைவர்களின் பெயர்கள் இவற்றை வைக்க கூடாது. அப்படி வைத்தால் அந்த பெயர்களில் உள்ள உச்சரிப்பு முறை குழந்தைக்கு கிடைக்காமல், அவர்களது வாழ்க்கையை திசை மாறிய கப்பலாக மாற்றிவிடும். அர்த்தபுஷ்டியான பெயர், அழகான மொழி நடையில் எளிமையாக உச்சரிக்க கூடிய பெயர்கள் இவற்றையே வைக்க வேண்டும். தெய்வங்களின் பெயர்களை வைப்பதில் எந்த  தவறும் இல்லை. ஆனால், அந்த தெய்வ பெயர்கள் காலத்திற்கு ஏற்ற பெயர்களாக இருக்க வேண்டும். கிருஷ்ணன் என்ற பெயரில் எனக்கு ஈர்ப்பு இருக்கிறது. என் குழந்தைக்கு வைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால், கிருஷ்ணன் என்பது சமஸ்கிருதம். நானோ சுத்த தமிழில் பெயர் வைக்க விரும்புகிறேன் என்ற எண்ணத்தில் கருப்பன் என்று தமிழ்படுத்தி பெயர் வைத்தால், அது மூலத்தை மட்டுமல்ல. குழந்தையினுடைய மன இயல்பையும் மாற்றிவிடும். சிலர் கிருஷ்ணனை, கிருட்டிணன் என்று தமிழாக்கம் செய்கிறார்கள். இது தவறு. கிருஷ்ணன் என்பது வடமொழி பெயராக இருந்தால், அல்லது வேறு எந்த மொழி பெயராக இருந்தாலும் அந்தந்த மொழியாகவே அது இருக்க வேண்டுமே தவிர நம் இஷ்டத்திற்கு மாற்றக்கூடாது. மேலும் குழந்தைக்கு ஞானவேல் என்று அழகான முருகன் பெயரை வைத்துவிட்டு, அவனை அட அசடே என்று அழைக்க கூடாது. அது குழந்தையை மட்டுமல்ல முருகனையும் அவமரியாதை செய்வதாகும்.

Contact Form

Name

Email *

Message *