யோகியின் ரகசியம் 2
ஆவி, பேய், பிசாசு, பூதம் என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருவது என்ன? வெள்ளை ஆடை, தரையில் கால் படாமல் மிதந்து செல்லுதல், தலைவிரிக் கோலம், மல்லிகைப் பூ வாசம், சலங்கை ஒலி இந்த மாதிரியான கற்பனை நமது மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அதற்கு காரணம் சினிமாக்களும், நாவல்களும், நமது பாட்டிமார்களும், பேய்பிடித்து ஆடுவதாக கூச்சல் போட்டுக்கொண்டு தெருவில் ஓடும் அப்பாவி பெண்களும் இவர்கள் சித்தரித்த இந்த கோலம் சரியானதா...? ஆவிகள் இப்படி தான் இருக்குமா...? என்று ஆவிகள் உலகத்தில் நல்ல அறிமுகமும், தேர்ச்சியும் பெற்ற நமது குருஜியிடம் கேட்டோம்.
அதற்கு அவர் சிரித்தார். நமது விருப்பபடி சில கற்பனைகளை வளர்த்து கொண்டு, இது இப்படித்தான் இருக்குமென்று கருதுவது அறியாமை மட்டுமல்ல. ஆபத்தும் கூட. பாம்பு கடித்து செத்தவனை விட கடித்துவிட்டதே என்ற அச்சத்தில் செத்துப் போனவர்களின் எண்ணிக்கை தான் அதிகம். அச்சம் என்பது மிக கொடிய நோய். ஆனால், அந்த நோய் தான், சோறு உண்ண மறுக்கும் விளையாட்டு பிள்ளை காலத்திலிருந்து இன்று வரை சக மனிதர்கள் நமக்கு புகட்டி கொண்டிருக்கிறார்கள்.
சில திரைப்படங்களில், ஆவிகளின் நடமாட்டத்தை பற்றி காட்டுகிற காட்சிகள் மிரட்டுவது போல் இருந்தாலும், விஷயம் தெரிந்தவர்களுக்கு வேடிக்கையாக தான் இருக்கிறது. முதலில் ஆவியை பற்றி அடிப்படையான விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள். நமது உயிருக்கு, அது தங்குவதற்கு சரீரம் என்ற ஒன்று இருப்பதனால் நாம் மனிதர்கள் என்று கருதபடுகிறோம். ஆவிகளுக்கு அந்த உடம்பு கிடையாது. அவைகளுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடு இது தான். வெள்ளைநிறத்தில் கருப்பான குழி விழுந்த கண்களும், கோரைப் பற்களும், கொக்கு போல நீளமான மூக்கும் நமது கற்பனையே.
ஆவிகள் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருப்பது இல்லை. எனக்கு தெரிந்தவரையில் கருப்பு, வெள்ளை, ஆரஞ்சு போன்ற நிறத்தில் ஆவிகள் வரும். ஆவிகள் வந்தால் குறிப்பாக பெண் ஆவிகள் வந்தால், சலங்கை சத்தம் வரும் என்பதெல்லாம் கிடையாது. வருகிற ஓசையே இல்லாமல் ஆவிகள் வருவது உண்டு. வேறு பல ஓசைகளை எழுப்புவதும் உண்டு. நாம் வாழுகிற போது நமது உடல் குண்டாக, கொழுத்து இருந்தால் ஆவியான பின்பும் தோற்றம் அப்படியே இருக்கும் என்று கூறவும் இயலாது. ஆவி தோற்றம் என்பது வாயுத்தன்மை மிகுந்தது என்பதனால், காற்றில் அலை பாய்வது போல தெரிந்தாலும், பழைய மனித தோற்றம் ஒரு குறியீடு போல தெரியும். என்ற பதிலை சொன்னார். அவர் கூறியது வியப்பாக இருந்தது.
நமக்கும், ஆவிக்கும் வித்தியாசம் உடம்பு மட்டும் தான் என்றால் ஆவிகளால் வருங்காலத்தை எப்படி உணர்ந்து கொள்ள முடிகிறது. நம்மால் அது முடிவதில்லையே என்ற கேள்வி பிறந்தது. அதற்கும் குருஜி தக்க பதில் வைத்திருந்தார். மதில் சுவற்றின் மேல் இருப்பவன், சுவற்றிற்கு உள்ளே நடப்பதையும், வெளியே நடப்பதையும் காண முடியும். மரணம் என்பது உயிரை உடம்பிலிருந்து முற்றிலுமாக பிரித்து விடுவதனால் உயிருக்கு உடல் ரீதியான சங்கடங்கள் கிடையாது. எனவே அவைகளால் மூன்று காலங்களையும் ஒரு சேர காணமுடியும். நாம் உடம்போடு கிடந்து அவதிப்படுவதனால் காலம் என்ற தேரில் செல்லுகிற வாய்ப்பு நமக்கில்லை.
ஆவிகளால் வருங்காலத்தை பற்றி கூறமுடியுமே தவிர, அக் காலங்களில் நாம் அனுபவிக்கும், நல்லது கெட்டதுகளை மாற்றிவிட இயலாது. வருவதை முன்கூட்டியே அறிந்து கொள்வது கூட, ஒருவித தடுப்பு என்ற வகையில் ஆறுதல் அடையலாம். காலத்தை மாற்றுகிற அதிகாரம் ஆண்டவன் ஒருவனுக்கே உண்டு என்று பதில் சொன்னார். இப்போது வேறு ஒரு ஆர்வம் மிக்க கேள்வி எங்களுக்கு தோன்றியது. உங்கள் வாழ்வில் தனிப்பட்ட ரீதியிலோ அல்லது பொதுவாகவோ சில சம்பவங்கள் நடக்க போவதாக ஆவிகள் கூறியது உண்டா? எச்சரித்தது உண்டா? என்று கேட்டோம்.அதற்கு நிறைய சம்பவங்களை என்னால் கூற முடியும். இருந்தாலும் ஒன்றை கூறுகிறேன் என்று தனது அனுபவத்தை எங்களோடு பகிர்ந்து கொள்ள துவங்கினார்.
