சுவாமிஜி அவர்களுக்கு எனது பணிவான வணக்கம்..
ஒரு பக்தன் தனது நியாயமான எந்தவித சந்தேகங்களையும் கோரிக்கைகளையும் தமது குருவிடம் வெளிப்படையாகக் கேட்கலாம். பக்குவம் பெற்றுள்ள ஞானியாகிய குரு தமது ஞானத்தினால் அதன் சாத்தியங்களை அறிந்து உரிய பதில் வழங்குவார். தவறாக ஏதும் கருதிவிடமாட்டார் என்ற குருவின் மீதான அபரிமிதமான நம்பிக்கையுடன் தங்களிடம் எனது இந்த எண்ணத்தினை சமர்ப்பிக்கிறேன்.
மந்திர ஒலி வடிவங்களின் உருவங்கள் குறித்து அமிர்த தாரா மஹாமந்திரம் தொடர்பான தங்களின் பதிவின் மூலமும், மற்றும் தண்ணீரின் மூலக்கூறின் மீது நமது மந்திர ஒலிகள் ஏற்படுத்தும் வடிவங்கள் குறித்தும், மந்திரப் பிரயோகங்களை தாமிரத் தகட்டில் உருவேற்றி அதனை நம் மேன்மைக்குப் பயன்படுத்திய நமது முன்னோர்களின் பேரறிவினையெல்லாம் தற்போது சைமேடிக்ஸ்(cymatics) என்ற சொற்பதத்தில் அழைத்து நவீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதையும் யூ டியூப் இணையதளத்தினை பார்வையிட்ட போது அறிந்து கொண்டேன்.
மந்திர ஒலி தண்ணீரின் மூலக்கூறில் தமது வடிவத்தினைப் பதித்து பயன் தருகிறது. மந்திரிக்கப்பட்ட தண்ணீர் மருந்தாகவும் பயன்படுகிறது. விசத்தைக்கூட முறியடிக்கிறது மற்றும் ஞானிகள் கண்டுபிடித்துள்ளவாறு மந்திர ஒலியின் வடிவங்களை செப்புத் தகட்டில் பதித்து மந்திர உச்சாடனம் செய்து உருவேற்றினால் அது தொடர்ந்து நீடித்த பலன் தருகிறது என்பதையெல்லாம் நவீன ஆய்வு விவரங்களின் மூலமும் தங்களைப் போன்ற ஞானிகளின் எழுத்துக்களின் மூலமும் உணர்ந்துகொண்டேன்.
விஞ்ஞானப்படி மீப்பெரும் ஒலி அலையை விட மீச்சிறு ஒலி அலைதான் சக்தி வாய்ந்தவை எனவும், மீச்சிறு ஒலி அலைகள் பாலங்களின் கட்டுமானத்தினையே தகர்க்கும் அளவு ஆற்றல் கொண்டவை எனவும் படித்திருக்கிறேன்.
மீச்சிறு ஒலி அலையின் வலிமையை உணர்ந்ததால்தான் தங்களைப்போன்ற ஞானிகள், மந்திரத்தினை வாய்விட்டு உச்சாடனம் செய்வதைவிட மனதிற்குள் உருவேற்ற சொல்கிறீர்கள் என்பதை உணர்ந்து அதிசயித்தேன்.
மேற்கண்ட விவரங்களையெல்லாம், அமிர்த தாரா மஹாமந்திரம் குறித்த பதிவில் மந்திரஒலி வடிவங்களின் உருவங்கள் தொடர்பாக தாங்கள் விளக்கியுள்ளவற்றுடன் தொடர்புபடுத்தி பார்த்தபோது எனக்கு புதுமையானதொரு ஆசை உதயமாகியது.
அது என்னவென்றால், தங்களால் உபதேசிக்கப்பட்ட எங்களுக்கான பிரத்யேக மந்திரத்தினை (அமிர்த தாரா மஹாமந்திரம்) நாங்கள் சிரத்தையுடன் மனதிற்குள் உச்சாடனம் செய்து வரும் அதே வேளையில், மேலும் கூடுதலாக எங்களுக்கான பிரத்யேக மந்திரத்தின் ஒலியின் உருவ வடிவத்தினை செப்புத் தகட்டில் பதித்து எமக்கான மந்திரத்தினை உச்சாடனம் செய்து உருவேற்றி யந்திரமாக கையிலோ, கழுத்திலோ கட்டுக்கொள்ளுமாறோ அல்லது வீட்டில் வைத்து பூஜிக்குமாறோ வழங்கினீர்களென்றால், குறிவைத்து எய்த அம்பு தவறாமல் பலன் தருவது போல தங்களால் அருளப்படும் யந்திரத்தின் மகிமையாலும் மேலும் அன்றாடம் மனதிற்குள் அமிர்த தாரா மஹாமந்திரத்தினை உச்சாடனம் செய்வதால் ஏற்படும் பலனும் சேர்ந்து தவறாமல் அதிவிரைவில் எங்களுக்கு பலன் கிடைத்திட ஏதுவாகுமே என்ற பேராசை மனதில் தோன்றி இந்த கோரிக்கையை தங்களிடம் வைக்க என்னை தூண்டிவிட்டது.
ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் ஏழுமலையான் திருக்கோவிலில் பலன் கொடுத்து வருவதாகப் படித்திருக்கிறேன். அது போலவே ஒவ்வொரு கோவில்களிலும் யந்திர பிரதிஷ்டை செய்யப்படுவதாகவும் படித்திருக்கிறேன். மேலும் பல வீடுகளிலும் கடைகளிலும் யந்திரங்கள் வைத்து வழிபடுவதைப் பார்த்திருக்கிறேன். இதன் மூலம் யந்திரங்களின் மகத்துவத்தினை உணர்ந்து கொண்டேன்.
அது போலவே அமிர்த தாரா மஹாமந்திரங்களையும் எங்களுக்கு பிரத்யேகமாக உபதேசிப்பதுடன் கூடுதலாக, அதனை உபதேசிக்கும் குருவாகிய தங்களின் திருவருளாலேயே அவற்றிற்கான யந்திர வடிவங்களையும் உருவேற்றி வழங்கினால் எம்மை துன்பத்திலிருந்து காப்பதற்கான தங்களின் நோக்கம் எளிதில் நிறைவேறி நிச்சயமான, உறுதியான விரைவான மார்க்கம் கிடைத்து நாங்கள் நன்மையடைவோம்.
பிரச்சனைகளில் சிக்கியுள்ள மனிதனின் மனம் எந்த நேரமும் அமைதியின்றி தவிக்கும். அந்த மன நிலையில் என்னதான் தீவிரமாக தன் எண்ணங்களைக் குவித்து மந்திர உச்சாடனம் செய்தாலும் அவனையும் அறியாமல் எண்ணச் சிதறல் ஏற்படுவது தவிர்க்க இயலாததாக உள்ளது. பிரச்சனையின் தீவிரம் சிறிதளவாவது குறையத் தொடங்கினால் மட்டுமே மனதை ஒரு நிலைப்படுத்தி மந்திர உச்சாடனம் செய்ய இயலும். எனவே பிரச்சனை உள்ள மனிதன் அந்த மனநிலையிலேயே மந்திரம் ஜெபிக்கும்போது அவன் பலன் பெற நீண்ட காலம் தேவைப்படுகிறது. அதற்குள் அவனின் பிரச்சனை அதிகரித்து அவனை மூழ்கடிக்கவும் வாய்ப்புள்ளது.
எனவே ஒவ்வொரு மனிதனுக்கான பிரத்யேக மந்திரத்தினையும் கண்டறிந்து வடிவமைத்து கொடுக்கும் மஹாஞானியாகிய தாங்கள் அந்த மந்திரங்களுக்கான யந்திர வடிவங்களையும் உருவேற்றித்தந்து எங்களுக்கு கூடுதல் பலம் கிடைக்க அருளுமாறு தங்களை மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன்.
அய்யா, ஒருவேளை எனது இந்த புதுமையான கோரிக்கை சாத்தியப்படாததாகவும் அமிர்த தாரா மஹாமந்திரத்தினை மனதில் உருவேற்றினாலன்றி கூடுதலாக யந்திரமாக உருவேற்றி வழங்கினால் பலன் கிடைக்காது என்ற நிலை இருந்தால், மந்திரஒலியின் உருவ வடிவத்தினை குறித்து எங்களுக்கு விரிவாக விளக்கி புரியவைத்த தாங்கள், அமிர்த தாரா மஹாமந்திரம் யந்திர வடிவில் பலனளிக்காது என்பதற்கான விளக்கத்தினை எதிர்வரும் ஏதேனும் ஒரு பதிவின் மூலம் எமக்கு புரிய வைத்தீர்களென்றால், நமது ஆன்மீகக் கலைகளை நவீன விஞ்ஞான பூர்வமான தேடுதலுடன் ஒப்பிட்டு வியந்து நமது பழம்பெரும் ஆன்மீக மகத்துவத்தை பெருமையுடன் நோக்கிடும் எம்போன்றவர்களுக்கு தங்களின் மூலம் இன்னும் கூடுதலான ஒரு விஞ்ஞானப் பார்வை கிடைத்திடும் வாய்ப்பினைப் பெறுவோம்.
இப்படிக்கு
பணிவுடன் -
சுந்தரராஜ்,ஈரோடு.
திரு சுந்தரராஜனின் கோரிக்கையில் நியாயமும், பக்தியும் இருப்பதை குருஜி அறிந்து கொண்டார். இவரைப் போன்ற பல சீடர்களின் உண்மையான பிரார்த்தனையின் எதிரொலியாகவோ, இறைவனின் உணர்த்துதலாகவோ கடந்த நான்கு மாத காலமாக அமிர்த தாரா மஹா மந்திரத்தின் மூல தேவதையை விக்ரஹம் ஒன்றில் ஆவாகனப்படுத்தி, தீட்சை எடுக்கும் ஒவ்வொருவருக்கும் நமது குருஜி கொடுத்து வருகிறார். விக்ரஹம் பெறாமல் தீட்சை பெற்று சென்ற அன்பான சீடர்கள், நமது ஆஸ்ரமத்திற்கு நேரடியாக வந்து விக்ரஹத்தை பெற்று பயனடையலாம். விக்ரஹத்தை எந்த சூழலிலும் தபாலில் அனுப்ப இயலாது என்பதனால் வெளிநாட்டு அன்பர்கள் கூட நேரில் வரும் போது தான் பெற முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விக்ரஹம் பெறுவதற்கு எந்த வித கட்டணமும் கிடையாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.
விக்ரஹம் பெறுவதற்கு தொடர்புக்கு = +91- 9442426434
நன்றி.
இப்படிக்கு,
ஸ்ரீ குரு மிஷன் ஆஸ்ரம நிர்வாகம்,
காடகனூர்.