குருஜி அவர்களுக்கு, வணக்கம். என் மகனுக்கு இப்போது நான்கு வயது பிறந்திருக்கிறது. இதுவரையில் அவனுக்கு எதாவது உடல் உபாதை இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக, மாதவிடாய் காலத்து பெண்கள் அவனைத் தொட்டாலோ அல்லது அவன் அவர்கள் அருகில் சென்றாலோ உடல்நிலை மிகவும் கெட்டுவிடுகிறது. வயிற்று உபாதை, உடல் அரிப்பு போன்ற தொல்லைகளால் அந்த நேரம் அவதிப்படுகிறான். என் மாமியார் கூறுகிறபடி திருஷ்டி சுற்றி போட்டால் மருந்துக்கு கூட கட்டுப்படாத அந்த நோய்கள் அரைமணிநேரத்தில் ஓடி விடுகிறது. இதிலிருந்து நிரந்தரமாக அவன் விடுதலை அடைய என்ன செய்யவேண்டும்? நல்ல வழியை காட்டி உதவுங்கள்.
இப்படிக்கு,
ஜெயந்தி,
நாகர்கோவில்.
கண்திருஷ்டி மற்றும் சில மனித தோஷங்களால் சிலருக்கு மட்டும் அதிகப்படியான பாதிப்புகள் ஏற்படுகிறது. இது எதற்காக என்று ஜோதிட சாஸ்திரத்தை துணைகொண்டு ஆராய்ந்து பார்த்தால், பூர்வ ஜென்ம தோஷம் தாக்கம் என்ற பதிலை பெற முடிகிறது. நமக்கு ஏற்படும் நோய்கள் பலவற்றிற்கு இவைகளும் காரணமாக இருக்கிறது என்பதை அனுபவ ரீதியில் அறிந்து கொள்ள முடிகிறது.
உங்கள் மகனுக்கு வந்திருக்கின்ற இந்த கஷ்டம் சென்ற ஜென்மத்து கர்மாவால் என்பது தெளிவாக தெரிகிறது. எனவே பையனுடைய பதினைந்து வயது வரையில் இந்த தொல்லையை நீக்கிவிட முடியுமென்று என்னால் கூற இயலாது. இருந்தாலும் உங்கள் மகனைப் போலவே வேறு பலரும் பாதிப்படைந்து உள்ளதனால் அவர்களுக்கும் சேர்த்து பரிகாரம் சொல்லவேண்டிய அவசியம் ஏற்படுகிறது.
நெல்லை அளந்து கொட்டுகிற உழக்கில் தளும்ப தளும்ப பச்சை நெல்லை நிறைத்து, அதில் புத்தம் புதிய தென்னம் பாளைகளை அரிசியில் நட்டு, முல்லை, மல்லிகை போன்ற வெள்ளை மலர்களால் அலங்காரம் செய்து சிறிய மாலை சாற்றி கற்பூர தீபாராதனை காட்டி, அந்த உழக்கை ஐந்து முறை குழந்தையை சுற்றி வரச் செய்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்விக்க வேண்டும். அதன் பிறகு, பழம் தேங்காய் படைத்து தூப தீபம் காட்டி தாயாரும் நமஸ்கரித்து கொள்ள வேண்டும். இப்படி ஐந்து வெள்ளிக்கிழமை முழ நம்பிக்கையோடு செய்து வந்தால், கண்டிப்பாக குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் தொல்லை உடனடியாக விலகும்.