மந்திரத்தால் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கின்ற மனித உடம்பில் படிப்படியாக விஷத் தன்மையை ஏற்றி அவனை செயலிழக்க செய்துவிடலாம் அல்லது கொன்றும் விடலாம் அப்படிப்பட்ட மந்திரத்தை முறியடிப்பதற்கு மாற்று மந்திரம் உண்டு. நான் அந்த மாற்று மந்திரத்தை அறிந்து கொள்ளவும், கற்று கொள்ளவும் மிகவும் ஆசைபட்டேன். முயற்சி செய்தேன். எல்லாமே தோல்வியில் தான் முடிந்தது. இதனுடைய வருத்தம் வெகு நாட்களாக எனக்கு தீரவில்லை. இந்த வருத்தத்தை எனது நண்பர் வேலு நாயக்கரிடம் நான் பகிர்ந்ததுண்டு. ஒரு துரதிருஷ்டமான நிகழ்வு ஒன்றில் அவர் காலமாகிவிட்டார். ஒரு முறை அவர் ஆவியோடு நான் பேசிய போது, நீ அந்த மந்திரம் வேண்டுமென்று முன்பெல்லாம் வருந்துவாயே அந்த மந்திரம் இன்ன ஊரில் இன்னாரிடம் இருக்கிறது. இவரை அணுகினால் அவர் உனக்கு பெற்று தருவார் என்று கூறினார்.
அவரது கூற்றுப்படி நான் நடந்து கொண்டு அந்த அரிய, அபூர்வ மந்திர ஏட்டை பெற்றேன். அதில் நான் தேர்ச்சியும் பெற்றிருக்கிறேன் என்றால் அதற்கு வேலுநாயக்கர் ஆவிக்கு நன்றி செலுத்த வேண்டும். உயிரோடு வாழ்ந்த போது செய்ய முடியாத உதவியை இறந்த பிறகு அவர் செய்தார் என்பது ஒருபுறம் இருக்க, ஆவிகளால் இத்தகைய வியப்பான காரியங்களை நடத்த முடியும் என்பதை அனுபவ ரீதியில் அறிந்து கொண்டேன். நன்மையான விஷயங்கள் ஆவியின் மூலம் பெற்றிருப்பது போலவே, பல தீமைகளையும் பெற்றிருகிறேன். நான் ஆத்ம சாந்தி இல்லாமல் தவிக்கிறேன் என்று என்னிடம் முறையிட்ட பல ஆவிகளுக்கு கிரிகைகள் செய்ய போய் உடல் ரீதியிலும், மன ரீதியிலும் சங்கடங்களை சந்தித்திருக்கிறேன். தீமையை மறந்து நன்மைகளை மட்டுமே பேச வேண்டும் என்பதனால் நாயக்கரின் உதவியை இங்கு குறிப்பிட்டேன்.
குருஜி கூறியவற்றில் சிலவற்றை அவரோடு இருந்து நாங்கள் நேரில் அனுபவித்திருக்கிறோம். ஒருமுறை அவர் சொந்த ஊருக்கு அருகிலுள்ள உவரி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு, அவரோடு சென்றோம். ஆலயத்தின் கொடி மரத்தை எங்கள் கார் கடக்கும் போது, காரணமே இல்லாமல் நின்றுவிட்டது. ஐந்து நிமிடம் நின்றிருக்கும் என்று நினைக்கிறோம். அதன் பிறகு கடற்கரைக்கு மிக அருகில் சென்று உட்காரலாம் என்று நினைத்தோம். குருஜி மறுத்தார் உடனடியாக வண்டியை தன் பூர்வீக வீட்டிற்கு விடு என்றார்.
வீட்டிற்கு வருவதற்குள், குருஜிக்கு பலமுறை வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மிகவும் கஷ்டப்பட்டார். ஐந்து கிலோ மீட்டர் பயணம் செய்வதற்குள் களைத்து போய்விட்டார். வீட்டிற்கு வந்ததும், சகஜமான உற்சாகத்திற்கு வந்துவிட்டார். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. காரணம் கேட்டோம். அதற்கு அவர், அந்தோனியார் ஆலயத்தின் கொடிமரத்தின் கீழே கட்டப்பட்டு பல ஆண்டுகளாக பல ஆவிகள் அவதிப்பட்டு கொண்டிருந்தன. அவைகள் நமது காரின் இயக்கத்தை நிறுத்தி, தன்னை விடுவிக்குமாறு மன்றாடின. அவைகளின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, உணர்ச்சி வேகத்தில் மந்திரத்தை சொல்லி விடுவித்தேன். அதனுடைய விளைவு தான் வயிற்று கோளாறு என்று சிரித்து கொண்டே பதில் சொன்னார். கஷ்டத்தில் கூட சிரிக்கும் இயல்பு குருஜிக்கு மட்டுமே உண்டு.
குருஜியின் சீடர்,
பிரகதீஷ்வர்