எங்கள் வீட்டு பக்கத்தில் ஒரு பெண்ணிருக்கிறாள். பார்ப்பதற்கு மூக்கும் முழியுமாக அழகாக இருப்பாள். நன்றாக படித்திருக்கிறாள். பாடுவாள். சமைத்தால் நளபாகம் போலிருக்கும். அன்பானவள், அமைதியானவள். நல்லவர், கெட்டவர் அனைவரையும் அனுசரித்து போக தெரிந்தவள். என்ன பண்பு இருந்து என்ன பிரயோஜனம்? வயது முப்பதுக்கு மேலே தாண்டுகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. அவள் வயதை ஒத்தவர்கள் தனது பிள்ளைகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா கூட முடித்துவிட்டார்கள். இவளுக்கு மட்டும் ஏனோ இன்னும் வழி பிறக்கவில்லை. பெற்றவர்கள் கண்ணீர் விட்டு கதறாத நாளில்லை.
ஊர் ஊராக சென்று ஜோதிடர்களை பார்த்தாகிவிட்டது. வாக்கு பலித சித்தர்களின் வாக்குகள் எல்லாம் காற்றோடு கலந்து போனதே தவிர காரியம் நடக்கவில்லை. பரிகாரத்திற்கு செய்த செலவில் இரண்டு கல்யாணம் நடத்தலாம். ஜாதகங்கள் ஒத்து வராது ஒரு வேளை ஒத்து வந்து நெருங்கே பேசினால் மாப்பிளை எதாவது ஒரு குறையோடு இருப்பான் அல்லது பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்லி விடுவான். இல்லை என்றாலும் எதாவது ஒரு காரணம் முன்னே வந்து விவகாரத்தை நடக்க விடாமல் தடுத்து விடும். பாவம் அந்த பெண்ணிற்கு விமோசனமே இல்லையா? காலம் முழுக்க கன்னியாகவே இருந்து விட வேண்டியது தானா? ஏதாவது வழி சொல்லுங்கள் என்று ஒரு பெண்மணி என்னிடம் கண்ணீர் விட்டு கேட்டாள்.
இப்படி என் காதுக்கு வருவது ஒரு குறையா, இரு குறையா? தினசரி பத்து கதைகளாவது இப்படி கேட்க வேண்டும். அந்த பையன் நல்லா படித்து அரசாங்க உத்தியோகத்தில் இருக்கிறான். கை நிறைய சம்பாதிக்கிறான். வீடு, வாசல், சொத்து சுகமென்று எதற்கும் குறைவில்லை. பிக்கல், பிடுங்கல் இல்லாத குடும்பம். ஆனாலும், நாற்பது வயதை கடந்தும் கல்யாணம் ஆகவில்லை. திருமண ஆசை இல்லை என்றாலும் கூட, ஆண்மகனை தனித்து விட்டு விடலாம். ஆனால், இவன் பாவம் எல்லோரையும் போல மனைவி மக்கள் என்று வாழ துடிக்கிறான். தனது நண்பர்கள் குழந்தைகளோடு போகும் போது ஏக்கம் கொள்கிறான். நகை நட்டு இல்லாமல் நல்ல பெண்ணாக அமைந்தால் கூட போதுமென்று பார்க்கிறான். ஆனாலும், எதோ ஒன்று தடுக்கிறது. இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் எங்கிருந்தோ ஒரு அமங்கல மணியோசை நிற்காமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?
ஜாதகக் கோளாறுகளால் இப்படி நடக்கலாம். பித்ரு தோஷம், பெண் தோஷம், தெய்வ தோஷம், சாபம் என்று பல காரணங்களும் அடிநாதமாக இருக்கலாம். குடும்பத்தார் செய்த பாவம் இவர்களை தொடரலாம் அல்லது இவைகள் எதுவும் இல்லாமல் எல்லாம் சரியாக இருந்தும் சிலருக்கு மட்டும் இந்த சோகம் இருந்து கொண்டே இருக்கலாம். ஆகவே இது தான் காரணமென்று முற்றிலுமாக துணிந்து கூறமுடியாத எத்தனையோ கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கிடக்கிறது. அவைகள் ஒவ்வொன்றையும் தேடித் தேடி பரிகாரம் செய்து கொண்டே போனால் அதற்குள் காலமும் கடந்து விடுகிறது. வாலிபமும் முடிந்து விடுகிறது. விடிந்த பின்னால் விளக்கு எரிவது போல, வாலிபம் முடிந்த பிறகு திருமணம் நடந்தால் என்ன? நடக்காமல் போனால் என்ன? இத்தகைய துரதிருஷ்டசாலிகளின் வாழ்க்கைக்கு விமோசனமே கிடையாதா?
