குருஜி அவர்களுக்கு, வணக்கம். என் மகளுக்கு இப்போது மூன்று வயது நடந்து கொண்டிருக்கிறது. புதியதாக முளைத்த பால் பற்கள் சொத்தை விழுந்தது போல கருப்பாக இருக்கிறது. இனி புதிதாக முளைக்கும் பற்கள் நன்றாக இருக்குமென்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஆனால் நான் இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாவது முறை முளைக்கும் பற்கள் கூட இதே போன்று தான் இருப்பதை பார்த்திருக்கிறேன். எனவே என் குழந்தை அப்படி ஆகாமல் நல்ல படியாக வளர நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் தயவுசெய்து வழிகாட்டுமாறு அன்போடு வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
வளர்மதி,
நீலாங்கரை.
ஜாதகத்தில் இரண்டாம் இடத்தை வாக்கு ஸ்தானம் என்று கூறுவார்கள். இந்த இடத்தின் அதிபதி இதில் இருக்கும் கிரகம் இவைகளை அடிப்படையாக கொண்டு ஒரு மனிதனின் வாக்குத் திறமையையும், குடும்ப அமைப்பையையும் மிக துல்லியமாக கணித்து விடலாம். இத்தோடு மட்டுமல்ல. பல் போனால் சொல் போச்சு என்று கூறுவார்கள். அதன் படி சொல்லுக்கு ஆதரமாக இருக்கும் பல்லினுடைய தன்மையையும் இரண்டாம் இடம் குறிக்கும். பல் ரோகம் வருமா? வராதா? பற்கள் உறுதியாக இருக்குமா? இராதா? என்பதை இரண்டாம் இடத்தை ஆராய்ந்தால் தெரிந்து கொள்ளலாம்.
அந்த வகையில் உங்கள் குழந்தைக்கு வாக்குஸ்தானத்தில் சிக்கல் இருக்கிறது கிரகங்கள் தந்த ரோகம் என்ற பல் நோய்கள் வருவதற்கான அறிகுறியை காட்டுகிறது. கிரகங்கள் பிரச்சனையை காட்டுவதோடு நின்றுவிடுகிறது வருகிற சிக்கலை எப்படி சமாளிப்பது என்பதற்கு விளக்கம் தருவது பரிகாரங்கள் மட்டுமே. எனவே விவரம் புரியாத குழந்தைகளுக்கான பரிகாரங்களை பெரியவர்கள் செய்து கொள்ளலாம்.
குழந்தைக்கு மூன்று வயது முடிந்து நான்காவது வயதை தொடும் போது வெள்ளி அல்லது வெண்கலத்தில் மனித பற்கள் போன்ற வடிவத்தில் செய்து காணிப்பாடி விநாயகர் ஆலயத்தில் உண்டியலில் செலுத்திவிட வேண்டும். பிறகு குழந்தைக்கு சிகை நீக்குதல் போன்ற சடங்குகளை நடத்தலாம். மூன்று வருடத்திற்கு ஒருமுறை குழந்தையின் பத்தாவது வயது வரை இந்த பரிகாரத்தை செய்து வந்தால் அழுகிபோனது போல் இருக்கும் பற்கள் மறைந்து வேறு புதிய பற்கள் கம்பீரமாக முளைக்கும்.