பகவத் கீதையில் வாசுதேவ கிருஷ்ணன் சொல்கிறான். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று. மார்கழி மாதம் தெய்வங்களுக்கு உகந்த காலம். காரணம், அந்த நேரம் தான் தேவர்களின் விடியற்காலை பொழுது. காலை எழுந்தவுடன் நமது மனதும், உடம்பும் தெம்பாக புத்துணர்ச்சியாக இருக்கும் அல்லவா? அதே போன்று தான் தேவர்கள் மார்கழி மாதம் முழுவதும் ஆனந்தமாக இருப்பார்கள். இந்த நேரத்தில் அவர்களை நோக்கி வைக்கப்படும் பிரார்த்தனைகளையும், விண்ணப்பங்களையும் அவர்கள் செவி கொடுத்து கேட்டு, உடனடியாக தீர்த்து வைப்பார்கள். அதுவும் குறிப்பாக மார்கழி மாத பெளர்ணமிக்கும், பூமியில் வாழுகிற உயிர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு அன்று ஏற்படுகிறது.
வருடத்தில் பனிரெண்டு மாதம் வருகிறது. மாதம் தோறும் பெளர்ணமி வருகிறது. ஒரு மாதத்து பெளர்ணமியை போலதானே அடுத்த மாதத்து பெளர்ணமியும் இருக்கும் என்று நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் நினைக்கிறோம். அது முற்றிலும் தவறு. மார்கழி மாதம் என்பது தேவர்களுக்கு மட்டும் உகந்த நேரமல்ல. மனிதர்களுக்கும் அது சிறந்த நேரமாகும். மார்கழி மாதம் விடியற்காலை நேரம் குளிர்ந்த நீரில் குளித்து, வெறும் காலோடு ஆலயத்தையோ, அருகிலுள்ள மரங்களையோ வலம் வந்து வழிபாடு செய்தால் உடம்பில் உள்ளே உள்ள உறுப்புகளுக்கு புதிய இரத்தம் புத்துணர்வோடு கிடைக்கிறது. இரத்தத்தில் உள்ள பிராண வாயு அதிகரித்து, மூளையின் நரம்புகளில் உள்ள அழுத்தத்தை போக்குகிறது. இதனால், நமக்கு அறிவு செம்மையாகிறது. உடல் முழுவதும், ஆரோக்கியத்தின் இரகசிய வாயில் கதவுகள் திறக்கப்படுகிறது. குறிப்பாக சொல்லப் போனால் இந்த மாத பெளர்ணமியில் வானத்திலிருந்து பூமிக்கு வருகிற நல்லவிதமான ஈர்ப்பாற்றல், மனிதர்களின் தீராத குறைகளை தீர்க்கவல்லதாக இருக்கிறது.
சிதம்பரம் நடராஜரின் நர்த்தனம், உலகத்தின் இயக்கத்தை குறிக்கிறது என்பதை நாமறிவோம். இப்படிப்பட்ட ஒரு நடனம் உலகம் உலகமாக தோன்றுவதற்கு முன்பு, இதே போன்ற பெளர்ணமி தினத்தில் தான் இறைவன் திரு நடனம் ஆடியதாக கூறப்படுகிறது. அந்த ஆட்டத்தின் வேகம் இன்று வரை இருக்கிறது என்றாலும், அது துவங்கிய நாள் புனிதமானது மட்டுமல்ல. பல விஷேசம் நிறைந்ததாகவும், கண்டிப்பாக இருக்கிறது. கண்ணனை நினைத்து, கண்ணனை காதலித்து கண்ணனுக்காகவே தன்னை அர்ப்பணித்து ஆண்டாள் நோன்பிருந்ததும் இந்த காலத்தில் தான். ஆண்டாளின் நோன்பும், ஆண்டவனின் நடனமும் நமக்கு என்ன காட்டுகிறது என்றால், பெளர்ணமி மார்கழி மாதத்தில் வெறும் வெளிச்சம் தருவதாக மட்டும் இல்லை. மனிதர்களின் சிக்கல்களுக்கு விடிவு தருவதாகவும் இருக்கிறது என்பதை நமக்கு அழகாக காட்டுகிறது.
எனவே திருமணமே முடியாது, தனக்கு இல்லறமே கிடையாது என்று நினைத்து கொண்டிருப்பவர்கள் மார்கழி மாத பெளர்ணமி தினத்தில் காலை முதல் இரவு வரை தனக்கு பிடித்தமான இறைவனின் திருநாமத்தை ஜெபித்த வண்ணம் இருந்து விரதம் இருந்தால் கண்டிப்பாக அவர்களது குறைகள் விலகும். சூடான வாழ்க்கையில் இருளான பக்கத்தில் குளிர்ச்சியும் கிடைக்கும். வெளிச்சமும் வரும் என்று உறுதியாக கூறலாம். இது வெறும் ஆறுதல் மொழிகள் அல்ல. அனுபவ மொழிகள் என்பதனால் எல்லோரும் நம்பலாம்.